– சுரேஜமீ

என்ன நடக்குது எங்கள் நாட்டிலே
எதிரெதிர் வருபவனும் தாக்கவும் அவனவனை
ஏட்டினைப் படித்திடிணும் எவனுக்கும் அறிவுமில்லை
ஏகிட்ட கல்வியென்றும் எதுசரியெனவும் இல்லை
இருப்பவன் நம்பிடவும் மறுப்பவன் பரப்பிடவும்
இருக்குது சுதந்திரமே இயம்பவும் செய்திடடா!
கருத்தெதிர் கருத்தினையும் விதைத்திடு முடிந்தவரை
கருத்தினில் கொள்பவரைக் கொண்டாடு அடிபற்றி
திணித்திட உனக்குமில்லை உரிமையும் துளியுமடா!
தின்பவன் உணர்வதில்தான் உணவின் அருமையடா!

பழமையிலும் உண்டு நலன்விளை சேதிகளும்
பண்பினை வளர்ப்பதற்கும் பேரினம் வாழ்வதற்கும்
சொல்வண்ணம் நடந்திட்டால் சேரினம் சேர்ந்திடுமே
செந்தமிழ் நடைபழகிச் சிந்தனைச் சிறகேறி
வம்பினை வளர்ப்பதென்றும் நற்றமிழர் மறபன்று
வள்ளுவம் வழிவந்த வான்புகழ் தமிழினத்தில்
வேண்டாம் சாதியென வேண்டுவ உரைத்திட்டும்
வீணில் வளர்த்ததுவும் வெறியர்கள் செயலன்றோ!
பேதங்கள் பார்ப்பதுவும் வேதங்கள் செய்ததென்றால்
ஓதவும் மறுத்திருந்தால் ஒற்றுமை நிலைத்திருக்கும்!

வானமும் வையகமும் அனைவர்க்கும் சமமென்றால்
வானவர் மட்டுமிதை எப்படி மறுத்திடுவார்?
நாயனார் கதைபடித்தும் நாயகன் அறியாமல்
நானிலம் சண்டையிட்டால் நாமும் அழிந்திடுவோம்
நம்பிக்கை கொள்வதுவும் நம்மை உயர்த்திடவே
நமக்குள் பிரிவறுத்து நாளும் மகிழ்ந்திடவே
அவரவர் நம்பிக்கை அவரவர் தனிவிருப்பம்
அடுத்தவன் மறுப்பதற்கு அவனென்ன ஆண்டவனா?
அழிப்பது எனவந்தால் இயற்கையும் ஆண்டவனே
அடக்கிடு சீற்றங்களை அவரவர் மட்டினிலே
அறிவினைப் பயிர்செய்ய ஆற்றலும் பெருக்கிடலாம்
அகிலமும் அறுவடையாய்ப் போற்றியே வாழ்ந்திடலாம்!

அரசியல் மதங்கடந்து சாதியும் வேரறுத்து
அறிந்திடு சரியெதென்று ஆவன செய்வதற்கு
எவனும் தலைவனென்று ஏகிட மறுத்துவிடு
அவனவன் குடும்பத்தை ஏற்றுதல் நீயுங்கண்டு
அன்பைக் காட்டிடவே உனக்கவன் தலைவனென்றால்
அன்பாய் உனைநம்பி வந்தவர் என்செய்வார்?
அனுதினம் யோசித்து வாழ்க்கையை உயர்த்திவிடு
ஆனந்தமாய் வாழ்ந்து அனைவரும் இன்புறவே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *