மனம் பற்றி..! 

yoga2

கவியோகி வேதம்

தியானத்தில் நீங்கள் அமரப்போகும் முன்பு உங்கள்  ‘மனது’ பற்றிச் சற்றே சிந்திக்கலாமா? மனம்பற்றிப் பலர் பலவிதமாகச் சொல்லியிருப்பினும் அதை ஒரு ஒழுங்குக்குக் கொணர அதுபற்றி விரிவாக அலசுவது அவசியம். மனிதனுக்குக் கிடைத்த ஒரு பெரிய வரப்ரஸாதம் இந்த மனம். எண்ணங்களின் தொகுப்பே மனம். அளப்பரிய சூக்கும யந்திரம் இது. சுழன்று கொண்டே இருக்கும்.

நீங்கள் இதனைப்பற்றிச் சரியாக தெய்வீகச் சிந்தனையுடன் அணுகாவிட்டால் உங்களை அது எங்கேயோ கொண்டுபோய் விட்டுவிடும். நல்லதும் அதுவே செய்யவைக்கும். சமுதாயப் பணி செய்யத் தூண்டி உங்களுக்கு ‘ஓஹோ’என்று புகழை வாங்கிக் கொடுக்கும். அல்லதும் (தீமை) செய்ய வைத்து உங்கள் வாழ்க்கையையே கெட வைக்கும். சமீபத்தில் நீங்கள் பேப்பரில் படித்திருப்பீர்கள். ஒரு சாதாரண ‘அறிமுகக் கார்டை’ச் சரியாக எடுத்துக் காட்டாததற்காக நெய்வேலியில் ஒரு ராணுவத்தான் ஒரு நபரை நெற்றியில் (சட்டென்று உணர்ச்சி வசப்பட்டு) சுட்டுவிட்டான். அவன் வாழ்க்கையே போச்சு. தேவையா இப்படிப்பட்ட அவசர புத்தி? பதட்ட நிலை? மனத்தை ஓர்மைப்படுத்தி சரியான முடிவை எடுக்காத எண்ணம்?….
ஆகவே தியானத்தில் மிக ஆழமாக நீங்கள் அமரும் முன் அதற்குச் சில கடுமையான உத்தரவுகளைப் போட வேணும். ஒழுங்காக நேர்வழியில் செல் என்று அதனை(மனத்தை) ஒரு தெய்வீக்க் கட்டுக்குள் கொண்டு வர வேணும். ஏன் எனில் உங்கள் நெற்றிப்பொட்டு வைக்கும் இடம்(ஆக்ஞா சக்கரம்) இருக்கிறதே அதுதான் மனம் என்னும் சூக்கும யந்திரம் சற்றுநேரமாவது நிற்கும் இடம்.

….அந்த இடத்தில் நீங்கள் மனத்தை ஓர்மைப்படுத்தி ஒரு இருபது நிமிடமாவது அதனை நிற்க வைத்துப் பயிற்சி கொடுத்தீர்கள் என்றால், அதில் வெற்றியும் பெற்றுவிட்டீர்கள் எனில், உங்களைப்போல் ஒரு ‘ராஜா’ (Controlling king) இருக்கவே முடியாது. மெல்ல மெல்லப் பயிற்சியின் மூலம் ஒரே வருடத்தில் அதே ‘ஆக்ஞா’வில் மனத்தை நிறுத்தி, அங்கே ‘ஒளிப்படலம்’ கொண்டுவரச்செய்து அதனால் சிறிதாவது ‘சக்திகள்’ பெற்று மற்றவர் நோயைக் குணப்படுத்த முடியும். உங்கள் ஆலோசனைகளே பலத்த வெற்றிபெறும். பிறரது காய்ச்சலுக்கோ, இல்லை குணப்படுத்தக்கூடிய லேசான மற்ற நோய்களுக்கோ நீங்கள் வெறும் ‘விபூதி’ கொடுத்தால்கூட அதில் தெய்வீக சக்தி ஏறி சட்டென்று குணம் கிட்டும். இது எல்லா தியான மனிதர்களின் அனுபவம். ஆயின் அப்படி ஆழ்ந்த தியான சக்தியில் ஈடுபட்டவர்களுக்கே இது சாத்தியம். என் அனுபவமும் கூட. நாம் எத்தனை மகான்களைப் பார்த்திருக்கின்றோம்? அவர்களுக்கு இந்த விபூதியால் குணப்படுத்தும் தெய்வீக சக்தி எப்படி வந்தது? ஆழ்ந்த பல வருடத் தியானப்பயிற்சியால் அன்றோ? ஆகவே, ஓடிக்கொண்டே இருக்கும் மனத்தை ஓர்மைப்படுத்தி, ஒரு புள்ளியில் நிலைக்கவைக்கும் சாதனை உங்களை எங்கோ கொண்டு சேர்க்கும். இது பெரிய வித்தையே அன்று. தீவிர தினசரிப் பயிற்சியால் இது எல்லோர்க்கும் சாத்தியமே!

‘எண்ணங்கள் மனத்தின் அசைவுகள்’ (vibrations) என்பான் ஒரு கவி. நேரிய தெய்வீக எண்ணங்கள் நித்தம் என்னைப் புனிதனாக்கின’ என்றான் ஒரு ஃப்ரென்ச் ஞானி. ‘நெற்றிப்பொட்டில் ஒளியைக் கொண்டேன்; நிமலனின் அருள் சக்தி தானே வந்தது’ என்பார் திருமூலர் ஞானி ஒரு மந்திரத்தில். அவரே பிறிதொரு மந்திரப் பாட்டில் சொல்வார், “பத்து சதம் கூட நாம் ‘எண்ண யானை’யைத் தினசரி சரியாகப் பயன்படுத்த வில்லையடா! பராபரமே! பின்பு நாம் ‘சித்திகளை’ப் பெறமட்டும் துடிப்பது எங்ஙனம்?” என்பார்.

.. இதே கருத்தைத் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்களும் வலியுறுத்தியிருக்கின்றனர். நாம் இவர்களை ஆழ்ந்து படித்தாலே நம் தினசரித் தியானத்தைச் சீராக, அற்புதமாக, ஆநந்தமாகப் பின்பற்றலாம். ஆம்! நம் எண்ணங்களின் தரம் மிக உயர்வாக இருந்தால் மட்டுமே எல்லோரது வாழ்க்கையும் மகிழ்ச்சியாகவும், சமுதாயத்திற்கு மிகப் பயன் உள்ளதாகவும் இருக்கும். இதைத்தானே திருமூலர் ‘மனம்! அது, செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்!’ என அடித்துச் சொல்கின்றார்.

(தொடரும்)-

*************************************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *