புலவர் இரா. இராமமூர்த்தி.

 

சங்ககால இலக்கியங்களுள் அறிஞர் பலரின் உள்ளம் கவர்ந்த பாடல் ஒன்று உண்டு! அது வாகைத்திணையின், துறையாகிய ‘மூதின் முல்லை’ யைச் சார்ந்தது! புறநானூற்றின் 191, 279, 288, 306, 308, 312 ஆகிய எண்ணுடைய பாடல்கள் , மூதின்முல்லை என்ற துறையைச் சார்ந்தவை! இவற்றுள் 279-ஆம் பாடலில் பழங்குடியில் பிறந்த பெண்ணின் வீரம் மிக்க பேருள்ளம் வெளிப் படுகிறது!

அந்தப் பாடலில் பலநாள் நடைபெற்ற ஒரு போரைப் பற்றிய நிகழ்வுகள் குறிக்கப் பெற்றுள்ளன! அனைவரும் அறிந்து போற்றிய பாடல்தான் அது! இப்பாடலை, அக்காலச் சான்றோர்கள், பாண்டித்துரைத் தேவர், மு. இராகவையங்கார், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதி போன்றோர் மிகவும் போற்றிப் புகழ்ந்துள்ளனர். அப்பாடலின் சிறப்பை உணர்ந்த ஐயனாரிதனார் தம் புறப்பொருள் வெண்பா மாலையில்,

”வந்த படைநோனாள் வாயின் முலை பறித்து
வெந்திற லெஃக மிறைக் கொளீஇ – முந்தை
முதல்வர்கல் தான்காட்டி மூதின் மடவாள்
புதல்வனைச் செல்கென்றாள் போர்க்கு! ” (பு.வெ.மா.175)

என்று மூதின்முல்லைத் துறைக்கு இலக்கணம் வரைந்துள்ளார்! இதனைத் தொல்காப்பிய உரையாசிரியர் இளம்பூரணர் வெட்சித் திணைத் துறைகளுள் ‘மறங்கடை கூட்டிய மகளிர் நிலை கூறியதற்கும், ‘வாள்வாய்த்துக் கவிழ்தல் என்பதற்கும் மேற்கோள் – என்று குறித்துள்ளார்!

tamil-sangam-war

அப்புகழ் பெற்ற பாடல்:-
பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார்
திணை: வாகை துறை: மூதின் முல்லை

கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து, களத்துஒழிந் தன்னே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன், 5
பெருநிரை விலக்கி, ஆண்டுப்பட் டனனே;
இன்றும் செருப்பறை கேட்டு, விருப்புற்று மயங்கி,
வேல்கைக் கொடுத்து, வெளிதுவிரித்து உடீஇப்,
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒருமகன் அல்லது இல்லோள், 10
செருமுக நோக்கிச் செல்க என விடுமே!

இப்பாடலுக்கு பழங்காலத்தில் புறநானூற்று உரையாசிரியர் ஒருவகைப் பொருள் உரைத்தனர்! டாக்டர். உ.வே. சா. பதிப்பில், ‘மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை யானை எறிந்து, காலத்து ஒழிந்தனனே” என்ற தொடருக்கு, ‘நேற்றைய முன் நாள் நடந்த போருக்குச் சென்ற இவள் தமையன், யானையுடன் போராடிப் போர்க்களத்தில் மாண்டனன்’ என்ற பொருள் உள்ளது! அடுத்து, ‘நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன், பெருநிரை விலக்கி, ஆண்டுப் பட்டனனே ‘ என்ற தொடருக்கு , ”நேற்று நடந்த போரில் இவள் கணவன் பெரிய குதிரைப்படைகளை விலகியோடச் செய்து, அப்போர்க்களத்திலேயே உயிரிழந்தான்”என்ற பொருள் உள்ளது! ‘

அடுத்த பாடலடிகளுக்கு – ‘தன் அண்ணனையும் கணவனையும் இழந்த அப்பெண், இன்றும் போர்ப்பறை ஒலிப்பதைக் கேட்டாள்! மிகவும் விருப்பம் கொண்டாள்! போர்க்களத்துக்கு யாரை அனுப்புவது? என்றெண்ணி மயங்கினாள்! தனக்காதரவாகத் தான் பெற்ற ஒரேஒரு மகன்மட்டுமே உள்ளான் என்பதையும் எண்ணி மயங்கினாள்! அந்தச் சிறுமகனையும் எண்ணெய் பூசித் தலைவாரி, வெள்ளைநிற ஆடை அணிவித்து, வேலைக் கையில் கொடுத்துப் ”போர்முனை நோக்கிப் போ” என்று கூறினாளாம் என்னே அவள் வீரம்!

அக்காலப் பெண்டிர் திருமணம் ஆனபின் கணவனுடன் அவன் இல்லத்தில்தான் வாழ்வாள் என்பதற்க்குச் சங்க இலக்கியங்களில் ஆதாரங்கள் பல உள்ளன! பிறந்த வீட்டில் பொற்கிண்ணத்தில், பாற்சோறு பிசைந்து ஊட்டும் செவிலியைப் புறக்கணித்து, பொற்சிலம்பு கலகலக்க ஓடோடிச் சென்று அவள் பெற்றோரின் ஏவல்களை மறுத்து விளையாடிய சிறுவிளையாட்டி அவள்! செல்வவளம் மிக்க வீட்டில் பிறந்த அப்பெண், திருமணம் ஆனா பிறகு தன் புகுந்த வீட்டில் எவ்வாறு வாழ்கிறாள் என்று பார்த்து வருமாறு செவிலித்தாயைப் பெற்றதாய் அனுப்புகிறாள்! அவளோ, பெண்ணின் புகுந்த வீட்டில் அப்பெண் குடும்பம் நடத்தும் சிறப்பைப் பெரிதும் பாராட்டுகிறாள். கணவனின் குடும்பத்தின் வறுமையை ஏற்றுக்கொண்டு, தன் பிறந்த வீட்டின் செல்வவளத்தைச் சிறிதும் கருதாமல் ஒருவேளை பட்டினியும், மறு வேளை சிறிதே உணவும் உண்டு வறுமையை ஏற்று வாழும் மெல்லிய மன வலிமையை உடையவளாய் அன்பும், இன்பமும் பொங்கும் இன்முகத்துடன் வாழ்கிறாள்!’

இது நற்றிணையில் அமைந்த”பிரசங்கலந்த” எனத்தொடங்கும் 110-ஆம் பாடலின் பொருள். இப்பாடலில் செவிலி ,
”ஏவல் மறுக்கும் சிறுவிளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டுணர்ந்தனள் கொல்?” என்று வியந்து போகிறாள்!

”கொண்ட கணவன் குடி வறனுற்றெனக்
கொடுத்ததந்தை கொழுஞ்சோ றுன்னாள்,
ஒழுகுநீர் நுணங்கறல் போலப்
பொழுதுமறுத் துண்ணும் சிறு மதுகையளே!”
என்ற செவிலியின் கூற்றில் பெண்மனத்தின் திண்மை பெரிதும் பாராட்டப் படுகிறது! இதனால் திருமணம் ஆனபின்னர் எல்லாப் பெண்டிரும் புகுந்த வீட்டிலேதான் வாழ்ந்தனர் என்பது புலனாகின்றது. புகுந்த வீட்டில் மாமனார், மைத்துனர், கணவன் , மகன் என்ற ஆண் உறவினர்கள் மட்டுமே இருப்பார். மகனைப் பெற்ற தாயின் இல்லத்தில் போருக்குச் செல்லும் ஆடவர்கள் மாமனார், கணவனின் தமையன், கணவன், மகன் ஆகியோரே யாவர்!

ஆதலால், இப்புறநானூற்றுப் பாடலில் ” மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை ” என்ற தொடரில் தன்னை என்பது, அவள் மாமனார், அல்லது கணவனுக்கு அண்ணனையே குறிக்கும் ஆதலால் இவள் தந்தை என்பதும், அண்ணன் என்பதும் நடை முறைக்குப் பொருந்தாத பொருளாகும் ஆகவே இவள் தன்னை என்பது மாமனாரையே குறிக்கும் அடுத்து இவள் கொழுநன் என்பது இவள் கணவனைக் குறிக்கும் என்பது பொருத்தமே. இவளை, ஆண் துணையாக ஒருமகன் அல்லது இல்லோள் என்று ஒக்கூர் மாசத்தியார் பாடுகிறார். இவள் அந்த ஒரும் சிறு மகனையும் போர்க்களம் நோக்கிச் செல்க என அனுப்புவதால் , இவள் பண்டைய வீரக்குடிவழிவந்த பெண் என்பதைக் குறிக்கிறது . இதனையே மாசாத்தியார், ”மூதின் மகளிர் ஆதல் தகுமே !” என்று பாராட்டுகிறார்!

இதனால் பிறந்தவீடும் புகுந்த வீடும் வீரம் மிக்க பெண்களைப் பெற்றவை என்பது மரபின் சிறப்பைப் புலப்படுத்துகிறது! இப்பாடலுக்குப் பொருள் கொண்டவர்கள் சற்றே மாறுபட்ட பொருள் கூறினர் என்பதை ஆய்ந்து பார்த்தால் புலனாகும்!

 

 

 

 

திருச்சி புலவர் இராமமூர்த்தி
ஆலந்தூர், சென்னை 600 016

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “புறநானூற்றில் பொருள்வேறுபாடு!

  1. புலவரின் “புறநானூற்றில் பொருள் வேறுபாடு”  கட்டுரை ரசமிக்கது. அழகாகக்  காட்சிகளை விளக்கும் முறை அருமை. மேலும் மேலும் அவரிடம் இருந்து கற்க ஆசைப் படுகிறது மனம். பாராட்டுகள்.
    அன்பன்,
    மீ.விசுவநாதன் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *