பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 5

0

E.Annamalaiபேராசிரியர் இ.அண்ணாமலை, தமிழ் மொழியியல் சார்ந்த கேள்விகளுக்குத் தொடர்ந்து பதில் அளிக்கிறார். இதோ அடுத்த பகுதி:

சென்னை, மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் இரா. சீனிவாசன் எழுப்பிய கேள்விகள்:

தமிழில் இருப்பது போல் ஒற்று மிகுதல் உலகில் வேறு மொழிகளில் இருக்கிறதா?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

வண்ணப் பட்டைகள் ஒன்றை ஒட்டி ஒன்று வரும்போது இரண்டு பட்டைகள் சேருமிடத்தில் வண்ணக் கலவை இருக்கலாம். இதைப் போலவே இரண்டு சொற்களோ, உருபுகளோ, சொல்லும் உருபுமோ சேர்ந்து வரும்போது அடுத்தடுத்து வரும் ஒலியில் மாற்றம் ஏற்படலாம். இந்த மாற்றம் உச்சரிப்பு ஒருமையைக் கூட்டும். மொழியில் ஒலிச் சேர்க்கையின் விளைவு சந்தி எனப்படும்; தமிழ் இலக்கணத்தில் புணர்ச்சி எனப்படும். ஒற்று மிகுதல் மெய்யெழுத்து மிகுந்து வரும் ஒரு விளைவு.

தமிழில் கல் + ஐ = கல்லை என்றும், எழுத்து + கள் = எழுத்துக்கள் என்றும், ஆங்கிலத்தில்  travel + er = traveller என்றும், get + ing = getting என்றும் வருவது மெய்யெழுத்து இரட்டிப்பதற்குச் சில எடுத்துக்காட்டுகள். இவை ஒரு சொல்லுக்குள் நிகழும் மாற்றங்கள். இந்த மாற்றங்கள் தொகைச் சொல்லிலும் நடக்கும். கலை + சொல் = கலைச்சொல்.

ஒரு வாக்கியத்தில் இரண்டு சொற்களிடையே ஒற்று மிகுதல் சில மொழிகளில் நடக்கிறது. இது புறச் சந்தி. இதைப் போன்றதே ஒற்று திரிவதும். வீட்டில் பார் = வீட்டிற் பார். ஒற்று மிகும் சந்தியில், இரண்டு உயிரெழுத்துகள் முன்சொல்லின் இறுதியிலும் பின்சொல்லின் முதலிலும் வரும்போது உடம்படுமெய் மிகுவதைச் சில மொழிகளில் காணலாம். இந்தக் கேள்வியில் குறிக்கப்படும் பின்சொல்லின் முதல் வல்லெழுத்து மிகும் வல்லொற்று மிகுதல் எனக்குத் தெரிந்தவரை தமிழில் மட்டுமே காணப்படுகிறது. அதை பார் = அதைப் பார். ஏனைய திராவிட மொழிகளில் இந்தச் சந்தி இல்லை. தமிழிலிருந்து பிரிந்த மலையாளத்திலும் இல்லை. வல்லெழுத்துகளில் வர்க்க எழுத்துகளைத் தமிழ் தவிர்த்து, ஒற்றை வல்லெழுத்து, இரட்டை வல்லெழுத்து (அகம், அக்கம்) என்று வேறுபடுத்துவதை ஏற்றுக்கொண்டது தமிழின் வல்லொற்று மிகும் சந்திக்குக் காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

புறச் சந்தியில் ஒற்று திரிவது இக்காலத் தமிழில் ஏறக்குறைய வழக்கொழிந்துவிட்டது. ஒற்று மிகும் வழக்கு குறைந்து வருகிறது. இந்த வாக்கியத்தில் ‘ஒற்றுத் திரிவது’, ‘வழக்குக் குறைந்து’ என்று ஒற்று சேர்த்து எழுதுவது சிறுபான்மை. ஒரு சொல் எல்லா இடத்திலும் ஒரே வடிவத்துடன் எழுத்துத் திரிபு இன்றி, எழுத்துச் சேர்க்கை இன்றி வருவது இன்று படிப்பு எளிமைக்காகப் போற்றப்படுகிறது.

புறச்சந்தியில் ஒற்று மிகுவதற்கு ஒலிப்பு ஒருமை மட்டுமே காரணமில்லை. இரண்டு சொற்களுக்கிடையே உள்ள இலக்கண உறவும் காரணமாக இருக்கிறது. ‘காலை புலர்ந்தது, காலைப் பிடித்தான்’ என்ற தொடர்களில் காலை என்ற சொல் ஒலிப்பில் ஒன்றாக இருந்தாலும் முதல் சொல் எழுவாய், இரண்டாவது சொல் வேற்றுமை விகுதி ஏற்ற செயப்படுபொருள் என்ற இலக்கண வேறுபாடு சந்தியிலும் வெளிப்படுகிறது. சந்திக்கு இலக்கண அடிப்படை இருப்பது தமிழுக்குரிய ஒன்று.

ஒலிப்பு ஒருமை இயல்பாக வருவது. காண்+த்+ஆன் = கண்டான் என்று புணவர்வதில் யாரும் சந்தி மாற்றம் இல்லாமல், ‘கண்தான்’ என்று சொல்வதில்லை. இலக்கண அடிப்படை, பள்ளியில் கற்பிப்பது. எனவேதான் புறச் சந்தியில் ஒற்று மிகுவது தமிழ்க் கல்வியின் அடையாளமாகக் கணிக்கப்படுகிறது. அது வழக்கில் குறைந்து வருவதற்கு அதன் இலக்கணச் சார்பும் ஒரு காரணம் என்று சொல்லலாம். பணத்தைத் திருடினான், பணத்தை திருடினான் என்று ஒற்று மிகுந்தும் மிகாமலும் இன்று எழுதுகிறார்கள்.

வல்லொற்று மிகுதல் குறைந்து வரும் வழக்கிற்கு மாறாக, இமையம், புகழ் ஆகிய எழுத்தாளர்களின் புனைகதைகளில் ஏழாம் வேற்றுமை, மூன்றாம் வேற்றுமை, பெயரெச்சம் முதலான புதிய இலக்கண வடிவங்களின்பின்னும் ஒற்று மிகுகிறது. இதற்கு ஒலிப்பு காரணமாக இருக்கலாம். பாமரர்களின் பேச்சில் உயிரெழுத்தில் முடிகின்ற சொற்களை அடுத்து வரும் சொற்களின் முதல் வல்லெழுத்து, படித்தவர்களின் பேச்சில் போல் இல்லாமல், வன்மையாக ஒலிப்பதை இரட்டித்த வல்லொற்று காட்டுகிறது என்று சொல்லலாம் என்று தோன்றுகிறது. பலருடைய பேச்சில், ‘வந்த பிறகு’ என்ற சொல் சேர்க்கை ‘வந்தப்பெறகு’ என்றும் ‘வந்துகொண்டு’ என்பது ‘வந்துக்கிட்டு’ என்றும் உச்சரிக்கப்படுவதைப் பார்க்கிறோம்.

=========================

ஐகாரம், ஔகாரம் ஆகிய எழுத்துகள் தேவையா? இல்லையா? என்ற விவாதத்தில் தங்களின் நிலைப்பாடு என்ன?

பேராசிரியர் இ.அண்ணாமலை பதில்:

ஐகார ஔகாரத்தை உயிரெழுத்து, மெய்யெழுத்து சேர்ந்த இரண்டு எழுத்துகளாகப் பல இடங்களில் எழுத முடியும். ஐயரை அய்யர் என்றும், ஔவையை அவ்வை என்றும் எழுதும் வழக்கு உண்டு. பை என்பதைப் பய் என்றும், சௌசௌ என்பதைச் சவ்சவ் என்றும் எழுத முடியும்; தலை என்பதைத் தலய் என்றும், தலைமை என்பதைத் தலய்மை என்றும் எழுத முடியும். எனவே ஐயும் ஔவும் அதிகப்படியான எழுத்துகள் என்பது வாதம்.

ஒரு மொழியின் எழுத்துகளைக் குறைப்பது அதன் முன்னேற்றத்தின் அடையாளம் என்று சொல்ல முடியாது. தனித்து வரும் நெடில் உயிரை இரண்டு குறில் உயிராக எழுத முடியும். ஆம் =அஅம். இந்த எழுதுமுறை ஐந்து உயிர் எழுத்துகளைக் குறைக்கும். ஆனால் இதற்கு மொழியின் அகத் தேவை இல்லை. செய்யுளைத் தவிர அளபெடை இல்லாத தமிழ்ச் சொல்லமைப்புக்கு மாறான அமைப்பைத் தரும். மொழியின் எழுத்துகளைக் கூட்டுவதும் குறைப்பதும் மொழியின் அகத் தேவைகளை வைத்தே செய்யப்பட வேண்டும். முன்னேற்றம், சீர்திருத்தம் போன்ற புறக் காரணங்கள் காலத்துக்குக் காலம் மாறுபவை.

தமிழ் அரிச்சுவடியில் உள்ள எல்லா எழுத்துகளையும் சொற்களில் பயன்படுத்துவதில்லை. ஙகர வரிசையில் ங், ங மட்டுமே சொற்களில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த வரிசையின் எல்லா எழுத்துகளும் அரிச்சுவடியில் இருக்கின்றன. இதைப் போல, ஐகாரமும் ஔகாரமும், சில இடங்களில் மாற்று எழுத்தால் எழுத முடிந்தாலும், அரிச்சுவடியில் இருக்கலாம். இன்று எழுது திறனைக் கற்பிக்கும்போது சொல்லின் மூலமே கற்பிக்கிறார்கள். அரிச்சுவடியைக் கற்பிப்பதில்லை. அரிச்சுவடியில் உள்ள அதிகப்படி எழுத்துகள், பிற மொழிச் சொற்களும் பெயர்களும் தமிழில் பயிலும்போது எழுதப் பயன்படலாம். கிரந்த எழுத்துகளின் பயன் இத்தகையது தானே. புதிய எழுத்துகளைப் போல இருக்கும் எழுத்துகளையும் புதிய தேவைகளுக்கு வைத்துக்கொள்ளலாம்.

=====================================

(தமிழ் மொழியியல் தொடர்பான உங்கள் கேள்விகள், ஐயங்கள் ஆகியவற்றை vallamaieditor@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புங்கள். பேராசிரியர் தொடர்ந்து பதில் அளிப்பார்.)

மேலும் படியுங்கள்:

பேராசிரியர் இ.அண்ணாமலை உடன் இ-நேர்காணல்

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 1

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 2

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 3

பேராசிரியர் இ.அண்ணாமலையின் பதில்கள் – 4

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *