உரம் ஏற்றட்டும் மே தின தியாக நினைவலைகள்

0

எஸ் வி வேணுகோபாலன்

amd

“…..இறைவன் எங்கே? விடுதலை எங்கே?கோயிலிலா,
பூஜையிலா, ஏகாந்தத்திலா ? இல்லை. பிறகு?

உழைப்பினில், வேர்வையில், புழுதியில், மக்கள் மத்தியில்……”

arbஇந்த வாசகங்களை, மிக அண்மையில் புதிதாக வாய்த்த நண்பர் பெரியவர் பெங்களூர் வி எஸ் கல்யாணராமன் அனுப்பி வைத்தார். குருதேவர் ரவீந்திரநாத் தாகூர் அவர்களது அற்புதமான கீதாஞ்சலி கவிதை தெறிப்புகளை தனது அருமையான பேராசிரியர் அ சீ ரா (அ சீநிவாசராகவன்) மொழி பெயர்க்கையில் மேலாக எழுதி வைத்த மேற்கோள் வரிகள் இவை என்று குறிப்பிட்டார். மந்திரங்களில், கோயில்களின் இருட்டுக் கருவறைகளில் கடவுளைத் தேடாதே, அவர் உழைப்பவரோடு சேர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறார் என்று சொல்லும் மேலான கீதாஞ்சலி வரிகளின் இதயமான கருத்தைப் பேசும் வாசகங்கள் இவை.

உழைப்பைக் கொண்டாடும் வரிகள் எத்தனை மெய்யாய் ஒலிக்கின்றன…சித்திரச் சோலைகளே உம்மை நன்கு திருத்த இப்பாரினிலே முன்னர் எத்தனை தோழர்கள் ரத்தம் சொரிந்தனரோ உங்கள் வேரினிலே என்றார் பாவேந்தர் பாரதிதாசன். உழைப்புக்கும், இயற்கைக்கும் பிறந்த குழந்தைதான் செல்வம் என்றார் அல்லவா கார்ல் மார்க்ஸ்.

உழைப்பவர் திருநாளை விட கொண்டாட்டம் இந்த பூமியில் வேறு என்ன இருக்க முடியும் ? மே தினம் விடிகிறது, நம்பிக்கையின் திருவிழாவாக! கோடையின் செம்புழுதிக் காற்றில் செங்கொடி கம்பீரத்தோடு பறக்கிறது…நம்பற்குரிய வீரர் அதன் கம்பத்தின் கீழ் நிற்கிறார் என்ற செம்மாந்த பெருமிதம் அந்தக் கொடிக்கு !

சிகாகோ எங்கே, சிந்தாதிரிபேட்டை எங்கே? மே தின பூங்கா எப்படி இங்கே வரப் போயிற்று! நாடு, இனம், மொழி எல்லாம் கடந்து தொழிலாளிகளின் தியாமிக்க வரலாறு கடல் கடந்து, காடு, மலைகளைக் கடந்து, கண்டங்களைக் கடந்து கொடிகட்டிப் பறக்கிறது…..அறுவடைத் திருநாளை விவசாயிகள் கொண்டாடுவது போலவே, தங்கள் திருநாளை மே தினத்தில் கொண்டாடிக் களிக்கின்றனர் தொழிலாளி தோழர்கள்.

ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தும் உரிமைகளுக்காக மன்றாடிக் கொண்டிருந்த தொழிலாளிகளின் முணுமுணுப்புகளின் உரசல் ஒரு தீப்பொறியாகப் பரவி வெடித்த ஒரு நாளில் எத்தனை எத்தனை பெரிய வரலாறு படைக்கப்பட்டது…..

முதலாளிகளின் லாபத்திற்காக நேரம் காலமின்றி உழைத்துக் கொண்டிருப்பதா என்ற கோபாவேசக் கேள்வி, என்னையும் மனிதனாக நடத்து என்ற முழக்கம் வெளிப்பட்டது. எட்டு மணி நேரம் வேலை செய்தால் போதும், அந்த உழைப்புக்கு உரிய கூலியைக் கொடு, எனக்கு ஓய்வெடுக்கவும், பொழுது போக்கிற்கும் சிந்தனை செய்வதற்கும் தேவையான நேரத்தை உன்னிடம் கொடுத்துவிட்டு ஏமாற முடியாது என்று தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தைப் பார்த்து ஆர்ப்பரித்தது. அந்த வெஞ்சினம் ஒரே நாளில் ஒற்றை இரவில் உருவானதல்ல.

சுரண்டிப் பிழைக்கும் கும்பல்களுக்கு ஆதரவாக அரசுகள் இருந்தன. வேலையாட்களை ஒடுக்குவதற்கு, அதட்டி மிரட்டி வழிக்குக் கொண்டு வருவதற்கு அதிகார வர்க்கத்தின் படை மட்டுமல்ல, மத போதனையும் பயன்படுத்தப் பட்டது. தொழிலாளி வர்க்கத்தின் விடியலுக்கு ஒரு தத்துவ விடி வெள்ளி முளைத்தது. மார்க்சிய தத்துவம்தான் அது!

உனக்குக் கொடுக்கப்படும் கூலிக்கு மேல் உபரியாக நீ உழைப்பைச் செலுத்துகிறாய். அது தான் லாபத்தின் தோற்றுவாய். அந்த லாபம் உன்னைச் சுரண்டி ஈட்டப்படுவது. அதிலிருந்துதான் மூலதனம் மேலும் கொழுத்துக் கொண்டு போகிறது என்று விளக்கினார் கார்ல் மார்க்ஸ். இதுவரை வந்த தத்துவ ஞானிகள் இந்த உலகைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தனர். அநீதியான இந்த உலகை மாற்றி அமைக்க வேண்டிய வேலையைத் தான் நாம் செய்யவேண்டும் என்றார் அவர்.

1886 மே முதல் நாள், அமெரிக்க தொழிலாளர்கள் சிகாகோ நகரில் பெருந்திரளாகத் திரண்டு முழங்கிய காட்சி முதலாளிகளை மட்டுமல்ல ஆளும் வர்க்கத்தையும் சேர்த்து நடுங்க வைத்தது. அவர்களை அடித்து நொறுக்கிப் பாடம் கற்றுத் தந்து பணிய வைக்கப் பார்த்தது. மே 3ம் தேதி இந்த அடக்குமுறைக்கு எதிராக மீண்டும் ஓர் ஆர்ப்பாட்டம். அதன்மீதும் ஆளும் வர்க்கத்தின் முரட்டுத் தாக்குதல். நான்காம் தேதி, ஹே மார்க்கெட் சதுக்கத்தில் மிகப் பெரும் எண்ணிக்கையில் திரண்ட தொழிலாளர்கள் சவால்களை முறியடிப்போம் என்று குரல் எழுப்பினர்.

சதிகார ஆளும் வர்க்கத்தின் அராஜக நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக ஒரு சார்ஜெண்டை கையெறி குண்டு வீசித் தாக்கி அதன் பழியை தொழிலாளர் தலைவர்களின் பேரில் போட்டுச் சிறையிலடைத்துத் துன்புறுத்தியது. மோசடியான விசாரணையின் முடிவில் பார்சன்ஸ், எங்கெல், ஸ்பைஸ், ஃபிஷர் ஆகிய நால்வரும் 1887ம் ஆண்டு நவம்பர் 11 அன்று தூக்கில் போடப்பட்டனர்.

அப்போது அகஸ்டஸ் ஸ்பைஸ், “இன்று நீங்கள் நெரித்துப்போடும் குரல்களை விட, எங்கள் மௌனம் உரத்துக் கேட்கும் காலம் வரும்” என்று சொன்னார்.

நேர்மையற்ற பேர்கள் வீழ நின்று வாட்டுவோம், நீதி நாட்டுவோம் என்று பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களது எழுதிய கவிதை வரியைப் போலவே, சுரண்டல் வர்க்கத்தை நின்று வாட்டிக் கொண்டிருக்கிற – நீதியை நாட்டுகிற வலுப்பெற்ற மௌனமாக மே தின தியாகிகளின் தீரமிக்க முழக்கம் இன்றும் எழுச்சியாக கேட்கவே செய்கின்றது.

உலகெங்கும் தொழிலாளர்கள் உரிமைக்காகப் போராடுகையில் கண்ணுக்குப் புலனாகாத இணைப்பு ஏற்படவே செய்கிறது. 99% மக்கள் அன்றாடம் உழைத்து, 1 சதவீத பெருந்தனக்காரர்கள் வயிற்றை நிரப்ப வேண்டுமா என்று 2 ஆண்டுகளுக்குமுன் அமெரிக்காவில் புகழ்பெற்ற வால் ஸ்ட்ரீட் போராட்டம் நடந்தது அங்கு மட்டுமா கேட்டது, உலகம் முழுக்க எதிரொலித்தது. அய்ரோப்பிய நாடுகளில் எங்களைச் சுரண்டி கார்பொரேட் நிறுவனங்களை வளர்க்கப் பார்க்காதே என்று நாள் கணக்கில் தொடரும் போராட்டங்களின் எதிரொலி உலகம் முழுக்க கேட்கவே செய்கிறது. கீரிஸ் நாட்டுத் தேர்தலில் அது பிரதிபலித்தது. இலத்தீன் அமெரிக்க நாடுகள் சிலவற்றில் ஆட்சி அதிகாரத்தில் இடதுசாரி கருத்தோட்டம் கொண்டவர்களை அமர்த்துகிறது. உலக நெருக்கடி குறித்து சிந்திக்கையில், கார்ல் மார்க்ஸ் அளித்துச் சென்ற மூலதனம் நூலை எடுத்துப் படிக்குமாறு கத்தோலிக்க மதத் தலைவர் போப்பாண்டவரைத் தூண்டுகிறது. சோஷலிச நாடுகளின் வளர்ச்சியை, முன் மாதிரியை உலகம் இப்போது புதிய வெளிச்சத்தில் வாசிக்கத் தொடங்குகிறது. முரண்பாடுகள், பலவீனங்களை மீறியும் முன்னேறுகிறது தொழிலாளி வர்க்கத்தின் விடியலுக்கான போராட்டங்கள்.

இந்தியாவில் தொழிலாளர் நிலைமை என்ன? படிப்படியாக நிரந்தரத் தொழிலாளர்கள் சதவீதம் வீழ்ச்சி கண்டு, காண்டிராக்டு, கேசுவல் முறைகளில் ஆட்கள் வேலைக்கமர்த்தப்பட்டு சுரண்டப் படுகின்றனர். லாபம், மேலும் லாபம் என்பதைத் தவிர வேறு சிந்தனை இல்லாத தொழில் அதிபர் உலகம், தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி எந்த உரிமையும் அற்றவர்களாக தொழிலாளி வர்க்கத்தை நடுவீதிக்குக் கொண்டு வந்து நிறுத்துமாறு அரசை வலியுறுத்திக் கொண்டே இருக்கிறது.

கடந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசின் கொள்கைகள், ஊழல் இவற்றைக் கண்டு வெறுத்துப் போயிருந்த மக்களை உற்சாக வாக்குறுதிகள் அள்ளிவீசி ஆட்சியைப் பிடித்த நரேந்திர மோடி எந்தக் கவலையுமற்று நாடு நாடாகச் சுற்றிக் கொண்டிருக்கிறார். வளர்ச்சியின் பொய்யான பிம்பம் சந்தி சிரிக்கிறது.

வேலை பறிப்பு, கல்வி-சுகாதாரம்-மருத்துவம் அனைத்தும் காசு உள்ளவர்க்கே என்ற மோசமான நிலைமை, சமூகக் குறியீடுகளில் உலக நாடுகளில் மிகவும் பின்தங்கிய இடத்தில் இந்தியா, ஊட்டச் சத்தின்றி குழந்தைகள்-இரத்த சோகையில் கர்ப்பிணிகள்-வாழ்வாதாரம் அற்று தற்கொலை செய்து கொள்ளும் வேளாண் மக்கள்…என்று அனைத்து விதங்களிலும் பாழ்பட்டு நிற்கிறது நாடு.

உழைப்பாளி மக்களை ஒன்று சேரவிடாது, சாதி-மத-இன-மொழி வேறுபாடுகளால் கூறு போட்டுவிட மத வாத சக்திகள் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டே இருக்கின்றன. உணவு, உணர்வு அனைத்தையும் வைத்து அரசியல் நடத்தும் ஆர் எஸ் எஸ் – பா ஜ க கூட்டம் பல விதங்களில் மக்கள் விரோத தாக்குதல்கள் நடத்தி வருகின்றது.

செப்புமொழி பதினெட்டு உடையாள், எனில், சிந்தனை ஒன்றுடையாள் என்றார் மகாகவி. இப்படியான உன்னத எண்ணங்களால் வழி நடத்தப் பட்ட தேசம் சுதந்திரம் பெற்றது. பெற்ற சுதந்திரத்தைப் பேணி பாதுகாக்காமல் வீணில் தொலைக்கத் துடிக்கின்றனர் ஆட்சியாளர்கள்.

உழைப்பாளி மக்கள் தங்களையும் தற்காத்துக் கொண்டு, தேச ஒருமைப்பாடு, மக்கள் ஒற்றுமை இவற்றையும் பாதுகாக்கக் குரல் கொடுத்து தேச இறையாண்மையைத் தக்க வைக்கப் போராட வேண்டி இருக்கும் காலம் இது.

விவசாயி-தொழிலாளி ஒற்றுமை வலுப்பட உறுதி ஏற்கும் நாள் இந்த மே தினம்! மாற்றுப் பொருளாதாரக் கொள்கைகளை இடதுசாரி அரசியல் முன்வைத்து மக்களை வென்றெடுக்க முழு வீச்சில் களமிறங்கும் இந்தக் காலத்தில் தொழிலாளி-விவசாயி ஒன்றிணைத்து மாற்றத்திற்கான நம்பிக்கையை விதைக்கத் திரண்டு எழுவோம்.

மே தினம் மாற்று உலகை இங்கேயே படைக்க நம்பிக்கை அளிக்கிறது. சோசலிசத்தின் விதைகளைத் தூவுகிறது. ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டாம், வல்லான் பொருள் குவிக்கும் தனியுடைமை நீங்கி திருநாட்டில் வரவேண்டும் பொதுவுடைமை’ என்ற கவிஞர் கண்ணதாசன் திரைப்பாடல் வரிகளை உண்மையாக்கும் சாத்தியங்களை முன்வைக்கிறது மே தின எழுச்சி வரலாறு.

மே தின பாரம்பரியம் நமக்கு வழி காட்டட்டும். உரம் ஏற்றட்டும். உறுதி ஊட்டட்டும்.

———————–
பகவன் அங்கில்லை

யாரடா மந்திரம் முணுமுணுத்தே ஜப
மாலையை உருட்டுகிறாய் ?
கார் இருட் கோயிலின் தனிமை ஓர் மூலையில்
கதவெல்லாம் அடைத்த வண்ணம்
யாரை நீ தேடுவாய்? அறிவையோ, சொல்லடா,
ஐய, நீ கண்விழித்து ப்
பாரடா, அங்கில்லை, நாளும் நீ தேடிடும்
பகவன் அங்கில்லை என்றே.

ஏர்பிடித்து இரும்புநேர் இடத்தினைத் திருத்தும் ஓர்
ஏழையின் அருகில் உள்ளான்
ஊர் வெளிப்பாதையில் கல்லுடைத்து அயரும் ஓர்
உழைப்பவன் நிழலில் உள்ளான்.
மாரியிற் கோடையில் அவருடன் இருந்து தன்
மணிக்கரம் புழுதி தோய்த்தான்,
போர்வையாய் உள்ள உன் பூசுரம் வீசடா
புழுதியில் இறங்கி வாடா.

*********

பூவும், மென் சாந்தமும், தீபமும், தூபமும்,
பூஜையும் விட்டு வாடா!
மேவும் உன் தியான வெம் சிறையினை விடுவிடு,
மேதினி வெளியில் வாடா!
ஆவதும் ஏதடா, உன்னுடைய கந்தலாய்,
அழுக்கினில் அழிந்து போனால்?
தேவனே உழைப்பினால் வேர்வையில் மூழ்கினான்
சேர வா சேர வாடா!

– ரவீந்திர நாத் தாகூர் (கீதாஞ்சலி வரிகள்)

(தமிழில்: பேராசிரியர் அ.சீ.ரா)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *