மீ. விசுவநாதன்

vallamai111-300x150

கோழி பிடித்துக் குழம்பினை வைத்தபின்
கோழிக் குரலினைச் சோற்றிலே தேடுறான் !
நாழிகை போனால் நமக்கது கிட்டாது ;
ஆழிகை முத்தாய் அறி . (31) 30. 1.2015

பசித்தபின் உண்பதும் , பார்த்துள் முகமாய்
ரசித்து நிறைவதும் , ராகம் ருசித்தே
இசைப்பதும் , யாவர்க்கும் ஈந்து வளர்ந்தே
இசைபட வாழ்தலும் ஏற்பு. (32) 31. 1.2015

பூனைபோல் தூங்கிப் புலியைப்போல் பாய்கின்ற
சேனையில் கூடியே சேராமல் , “நானை”
அடக்கும் அகப்பயிற்சி ஆசானின் தாளில்
கிடக்க விலகும் கிலி. (33) 01. 2.2015

இட்டிலி, சட்டினி இப்படி சாப்பாட்டில்
முட்டியும் மோதியும் மொத்தமாய் வெட்டியாய்
கட்டிநல் வெண்ணையாம் காலத்தைக் குப்பையில்
கொட்டும் கொடுமையைக் குட்டு. (34) 02.02.2015

மனதின் அமைதி, “மதிக்கிற பண்பும் ,
இனவெறி இல்லா இறையின் இனமாய்
கனவில் நனவில் களிக்கும் சுகந்தான்! “
அனலில் புனலும் அறி. (35) 03.02.2015

தாவித் தவித்துத் தளர்ந்து நடக்கையில்
ஆவியைச் சேர்த்து அணைக்கிற தேவியே
அம்மா ! அவளொரு அற்புதத் தூய்மையின்
தும்மலில் வந்த துளி. (36) 04.02.2015

கூட்டத்தில் கூடி குணம்சேர வில்லையெனில்
ஆட்டத்தை விட்டகல் ! அன்பரைத் திட்டாதே !
ஆனை ஒருநாளும் ஆளடித்துத் தின்னாது !
ஞானம் வரும்வரை நாடு. (37) 05.02.2015

ஒருகோட்டில் நீயிருப்பாய் ஓங்காரக் கண்ணா
உருவம் தெரியாமல் ஊதும் குழலுள்
ஒளிந்திருக்கும் காற்றாக ! ஓதிய கீதைத்
தளிரே உயர்மதி தா. (38) 06.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

சேவலையும் வேலையும் சேயோன் மயிலுடன்
சேவகனாய் நானவன் சேவடிக் காவடி
தாங்கிட வேண்டுமே ! சண்முகா உன்முகம்
வாங்கிய என்மனம் வா. (39) 07.02.2015
(ஓவியர் “கேசவ்” வரைந்த ஓவியம் பார்த்து எழுதிய வெண்பா)

இரவும் விடிவும் இருபுற வாழ்க்கை !
வரவும் செலவும் வரமாம் உறவு !
உரசியும் ஒட்டியும் ஊர்வலம் போகும்
அரசியே பாச அகம். (40) 08.02.2015

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *