-மேகலா இராமமூர்த்தி

இவ்வாரப் படக்கவிதைப் போட்டிக்கான ஒளிப்படத்தைத் தந்திருக்கும் திரு. பிரேம்குமார் சச்சிதானந்தம், இப்படத்தைத் தேர்வுசெய்திருக்கும் திருமிகு. சாந்தி மாரியப்பன் இருவருக்கும் வல்லமையின் நன்றி.

 man

பச்சைப்பசேல் என்ற வயல்வெளி, அருகே மாற்றுத் திறனுடைய பெரியவர் ஒருவர், அவரின் இருபுறமும் இளைய பாரதத்தினர் இருவர், இம்மக்களின் உள்ளம்போல் உயரப் பறக்கும் பலூன்கள் என்று பலவகை வண்ணக்கலவையோடு கூடிய இப்புகைப்படம் நம் உள்ளத்தில் பல்வேறு சிந்தனைகளை எழுப்பவே செய்கின்றது.

அதோ… அந்தப் பெரியவரின் முகத்தைப் பாருங்கள்! அதில் ஏதோவோர் உறுதி பளிச்சிடுவதைக் காணமுடிகின்றது. அவர் முகத்தின் உறுதி அகத்திலும் இல்லாமலா போய்விடும்?

ஐயா!

உடலின் ஊனம் தனைக்கண்டு
உள்ளம் தளரா மனங்கொண்டு
திடமாய் உழைத்தால் உயர்வுண்டு
தடைகள் கடக்க வழியுண்டு
மாற்றுத் திறனை உடையவரே
முயன்றால் ஒருநாள் இவ்வுலகை
மாற்றும் திறனும் நீர்பெறுவீர்
மாநிலம் போற்றும் நிலைபெறுவீர்

என்று அவருள் நம்பிக்கை விதைகளை நாமும் தூவுவோம்!

 இனி, படக்கவிதைப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் கருத்தாழமுள்ளவற்றை முதலில் காண்போம்!

***

பலூனே உயரப் பறக்கும்போது அதனினும் பலமுள்ள மனிதன் துவளலாமா? எனப் பொருத்தமாய்க் கேள்வி எழுப்பும் திரு. கனவு திறவோனின் வரிகள்…

காற்றடைத்த பலூனே
உயரப் பறக்கும் போது
உயிரடைத்த
உடம்பு
விழுந்தா விடும்
மண்ணில்?
எழுந்து நிற்க
கால்கள் வேண்டாம்
தூக்கி நிறுத்த
துணைகள் வேண்டாம்
இதயம் போதும்!
மிரள வேண்டாம் நண்பா
என் கவிதைக்குள் உன்னைக்
காட்சியாக்கி
ஊருக்குள் உன் உரத்தை
உரக்கச் சொல்வேன்
துணிந்து வா நண்பா!

***

’காலம் எங்கே போய்விடும்; அது என்னையும் வாழ வைத்திடும்’ என்ற மாற்றுத் திறனாளியின் மனோதிடத்தைக் காட்டும் திரு. ரா. பார்த்தசாரதியின் வரிகள்…

என்னைப் போன்ற மாற்று திறனாளிக்கு  மனதில் பலமுண்டு 
வாழ்க்கையில்  முன்னேற  எனக்கு என்றும் திறனுண்டு 
வாழ்க்கையில் ஏமாற்ற பலரும், சிலரே உதவி செய்வதுண்டு 
எங்கே சென்றிடும் காலம்! அது  என்னையும்  வாழவைக்கும் !

***

”ஊனம் உடலிலிருந்தால் என்ன? உண்மையாக உழைத்து உயர்பவர்கள் நாங்கள்!” என்று வீரமுழக்கமிடும் பெரியவரின் பெற்றியைப் போற்றும் திருமிகு. ஸ்ரேயாரேவதியின் வரிகள்…

பச்சை பசுமைகளில் பேரப்பிள்ளைகள் !
ஊனமாக இருந்தாலும் உண்மையாக உழைத்திடுவோம் !
இன்பமாக வாழ்ந்திடவே விற்றிடுவோம் வண்ண பலூன்கள் !
ஒற்றுமையாய் இருந்தால்தான் கோடிநன்மை அடைந்திடலாம்!
அறிந்திடுங்கள் மானிடரே! நான் சொல்வதை கொஞ்சம் கேளுங்களே!

***

’நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமுமிருக்க, ஊனமொரு தடையில்லை’ என்று கம்பீரமாய் முறுவலிக்கும் மாமனிதனைக் கவிதையில் காட்டியிருக்கும் திரு. ரோஷான் ஏ. ஜிப்ரியின் வரிகள்…

வானவெளி பெருத்த ஒன்று
உணர்ச்சிக்கு தோணவில்லை
ஊனமிது வருத்தமென்று
பலூன் விற்றோ,வடை விற்றோ
வாழ விழியிருக்கு
கங்கில் தெறித்த களம்மீண்ட எந்தனது
நெஞ்சில் உரமிருக்கு நீ எதற்கு கலங்குகிறாய்…
[…]

மூங்கில் பிடிக்குள்
முறுவலிப்பாய் இருக்கின்றேன்
தேங்கி அடங்கிடாமல்
தேடலுக்காய் நடக்கின்றேன்

***

மாலையிலே தான்கொண்ட போதைமயக்கம் தன்வாழ்க்கைப் பாதையையே மாற்றிப் பரிதவிக்கவிட்டதை வேதனையோடு நினைவுகூரும் பெரியவரைப் பாட்டில் காட்டியிருக்கும் திரு. கட்டாரியின் வரிகள்…

மசண்டப் பொழுது சாயபோதயில
மல்லாக்க நானுஞ் சாய
என்னப்போல ஏத்திவந்தஒரு
எளந்தாரி லாரிக்காரன்..
காங்கிரீட்டு பாலத்தோட
கழட்டிப் போனாங் எங்கால…..
ஊனக்கால மூணுகாலா
உத்தவுக பழிச்சிப் பாட..
காரச்செவரு..சாணித்திண்ண
கழனி தோட்டம் எல்லாம் போக..
கப்பிரோடுக் கால்நடையா
கருவேலஞ் செடி தெளிநெழலு….
நாந்திணிச்ச நாறக்காத்துஎந்
நாஞ்சிவிட்ட மூச்சுக்காத்து
ரப்பரு மூட்டைக்குள்ள ரம்மியமா
சிரிச்சியாட….
நாம்பெத்த புள்ள ரெண்டும்
நடுவீதி வந்திருச்சே…..

***

’நிலையில்லா வாழ்க்கையிலே மனிதருக்குள் பேதமும் வெறுப்பும் எதற்கு? ஆருயிர்க்கெலாம் அன்புசெயலன்றி மனித வாழ்வின் பயனேது?’ என்ற உயர்தத்துவங்களை உதிர்க்கும் காயம்பட்ட மனமொன்றைக் கண்முன்னே நிறுத்தும் திருமிகு. துஷ்யந்தியின் வரிகள்…

குழந்தைக்கு இருக்கும்
கள்ளமில்லா அன்பு உள்ளம்
படித்தவர்க்கு பாரிலே
இல்லாது போனதேன்..???

உதறிவிட்ட உறவுகளால் நான்
தெருவோரம் நின்றாலும்
அன்பு காட்ட மறுக்கவில்லை
மாசில்லா மழலைகள்…!

வாழுகின்ற காலத்தில்
பிறர் வாழ்விற்கு வாசனை
சேர்க்க முடியாவிடினும்,
பிறர் வாழ்வின் வாசனையை
போக்காது காப்போமே…!

மண்ணிலே பிறந்ததெல்லாம்
மண்ணுக்கே சொந்தமாம்
இதையுணர்ந்து ,
வாழும் சில நொடிகளை
மகிழ்வுடன் வாழ்வோமே.!!!

***

கற்சிலைக் கடவுளரின் இரும்பு உண்டியலை நிரப்பும் மக்கள், பேசும் நற்சிலைகளாய் வீதியில் நிற்கும் ஏழைமாந்தர்க்கு உண்டி கொடுத்து அவர்தம் வயிற்றை நிரப்புவதில்லை! கடவுளரும் இக்கொடுமையைக் கண்ணெடுத்துப் பார்ப்பதில்லை! எனும் கசப்பான உண்மையைக் கவினுற விளம்பும் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கரின் வரிகள்…

திருவிழாக் கோயிலில்
காற்றுப்பலூன் விற்க
வந்தோம் வயிற்றுப்பசி
மட்டுமே ஜெயிக்க
நிற்கிறோம் கால்கடுக்க..!
உச்சி வெய்யிலிலே
வாடிப்போகுது பிஞ்சுமனம்
நெஞ்சில் ஈரம்
இருப்பவர் வாங்குங்க
அண்ணாச்சி ஒண்ணாச்சும் …!

கோயிலுக்குள் கூட்டம்
பக்திக்குக் குறைவில்லை
இரும்பு உண்டியல்
நிறைந்தாலும் நிறையும்
ஏழைகள் வயிறு
ஒருநாளும் நிறையாதே
பக்தர்கள் கண்களில்
சிலைக்கு மட்டுமே இடம்
சிலையாக நிற்கும்
எங்கள் பக்கமும்
திரும்பட்டுமே மனம்..!
முடிந்தால் கல்லுச்சாமி
நீ எங்கிருக்கே
எங்களுக்கும் காமி…!

***

’ஊன்றுகோல் இல்லை ஐயா…இது எனது மூன்றாம் கால்! விரிந்த மனத்தின் வெளிச்சத்தைக் காட்டவே இப்புகைப்படம்; என் ஊனத்தைப் பறைசாற்ற அன்று!” என்று மிடுக்காய்ப் பேசும்  மானுடனைப் போற்றும் திரு. மெய்யன் நடராஜின் வரிகள்…

ஊன்றுகோல் என்றே உவமானம் சொல்லாதீர்
மூன்றுகால் என்றே முடிவெடுங்கள்தோன்றும்
நிலைபார்க்கும் நீங்கள் நினைக்கும் வகைஎன்
அலையில்லை வாழ்க்கை அமிழ்து 

பேரக் குழந்தைகள் பேருதவி யால்நெஞ்சு
ஈர வயலாய் எழில்பூத்துசாரல்
மழைபோல் மனம்நனைக்கும் மட்டில்லா அன்பால்
தழைத்திருக்கும் வாழ்க்கை வயல்.
[…]
வகையற்று வாடும் வரலாற்று சோக 
புகைப்பட மல்ல இதுவேமுகைபோல் 
விரிந்த மனசின் வெளிச்சத்தைக் காட்ட 
தெரிந்த உணர்வின் திறம்.

***

’மன ஊனம் கொளலே தீது! உடல் ஊனம் முன்னேற்றத்திற்கென்றும் தடையாயிருந்திடாது!’ எனும் உற்சாகச் செய்தியை வரலாற்றுச் சாதனையாளர்கள் வாயிலாய் அறியத்தரும் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரனின் வரிகள்…

மன ஊனத்தைவிட
உடல் ஊனம்பெரிதல்ல
[…]
பீதோவன்செவிடாகிருந்த
நிலையில்தான் 
சாகாவரம் பெற்ற ராகங்களை
உருவாக்கினார்
கவிஞர் மில்டன்
பார்வையற்ற நிலையில்தான்
சொர்க்கம் இழக்கப்படல் 
என்கின்றகாவியம் எழுதினார்
ஜூலியஸ்சீசர்
காக்கா வலிப்பு  நோய்
இருந்தபோதும் மாவீரனாய்
திகழ்ந்தார்
இவர்கள்யாரும் யாரிடமும்
அனுதாபத்தை
எதிர்பார்க்கவில்லை
[…]
இதோஇந்த மனிதனும் அப்படியே
தன் மகன்களின்
சந்தோஷத்தில் மகிழ்ச்சி கொள்ளும்
மன உறுதி கொள்கின்றார்

***

உழைப்பின் உயர்வைக் கண்டுமகிழ்ந்து காற்றாடியாய்க் காற்றில் பறக்கும் நெஞ்சத்தை நேயமுடன் விவரிக்கும் திருமிகு. புனிதா கணேசனின் வரிகள்…

போரின் வக்கிரங்கள் கொண்டு போயின
வீரியமிக்க காளையின் காலையும் தான்!
ஊன்று கோல்கள் ஆகிய மூங்கில்
ஈன்றது அவன் தைரியத்தை மீண்டும்!
[…]
உழைத்த கரங்கள் மண்ணில் மீண்டும்
விதைத்த முளைகள் பயிர் கொண்டு பசுமை!
பசுமை வயலில் மட்டுமா விளைந்தது
தேசுடன் அவன் மனதிலும் தான்!
பாசமாய் அவன் பெற்ற செல்வங்கள்
மாசிலா அன்புடன் ஊன்றுகோல்களாய் அவனைச் சூழ்ந்திட
லேசாகிக் கரைந்து மறைந்தன அவன் மனதின் ஊனங்கள்!
[…]
நீலவானில் நீந்தும் காற்றாடி ஆன அவன் இதயம்!
சீலமாய் உரைத்தது பகிரங்கமாக …ஒரு பழமொழி
முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்” என்றே
பச்சை
வயல்களும் நீலவானமும் சாட்சியமாக…

***

அருமையான கவிதைகளைப் படைத்தளித்திருக்கும் கவிஞர்கள் அனைவரையும் பாராட்டி மகிழ்கின்றேன்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைச் சந்தித்துவருவோம் வாருங்கள்!

காலில்லை என்று சோர்ந்துபோகாமல், கோலின் துணையோடு, தாளை(உழைப்பு) நம்பிப் புறப்படும் பெரியவரின் மனத்தில் ஊடாடும் ஆசைகளை இயல்பாய்க் கொணர்ந்திருக்கும் கவிதையொன்றைக் கண்ணுற்றேன்.

அக்கவிதை…

ஒற்றைக்கால் இல்லையென
ஒருநாளும் சோர்ந்ததில்லை
அற்றைக்கிரை தேடுதற்கு
அதிகாலைக் கிளம்பிவிட்டேன் !

பெற்றமகன் துணையிருக்க
பெருமகிழ்வு கூடிடுதே
விற்றிடுவேன் பலூனூதி
விரட்டிடுவேன் வறுமைதனை !

உற்றதுணை யாயெனக்கு
உதவுமிரு ஊன்றுகோலே
பற்றற்ற வாழ்க்கையிதே
பழக்கமாக ஆயிற்றே !

கற்காத காரணத்தால்
கவலையென்னை வாட்டுவதால்
கற்பிப்பேன் பிள்ளைக்கு
கடமையது எந்தனுக்கு !

குற்றுயிராய்க் கிடந்தாலும்
குனிவுவர விடமாட்டேன்
நற்பேரும் நானெடுப்பேன்
நன்மைகளும் செய்திடுவேன் !

சுற்றியுள்ள பசும்வயலும்
சுவர்க்கம்தான் எங்களுக்கு
வற்றாத வரமாக
வசமாகும் வானமுமே ….!!

இக்கவிதையின் ஆசிரியர் திருமிகு. சியாமளா ராஜசேகரை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்க் குறிப்பிட விரும்புகின்றேன்.

***

’சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு’ என்பார் வள்ளுவப் பேராசான். ஆம்! வாழ்வில் துயரமும், துன்பமும் வரிசைகட்டி நிற்கும்போதுதான் அயராத நெஞ்சுரம் வேண்டும்; அதுவே துன்பத்தைத் தூர்த்தெறியும் கோடரி. அவ்வகையில், பிறரின் அனுதாபம் வேண்டாத, வீரவுணர்ச்சிமிக்க மாற்றுத் திறனாளியைத் தன் கவிதையெனும் உளிகொண்டு சிறப்பாய்ச் செதுக்கியிருக்கும் திரு. ருத்ரா. இ. பரமசிவனை இவ்வாரத்தின் பாராட்டுக்குரிய கவிஞராய் அறிவிக்கின்றேன்.

மூங்கில் எலும்புகள்
முட்டு கொடுத்தது
இந்த உலகத்தின் 
மொத்த கனத்தையும்
துணிக்கட்டு

துணிச்சலில் நெய்த துணியில்.
இன்னும்
கனவு பாக்கியிருக்கிறது
[…]
சொர்க்கத்தையும்
கடவுள்களையும்
அதோ பார்க்கிறேன்
வண்ண வண்ணப் பலூன்களாய்.
எங்களைக்கொல்ல
உங்களுக்கு துப்பாக்கி குண்டுகள்
தேவையில்லை.
த்சோ த்சோ”…போதும்
அந்த காலின் மிச்சத்தையா தேடுகிறீர்கள்.
அதை நான் 
அவன் சற்று வலியில் ஓய்ந்தால் 
எடுத்துக்கொள்ளட்டுமே
என்று இரவல் கொடுத்திருக்கிறேன்
ஒலிம்பிக் வீரன்
பீலே”வுக்கு.

***

ஊக்கத்தோடு ஆக்கங்களைத் தொடர்ந்து படைத்தளித்துவரும் அனைத்துக் கவிஞர்களுக்கும் என் நன்றி!

 

பதிவாசிரியரைப் பற்றி

9 thoughts on “படக்கவிதைப் போட்டி 12-இன் முடிவுகள்

  1. இவ்வார கவிஞராக தெரிவாகியிருக்கும் திருமதி சியாமளா ராஜசேகர் அவர்களுக்கும் பாராட்டு பெரும் திரு ருத்ரா பரமசிவன் அவர்களுக்கும்  வாழ்த்துக்கள் 

  2. ////பீதோவன்செவிடாகிருந்த
    நிலையில்தான் 
    சாகாவரம் பெற்ற ராகங்களை
    உருவாக்கினார்
    கவிஞர் மில்டன்
    பார்வையற்ற நிலையில்தான்
    சொர்க்கம் இழக்கப்படல் 
    என்கின்றகாவியம் எழுதினார்
    ஜூலியஸ்சீசர்
    காக்கா வலிப்பு  நோய்
    இருந்தபோதும் மாவீரனாய்
    திகழ்ந்தார்.////

    பீதோவன் ஒரு ஞானக் குழந்தை [Child Prodigy]. மில்டன் குருடாவதற்கு முன்பே கவிதைகள் எழுதியவர்.  இவர்களை உதாரணம் காட்டி ஊனமுற்றோர் அப்படி ஆகலாம் என்று  எப்படிச் சொல்லாம் ?  இவற்றை எழுதிய ஆசிரியரே பிறகு சரியில்லை என்று சொல்லிவிட்டார்.  இவை சிறப்புரைகளா ?

    படக்கவிதைப் போட்டி -12 இல் வந்துள்ள ஒளிப்படத்தைப் போட்டது முறை யில்லை என்று பாதிப் பின்னோட்டங்கள் எதிர்த்துச் சொல்லும் போது அவற்றைப் பற்றி ஒருவரி கூட எழுதாமல் முற்றிலும் புறக்கணித்தது சரியா ?   இது சரியான தீர்ப்பா ?  முழுத்தீர்ப்பா ?

    சி. ஜெயபாரதன்.

  3. அன்பிற்குரிய ஜெயபாரதன் ஐயா,

    கடந்தவாரப் படக்கவிதைப் போட்டிக்கான படம் குறித்து (நாங்கள் பெரிதும் மதிக்கும்) தாங்களும், தமிழறிஞர் ராஜம் அம்மா போன்றோரும் ஆட்சேபித்துத் தெரிவித்த கருத்துக்களும், அதற்கு வல்லமையின் நிறுவனர் திரு. அண்ணாகண்ணன், நிர்வாக ஆசிரியர் திருமதி. பவள சங்கரி, படத்தைத் தேர்ந்தெடுத்துத் தந்த திருமதி. சாந்தி மாரியப்பன் ஆகியோர் அளித்த மறுமொழிகளும் நானறியாதது அல்ல!
    திரும்பவும் அது குறித்து நான் எழுதுவதும், விமரிசிப்பதும் தேவையற்றது; அத்தோடு, அது நாகரிகமான செயலுமன்று என்று கருதியே அதுகுறித்து ஏதும் கூறாது விடுத்தேன்.

    நிற்க. பொதுவாக, கவிதை எழுதுவோர் ஒரு படத்தைப் பல்வேறு கோணங்களில் அணுகுவதும், அதைக் கவிதையாக்குவதும் இயல்பேயல்லவா? அந்த அடிப்படையில், உடல் ஊனத்தால் (அது பிறவியில் ஏற்பட்டதோ அல்லது இடையில் நிகழ்ந்ததோ) பாதிக்கப்பட்டோர் சாதனைகள் செய்யத் தயங்கவோ, தவறவோ இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் சாதனையாளர்கள் பீதோவன், மில்டன் போன்றோரின் சிறப்புக்களைக் குறிப்பிட்டு ஓர் கவிதை எழுதப்பட்டிருந்தது. அக்கவிதையின் பாடுபொருளில் தவறேதும் இருப்பதாய் நான் எண்ணவில்லை ஐயா. அதனால்தான் அக்கவிதையையும் சிறந்தவொன்றாய்த் தேர்ந்தெடுத்தேன். மற்றபடி யாரையும் புண்படுத்தும் நோக்கம் அதிலில்லை.

    சற்றும் எதிர்பாராதவிதமாய்க் கடந்தவாரப் போட்டிப்படம் பல்வேறு சர்ச்சைகளையெழுப்பி அனைவரையும் மனவருத்தத்தில் ஆழ்த்தியது துரதிர்ஷ்டமானதே! எனினும் அதுகுறித்தே பேசிக்கொண்டிருப்பதில் பயனில்லை. நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும்! இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்!

    நீங்களும் வழக்கம்போலவே உற்சாகத்துடன் கவிதைப் போட்டிகளில் தொடர்ந்து பங்கெடுத்து வாருங்கள்! (ஒவ்வொரு வாரமும் அதிகக் கவிதைகளை ஆர்வத்துடன் எழுதி என்னை வியப்பிலாழ்த்துபவர் நீங்கள்! கடந்த வாரப் போட்டியில் நீங்கள் பங்கெடுக்காதது எனக்குப் பெருங்குறையே!)

    மறப்போம்! மன்னிப்போம்! நட்போடு இணைந்து பயணிப்போம்!

    அன்புடன்,
    மேகலா இராமமூர்த்தி

  4. அன்பிற்கினிய வல்லமையாளர்களே,

    வணக்கம்.  இவ்வார சிறந்த கவிஞருக்கும், சிறப்புக் கவிதைக்கும் வாழ்த்துக்கள்!

    அண்ணல் ஜெயபாரதன் அவர்களின் உள்ளக் குமுறல்களும், அதற்கான விளக்கங்களும் நம்மை சிந்திக்க வைத்ததை நாம் அறிவோம்.  எண்ணக் கருத்துக்களில் வேறுபாடு இருந்ததை வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி பிரசுரித்த நிர்வாகத்திற்கும், தான் கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்கும் மூத்த சகோதரர் ஜெயபாரதன் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள்!

    இதேவேளையில் ஒன்றை மட்டும் சுட்டிக்காட்டி, இந்த தருணங்கள் நம்மைக் காயப்படுத்தாமல் இருக்கு முனைகிறேன்.  முன்னமே கூறியவாறு, ஒவ்வொரு சிந்தனையும் வேறு வேறு; ஆதலால், படைப்பாளிகள் வேறுபடுகிறோம்.  உதாரணத்திற்கு, ஒருவர் பார்வையில் மாற்றுத் திறனாளியின் துயரம் மட்டுமே பிரதிபலிக்கலாம்.  ஆனால், அடுத்தவர் பார்வையில், அவர்தம் மன உறுதியைக் காண்கின்றனர்.  

    எனவே, இருவருமே சரி என்றுதான் படைப்பை அணுக முடியுமே ஒழிய, தவறாக ஒன்றைப் பார்க்க இயலாது என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து!

    அன்புச் சகோதரி மேகலா, கூறியதுபோல, ஒவ்வொரு வாரமும், சகோதரர் ஜெயபாரதனின் பல எண்ண ஓட்டங்கள் படிப்பவர் மனதில் சட்டென ஏகிவிடும் வல்லமை படைத்தது.  தொடரட்டும் இந்த பந்தம்!

    வாழ்த்துக்கள் அத்துனை உள்ளங்களுக்கும்!  

    அன்புடன்
    சுரேஜமீ

  5. என்னை சிறந்த கவிஞராய்த் தேர்ந்தெடுத்த மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றி . கவிஞர் திரு .ருத்ரா இ . பரமசிவன் அவர்களுக்கும் , பாராட்டு பெற்ற அனைத்து கவிஞர்களுக்கும்  மனமார்ந்த வாழ்த்துக்கள் . வாழ்த்திய. அன்பு  நெஞ்சங்களுக்கு மனம் நிறைந்த நன்றி !

  6. இவ்வார கவிஞராக தெரிவாகியிருக்கும் திருமதி சியாமளா ராஜசேகர் அவர்களுக்கும் பாராட்டு பெரும் திரு ருத்ரா பரமசிவன் அவர்களுக்கும்  வாழ்த்துக்கள். 

    அன்புச் சகோதரி மேகலா, கூறியதுபோல,மறப்போம்! மன்னிப்போம்! நட்போடு இணைந்து பயணிப்போம்!

    வல்லமையாளர்களின் களம் நல்லவை அறுவடை செய்யும் நிலம்.
    ஆறாண்டு என்ன நூறாண்டு கடந்து தொடர வாசல்ய வாழ்த்துக்கள் பகிர்கிறேன் . 

  7. எல்லாக் கவிதைகளிலும் தன்னம்பிக்கை வெளிச்சம் பிரகாசமாக இருக்கிறது.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

  8. படக்கவிதைப்போட்டி (12)ன் இந்த வார சிறந்த கவிஞராக தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் திருமதி.சியாமளா ராஜசேகரன் அவர்களுக்கு என் மனம் திறந்த பாராட்டுகள். அப்போட்டியில் இந்த வார பாராட்டு பெறும் கவிஞராக என்னைத்தேர்ந்தெடுத்த திருமிகு.மேகலா ராமமூர்த்தி அவர்களுக்கு
    என் மனங்கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.எனக்கு பாராட்டு அளித்த நம் வல்லமை வட்டக்கவிஞர்கள் அனைவருக்கும் தனித்தனியாக என் நன்றியை மனதார தெரிவித்துக்கொள்கிறேன்.படக்கவிதை பக்கமே நான் கவனம் செலுத்தத்த வறியதால் இந்த காலதாமதம் ஏற்பட்டு விட்டது.அதற்காக‌  திருமிகு.மேகலா ராமமூர்த்தி அவர்களிடமும் மற்றும் நம் அன்பு நண்பர்களிடமும் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

    அன்புடன் ருத்ரா இ.பரமசிவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *