ஷைலஜா

‘நல்லது தனியாக வரும்; கெட்டது சேர்ந்தாற் போல் வரும்’ என்பது தனது சொந்த அனுபவத்தில் நூற்றுக்கு நூறு உண்மையாகி வருவதைக் கண்கூடாகக் காண்கிறான் விட்டல்.

எல்லாம் ஒரிரு வருடங்களில் நடந்து முடிந்துவிட்ட துயரச் சம்பவங்கள். அப்பாவிற்குக் கண் பார்வை, நீரிழிவு நோயால் அறுபது வயதிற்குள்ளேயே பறிபோனதும், அம்மாவிற்கு அடிக்கடி நெஞ்சு வலி வந்து டாக்டரிடம் காட்டியதில் ‘இதயத்தில் அடைப்பு, ஆபரேஷன் சீக்கரம் செய்வது உத்தமம்’ என்றதும், அக்கா கணவனை இழந்து கைக் குழந்தையுடன் வீடு வந்ததும் என்று அடுக்கடுக்காய் அதிர்ச்சிகளைத் தாங்கி வரும் வேளையில் விட்டலுக்கு வெறுப்பும் எரிச்சலுமான ஒரு விஷயம் தனக்கு இன்னும் வேலை கிடைக்காததுதான்.

பட்டப் படிப்பு படித்து முடித்து மூன்று ஆண்டுகளாகிவிட்டன. இன்னமும் வேலை கிடைத்தபாடில்லை. குடும்பமே தன்னைத்தான் நம்பி இருப்பதை அவனால் உணர முடிந்தது. எத்தனை கம்பெனிகளுக்கு எத்தனை விண்ணப்பங்கள் அனுப்பியாயிற்று! ஒன்றுக்காவது பதில் வந்தால் தானே?

“எல்லாம் இந்த வீடு வந்த நேரம், ராசியில்லாத வீடு, சனியன்’’ அம்மா முணுமுணுப்பதை விட்டல் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறான். முன்னெல்லாம் அவள் இப்படிச் சொல்ல ஆரம்பித்தாலே சீறி விழுவான்.

“என்னம்மா இது, அபத்தமாயிருக்கு? நம்ம துரதிர்ஷ்டத்திற்கு, கட்டின வீட்டைக் குறை சொல்லலாமா? அப்பாவின் சொற்ப சம்பள சேமிப்பில் புறநகர்ப் பகுதியில ஏதோ கையளவு நிலம் வாங்கி வீடு கட்டிண்டு வந்திருக்கோம். இதையும் குத்தம் குறை சொல்லிண்டிருக்க?’’ என்பான்.

“உனக்குத் தெரியாதுடா விட்டல்… இந்த ஆகம் வாஸ்துப்படி கட்டியிருக்கல… வாஸ்து சரியில்லேன்னா குடியிருக்கிறவாளை வீடு புரட்டிப்புடுமாம்?’’

அம்மா அன்று சொன்னது சரிதான். புது வீடு வந்ததும்தான் அப்பா பார்வை போனது; நன்றாய்த் திடமாயிருந்த அம்மாவிற்கு நெஞ்சுவலி வந்தது; அக்கா அமங்கலியாகி வீடு வந்துவிட்டாள்; எனக்கும் இதுவரை ஒரு வேலை கிடைக்கவில்லை.

விட்டல் நீண்ட பெருமூச்சு விடுகிறான்.

இருபத்து அஞ்சு வயசாகிறது எனக்கு. வேலை கிடைக்கவில்லை என்கிற வருத்தத்தில் பசி எடுக்காமல் இருக்கிறதா என்ன? வேளா வேளைக்குச் சாப்பிட்டுத்தான் தொலைக்க வேண்டியிருக்கிறது. தண்டச் செலவு. அப்பாவின் ரிடையர்மெண்ட் பணம், வீட்டுக் கடன் அடைக்கப் போய்விட்டது. இரண்டாயிரம் ரூபாய் பென்ஷனில் இத்தனை பேர் ஜீவிக்க வேண்டி உள்ளது. இதில் மருத்துவச் செலவு வேறு தனி. அக்கா குழந்தைக்கு ஹார்லிக்ஸ் கண்டிப்பாய் வாங்கி விடணும்; இல்லாவிட்டால் அதற்கு வேறு அவள் தனியாய்க் குறைபட்டுக் கொள்கிறாள். ’எனக்குப் போன இடமும் சரியில்ல… பொறந்த இடமும் வக்கில்ல…’ என்கிறாள்.

‘ஏண்டா விட்டல், படிச்ச படிப்புக்கேத்த வேலை கிடைக்கலேன்னா என்னடா, கெடச்ச வேலையை ஏத்துண்டு பெத்தவாளை காப்பாத்தத் தோணலியா உனக்கு?’ என்றாள் ஒரு நாள் இடக்காக.

“மூட்டை தூக்கற வேலை கூட ‘ட்ரை’ பண்ணேன் அக்கா… போட்டிக்கு வந்துட்டேன்னு துரத்தி அடிச்சுட்டா?’’

“போடா போ… உனக்கு அதிர்ஷ்டமேயில்ல’’

‘அதிஷ்டக்கட்டை நான். எதுக்கு உலகத்துல பாரமா இருக்கணும்? பேசாம தூக்கு மாட்டிண்டு செத்துப் போயிடலாமா?’ விட்டலுக்குக் கொஞ்ச நாட்களாகவே வாழ்க்கையில் விரக்தி மிகுந்து மரணத்தின் மீது நாட்டம் வந்துவிட்டது. ’கூடிய சீக்கிரம் தற்கொலை பண்ணிண்டு போய்ச் சேர்ந்துடணும்… என்னால ஒரு உபயோகம் இல்ல…’

நினைத்தபடியே அமர்ந்தவன், வாசல் காம்பவுண்ட் கேட்டை யாரோ உலுக்கவும் எழுந்திருந்தான். “யா…யாரூ?’’ கேட்டபடி கூடத்திலிருந்து நடந்து வாசலுக்குப் போனான்.

கேட்டைப் பிடித்துக்கொண்டு ஒரு எழுபது வயதைக் கடந்த முதியவர், மெலிந்த உடம்பில் நாலு முழ வேட்டி மட்டும் கட்டி, மேல்துண்டு ஏதுமின்றி, வெள்ளைத் தாடியும் மீசையுமாய் பஞ்சத்தில் அடிபட்ட பரதேசி போல நின்றார்.

“பிச்சையா? இங்க ஒண்ணுமில்ல போப்பா?’’ உள்ளிருந்தே விட்டலின் அம்மா கூவுகிறாள்.

அந்தக் கிழவர் சட்டென, “பிச்சை எடுக்க வரலம்மா… தா… தாகமாயிருக்கு. கொஞ்சம் தண்… தண்ணீர் வேணும்?’’ என்று தாழ்ந்த குரலில் கேட்டுக் கொண்டார்.

“சோறு போட்டால் கூட போட்டுடலாம்… இந்தச் சென்னையில தண்ணியக் கேக்கவே கூடாது… போப்பா, போ போ… வேற வீட்ல போய்க் கேளு…’’ அம்மா அதிகாரமாக விரட்டுகிறாள். விட்டலுக்குக் கஷ்டமாக இருக்கிறது. ஆனால் அவனால் எதுவும் பேச முடியவில்லை.

வீட்டில் தண்ணீருக்கு அவஸ்தைதான். முன்பு மாம்பலத்தில் வாடகை வீட்டில் பட்ட கஷ்டத்தைவிட, புறநகர்ப் பகுதியில் கட்டிக் குடி வந்துள்ள வீட்டில் நிறையவே தண்ணீர்க் கஷ்டம்.

கிணறு என்றோ வற்றிப் போய்விட்டது. தெருக்குழாய் சென்று அடித்துப் பிடித்து விட்டலின் அக்காதான் தண்ணீர் பிடித்து வருகிறாள். அம்மாவுக்குத்தான் வர வர உடம்பே முடிவதில்லையே…

விட்டல் ஓரிரு நிமிஷம் கழித்து சற்று பதற்றத்துடன் காம்பவுண்ட் கேட்டைத் திறந்து வெளியே சாலைக்குப் போய் நின்றான். தாக வறட்சியில் அந்தக் கிழவர் உயிரை விட்டிருப்பாரோ? கவலையாக இருந்தது. தெருக் கோடியினின்றும் அவர் திரும்பி நடந்து வருவதை விட்டல் பார்க்கிறான். நிதானமாய் வந்தவர், இவன் வீட்டு வாசலில் நடப்பட்டிருந்த சாலை மரம் ஒன்றின் கீழ் ஆசுவாசமாய் அமர்கிறார்.

விட்டல் அவசர அவசரமாய், “தண்ணீ கிடச்சுதா?’’ என்று கேட்கிறான். ஏனோ மனசு அடித்துக்கொள்கிறது.

நிமிர்ந்து பார்த்த அவர், “கோடி வீட்ல கொடுத்தாங்க தம்பி. இல்லேன்னா உயிர் போயிருக்கும். அப்படி ஒரு நா வறட்சி! தாகமெடுத்தா தண்ணீ குடிக்கணுமாம். தவிச்ச வாய்க்குத் தண்ணி அளிக்காம போறது தற்கொலை செஞ்சிக்கிறதுக்கு சமானமாம்! அதான் தண்ணீ மட்டும் கேட்டு வாங்கிக் குடிச்சிடறேன்’’ என்றார் சிரித்தபடி.

“அப்படீன்னா, தற்கொலை செஞ்சிக்கிறது தப்பா? நம்மால் யாருக்கும் உபயோகமில்லேன்னா உயிரை விட நினைக்கிறது தப்பா என்ன?’’ விட்டலுக்கு அந்தப் பெரியவரிடம் மேலும் பேச்சு கொடுக்கத் தோன்றவும் இப்படிக் கேட்டுவிட்டான்

“ஆமாம் தம்பி. தற்கொலை ஒரு பாவச் செயல்தான். அதனால்தான் விபத்துல மனைவி, மக்களைப் பறிகொடுத்த நான், இருபது வருஷமா இப்படி நடைப்பிணமா வாழ்ந்துட்டிருக்கேன். இலவசமா சோறு யாரும் தானாய்த் தேடி வந்து கொடுத்தா வாங்கி சாப்பிடுவேன்; இல்லேன்னா தண்ணீ மட்டும் கேட்டு வாங்கிக் குடிச்சிட்டு இந்த உயிரைத் தக்க வச்சிட்டிருக்கேன். உயிர் இறைவன் கொடுத்தது. அதை அவனே எப்போ எடுத்துக்கணுமோ எடுத்துக்கட்டும் தம்பீ!’’

விட்டலுக்குச்் ’சுருக்’கென்றது. வேலை கிடைக்காத விரக்தியில் ’தற்கொலை’ எண்ணத்திற்குப் போன தன் மீது சட்டென வெறுப்பாகவும் வந்தது.

மறுபடியும் சற்று ஊக்கத்துடன் விண்ணப்பங்கள் அனுப்பத் தொடங்கினான். அந்தப் பெரியவரும் அவன் வீட்டு வாசல் மரத்தடியிலேயே அதிகம் பொழுது அமர்ந்து விடவும், அவ்வப்போது அவரிடம் பேச்சு கொடுப்பான் விட்டல்.

அக்காதான் அவனை, “மரத்தடி ’காட்ஃபாதர்’ உனக்கு?’’ என்று கிண்டல் செய்கிறாள். அவருக்கு யாராவது எப்போதாவது உணவுப் பொட்டலங்களைக் கொண்டு வந்து தருகிறார்கள். சிலர் அவரது காலடியில் கிடக்கும் தண்ணீர்க் குவளையை பிச்சையேந்தும் பாத்திரமாய் நினைத்து சில்லறைகளை வீசிப் போடுகிறார்கள்.

அன்று ஒருவன் வீசிப் போட்ட செல்லாக் காசு ஒன்றை விட்டலிடம் காண்பிக்கிறார் பெரியவர். பச்சை நிறம் பாசி படர்ந்தாற்போல பழுப்பு ஏறிய செப்புக் காசு அது. “பாத்தியா தம்பீ, இதுக்குப் பேர்தான் ’அதர்மம்’ என்கிறது?’’ என்று கூறிச் சிரித்தார்.

விட்டல் சிரிக்கவில்லை. சிரிக்க முடியவில்லை அவனால். காரணம் காலையில் அவனுக்குக் கொரியர் தபாலில் வந்த அபாயிண்ட்மெண்ட் ஆர்டர். அதைப் பார்த்த போதே சந்தோஷமாயிருந்தது நிஜம். இதனுடனேயே வேலைக்கான டெபாஸிட் தொகை இருபத்து ஐந்தாயிரத்தைக் கட்டிவிட்டுப் பிறகு வேலையில் சேர வேண்டுமென்ற உத்தரவுக் கடிதமும் இணைத்திருந்தது அவனை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இருபத்து ஐந்தாயிரத்துக்கு எங்கே போவது? வங்கியில் கையிருப்பு, ஆறாயிரம் ரூபாய்தான். யாரிடம் கேட்பது? எற்கனவே வீட்டுக் கடன். அப்பா – அம்மாவின் வைத்தியச் செலவுக் கடன் என இருக்கிறது.

எங்கே போவது மேலும் கடனுக்கு?

“என்ன தம்பி யோசிக்கிறே? நான்தான் செல்லாக் காசுக் கிழவன்னு ஒருத்தன் எனக்கு இதை வீசிப் போட்டுட்டான். நானும் பதிலுக்கு இதை வீசிப் போடறது சரியில்ல. சாமி கோயில் உண்டியலில் போட்டுடப் போறேன். என்ன சொல்றே? எல்லாக் காசும் சாமியிடம் செல்லும்!’’

சாமி கோயில்! சாமியிடம் போய் முறையிட்டால் என்ன? ’முயற்சி, எனது உழைப்பு’ என்றே இறுமாந்திருந்த விட்டலுக்கு அதிக தெய்வ நம்பிக்கை கிடையாதெனினும் நாத்திகனல்ல. இப்போது தனது மனநிலைக்கு அடைக்கலம் தெய்வ சந்நிதியாகத் தோன்றவும், “பெரியவேர! அந்த செல்லாக் காசை என்கிட்ட கொடுங்க. நான் கோயிலுக்குத்தான் போறேன்… உண்டியலில் நானே சேர்த்துடறேன்…’’ என்றான்.

செல்லாக் காசுடன் கோயிலுக்கு வந்தான். பிராகாரத்தைச் சுற்றி வரும்போது “டேய் விட்டல்!’’ என்று குரல் கேட்கவும், திரும்பினான்.

தியாகு! பள்ளி நண்பன்! “தி… தியாகு? எப்படா சென்னை வந்தே? பத்தாம் கிளாஸ்லயே டெல்லிக்குப் போனவன் நீ? சரித்திரப் பாடம்னா உனக்கு உயிர் இல்ல?’’

“எல்லாம் நினைவிருக்காடா உனக்கு? இன்னமும் சரித்திர ஆராய்ச்சிதான் செய்யறேன்; இட்ஸ் கொய்ட் இண்டரெஸ்டிங்!’’

இருவரும் பிராகாரத் திண்ணையில் அமர்ந்தனர். பேசி முடித்து பிரியும் வேளையில், விட்டல் அவன் முகவரியை எழுதிக்கொள்ள, பேனாவை ஷர்ட் பாக்கெட்டிலிருந்து எடுக்கவும், அது கீழே விழுந்தது. குனியும் போது பாக்கெட்டிலிருந்து அந்த செல்லாக் காசும் கீழே ’ணங்’ என விழுந்தது.

தியாகு சட்டென அதை எடுத்தவன் கண்களில் ஆர்வம் மின்ன, “ஏதுடா இது?’’ என்றான்.

“செல்லாக் காசுடா…’’

தியாகு அந்தக் காசைத் திருப்பித் திருப்பிப் பார்த்தான். தன் கைப் பையிலிருந்த ஒரு பாட்டிலை எடுத்தான். அதைத் திறந்து ஏதோ திரவம் போன்றதை அந்தக் காசு மீது தெளித்து, கர்சீப்பினால் தேய்த்தான். தங்கக் காசு போல அது மின்னியது.

“என்னடா பண்ற?’’ விட்டல் புரியாமல் கேட்டான்.

தியாகு குதூகலமாய், “டேய் விட்டல்! இது சோழர் காலத்துக் காசுடா. ரொம்ப அபூர்வமானது. இதை நான் ரொம்ப நாளாய்த் தேடிட்டு வரேன். தாங்க் காட்! இதை யாருடா உனக்குத் தந்தா?’’ எனக் கேட்டான்.

“யாரோ ஒரு பெரியவர் தந்தார்.’’

“அவருக்கு கோடி நன்றிடா!’’ கை குவித்தான் தியாகு.

“எதுக்குடா?’’

“இது பொக்கிஷம்டா விட்டல்! இதற்கு நான் உனக்கு இருபத்தஞ்சாயிரம் ரூபா இப்பவே தரேன்… இந்தக் காசை எனக்குக் கொடுத்துடு…’’

“தி… யா… கு?’’ விட்டலுக்குத் திகைப்பானது. மனசை ஏதோ ஒன்று அரித்தது பின் நிறைத்தது.

கையில் பணத்தோடு வீடு வந்தவன் சாலை மரத்தடியில் அந்தப் பெரியவரைத் தேடினான். அங்கு அவரைக் காணவில்லை. ஏதாவது கோயிலுக்குப் போயிருப்பாரென்று நினைத்தபடி வீட்டிற்குள் வந்தவன், நடந்ததை உற்சாகமாய் விவரித்தான்.

“டெபாஸிட் பணத்தைப் பகவான் தந்துட்டார்’’ என்றார் அப்பா.

“வேலை கெடச்சதும் அந்தக் கிழவனார்க்கு ஏதாவது நூறோ இருநூறோ தந்துடுடா’’ – அம்மா.

“அவருக்கு அது ஓசில கிடைச்சது தானே? அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்…’’ நிஷ்டூரமாய் அக்கா.

விட்டலுக்கு நெஞ்சு கனத்தது. பணத்தை எடுத்துக்கொண்டு டெபாஸிட் தொகை கட்டி, வேலைக்கான மறு உத்தரவுடன் வீடு திரும்பினான்.

ஆயிற்று… ஆறு மாதங்களாய் விட்டல் வேலைக்குப் போய் வருகிறான். அவன் கண்கள் தினமும் அந்த சாலை மரத்தடியைத் தேடுகின்றன.
அது இன்னமும் வெறுமையாகத்தான் இருக்கிறது.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “செல்லாக் காசு

  1. முடிவு எதிர்பார்த்தது தான், ஆனாலும் நம்பிக்கையும், தெய்வச் செயலும் கதையெங்கும் ஓடுகிறது. என்னதான் விடாமுயற்சி செய்தாலும் பெரியவர் ஒருத்தர் மூலமாத் தான் அந்த முயற்சியின் பலன் வரணும் என்பதும் விதி! எல்லாத்தையும் எடுத்துக் கூறும் கதைக்கரு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *