-வேதா. இலங்காதிலகம்

நாலடியார்

அதிகாரம் 25 –   அறிவுடைமை

பகைவர் பணிவிட நோக்கித்  தகவுடையார்
தாமேயு நாணித் தலைச்செல்லார் காணா
யிளம்பிறை யாயக்காற் றிங்களைச் சேரா
தணங்கருந் துப்பி னரா. (நாலடி: 241)

அணங்கு – வருத்தம் செய்யும், அரு – கொடிய, துப்பின் – வலியுடைய, அரா – பாம்பு, இளம்பிறை – இளையபிறைச் சந்திரனாயிருக்கும் போது, திங்களை – சந்திரனை, சேராது – வருத்துவதற்கு நெருங்காது, (அது போல) தகவு உடையார் – தகுந்த அறிவுடையார், பகைவர் – தம்முடன் மாறுபட்டவர், பணிவு இடம் நோக்கு – தாழ்ந்து இருக்கும் காலத்தைக் கவனித்து, தாமேயும் நாணி – தம்மில் தாமே வெட்கமுற்று, தலைசெல்லார் – அவரை அடக்குதற்கு எதிர்த்துச் செல்லமாட்டார், காணாய் – இதனை அறிக.

எனது வரிகள்:-

முழுமதிச் சந்திரனையே என்றும்
பழுதுடை கிரகணம் பற்றும்
பிறை நிலாவை அதன்
குறையோடு கிரகணம் பற்றா
இவ் விதியாய் எதிராளியின்
திடமற்ற நிலைப்பாடில் பலவீனரை
அடக்கார்  எதிர்க்கார்  தம்முள்
குறுகும் நிறை மதியாளர். 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “நிறைமதியாளர்!

  1. மிக நன்றியை  வல்லமைக்கு மகிழ்வுடன் தெரிவிக்கிறேன்.
    தலைப்பையிட்டு  திருப்தியடைந்தேன்.
    மறுபடியும் நன்றி.
    வாழ்க!….வாழ்க!…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *