இப்படியும் ஒரு பிரகிருதி

9

திவாகர்

 

(பிரகிருதி  என்பதற்கு இயல்பு, இயற்கை, விசித்திரம், காரணம், பகுதி மொழி, பிரபஞ்ச மாயை, மிருகம், பெண், பஞ்சபூதம் என பல அர்த்தங்கள் தமிழ் அகராதியில் உள்ளன))

 

’எல்லா விவரங்களையும் சொல்லியபின் என் மாமனாரைப் போன்ற இன்னொரு பிரகிருதியை நீங்கள் யாரேனும் பார்த்திருக்கிறீர்களா’ என்று ஒரு கேள்வி உங்களையெல்லாம் கேட்டேன் என வைத்துக் கொள்ளுங்கள்.. இல்லவே இல்லை என்றுதான்  உங்களிடமிருந்து பதில் வரும் என்று முன்கூட்டியே சொல்லி விடுகிறேன்..

என்ன வகைப்பட்ட ஆசாமி இவர் என்று எனக்கு ஆரம்பம் முதலே புரியவில்லை. ஆனால் பேசாத பேச்செல்லாம் பேசி செய்யக் கூடாதவையெல்லாம் செய்து முடித்து விட்டு இவர் முகத்தைக் காண்பிக்கும் விதம்.. அடடடா, சிவாஜியால் கூட இப்படியெல்லாம் நடிக்க முடியுமோ என்ற சந்தேகம் வருமளவுக்கு முகத்தில் ஒரு விதமான வறட்டு உணர்ச்சியைக் காண்பித்து ஏமாற்றுவதைப் பார்க்க வேண்டுமே.. நான் சாதாரணமாக இதையெல்லாம் யாரிடமாவது தெரிந்தவரிடம் சொன்னால் கூட, ’ஐய்யோ.. இவரா இப்படி சின்னத்தனமா செய்கிறார்.. அட போங்க சார்.. பச்சைப் புள்ள மாதிரி பால் வடியும் முகம் இவருக்கு’ என்று சொல்லி என்னை ஒரு மாதிரியாகப் பார்க்க ஆரம்பித்து விடுவார்..

பச்சைப் புள்ள  என்கிற வார்த்தைதான் அனு கூட சொல்வது.. அனு கொஞ்சம் அறியாத பொண்ணுதான். பாதி வருஷம் ஹாஸ்டல் வாழ்க்கையிலேயே படித்துக் கழித்தவள்.. அவளுக்கு அவங்கப்பா மேல் பாசம் மதிப்பு மரியாதை இவையெல்லாம் இருக்கிறதோ இல்லையோ, பரிதாபம் மட்டும் ஏராளம்.. எப்போது என்னைக் கல்யாணம் பண்ணிக் கொண்டு என் கையைக் கெட்டியா பிடித்துக் கொண்டாளோ அன்றையிலிருந்தே ‘பாவங்க எங்கப்பா பச்சைப் புள்ள மாதிரி’ என்கிற பல்லவியையும் கெட்டியாகவே சொல்லி வருபவள். முதலிலெல்லாம் நானும் இவள் சொல்வதை யெல்லாம் அப்படியே நம்பி வந்தேனே.. ஆனால் அவள் இல்லாத சமயத்தில் இவர் செய்யும் அட்டகாசத்தைப் பார்த்து இவர் தன் சுய ரூபத்தைக் காட்டியவுடன் அதிர்ந்து தான் போனேன். இதை எப்படி யாரிடம் சொல்வது..

கல்யாணம்  ஆன பின் இரண்டு மாதங்கள் கழித்து தான் இந்த பிரகிருதி எங்கள் வீட்டுக்கு அடி எடுத்து வைத்தது. சில நாட்கள் எங்கள் மாமா-மாப்பிள்ளை பந்தம் ந்னறாகத் தான் இருந்தது. ஆனால் பெண் வீட்டுக்கு வந்த மனுஷன் வந்து ஒரு மாதம் ஆகியும் திரும்பிப் போகவில்லை. மதுரைப் பக்கத்தில் தனியே இருக்கும் தன் மனைவியைப் பற்றிய எந்தக் கவலையுமே இல்லாமல் அக்கறையும் காட்டவில்லையே, என்ற உண்மையான பொறுப்புணர்வினால் நான் தான் இவரை ஓரிரு நாட்கள் ஊருக்கு அனுப்பி வைப்போமே என்று அனுவிடம் சொன்ன போது அவளும் அழகாகத் தான் தலையசைத்தாள். ஆனால் இந்த மாமா அப்படி நல்ல விதமாக எடுத்துக் கொள்ளவில்லை. நான் ஏதோ பெரிய சதி செய்வதாக நினைத்துக் கொண்டு விட்டார். அன்றிலிருந்து ஆரம்பித்தது தான் அவர் சுய ரூப விளையாட்டுகள்.

அனு காலையில் ஏழு மணிக்கே கிளம்ப வேண்டும். நான் எப்போதுமே சற்று தாமதமாக ஒன்பது மணிக்கு மேல் தான் கிளம்புவேன். அந்த இரண்டு மணி நேர அவகாசங்கள் போதும் என்று ஒவ்வொரு முறை இவர் நிரூபிப்பார். முதல் முறை இவரை நானும் மிகவும் விளையாட்டாகத் தான் எடுத்துக் கொண்டேன்.

‘என்ன மாப்ளே.. என்னைப் பிடிக்கவில்லையா.. நான் உங்களுக்கு அப்படி என்ன துரோகத்தைப் பண்ணிட்டேன்.. அழகா ஒரு பெண்ணைப் பெத்து உங்களுக்குக் கொடுத்தது  தப்பாப் போச்சே.. எல்லாம்  என் தலையெழுத்து..”

நான் சிரித்துக் கொண்டே தான் கேட்டேன்.

”என்ன மாமா! என்னாச்சு உங்களுக்கு.. நான் ஏதாவது தப்பா பேசிப்பிட்டேனா.. சொல்லுங்க மாமா, எங்கிட்டே நீங்க தாராளமா, ஃப்ரீயா பேசலாம்..”

இப்படி சொன்னது  தவறாகப் போய் விட்டது.

’இன்னும் என்ன மாப்பிள்ளே நமக்குள்ளே.. எல்லாம் முடிஞ்சு போச்சு.. உறவே அத்துப் போச்சு.. குளோஸ்.. ஃபட்’னு அறுத்துட்டீங்க.. நான் உங்களுக்குப் பிடிக்காதவனாப் போயிட்டேன்.. உங்க ரெண்டு பேரு மத்திலேயும் நான் சத்ருவாயிட்டேன் உங்களுக்கு ரொம்ப தொல்லையாயிட்டேன்.. நீங்க என்னை இப்படி அவமானப் படுத்துவீங்கன்னு கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை.. அதுக்கு உங்க செருப்பைக் கழட்டி என்னை அடிச்சிருக்கலாம்.. ’ச்சீ போடா நாயே வீட்டை விட்டு’ ன்னு துரத்தியிருக்கலாம். எனக்கு இதுவும் வேணும்,, ஏன்னா பெண்ணைப் பெத்தவன் பாருங்க..”

அதிர்ந்து தான்  போய் விட்டேன் நான். ஒரு தவறும் செய்யாத எனக்கு இப்படி ஒரு தொடர்ச்சியான வசை பாடலா.. அடக் கடவுளே!

”என்ன மாமா இது விளையாட்டு? ஏன் இப்படிப் பேசறீங்க..”

“உங்க பேச்சு எல்லாம் ஒரு நாடகம் மாப்பிள்ளே.. உங்களுக்கு என்னைப் பிடிக்கலே. கம்பளிப் பூச்சியைப் பாக்கற அருவருப்போடு என்னைப் பாக்கறிங்க.. நான்னாலே உங்களுக்கு ஒரு அலர்ஜி வந்துடுத்து.. எப்படா இவனை ஊருக்கு அனுப்பலாம்னு பார்க்கறிங்க.. நான் உங்களுக்கு தண்டச் செலவு, தண்டச் சோறு..”

ஒரு ஹிஸ்டீரியா நோயாளி போல தன் தலையில்  தானே அடித்துக் கொள்ளும்  அவரை சமாதான்ப் படுத்தினேன்..

”அட.. ஊருக்குப் போகறதுக்கு தானா இப்படி சொல்லறிங்க.. கம் ஆன் மாமா… நீங்க எத்தினி நாள் வேணும்னாலும் இந்த வீட்டுல தங்கலாம்..”

“பார்த்திங்களா.. எத்தினி நாள் வேணும்னாலும் இருக்கலாம் னு ஏதோ போனா போகற மாதிரி பேசறிங்களே தவிர.. அட.. ’மாமா.. இது உங்க வீடுதான்.. நீங்க இங்கேயே இருங்க’ ன்னு சொல்ல மாட்டீங்கறீங்க.. புரிஞ்சு போச்சு உங்க கோண புத்தி, எம் மேல உள்ள வெறுப்பு, உங்க சுய நலம் எல்லாம்.”.

எனக்கு கோபம்  சட்டென வந்தது. அடக்கிக் கொண்டேன். அவர் ஏதேதோ  பேசிக் கொண்டிருந்தார். தாங்க முடியாமல் நான் போனை எடுத்து அனுவுக்குப் போன செய்யலா மென்று போகும் போது தான் இன்னொன்றையும் சொல்லி வைத்தார் இந்தப் பிரகிருதி..

“எதுக்கு மாப்பிள்ளே.. பொம்பிளே மாதிரி அனுகிட்டே கோள் சொல்லப் போறிங்களா.. உண்மையான ஆம்பிளையா இருந்தா என்கிட்டேயே எனக்குப் பதில் சொல்லுங்க.. ஏன் அவகிட்டே போய் அவளோட முந்தானைல ஒளிஞ்சுக்குறீங்க..”

அடக் கடவுளே! இது என்ன புது வம்பு? இல்லை.. இந்த ஆளை இனி இங்கே வைத்திருக்கக் கூடாது. எப்படியாவது ஏதாவது செய்து இவரை இவர் ஊருக்கு அனுப்பி விடுவது தான் உத்தமம். இனி வேண்டாம் இந்த ஆளின் தொடர்பு’ என்று அப்போதே முடிவெடுத்து தான் ஆபீசுக்கே சென்றேன்.

அலுவலகம்  போனதுமே அனு என்னை கைபேசியில் அழைத்தாள். பொதுவாக நாங்கள்  மதிய வேளையில் தான் சற்று சாவகாசமாகப் பேசிக் கொள்வோம்.. மாலையில் வரும் போது நான் அவள் ஆபிசுக்கே சென்று இருவரும் ஒன்றாக வீடு திரும்பி வருவதை வழக்கப்படுத்திக் கொண்டுள்ளோம்.

‘என்ன அனு.. உனக்கு ஒன்று சொல்ல வேண்டுமே, மாமா’ என்று நான் சொல்லவருமுன்பாகவே அவள் பேசினாள்.

”என்னங்க.. அப்பா பத்தி தானே.. அப்பா ஏதுனாச்சும் விளையாட்டா பேசிட்டாரா.. நீங்க மனசுல வெச்சுக்காதீங்க.. இப்பதான் போன் பண்ணி, ‘மாப்பிள்ளைகிட்டே ஏதோ விளையாட்டா பேசிட்டேன் அனு.. அவர் என்னைத் தப்பா நினைச்சுக்கப் போறாருன்னு பயம்மா இருக்கு அனு’ன்னு அழறாருங்க.. என்னங்க.. நீங்க அதை ஒண்ணும் பெரிசு படுத்தலே இல்லை.. எனக்கு இங்கே வேலையே ஓடலெ”

”சேச்சே, என்ன அனு, அதெல்லாம் ஒண்ணும் இல்லே.. நீ உன் வேலைல கவனம் செலுத்து”

அப்படி சொல்லி விட்டுத் தான் போனை வைத்தேன். அவளிடம் இந்த மனுஷன் பேசின வார்த்தைகளை யெல்லாம் ஒன்று விடாமல் சொல்லி விட வேண்டும் என்று மனசு துடித்தது வாஸ்தவம் தான். ஆனால் அனு பேசியது போல ஒரு வேளை உண்மையாகி இருந்தால்.. இந்த மனுஷன் ஏதோ நிஜமாகவே விளையாட்டாகப் பேசியிருந்தால்.. அனு மிக மிக நல்லவள். நல்ல மனதுடையவளை புண்படுத்தக் கூடாது.

அன்று மாலையே பார்த்தேனே.. இந்த ஒரு மாதத்தில் இல்லாத கைங்கரியமாக மாமா முதல் முதலாக காபி போட்டு அதை பிளாஸ்கில் ஊற்றி வைத்துக் கொண்டு எங்களுக்காக காத்திருந்தார். நாங்கள் வந்ததும் வராதுமாக காபியை எனக்குதான் முதலில் தந்தார். குரல் கம்மி வந்தது.

“மாப்ளே.. என் மனசு ஒண்ணும் சரியாவே இல்லை.. முதல்ல என்னை மன்னிச்சேன்’னு சொன்னா தான் உங்க வீட்டுல நான் இருப்பேன்.. ஏதோ ஒரு வார்த்தை இன்னிக்கு காலை’ல அதிகப் பிரச்ங்கித்தனமா கேட்டுப்பிட்டேன்.. என்ன அப்படி உங்களைக் கேட்டேன்னு கூட என் ஞாபகத்துல இல்லே.. ஆனா மனசு மாத்திரம் ஏதோ உங்களை சொல்லிப்பிட்டேன்னு உள்ளுக்குள்ளேயே குத்துது.. என்னை மன்னிச்சேன்னு சொல்லிட்டு காபியை சாப்பிட்டிங்கன்னா தான் எனக்கு மனசு ஆறும்.”

அனு உடனே அதை  கையில் வாங்கிக் கொண்டு என்னிடம் தந்து கொண்டே பேசினாள் “ஐய்யோ அப்பா.. உங்க மாப்பிள்ளைக்கு உங்களைப் பத்தி தெரியும்.. இதுக்கெல்லாம் போய் பச்சைப்புள்ள மாதிரி அழுதுண்டு..”

நானும் அவளோடு சேர்ந்து கொண்டேன்.. “என்ன மாமா இது.. காலைலேயே நான் கேட்டேனே.. என்ன விளையாட்டுத் தனம் இதுன்னு, எனக்கு எல்லாம் புரிஞ்சுடுச்சு மாமா.. காபி இவ்வளோ அருமையா போடறீங்க.. சூப்பர் போங்க..”

”ஆமாம் மாப்பிள்ளே., அட்லீஸ்ட் காபியாலவாவது உங்க கோபத்தை ஆத்தலாம்’னு நானே வெளில போய் ஒரு பாக்கெட் பால் வாங்கி வந்து போட்டு வெச்சேன். ரொம்ப தேங்ஸ் மாப்பிள்ளே.. நீங்க ரொம்ப நல்லவரு மாப்பிள்ளே!”

என்னிடம் “நிஜமாவே எங்கப்பா பச்சப் பிள்ளை மாதிரி தாங்க.. பாருங்களேன்.. தன் மாப்பிள்ளையோட கோபம் ஆறணும்னு ஸ்பெஷலா காபி கூட போட்டிருக்கார்.. ஒண்ணும் தெரியாத பச்சைப் புள்ளைன்னு தான் நினைச்சேன்.. காபி நல்லாவே போட்டுருக்கார்” என்று அனுவும் அவருக்குக் கூட ஒரு ஷொட்டு வைத்தாள். அன்று இரவு அவளிடம் நடந்ததை அப்படியே சொல்லி விடலாமா என்று யோசித்தேன். வேண்டாம்.. பாவம்.. களைப்பு அதிகமாகி காணப்படுகிறாள். வேலை அதிகம் வேறு இவளுக்கு.. இவள் நிம்மதியாக தூங்கட்டும்.

ஒரு வேளை இந்த மனுஷன் விளையாட்டாக பேசியே இருக்கலாம். சில பேர் இப்படித் தான் சமய சந்தர்ப்பம் தெரியாமல்  விளையாட்டாக ஏதாவது பேசி மனசுக்குக் கஷ்டம் கொடுப்பார்கள். ஆனால் மனதில் ஒன்றும் இருக்காது.. போகட்டும், விடுவோம்.. இதை ஏன் பெரிது பண்ண வேண்டும்.. அனுவின் முகத்தில் நிம்மதியான உறக்கத்தின் ரேகைகள் அழகாகத் தெரிய அவளைத் தொந்தரவு படுத்தாமலே அவளருகே படுத்துக் கொண்டு சற்று நேரத்தில் உறங்கிப் போனேன்.

ஆனால் அடுத்த நாள் காலையில் அனு அலுவலகம் போனவுடன் மறுபடியும் குரங்கு மரத்தில் ஏறிக் கொண்டது.

“என்ன மாப்பிள்ளே.. ராத்திரி நடந்தது பூரா அனுகிட்டே  சொல்லிட்டிங்களா.. ரொம்ப  நேரம் பேச்சுக் குரல் ரூம்லே கேட்டது..”

அடப்பாவி  மனுஷா.. ராத்திரி நாங்கள்  அதிகம் பேசிக் கொள்ளக் கூட இல்லை என்ற உண்மையை எப்படிச் சொல்வது. இந்த ஆளிடம் மிக ஜாக்கிரதையாக இனி நடந்து கொள்ள வேண்டும். பேசவே கூடாது.. வாயும் கொடுக்கக் கூடாது. பார்ப்போம் ஓரிரண்டு நாள்..

மாமா விடவில்லை. அதே முதல் நாள் பல்லவி தான்.. நான் அலட்சியப் படுத்துகிறேனாம்.. அவர் போட்ட காபியைப் பாராட்டியது  கூட அவர் காபி போடுவதற்குதான் லாயக்கு என்று குத்திக் காட்டுகிறேனாம்.. விடாமல் அவர் பாட்டுக்குப் பேசிக் கொண்டே இருந்தார்.. அவரைப் பைத்தியமாக்கி வாயைக் கிளறி ஏதேதோ பேசவைத்து வேடிக்கை பார்க்கிறேனாம்.. இன்னும் என்னென்னவோ.. பொறுமை தாண்டிப் போச்சு தான்.. இருந்தாலும் மௌனம் காத்தேன். அனுவிடம் பகல் வேளையில் போனில் பேசும் போது கூட சொல்லலாம் என்று வாய் வரை வந்து சேச்சே வேண்டா மென்று விட்டு விட்டேன். அன்று இரவு அவள் அலுவலக வேலையை வீட்டுக்குக் கொண்டு வந்துவிட்டதால் இரவு படுக்கும் வரை அவளிடம் இது பற்றி பேசவில்லை தான். அடுத்த நாள் காலையும் இந்த பிரகிருதி என்னை  விடவில்லை. இதே கதைதான்.. நானும் விடாப் பிடியாக பதில் ஏதும் சொல்லாமல் மௌனம் காத்தேன்..

எதுவும் பேசாமல்  நான் கிளம்பிப் போவது இன்னமும் இந்த ஆளுக்கு எரியும் என்று கணித்துக் கொண்டே வீட்டு வாசலுக்கு வந்து காரை எடுத்தவன், கீழ் வீட்டுப் பெண்மணி, தன் வண்டியையும் எடுத்துக் கொண்டே சாதாரணமாக சிரித்துக் கொண்டே பேசினாள்.

“உங்களுக்கு டெய்லி காபி வேணும்னா கூச்சப் படாமல்  கேளுங்கள். நானே உங்க வைஃப் கிட்டே பேசறேன்.. பாவம் உங்க மாமனார் முந்தா நாள் எங்க வீட்டுக்கு வந்து குறைப் பட்டுண்டார்.. சாயங்காலம் ஆனா உங்களுக்கு வீட்டுக்கு வந்தவுடனே சூடா காபி வேணுமாம்.. ஆனா அவருக்கு காபிப் போடத் தெரியாதுன்னு நீங்க ஏதோ சொன்னதா குறையா சொன்னார். அதுக்கென்ன, நான் போட்டுத் தர்ரேனே’ ன்னு போட்டுக் கொடுத்தேன்.. உங்க மனைவி கிட்டே சொல்லி பால்காரனை சாயங்காலமும் உங்க கணக்குல ஒரு பாக்கெட் தினம் மத்தியானம் எங்க வீட்டுல போடச் சொல்லுங்களேன்.. எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லே..”

நான் காரை ஸ்டார்ட் செய்யக் கூட தோன்றாமல் ஆச்சரியமாக அந்தப் பெண்மணியைப் பார்த்தேன்.. அடப்பாவி மனுஷா.. காபி கூட நீ போடலியா.. அய்யோ.. எத்தனை போலியான ஆள்..

“அப்படின்னா அவரு உங்களுக்கு பால் பாக்கெட் கூட வாங்கித் தரலியா?”

அவள் சிரித்தாள் “அடடே அதுக்கென்னங்க போச்சு.. ஒரு நாள் ஒரு பால் பாக்கெட் தானே.. எங்க வீட்ல வந்து காபி சாப்பிட்டா இதெல்லாம் கணக்குப் பார்ப்பேனா?”..

அந்த பெண்ணிடம் மன்னிப்புக் கேட்டேன். இனி ஒரு முறை அப்படிச் செய்ய வேண்டாம் என்றும், மற்றவருக்கு குறிப்பாக பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு தொந்தரவு கொடுப்பது கூடாது என்பது எனக்கும் என் மனைவிக்கும் பெரிய குறிக்கோள் என்றெல்லாம் சொல்லி நடந்த விஷயம் கூட குறிப்பாக என் மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்றும் அவள் வருத்தப்படுவாள் என்றும் சொல்லியதும், அந்தப் பெண் என்னை நம்பாதவள் போல ஒருவித வில்லத்தனமாக பார்த்துத் தலையசைத்தாள்.

ஆஹா.. தானே போய் பால் வாங்கி காபி போட்டதாக பச்சைப் பொய் வேறா? ஓ.. இந்த ஆளை என்ன செய்வது.. இருக்கட்டும் இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்.. எப்படி எப்படி..

அலுவலகம்  போனவுடனே அனுவுக்கு போன் செய்தேன். அவளே என்னைக் கூப்பிட வேண்டுமென இருந்தாளாம். எதிர்பார்த்தேன்..

“அனு.. நானே உன்னிடம் பேச வேண்டும்.. உங்கப்பாவைப் பத்தி தான்?”

“வுடுங்க! நான் இன்னிக்கு லீவு போட்டுட்டு வீட்டுக்குப் போகலாமான்னு  இருக்கேன்..”

சற்றுக் கோபமாகச் சொன்னதாகப்பட்டது.

“என்ன அனு! உடம்பு சரியில்லையா?’

“சரி வுடுங்க.. லஞ்ச் வரைக்கும் இருந்துட்டு நானே ஒரு ஆட்டோல போயிடறேன்.. சாயங்காலம் நேரே வீட்டுக்கு வந்தீங்கன்னா போதும்..”

போனை வைத்து விட்டாள். அன்று பார்த்து நாள் முழுவதும் வேலை அதிகமானதால் மத்தியானம் என்னால் அவளுக்கு போன் செய்ய முடியவில்லை. வீட்டுக்குப் போயிருப்பாள். இருக்கட்டும். மாலையில் பேசிக் கொள்ளலாம்..

வீட்டுக்குப்  போனவுடன் வரவேற்பு முந்தைய நாட்கள் போல இல்லை யென்றாலும் மாமா சாதாரணமாகத் தான் பேசினார். அனுவிடம் சின்ன வித்தியாசம் தெரிந்தது. ”என்னம்மா.. உடம்பு சரியில்லையா’ என்று அவளை அன்போடு விசாரித்தேன்.. அவள் பதில் எதுவும் பேசவில்லை. உம்மென்று இருக்கும் காரணம் ஏதோ புரிந்தது.. இரண்டு நாட்களாக நான் மாமாவிடம் உம்மென்று இருந்ததை அந்த ஆள் கோள் மூட்டியிருக்கலாம் என்று நினைத்தேன்.

இரவு தான்  அவளிடம் தனியாகப் பேச முடியும். சாப்பிட்டு வந்தவுடன் அவளே என்னருகே வந்து என் தோள் மேல் தன் கைகளை மாலையாக போட்டுக் கொண்டு கேட்டாள்.

“ஏங்க.. நான் உங்க கண்ணுக்கு அழகா இருக்கேனா..”

“ஏய்.. என்ன இது.. திடீர்னு.. இப்படி சந்தேகம்”

”ஏங்க.. நானும் நாளையிலேருந்து காலைல என் ஆபீஸ் டைமை மாத்திண்டு உங்களோடயே வந்துடறேங்க..”

“அனு.. என்ன இது.. எனக்கு ஒண்ணுமே புரியலே.. என்ன பேசறே’ன்னு கொஞ்சம் தெளிவா பேசும்மா”

அவள் பேசாமல்  என் கண்ணைப் பார்த்தாள். என் கண்ணில் என்ன தோன்றியதோ என்னை விட்டு கட்டிலில் போய் சாய்ந்து கொண்டாள். அவளே மெல்ல ஆரம்பித்தாள்.

“எனக்கு நல்லாத்  தெரியும்ங்க.. உங்க மனசு ரொம்ப  நல்ல மனசு.. ஆனா உங்களைப் போல எல்லாரும் இருப்பாங்களா..”

”நிஜம்மாவே ஏன் இப்படி பேசறேன்னு தெரியலே அனு.. கம் ஆன்.. என்னாச்சு உனக்கு.. நான் ஏதோ பேசலாம்னா நீ ஏதோ ஆரம்பிக்கறே..”

”ஆனா இனிமே கொஞ்சம் நாம ஜாக்கிரதையா இருக்கணுங்க.. நீங்க வெகுளியா, சாஃப்டா இருக்கீங்கன்னு, மத்தவங்க உங்களை ஈஸியா எடுத்துக்கக் கூடாது பாருங்க” அவள் சொல்லி விட்டு மறுபடியும் என்னருகே வந்தாள். என் கைகளைப் பிடித்துக் கொண்டாள் “இதோ பாருங்க.. இந்த கீழ் வீட்டுக்காரங்க, பக்கத்து வீட்டுக் காரங்க, மெயினா பொம்பிளைங்ககிட்டேயெல்லாம் நீங்க பேசாதீங்க.. அவங்களே ஏதுனா கேட்டா கூட சிரிச்சு ஒதுங்கிடுங்க.. அப்பாதான் சொன்னாரு.. அவங்கள்ளாம் ரொம்ப பொறாமை பிடிச்சவங்களாம்.. உங்ககிட்டே காலைல ரொம்ப நேரம் சிரிச்சு சிரிச்சுப் பேசினாளாமே கீழ் வீட்டுக்காரி..”

எனக்கு நன்றாகப் புரிந்து போய் விட்டது. காலையில் என்னோடு கீழே அந்த பெண்மணி  பேசியதை இந்த பிரகிருதி ஒட்டுக் கேட்டிருக்க வேண்டும். எனக்கு கோபம் அதிகமாக வந்தது. ஆஹா, சரியான ‘டைமிங் கோள்’ என்றால் இது தான் போலும்.. இப்படி கோள் மூட்டி விட்டால் அனு நான் கீழ் வீட்டுக்காரியைப் பற்றி என்ன சொன்னாலும் சந்தேகம் அதிகமாக என்னை நம்ப மாட்டாள். எல்லாமே தனக்குச் சாதகமாக பயன் படுத்திக் கொள்ளும் இந்த பிரகிருதி சாமான்யமானது மட்டும் இல்லவே இல்லை.. இவளுக்கு என்னவென்று நான் சொல்வது..

ஒன்றும் பேசாமல்  மெதுவாக அனுவை படுக்கையில் படுக்க வைத்து விட்டு அறைக் கதவைத் திறந்து ஹாலுக்கு வந்தேன். தொலைக் காட்சியில் ஒரு பெண் மிகவும் சீரியசாக அழுது கொண்டிருக்க, இன்னொரு பெண் சாபம் விடுவது போல சரமாரியாக திட்டிக் கொண்டிருக்க, இந்த பிரகிருதி ஒரு மோடாவை டி.வி யின் அருகேயே வைத்து அதன் மேல் உட்கார்ந்து நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டே அந்த அழுகை சீரியலை டென்ஷனோடு மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இதை என்ன செய்தால் பாவம் தீரும்? ச்சே..

மறுபடியும்  உள்ளே போய் கதவை சாத்திக் கொண்டேன். அனுவின் அருகே போய் மௌனமாக படுத்துக் கொண்டேன். அனுவின் கண்களில் கொஞ்சம் கண்ணீர்.. அழுகிறாளா.. இவளுக்குப் புரியும் விதத்தில் புரிய வைத்தால் தான் நல்லது.

”அனு என்னம்மா இது.. நீ படிச்ச பெண்ணு.. என்னைப் பத்தி எல்லாம் தெரிஞ்சவ.. இதையெல்லாம் எமோஷனலா எடுத்துக்காம் நிதானமா யோசிக்கணும்.. நான் ஏதாவது தப்பு பண்ணுவேன்னு நினைக்கிறியா” அவள் தன் கண்ணைத் துடைத்துக் கொண்டாள்.

“அனு, உனக்குத் தெரியுமா.. உங்கப்பா சர்வ சகஜமா  பொய்யைச் சொல்லி உன்னை ஏமாத்தி  இருக்காரு.. இதோ பார்..”

என்று சொல்வதற்குள் என்னைத் தன் பக்கத்தே இழுத்துக் கொண்டாள்.

“வுடுங்க.. இதையெல்லாம் மனசுல போட்டுக் குழப்பிக்காதீங்க.. எனக்கு உங்களை நல்லாத் தெரியும்.. ஜஸ்ட்.. ஒரு எச்சரிக்கைக்கு தான் சொன்னேன்.. அப்பாவை என்ன சொல்ல முடியும். அவருக்கு தன் மகள் மேலே பாசம் ஜாஸ்தி.. எல்லா அப்பாக்களுமே கொஞ்சம் ஜாக்கிரதையா இருன்னுதான் சொல்வாங்க. இத்தனைக்கும் அவர் உங்களைத் தப்பா ஒண்ணுமே சொல்லலீங்க.. தான் பார்த்ததை அப்படியே சொன்னார்.. நீங்க டிரைவர் சீட்டுலேயே தான் உட்கார்ந்திருந்தீங்களாம்..அந்த கீழ் வீட்டுக்காரி தான் உங்க கிட்ட ரகசியம் பேசறா மாதிரி கிட்டக்க குனிஞ்சு காதுகிட்டே ஏதோ ரொம்ப நேரம் பேசினாளாம்.. அப்பா குறை சொன்னது அவளைத்தான்.. அப்பா உங்க மேலே ரொம்ப மரியாதை வெச்சிருக்காருங்க.. அவரை ஒண்ணும் சொல்லாதீங்க”

“இல்லை அனு.. நான் உங்கிட்டே நேத்தியே சில விஷயங்களைச் சொல்லி இருக்கணும்.. உங்கப்பா ரொம்பவே டபுள் கேம் ஆடறாரு அனு.. அதுவும் இந்த மூணு நாளா என்ன நடந்ததுன்னு உனக்குப் புரியணும்”

ஆனால் அவள் கேட்டுக் கொள்ள விருப்பமில்லாமல் அந்தப் பக்கம் தலையைத் திருப்பிக் கொண்டு படுத்தாள். அடக் கடவுளே.. இவள் வேறு மாதிரி நினைக்க ஆரம்பித்து விட்டாளோ.. கீழ்வீட்டுப் பெண்ணுடன் பேசியதை அப்பா சொன்னதால் தான் அவர் மீது இல்லாது பொல்லாது பேசுகின்றேன், என நினைத்து விட்டாளோ.. அடப்பாவி மனுஷா.. எப்படியெல்லாம் ஒரு நிமிஷத்துல மகளோட மனசை மாத்திட்டான்.. அப்படித்தான் இருந்தது அவள் பேச்சு கூட,.

”சரிங்க.. இந்த விஷயம் நாம் இனிமே பேச வேணாம்.. நீங்க எப்போ அப்பா மேல இப்படி ஒரு அபிப்ராயம் வெச்சிருக்கீங்களோ, அவர் இனிமே இங்க இருக்கறதுல எனக்கும் விருப்பம் இல்லே.. எனக்கு நீங்க தான் முக்கியங்க.. நாளைக்கு எப்படியாவது அப்பாவை நான் வீட்டுக்கு அனுப்பி வெக்கிறேன்.. நீங்க எதுவும் மனசுல வெச்சுக்காதீங்க.. என் மனசுலேயும் ஒண்ணும் இல்லே. தூங்குங்க.”

அடுத்த நாள்  நான் மௌனத்தோடு ஏதும் பேசாமல் இருக்க மாமா வேண்டுமென்றே அனுவின் முன்னே ஜோக்குகள் அடித்துக் கொண்டே இருந்தார்.. நான் மனைவி முன்னால் பேசுவதற்கு வெட்கப் படுகிறேனாம்.. ”இருந்தாலும் மாப்பிள்ளே.. நான் எதுக்கு இருக்கேன்.. மாசத்துல ரெண்டு விசிட் அடிச்சு ரெண்டு நாள் இங்கே இருந்து உங்க வெட்கத்தைப் போக்கிட மாட்டேன்.. யம்மாடி.. கொஞ்சம் மாப்பிள்ளையை ஜாக்கிரதையா பார்த்துக்கோம்மா” என்று மகளுக்கு அறிவுரை கொடுத்து தான் கிளம்பினார்.

எப்படியோ, எனக்கு ஆத்திரமூட்டி இல்லாத பொல்லாத விஷயங்களால் மனதைப் படுத்தி, சில விஷயங்களில் அனுவிடம் கோள் மூட்டி எங்களுக்குள் ஒரு சின்ன கசப்பை வீசி விட்டுச் சென்றாலும் இது போய் விட்டதே என்ற மிகப் பெரிய சந்தோஷம் என் உள்ளத்தில் அப்போது இருந்ததை வெளியே காண்பிக்கவே இல்லை. தற்போதைக்கு தொல்லை இல்லை.. போயாச்சு!

ஆனாலும் மாதம்  சொன்னபடியே இரு முறை வரும்.. ஒவ்வொரு முறையும் இரண்டு நாள் இருக்கும்.. அந்த காலை நேரத்தில் மறக்காமல் அனு போனவுடன் ஏதாவது சொல்லிப் பழி வாங்கும்.. அனுவிடம் எப்படியாவது இதைச் சொல்ல வேண்டும் என்று தான் துடிப்பேன்.. ஆனால் அவள் நம்ப மாட்டாள் என்றும் புரிந்தது.. அவள் கண்ணில் மறுபடியும் கண்ணீர் தான் வரும்.. தேவையா.. வேண்டாம்.. எப்படியும் இது பெண்ணிடம் கோள் சொல்லி எங்களுக்குள் புகைய வைக்கும். இரண்டு நாள்தான், உள்ளம் நிறைந்த சந்தோஷத்துடன் வீட்டுக்கு திரும்பிப் போகட்டும்..

அத்தோடு அனு  கூடிய சீக்கிரம் எனக்கு ஒரு வாரிசைப் பெற்றுத் தரப் போகிறாள். இந்த நேரத்தில் இந்தப் பிருகிருதியைப் பற்றிப் பேசி அவளை எந்தக் காரணம் கொண்டும் குழப்பக் கூடாது. எவ்வளவுக் கெவ்வளவு அனு சந்தோஷமாக இருக்கிறாளோ பிறக்கும் குழந்தையும் ஆரோக்கியமாக பிறக்கும் என்று சொல்வார்களே..

ஒன்பதாம்  மாதம் தான் அனுவை அவள் ஊருக்குக்  கொண்டு விட்டேன். உடனே திரும்பி விட்டாலும் மாமா எச்சரிக்கையாக பேசி என்னை உள்ளுக்குள் அலற வைத்தார்.

“மாப்பிள்ளே.. பொண்டாட்டி இல்லையேன்னு  அங்க இங்கே காபி சாப்பிடாதீங்க.. ஒழுங்கா வேளா வேளைக்கு சோறு சாப்பிடுங்க வேணும்னா நான் அடிக்கடி வந்து உங்களுக்கு ஒத்தாசையா உதவி பண்ணிட்டா போச்சு.. என்ன சொல்றீங்க..”

அனு அந்த நிலையிலேயும் அப்பாவை ஆதுரமாகப் பார்த்தாள். “அப்பாவுக்கு தன் மாப்பிள்ளை மேல எவ்வளோ பாசம்.. பச்சை பிள்ளை போல கொஞ்சறார்’ பெருமையாக அவள் சொல்லிக் கொண்டாலும் நான் கண்டு கொள்ளவில்லை..”

“அப்படியே இருக்கட்டும் அனு.. பிரசவம் ஆனவுடனே ரொம்ப நாள் இங்கேயே இருக்க வேண்டாம். ஒரு மாசத்துல வந்துடு.. நாமளே குழந்தையைப் பார்த்துக்கலாம்” என்று சொல்லி விட்டுத்தான் வந்தேன்..

இதோ மகள் பிறந்து  இரண்டு மாதம் ஓடிவிட்டது.. அனுவையும் குழந்தையையும்  அழைத்துக் கொள்ள நான் இங்கே  வந்திருக்கிறேன். என் பயம் வேறு. எங்கே நானும் துணையாக  வருவேன் என்று கூடவே  இந்தப் பிரகிருதியும் தொத்திக் கொள்ளப் போகிறதோ என்று தான்.. ஆனால் நான் போன சமயத்திலிருந்து என் கண்களிலேயே அந்த விசித்திர உருவம் தென்படவில்லை.. எங்கே போயிற்று.. ஒரு வேளை ஊரில் இல்லையோ.. அனு அப்படி ஒன்றும் சொல்லவில்லையே..

என் சந்தேகத்தை அனுவே தீர்த்துவைத்தாள்.

“என்ன அப்பாவைத்தானே  தேடறிங்க?” என்று சற்று சோகத்துடன் கேட்டாள்.

நான் பதில்  பேசாமல் என் மகளையேப் பார்த்துக் கொண்டிருந்தேன். அனுவும்  குழந்தையைத் தடவினாள்.

“வேற ஒண்ணுமில்லேங்க.. எங்கப்பா கொஞ்சம் கிட்டே வந்தாலும் உங்க மகளுக்கு அலர்ஜி மாதிரி ஆயிடறது. அத்தோட இவரைப் பார்த்தா ‘ஓ’,ன்னு கையை காலை ஆட்டி நிப்பாட்டாம அலறி அழறா.. இவர் அந்தண்டை போனதும் சரியாயிடறது. கொஞ்சம் ரெண்டு மூணு தடவை வேணுமின்னே செக் பண்ணி கூடப் பார்த்தோம்.. அதே மாதிரிதான் செய்யறா.. டாக்டர்கிட்டே கேட்டோம். “இப்படியெல்லாம் ஹ்யூமன் பயாலாஜிகல் அலர்ஜி சில குழந்தைக்கு ரேரா அமையறது உண்டாம்.. பச்சைப் பிள்ளை இல்லையா.. கொஞ்சம் எரிச்சல் ஊட்டாமல் எச்சரிக்கையா இருக்கணும். எதுக்கும் அப்பாவை குழந்தை முன்னாடி விடாதீங்க’ன்னு கண்டிப்பா சொல்லிட்டார்.. கொஞ்சம் வயசு ஏற ஏற சரியாகுமாம்.. அப்பாவை நானே தனியா பார்த்து விளக்கமா புரியறா மாதிரி எடுத்துச் சொல்லிட்டேன்.. ‘அப்பா.. அது பச்சைப் புள்ள இப்ப.. கொஞ்ச வருஷம் போகட்டும்.. அப்ப வந்து உன் பேத்தியைப் பார்த்துக்க’ன்னு”

அப்படியானால்  இந்த பிரகிருதி இப்போதைக்கு நம் வீட்டுக்கு வரவே வராதா.. ஆஹா.. என் மகள் பிறந்தவுடனே மிகப் பெரிய சாதனையே செய்துவிட்டாளா.. அவளைப் பெருமையாகப் பார்த்தேன்.. என்னைப் பார்த்துக்  கொண்டே காலை ஆட்டி பொக்கை வாயைப் பெரிதாக விரித்து, கண்களை உருட்டி ஆர்ப்பரித்தாள் என் வீட்டு குட்டி மகாலட்சுமி!..

 

படத்திற்கு நன்றி.

 

பிரகிருதி

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “இப்படியும் ஒரு பிரகிருதி

  1. சார்! சார்! திவாகர் சார்!
    ஒகடி: இவரு பிருகிருதி இல்லைங்காணும். சொற்களை வில்லாக வளைப்பவர்; மெனிபுலேட்டர். இவர் மாதிரி ஆசாமிகளை பார்த்திருக்கிறேந்.
    இரண்டு: இந்த ஹ்யூமன் பயாலாஜிகல் அலர்ஜி பிர்மாதமான மெனிபுலேஷன். நீங்க மிஞ்சிவிட்டீர்கள்.

    மூடு: ஆமாம். நம்பள் ‘இதுவும் ஒரு பிருகிருதி’ மனசுலே உந்தோ? நான் பேட்டண்ட் பண்ணலை; பண்ணமாதிரி ரோசனை!
    இ சார்.

  2. அருமை, தொய்வில்லாமல் கடைசி வரை சென்று குழந்தையின் மூலம் சிக்கலைத் தீர்த்தது மிக மிக அருமை. குழந்தை கொள்ளை அழகு, பெத்தவங்களைச் சுத்திப் போடச் சொல்லுங்க. வாழ்த்துகள்.

  3. அழகாக சென்றது கதை.. வழக்கமா இந்த கதாபாத்திரத்தை மாமியார்கள்தான் ஏத்துப்பாங்க. மாமனாரை அதில் பொருத்தியது ரசிக்கவெச்சது 🙂

  4. கதை அருமை. ஒரு வித்தியாகமாக மாமனாரை வில்லனாக காண்பித்திருக்கிறாய். (ஏதேனும் அனுபவம்?) . இப்படியும் மாமனார்கள் இருப்பார்களா?. குழந்தை குடும்பத்தை சேர்த்துவைக்கும் என்பார்கள். இங்கு?

  5. வித்தியாசமான மாமனார் கதாபாத்திரம். மாமனாரின் குணாதிசயத்தை கண்முன் நிறுத்திவிட்டீர்களே…! எந்த ஒரு விஷயத்தையுமே அதற்கு கண், காது, மூக்கு வைத்து தனக்குத் தோதாக வளைக்கும் அந்த லாவகம் இந்த மாமனாரின் வடிவிலும் , ஒன்றும் செய்ய இயலா நிலையிலிருக்கும் மாப்பிள்ளையின் அந்த யதார்த்தமும் வெகு அருமை…! மாமனாரே கதையின் ஹீரோவாகிவிட்டாரே…!

  6. Aiyya

    Ippadiyum silar irukkiraarkal aiyya.. Naan Paarthirukkiren.. Super narration

  7. தொலைக் காட்சியில் ஒரு பெண் மிகவும் சீரியசாக அழுது கொண்டிருக்க, இன்னொரு பெண் சாபம் விடுவது போல சரமாரியாக திட்டிக் கொண்டிருக்க, இந்த பிரகிருதி ஒரு மோடாவை டி.வி யின் அருகேயே வைத்து அதன் மேல் உட்கார்ந்து நகத்தைக் கடித்துத் துப்பிக் கொண்டே அந்த அழுகை சீரியலை டென்ஷனோடு மிக ஆவலாகப் பார்த்துக் கொண்டிருந்தது. இதை என்ன செய்தால் பாவம் தீரும்?

    Sir, Though my comments are little related to your story, your above words are true as far as elders concerned in most of the houses. I understand these serials are time passing for them, but the fact is they are being screwed by these serials by seeding bad languages and wrong themes. I request you to highlight this particular point in your story in your own style of narrating so that it will do good to the viewers of these tele-serials.
    Thank you Sir,
    Moni

  8. We are often seeing this type female characters. But this mamanaar is rare.
    ‘Vaayulla pillai pizhaikkum’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *