தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும்

3

கி. கண்ணன்.

முன்னுரை:
தமிழ் மொழியை கணிப்பொறிக்கும் இணையத்திற்கும் கொண்டு செல்வதில் எழுத்துக்களுக்குப் பெரும் பங்கு உண்டு. சைகைளாலும் மெய்ப்பாடுகளாலும் வளர்ந்த தமிழ்மொழி இன்று இணையத்தில் பலவாறு பயன்படும்படி உயர்ந்துள்ளது. கணினியில் ஆங்கிலத்தில் மட்டுமே தட்டச்சு செய்யமுடியும், ஆங்கிலம் தெரிந்தால் மட்டுமே கணினியைப் பயன்படுத்த முடியும் என்ற நிலை முற்றிலுமாக மாறி இன்று தாய்மொழியான தமிழிலேயே தட்டச்சு செய்யலாம் என்ற நிலைக்கு தரம் உயர்த்தப்பட்டு வளர்ந்து கொண்டிருக்கின்றது. இப்படிப்பட்ட உயர்தனிச் செம்மொழியை கணினியிலும் இணையத்திலும் பதிவேற்றம் செய்யும்பொழுது தமிழ் எழுத்துருக்களின் வரலாற்றினையும் வகைகளையும் விளக்குவதாக இக்கட்டுரை அமைகிறது.

மொழியும் எழுத்தும்:
மனிதன் தோன்றி மொழி தோன்றாத பொழுது தன் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை மெய்ப்பாடு, சைகைகள், ஒலிகள், ஓவியங்கள் ஆகியவற்றின் முலமாக பிறருக்குத் தெரிவித்தான். அதுவரை ஊமை மொழிகள் (Dumb Language) என்றனர் என்று முதல் மொழிக்கு விளக்கமளிக்கிறார் தோ. பரமசிவம். இம்முதல் மொழியினைத் தொடர்ந்து பேச்சு மொழியாக மாறியதும் எழுத்துக்கள் உருவாகி வளர்ச்சியடைந்தன. கல்லெழுத்து, பிராமி எழுத்து, வட்டெழுத்து, நாகரி எழுத்து, தமிழி எழுத்து என்று உருமாறி தற்போதுள்ள தமிழ் எழுத்து என பலவாறு மாறிவந்திருப்பதை தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சியில் காண முடிகிறது.

கணினி குறியீட்டு முறை:
கணினியில் அச்சேற்றப்படும் எழுத்துக்கள் எம்மொழி எழுத்துக்களாயினும் அவை 0,1 என்ற எண்களைக் கொண்டே கணினி இயங்குகின்றது. “கணிப்பொறி என்பது கணிப்பானாக மட்டுமே பயன்படும் போது எவ்வித சிக்கல்களும் தோன்றுவது இல்லை. மாறாக, அவற்றை எழுத்து வடிவங்களுக்குச் சேமிக்கும் பொழுது ஒவ்வொரு எழுத்துக்கும் எண்களை நிர்ணயிக்க வேண்டியிருக்கும். இம்முறையே குறியீட்டு முறை (Coding) எனப்படும்.”[1] இவற்றை திரையில் எழுத்துக்களாக காண்பதற்கு எழுத்துருக்கள் (Font) தேவைப்படுகின்றது. இத்தகைய எழுத்துருக்களை பெற குறியீடுகள் அவசியமாகின்றது. ஒரே குறியீட்டைக் கொண்டு ஒரு எழுத்தைத்தான் உருவாக்க முடியும் என்பதாலும் தமிழில் அதிக எழுத்துக்கள் இருப்பதாலும் முழுமையாக எழுத்துக்களைப் பயன்படுத்துவது சிரமமாகவும் இருந்தது.

தமிழில் எழுத்துரு தொடர்பான மென்பொருள்களின் வளர்ச்சியினால் இன்று இத்தகைய சிரமங்கள் சரிசெய்யப்பட்டாலும் சில தவிர்க்க முடியாத சிக்கல்கள் இருக்கவே செய்கின்றன. வடமொழி எழுத்துக்களையும் தமிழ் எழுத்துக்களைச் சேர்த்து தட்டச்சு செய்யும் நிலையில் இதனை உணரலாம்.

எழுத்துருக்களின் வளர்ச்சி:
கணினியில் இடும் கட்டளைகளை எழுத்துக்களாக மாற்றிக்காட்ட எழுத்துருக்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை 7 பிட்டு(எ.கா.1000001), 8 பிட்டு (00001111) என்ற இரும எண் குறியீட்டு முறையில் உள்வாங்கிக் கொள்ளப்பட்ட கணினி மொழிகளாகக் கொள்ளப்பட்டன.

கணினி மொழியில் ஒவ்வொரு எழுத்தும் ஒரு பைட்டாகக் கணக்கிடப்படுகிறது. ஆங்கில எழுத்திற்கான எழுத்துரு வடிவத்தினை ஆஸ்கி ASCII (American Standard Code for Information Interchange) என்று அழைக்கப்பட்டது. இது 7 பிட்டு அளவுள்ளதாகக் இருந்தது. இதனைத் தொடர்ந்து 8 பிட்டு அளவிற்கு விரி ஆஸ்கி அமைப்பு உருவாக்கப்பட்டது. அட்டவணையில், ஆங்கில எழுத்துக்கள் போக மீதமுள்ள 128 – 255 வரையிலான இடங்களில் இந்திய மொழிகளின் எழுத்துக்களை ஒன்றிணைத்து பொதுவான முறை உருவாக்கப்பட்டது. இதற்கு இஸ்கி (ISCII – Indian Standard Code for Information Interchange) எழுத்துரு எனப் பெயரிட்டனர். இத தமிழ் விசைப்பலகையில் எழுத்துருக்களைக் கொண்டு வருவதற்கு முதன்மையாக அமைந்தது. இதில் மென்பொருள் பொறியாளர்களின் உதவியுடன் உலக தமிழறிஞர்கள் வடிவமைக்கப்பட்ட தமிழ் வடிவ எழுத்துக்கள் பயன்படுத்தப்பட்டன.

தமிழ் லெசர், அணங்கு, ஆதமி, ஆதவின், திருவின், மயிலை, அஞ்சல், சரஸ்வதி, கணியன், வானவில் போன்ற எழுத்துருக்களைப் வல்லுனர்கள் பலரும் உருவாக்கினர். இதனால் ஒருவர் தட்டச்சு செய்த தகவல் அந்த எழுத்துரு படிப்பவரிடம் இருந்தால் மட்டுமே அவ்வெழுத்து திரையில் தோன்றும் நிலை உருவானது. இது பெரும் குழப்பத்தினையே உருவாக்கியது. ஆகவே, தமிழ் எழுத்துருக்களை முறைபடுத்த வேண்டும் என்ற எண்ணத்துடன் டிஸ்கி (TSCII – Tamil Standard Code for Information Interchange) என்ற முறை உருவாக்கப்பட்டது. இது தமிழ்மொழியில் ஏற்பட்ட அடுத்தகட்ட வளர்ச்சியைக் குறிக்கும்படி அமைந்தது. தற்போது நடைமுறையில் யுனிக்கோடு முறை அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக உள்ளது.

“உலக அமைப்பாகிய UNICODE குழுமத்தின் முயற்சியால் 16 பிட்டு அமைப்பில் பன்மொழிக்குறியீட்டு முறையும் தோன்றியது. அந்த யுனிக்கோடு அமைப்பில் இந்திய மொழிகளுடன் தமிழும் இருந்தது…. 128 இடங்களில் தமிழ் உயிர்எழுத்துக்கள், அகரமேறிய உயிர்மெய் எழுத்துக்கள், ஆய்த எழுத்து பிற உயிர் மெய் எழுத்துக்களின் துணைக் குறியீடுகள் ஆகியன இடம்பெற்றன.”[2] இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட எழுத்துருக்கள் மேற்கூறிய பல பெயர்களுடன் வெளியாயின.

ஆங்கிலத்தில் உள்ளது போன்று தமிழிலும் ஒரே எழுத்துரு குறியீட்டு முறை பயன்படுத்தப்பட வேண்டும் என்ற எண்ணத்துடன், “இரண்டு உருக்குறியீட்டு முறைகளைத் தமிழக அரசு அங்கீகாரம் செய்து தரப்படுத்தியது. இந்திய மொழிகளில் தமிழில் மட்டுமே மாநில அரசின் எழுத்துத் தரப்பாடு செய்யப்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.”[4] இவை, 1. டாம் (TAM – Tamil Monolingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் எழுத்துக்களுக்காவும் 2. டாப் (TAB – Tamil Bilingual Encoding) என்னும் எழுத்துரு தமிழ் – ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்வதற்காகவும் உருவாக்கப்பட்டது. யுனிக்கோடு முறையில் TAM, TAB போன்ற எழுத்துக்கள் பயன்படுத்தக்கூடியவை.

தமிழ் எழுத்துரு வகைகள்:

charactemap.tam1
தமிழில் டிஸ்கி, யுனிக்கோடு, டாம், டாப் போன்ற எழுத்துருக்கள் அரசின் பங்களிப்புடன் வெளியாயின. தனி நபர்களாலும் குழுக்களாலும் பல வடிவங்களில் எழுத்துருக்கள் இன்றளவும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை விசைப்பலகையின் அமைப்பிற்கேற்ப விண்டோஸ், லினக்ஸ், மேக்கின்தோஸ் போன்ற இயங்கு தளங்களில் பயன்படும்படி அமைக்கப்பட்டிரு்கின்றன.

மயிலை
1985 ஆம் ஆண்டில் கு. கல்யாண சுந்தரம் அவர்களால் “மயிலை” எழுத்துரு உருவாக்கப்பட்டது. இதில், தமிழ்க் குறியீடு இல்லாமல் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்வதன் மூலம் தமிழ் எழுத்துருக்களைப் பெற முடியும். உ.ம். a என்பது அ என்றும், aa/A என்பது ஆ என்பதையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

முரசு அஞ்சல்
1986 இல் முத்து நெடுமாறன் என்பவரால் உருவாக்கப்பட்டது அஞ்சல் எழுத்துரு. இது எழுத்துருவை மட்டுமே கொண்டிராமல் எழுதி, மின்னஞ்சல், செயலி, விசைப்பலகை போன்ற வகைகளும் இடம்பெற்றுள்ளன. இன்றும் ஆண்ட்ராய்டு பேசிகளில் பயன்படும்படி Application ஆக பயன்படுத்தும்படி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், கு என்ற எழுத்துருவிற்கு க+உ என்றும், சோ என்பதற்கு ச+ஓ என்றும் எழுத்து முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

கீ மேன்
செந்தமிழ் எழுத்துரு என அழைக்கப்படும் கீமேன் எழுத்து வடிவம் பெரும்பாலும் அச்சக பணிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றது. டாவ்லெட் சாப்ட் அமைப்பினரால் உருவாக்கப்பட்ட இது 285 விதமான எழுத்துரு வடிவங்களைக் கொண்ட பன்முக வடிவமாகும். பெரும்பான்மை யுனிக்கோடு வடிவத்துடன் ஒத்திருந்தாலும் இதில் சில எழுத்துருக்கள் விசைப்பலகையின் அமைப்பில் மாற்றம் பெற்றுள்ளன. கீமேன், விதவிதமான எழுத்துருக்கள் வடிவத்தில் புத்தகம் உருவாக்கம் போன்ற அச்சுப் பணிக்கு இது உகந்ததாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏ.கலப்பை
தமிழ் இணையதளத்தில் பலராலும் பயன்படுத்தப்பட்ட எழுத்துருக்களைக் கொண்டது இ. கலப்பை எனப்படும் எ.கலப்பை. இதில் ஐந்து விதமான எழுத்துருக்கள் காணப்படுகின்றன.
1. ஆங்கில ஒலியியல் முறை 2. பாமினி, 3. தமிழ் 99, 4. தட்டச்சு முறை, 5. இன்ஸ்கிரிப்ட் என்ற ஐந்து வகையான எழுத்துரு வடிவங்களைக் கொண்டது.

NHM எழுதி
தமிழ் எழுத்துருக்களில் இன்று பலரிடமும் பயன்படுத்தப்படுவதாக இவ்வெழுத்துரு அமைந்துள்ளது. கூகுள் குரோம், நெருப்புநரி (Firefox), ஒபேரா போன்ற எல்லாவிதமான இயங்குதளத்திலும் இவ்வமைப்பு பயன்படுகின்றது. தமிழிலிருந்து கீழே குறிப்பிட்ட இந்திய மொழிகளுக்கு எழுத்துக்களை மாற்றும் வசதி இதில் உள்ளது. இதனை இணையத்திலிருந்து இலவச மென்பொருளாகப் தரவிறக்கம் செய்து,
1. Alt + 0 – சாதாரண விசைப்பலகை எழுத்துருவையும்
2. Alt + 1 – ஒருங்குறி தமிழ் 99 எழுத்துருவையும்
3. Alt + 2 – ஒருங்குறி தமிழ் ஒலியியல் முறையையும்
4. Alt + 3 – ஒருங்குறி பழைய தட்டச்சு எழுத்துருவையும்
5. Alt + 4 – ஒருங்குறி தமிழ் பாமினி எழுத்துருவையும்
6.Alt + 5 – ஒருங்குறி தமிழ் இன்ஸ்கிரிப்ட் முறையினையும் கொண்டு காணப்படுகிறது. ஒருங்குறி முறையில் அமைந்திருப்பதால் அனைவராலும் பயன்படுத்தும்படி உள்ளது. இந்த எழுத்துருவில் தமிழ், அசாம், பெங்காலி, குஜராத்தி, ஹிந்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, பஞ்சாபி, சமஸ்கிருதம் போன்ற பத்து இந்திய மொழிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

பொன்மடல், பொன்மொழி எழுத்துரு
ஆண்ட்ராய்டு, விண்டோஸ் என்ற இருவேறு இயங்கு தளங்களில் தட்டச்சு செய்யும் வசதி. காலத்திற்கேற்ப புதுமை என்ற விதத்தில் பல புதிய வசதிகள் இந்த எழுத்துருவில் காணப்படுகின்றன.
1. தவறாக எழுதினால் ல, ர, ன ஒலிமாற்றச் சொற்களையும் சந்திப்பிழை திருத்தப்பட்ட சொற்களையும் இரு சொல் இணைந்ததையும் உடனுக்குடன் காட்டும்.
2. சொற்பிழைகளை உடனுக்குடன் திருத்துவதுடன் திருத்துவதற்கு பல நிறங்களைக் காட்டுகின்றன.
3. தமிழ்99, தட்டச்சு, பாமினி, ஒலிமாற்றம் போன்ற தட்டல் அமைப்புகளுடன் கே12 என்னும் T9 போன்ற ஒரு மிக எளிய புதிய முறை இதன் சிறப்பு. 9 விசைகளில் செயல்படும் இதைக்கற்க 10 நிமிடங்கள் போதும்.
4. ஆங்கிலத் தட்டச்சு இருப்பதால் இருமொழிகளுக்கும் பொன்மடல் ஒன்றேபோதும்.
5. யூனிக்கோடு, டேம், டேப் குறியீடுகளில் உள்ளிடலாம்.
6. புதிய பெயர்ச்சொற்களை அகராதியில் சேர்க்கலாம்.
7. சுயதிருத்த வசதியால் ஒன்றிரண்டு எழுத்துக்களை எழுதியே பல சொற்களைச் சேர்க்கலாம். [3]
இது போன்ற பல சிறப்பியல்புகளைக் கொண்டதாய் பொன்மடல், பொன்மொழி எழுத்துருக்கள் அமைந்துள்ளது.

மென்தமிழ்
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் இருந்து ஓய்வு பெற்ற தெய்வசுந்தரம் அவர்களால் உருவாக்கப்பட்ட மென்தமிழ் எழுத்துரு கணினியில் தமிழ் மொழியியல் தொடர்பாகக் கொண்டுவரப்பட்டது. இம்மென்பொருள், ”தமிழ் ஆவணங்களை உருவாக்கி, அவற்றின் மொழி அமைப்பைச் சீரமைத்துப் பதிப்பிக்கும் அனைத்துக் கருவிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. கணினித்தமிழின் வளர்ச்சியையொட்டி தமிழ்மொழிக் கருவிகள் (சந்திப்பிழை திருத்தி, சொற்பிழை திருத்தி, அகராதிகள்) தொடர்ந்து மென்மேலும் செழுமைப்படுத்தப்படும்.”[4] என்ற உயரிய நோக்குடன் உருவாக்கப்பட்டுள்ளது.

மேலும் சில…
அழகி – ஆங்கிலத்தில் தட்டச்சு செய்து தமிழில் எழுத்துருவை காணலாம்.
ஸ்ரீலிபி – தமிழ் ஒருங்கறி, தமிழ் 99, தட்டச்சு முறை போன்ற எழுத்துருக்களில் பயன்படுத்தலாம்.
கம்பன் – விசைப்பலகையுடன் கூடிய ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை டேம், டேப் போன்றவற்றிற்கு உரு மாற்றி போற்ற எழுத்துருக்களில் பயன்படுத்தப்படுகிறது.
வாணி – எழுத்துப்பிழை திருத்தி.
நாவி – சந்திப்பிழை திருத்தி
சுரதா – வலைக்கு உகந்த எழுத்துரு
கண்டுபிடி – வலை எழுத்திற்கு உரியது
போன்றவனவற்றையும் குறிப்பிடலாம்.

முடிவுரை:
தமிழ் எழுத்துரு, கணினி பயன்பாட்டிற்கு என தினந்தோறும் புதுப்புது மாற்றங்களுடனும் வடிவங்களுடனும் இன்றளவும் மென்பொருள்களை உருவாக்கி வருகின்றனர். ஒருங்குறி, தமிழ் 99, தட்டச்சு முறை, பாமினி, இன்ஸ்கிரிப்ட் முறைகளிலிருந்து இன்று அழகி, வாணி, நாவி, பொன்மடல், மென்தமிழ், சுரதா, கண்டுபிடி போன்ற மென்பொருள்களாலும் கணினியில் மட்டுமல்லாது இணையத்திலும் தமிழினை எழுத்து வடிவம் மாறாமலும் பிழையில்லாமலும் காணக்கிடைக்கின்றது. அகராதிகளைப் பயன்படுத்தி தட்டச்சு செய்யும் முறையும் தற்போது வழக்கத்தில் உள்ளது. இத்தகைய எழுத்துருக்கள் தமிழ் மொழியினை அடுத்தத் தலைமுறைக்கு எவ்வித சேதமுமின்றி முழுமையாகக் கொண்டுபோய் சேர்க்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

சான்றெண் விளக்கம்:

1. www.pathivugal.com, கணத்தமிழ், தமிழ் எழுத்துருக்கள் வடிவமைப்பும் சிக்கல்களும்
2. முனைவர் மு. பொன்னவைக்கோ, இணையத் தமிழ் வரலாறு, ப. 10
3. www.Learnfunsystems.com./Products. பொன்மடல்
4. www.lingsoftsolutions.co

 

 

கி. கண்ணன்,
முனைவர் பட்ட ஆய்வாளர், (ப/நே.)
அறிவியல் தமிழ் மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை,
தமிழ்ப் பல்கலைக்கழகம்,
தஞ்சாவூர்.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும்

  1. — எனக்கு தமிழ் தட்டச்சு தெரியாது. நான் லினக்ஸ் O S உபயோகிக்கிறேன். தமிழ் தட்டச்சு செய்ய gmail இல் உள்ள கம்போஸ் பக்கத்தில் தமிழ் தட்டச்சு செய்து அதனை copy paste செய்து விடுகிறேன். லினக்ஸ் O S இல் தமிழ் தட்டச்சு செய்ய இலவச மென்பொருள் ஏதெங்கிலும் உண்டோ? ஒலி வடிவத்தை ஆங்கில keyboard இல் தட்டச்சு செய்வது போன்று இருந்தால் தேவலை.

    ஜெயகுமார்

    P S

    பதில் jayakumar chandrasekaran என்ற எனது google+ பக்கத்தில் message கொடுத்தால் போதும்.

  2. வல்லமை இணையத்தில் தமிழில் கணினி எழுத்துருக்கள்: வளர்ச்சியும் வகைகளும் என்ற கட்டுரை பயன்தரக்கூடிய தொகுப்பாகும். இதில் குறிப்பிடப்பெற்றுள்ள தகவல்களை உசாத்துணையாகக் கொண்டு மேலும் பதிவுகளை மேற்கொள்வோருக்கு உறுதுணையாக, சில மேலதிக தகவவல்களைப் பதிவுசெய்தல் பொருத்தமானது எனக் கருதி, குறிப்பாக ஏ-கலப்பை தொகுப்புகளில் ஒன்றாக குறிப்பிடப்பெற்றுள்ள ‘பாமினி’ உள்ளீட்டு முைற HaranGraph, ON Canada நிறுவனத்தாருக்கு உரித்தானது. இது முழுக்க முழுக்க ஒரு தனித்துவமானதும் வெளிநாடுகளில் பரவலான பயன்பாட்டில் இருப்பதான ஒரு உள்ளீட்டு முறையாகும். தொகுப்பாளர் கி. கண்ணன் அவர்களுக்கு நன்றி!

  3. பாமினி எழுத்துரு பெரும்பாலான வரைவு மென்பொருளுக்குப் பொருந்தி வருகிறது.ஆனால் அதில் கூட்டல்,போன்ற சில கிடையாது.
    மென்தமிழ் -அகராதியும் 100 சதவீதம் சரியாக வரவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *