வையவன்

தனது சொந்தப் பொறுப்பில் ஒர்க்ஷாப் வந்த முதலாவது நாளை அவன் வெகு இயல்பாக ஏற்றுக் கொண்டான். பிரீதாவிடம் பேசி விட்டு வந்ததில் ஒரு தெளிவு கிடைத்தது.

தாமு…அம்மா… வெற்றிவேல்… பிரீதா எல்லோரும் அக்கரையில் நின்ற நிழல் உருவங்கள் ஆயினர்.
ஒர்க்ஷாப் அவனைக் கம்பீரமாக ஸ்வீகரித்தது. அது என்னவோ பந்தயக் குதிரை போன்று, ‘என்னை ஏற்று அடக்கு’ என்று குரல் கொடுப்பது போன்று தென்பட்டது.

‘நான் எழுத்தாளன் என்ற கர்வத்தை வெளியே இறக்கி விடுகிறேன்.’
‘எனக்கு ஒர்க்ஷாப்பைப் பற்றி ஒன்றும் தெரியாத அச்சத்தை அகற்றி வைக்கிறேன்.’
‘எனது வேலையும் எனது தொழிலும் இதுதான். இதை நான் வணங்குகிறேன்.’
மந்திரம் ஜபிப்பது போல் மனசிற்குள் சொல்லி விட்டு அவன் ஒர்க்ஷாப்பைத் திறந்தான்.

பத்து நிமிஷத்தில் ஆபீஸ் அறையைச் சுத்தம் செய்கிறவன் வந்து பெருக்கி குப்பை வாரிவிட்டுச் சென்றான்.
தாமு செய்வது மாதிரி ஒரு கட்டு ஊதுவத்தியைக் கொளுத்தி அங்கிருந்த ஸ்டாண்டில் செருகினான்.
மேஜை டிராயரைத் திறந்தான்.

எடுத்த எடுப்பில் ஒரு பச்சை ஃபைல் தென்பட்டது. அதை எடுத்துத் திறந்தான். அதன் முதலாவது காகிதம். பவர் ஆஃப் அட்டர்னி சர்ட்டிபிகேட்டின் நகல். பாங்கில் ஒர்க்ஷாப் அக்கவுண்டில் பணம் எடுக்கவும் போடவும் முழு அதிகாரத்தை தாமுவுக்கு சிவா வழங்கியிருந்தான்.

அந்த சுதந்திரம் எப்படிப்பட்ட விலங்கு!
யோசித்தவாறே சிவா அடுத்த காகிதத்தைப் புரட்டினான்.

ஒர்க்ஷாப்பின் மாதாந்திர வரவு செலவு பட்ஜெட். முதல் வரியிலேயே அவனுக்கு உடம்பு சிலிர்த்தது.
கே.சிவா – மானேஜிங் பார்ட்னர் – மாதாந்திர சன்மானம் ரூபாய் நாலாயிரத்து ஐநூறு.

பிரீதாவின் சொற்கள் ஒரு மந்திரம் போன்று அவனுள் ஒரு கிளர்ச்சியை இப்போது உண்டாக்கின.
“யு ஆர் எ மேன். மனுஷ்யன்”
அவள் சொன்னாள். தாமு அவனை மனிதனாக்கி யிருந்தான்.

காலை எட்டு மணிக்கெல்லாம் அவனுக்கு வியர்த்தது, எழுந்து சென்று ஃபானைச் சுழல விட்டான். ஆனால் இதெல்லாம் எதற்கு? மாதா மாதம் நாலாயிரத்து ஐநூறு ரூபாய்க்கு தான் தாமுவினால் விலை கொடுத்து வாங்கப் பட்டிருக்கிறோமோ?
அவன் பைலின் ஒவ்வொரு காகிதத்தையும் புரட்டிப் பார்த்தான். ஒர்க்ஷாப்பின் பேரில் கரண்ட் அக்கவுண்ட்டில் லட்சத்து சொச்சம் ரூபாய் இருந்தது.

அவன் விரும்பினால் அந்த தொகை முழுவதையும் எடுத்தாள முழு அதிகாரமும் அவனுக்கு வழங்கப் பட்டிருந்தது. ஒர்க்ஷாப்பின் இண்டு இடுக்கு விவரங்களை யெல்லாம் பார்த்தவுடனே அவன் புரிந்து கொள்கின்ற மாதிரி குறித்து வைத்திருந்தான்.

இந்த விவரங்களை எழுதித் தயாரிக்க அவனுக்கு இரண்டு நாட்கள் பிடித்திருக்கும். ஏன் இப்படி மெனக்கெட்டான்?
எந்த நோக்கம்? ஒரு வேளை அப்படி எதுவும் இல்லையா?

எட்டே காலுக்கு சீனியர் மெக்கானிக் செங்குட்டுவன் வந்தான். ஒன்பது மணிக்குள் ஒவ்வொருவராகத் தொழிலாளர்கள் வந்தனர்.

தாமு இல்லை. அவனது ஆக்ஞை அரூபமாக அந்த ஒர்க்ஷாப்பில் பிரசன்னமாயிருந்தது. சிவா ஒர்க்ஷாப்பில் ஐக்கியமானான்.

திஷ்யா, ப்ரீதா, தாமு, அம்மா வேள்வித் தீயின் ஜ்வாலை முன் ஒளியும் சுடரும் தவிர்த்து வேறு யாவும் அர்த்தமிழப்பது போன்று எல்லோரும் மறைந்து விட்டனர்.

நீ மனிதன் என்ற வாக்கு மட்டும் இயங்கு சக்தியாக மிஞ்சிற்று. சொன்னவளை கூட மறந்து விட்டான். அம்பாஸிடர்.. பென்ஸ்.. டயோட்டா… போன் கால்கள்.. கடிதங்கள்.. ஹார்ன் ஒலிகளை இயந்திரங்களில் புத்துயிர் பாய்ச்சும் பந்தயம் அப்படி ஒன்றும் சலிப்பாக இல்லை.

பத்து மணிக்கு திஷ்யாவின் தம்பி பிரேம் வந்தான்.

“அக்கா ஒங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க. அர்ஜெண்டாம்.”
“என்ன விஷயம்? ‘அந்த வண்டி அரை மணியிலே ரெடியாயிடும். வர்றேன் போ”

பதினோரு மணி ஆயிற்று. அவன் திஷ்யாவையும் பிரேம் வந்து போனதையும் மறந்து விட்டான். வண்டியின் டோர் ட்ரபிள் அவனை ஈர்த்துப் பிடித்திருந்தது.

வேலை முடிந்து வண்டி ‘ரிலீஸ்” ஆன போது கூட நின்று கவனிப்பதில் கால் மெக்கானிக்காக ஆகி இருந்தான்.
மீண்டும் பிரேம் வந்தான்.

“அடடா… மறந்தே போய்ட்டேன். செங்கு… பத்து நிமிஷம் வீடு வரைக்கும் போயிட்டு வந்துடறேன்!”
“சட்ணு வாங்க சார்… இன்னிக்கு பாங்குக்கு போவணும். இன்னிக்கு ஸ்பேர்பார்ட்ஸ்காரன் பில்லை கிளியர் பண்ணிடணும்.”
சிவா வழக்கப்படி கால் நடையாகப் புறப்பட்டான்.

“சார்…”
செங்கு கூப்பிட்டான்.
“என்ன?”
“ஐயாவுது வண்டி சும்மாதானே கெடக்குது. எடுத்துட்டுப் போங்க… ஜல்தி வரவேணாம்?”
“எனக்கு டிரைவ் பண்ணத் தெரியாதே!”
செங்கு முகம் சப்பென்று போய் விட்டது.

கற்றுக் கொள்ள வேண்டும். மோட்டார் பைக் மட்டுமல்ல. கார்.. வேன்… ட்ரக்… லாரி.. எல்லாவற்றையும் ஓட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.
“சைக்கிள் விடுவீங்களா?”
“ஓ”…
“நம்ப வண்டியை எடுத்துக்கிணு போங்க”

சிவா செங்குவின் சைக்கிளை மிதித்து சாலையில் கலந்த பின்புதான் ஒர்க்ஷாப்பின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டான்.
திஷ்யா எதற்கு வரச் சொல்லி இருக்கிறாள்? ஆள் அனுப்பியது அசாதாரணமாகப் பட்டது.

இந்த அசாதாரணம் அவன் முதல் தடவை வந்தபோது தனக்கு உறைக்காததை எண்ணினான். ஒர்க்ஷாப்பில் ஒரு வேலையின் போதையுள்ளதும் அது இரண்டு மணி நேரத்தில் தன்னைக் கவர்ந்ததும் புரிந்தது.

வீட்டில் யாரும் இல்லை. திஷ்யா மட்டும் தனியாக இருந்தாள். புண்ணியகோடி ஆஸ்பத்திரிக்குப் போய்விட்டார். குழந்தைகள் எல்லாம் ஸ்கூலுக்குப் போயிருந்தன.

நேராக அவள் வீட்டுப் போர்ஷனுக்குப் போய் சாயம் போய் கோடுகளும் பெயரும் கீறியிருந்த பச்சை ஸ்டீல் சேரில் உட்கார்ந்தான். அந்த அனுபவம் அவனுக்கு நூதனமாக இருந்தது. அவன் இதுவரை அவள் வீட்டுப் போர்ஷனுக்குள் நுழைந்ததே இல்லை.

திஷ்யா அவன் வந்ததை லட்சியம் செய்யாத மாதிரி முகக் கண்ணாடியைத் துடைத்தவாறிருந்தாள்.
“வரச் சொன்னியாமே!”
அவள் அவனுக்குப் பதிலளிக்கவில்லை.

“பிரேம்… டெய்லர் கிட்டே உன் பேண்ட் குடுத்தியே, அது ரெடியாண்ணு பார்த்துவிட்டு வா!”
“அது முந்தா நேத்திக்கு சாயங்காலமே ரெடியாயிடுச்சு… என்னாப்பா வரவில்லையேண்ணு கேட்பானேன்னு நான் ஸ்கூல் விட்டு வர்றப்ப கடையைச் சுத்திக்கிட்டு வந்தேன்!”

“எவ்வளவு கூலி?”
“அறுபது.”
அவள் பழைய மர பீரோவைத் திறந்து சின்ன பிளாஸ்டிக் பர்ஸை எடுத்தாள். ஆறு பத்து ரூபாய் நோட்டை நீட்டினாள்.
பிரேம் இருக்கட்டுமே, தைத்த பாண்ட்டை அப்புறம் வாங்கட்டும் என்று சிவாவுக்குத்தோன்றிற்று.

“அவ்வளவு தூரம் போகணும்!” என்று பொருமினான் பிரேம்.
“என் சைக்கிளை எடுத்துட்டுப் போறியா… எப்ப வருவே?” என்று சிவா கேட்டான்.

“வேண்டாம்… அவன் பஸ்ஸில் போய் வரட்டும்” என்று உன் உதவி தேவையில்லை என்ற உதாசீனத்தோடு சொல்லிவிட்டு அவள் ஓர் ஐந்து ரூபாய் நோட்டைத் தந்தாள்.

அவன் போய்விட்டான்.
“அவனை ஏன் அனுப்பினே?”
திஷ்யாவின் பார்வை சிவாவினுள் குத்தூசி மாதிரி இறங்கிற்று.

“ஐயா… ரொம்ப பிஸி ஆய்ட்டிங்க.”
“மெய்தான். தாமு ஒர்க்ஷாப்பை ஹாண்ட் ஓவர் பண்ணிட்டு காலையே மதனபள்ளி போய்ட்டாரு.”
“விஷயத்துக்கு வா. அப்புறம் இன்ஸல்ட் பண்ணலாம். இன்னிக்கு ஸ்க்ரீன் டெஸ்டாம். ஒடனே அக்ரிமெண்ட்லே சைன் பண்ணுவாங்களாம்.”
ஒரு சினிமா ஸ்கிரீனில் அந்தக் கண்களையும் உதடுகளையும் மானசீகமாக ஒரு விஸ்வரூபத்தில் பார்த்தான்.

“நீ என்ன முடிவு பண்ணியிருக்கே.”
“வெண்டைக்கா.”
“பொறுமையாச் சொல்லு”
“செத்துப் போவேன்”
“அது ஒரு பெரிய நஷ்டமில்லேங்கறார், ஒங்க அப்பா.”

“அவர் நஷ்டப்படட்டும்னு நான் சாகப் போறதில்லே. அவருக்கு லாபம் வரணும்னு வாழப் போறதுமில்லே.”
“நீ ஏன் சினிமாவிலே நடிக்க மாட்டேங்கறே?”
“நெஜம்மா கேக்கறியா?”
“ரியலா”
“எனக்கு வேஷம் போடப் பிடிக்கலே. நான் என்னவோ அது எனக்குப் போறும். என் ஒடம்பையும் மனசையும் நான் பஜார்லே விக்கத் தயாராயில்லே.”

“ஒங்கப்பா ‘கம்பல்’ பண்றாரே?”
“அவர், எதுக்கு பண்ணணும்?”
“பைசா ரூபாய். சாதனை. அலைச்சல். பறப்பு. அதிருஷ்டம் எல்லா அங்கலாய்ப்புக்கும் அதானே முற்றுப்புள்ளி. சினிமாவிலே அது ஏராளமாக கெடைக்கும்.”
“முற்றுப்புள்ளி அவருதா ஒண்ணுதா?”

மீண்டும் ஒருமுறை அவள் நீ என்று தனக்கும் அவனுக்கும் ஒரு கொக்கி வைத்ததைக் கவனித்தான்.
“நான் உனக்கு யாரு திஷ்யா?”
அவள் உதடுகள் கோபத்தில் அழகாய்ச் சிவந்தன. அற்புதமாய்த் துடித்தன. ஒரு நிமிஷம் அவள் உதட்டைக் கடித்துத் தின்றாள்.

“ஸோ யூ வித்ட்ரா?”
“எதையும் நான் வித்ட்ரா பண்ணலே. எங்ஙகயாவது கமிட் பண்ணியிருந்தாத்தானே வித்ட்ரா பண்ணிக்க”
திஷ்யாவின் முகம் சாம்பிற்று.

“ஸாரி திஷ்யா, ஒன்னை டீஸ் பண்ஙணணும்னு சொல்லலே. ஆனா ஒங்க வீட்டு விவகாரத்திலே குறுக்கிட எனக்கு என்ன ரைட் இருக்கு?”
அவளது கரிய இமைகள் அவன் மனசை அள்ளி தன் கூட்டில் தன் சிறகில் வைத்துப் பொத்திக் கொள்வது போன்று படபடத்தன.

“இது ஒரு ப்ளாக்மெய்ல் சிவா!”
“ப்ளாக் மெய்லா?”
“ஆமா, என் வாயாலே ஒரு வாக்கு மூலம் வர வைக்கணும்ங்கற ப்ளாக் மெய்ல்.”

“இப்பதான் நீ மொதல் முறையா சொல்றே-அதுவும் ரொம்ப லேட்டா”
அவன் நாற்காலியிலிருந்து எழுந்தான். அவன் தன்னை நெருங்கப் போகிறான் போகிறான் என்ற கூச்சத்தில் அவள் பின் வாங்கினாள். அந்த விளக்கத்தின் அர்த்தத்தில் அவனுக்கு முகம் சிவந்தது.

“யூ ஆர் ஏ மேன்! மனுஷ்யன்” எங்கிருந்தோ பிரீதாவின் குரல் ஒலி.
“நீ பொய் சொல்றே சிவா!”
“நோ.”
“ஒனக்கும் எனக்கும் என்னன்னு ஒனக்கு எப்பவோ, தெரியும். எப்ப ஒனக்குத் தெரிஞ்சதோ அப்பவே எனக்கும் தெரிஞ்சு போச்சு.”

“இல்லே; அப்ப தெரிஞ்சது வேற. இப்ப தெரியறது வேற” அவன் பெருமூச்சு விட்டான்.
“ஐ டோண்ட் வாண்ட்டு ஆர்க்யூ” என்ன சொல்வது என்று புரியாமல் அவன் குழம்பினான்.
“எத்தனை மணிக்கு உனக்கு கேமரா டெஸ்ட்”

“பனிரெண்டு மணிக்கு கார் வருமாம்” அவன் கடிகாரத்தைப் பார்த்தான். இன்னும் அரைமணி நேரம்தான் இருந்தது.
“நான் கீழேயிறங்கி சைக்கிளைத் தள்ளிகிட்டு ரோடுக்குப் போறேன். அங்கே பஸ்ஸ்டாப் கிட்டே வா.”
“என்னமாவது கொண்டு வரட்டுமா?”

அந்த குழந்தைத்தனமான கேள்வியைக் கண்டு அவன் சிரித்தான்.
“ஏன் சிரிக்கிறே?”
“நீ என்னோட ஓடிவந்துடறியா?”
“நான்சென்ஸ்” என்றாள் திஷ்யா.

“பின்னே ஏன் கேட்கறே?”
“அப்படி ஏதாவது ப்ளான் பண்றியோன்னு கேட்டேன்” என்று விளக்கினாள் திஷ்யா.
“நான்சென்ஸ்” என்று திருப்பிச் சொன்னான் சிவா. அவள் பதிலளிக்கவில்லை.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *