-மேகலா இராமமூர்த்தி

திருமிகு. வனிலா பாலாஜி எடுத்த இந்தப் படத்தை  (பட்டுப்புழுவின் கூடுகள் இவை)  போட்டிக்குத் தெரிவுசெய்து தந்திருப்பவர் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமிகு. சாந்தி மாரியப்பன். இவர்கள் இருவருக்கும் வல்லமை இதழின் நன்றிகள்.

10609031_716498245161097_1832540875_n

பட்டுநூலைச் சுரந்துதரும் பட்டுப்புழுவைக் கொன்றே மனிதர்கள் அந்நூலைச் சேகரிக்கின்றனர் என்று அறியும்போது மனம் துயரத்தில் துடிக்கின்றது.

பட்டுநூலைத் தந்துவிட்டுப்
பட்டுப்போகும் புழுவே  என்
பளபளக்கும் பட்டுக்குள் உன்
மரண ஓலம் கேட்கின்றதே! என்று அவற்றின் தியாகத்தை நம் உதடுகள் வேதனையோடு முணுமுணுக்கின்றன.

 ***

சரி, இவ்வாரப் போட்டிக்கு வந்திருக்கும் கவிதைகளில் நெஞ்சம் தொ(சு)டும் கவிதை வரிகளைப் படித்துவருவோம் முதலில்!

விருப்பமில்லாவிடினும் வயிற்றுப் பிழைப்புக்காய்க் கூட்டுப்புழுக்களை வளர்க்கும் தானும் ஒரு கூட்டுப்புழுவே எனக் குமுறும் மாதரசியின் எண்ணவோட்டத்தைப் பதிவுசெய்திருக்கிறார் திருமிகு. ஜெயஸ்ரீ ஷங்கர்.

ரெண்டு மாசகாலமா
காவலிருந்து கண்ணுல
வெச்சு வளர்த்த
வெண்பட்டுக் கூடிது.!
[…]
கருவுக்குள் உறங்கும் உயிரை
நானறிய மாட்டேனா?
சிறகுகள் முளைக்குமுன்னே
சூரியனைக் காணுமுன்னே
கூண்டோடு கைலாசம்..
அனுப்ப எனக்கும்
நெஞ்சம் ஒப்பவில்லை..!

மனித வயிறு இல்லையென்றால்
கூடைக்குள் கூறு கட்டி
வெந்நீரில் வேகப் போடும்
வேதனை ஏதுமின்றி
கூட்டுப் புழுக்களிதும்
சுதந்திரமாய்ப் பறந்திருக்கும்..!
[…]

பாவங்கள் எண்ணாத
மலட்டு மனங்கள்..!
வருமானங்கள் எண்ணியே
பழகிக் கொல்லும்..!

பாவிதான் நானுமிதில்
மீளாது மாட்டிக்கிட்டேன்
கூட்டுப்புழுக்களாய்
கூடைக்குள் நெளியும்
உயிர்கள் பலியாக..!

காய்ந்த வயிறும்
காலித் தட்டுமே
இந்நிலைக்கு
என்னைத் தள்ள
உள்ளுக்குள் வேதனையும்
உதட்டளவில் புன்னகையும்
சுமந்து நெளியும்
நானும்கூடக் கூட்டுப்புழு..!

 ***

’இரவுகள் என்னைப் பயமுறுத்துவதில்லை; ஜன்னல் கீறி உள்ளே நுழையும் பகலின் அத்துமீறல் என்னால் மன்னிக்கமுடியாதது’ என்று இங்கே குரல்கொடுப்பது கூட்டுப்புழுவா? இல்லை….புன்னகைக்கும் மாதரசியா? என நம்மை யோசிக்கவைக்கிறார் திரு. கவிஜி.

…மெழுகுவர்த்தி அற்ற 
இரவுகள் கூட
நிலவுக்கு அழைத்துச் 
செல்லும் 
யதார்த்தங்களில் ஒன்று…

கீற்றொளியென 
ஜன்னல் கீறும் பகலை நான் 
மன்னிப்பதில்லை
அது ஓர் அத்துமீறல்…
[…]
இரவுகளின் கைகளில் 
சிறு குழந்தையென
பசி மறக்கும் இறுமாப்புடன் 
நீண்டு கிடக்கிறது 
எனது நீட்சிகள்…

அங்கே பல்லாங்குழியோ 
கோலி குண்டோ 
விளையாடும் 
இரவின் நிழலுக்குள் 
நான் காலம் கடந்து 
பின்னோக்கி செல்கிறேன்…

அப்போது 
தலை தடவிச் 
சிரிக்க எப்போதும் 
பகலை விரட்டிய 
ஒரு பின்னிரவு 
காத்திருக்கிறது…
எனக்காக…

***

பட்டுநூல் விற்றுப் படிக்கவைத்து மகளை மருத்துவராக்கிவிட்டதில் மகிழும் அன்னை உள்ளத்தைக் காட்டுகிறார் திரு. ஹரீஷ்.

பூச்சி தந்த நூலெடுத்துப்
பெரும்பாடு பட்டு வித்து
வாயக் கட்டி வாழ்ந்து பழகி
வயத்துப் பாட்டப் பாத்தாச்சு
மனசு போலப் படிச்சிடத் தான்
மவ அவளும் ஆசப்பட்டா

வாழ்க்கைக்கே வழி இல்ல
வக்கணையாப் படிப்பெதுக்குன்னு
கேள்வியேதும் கேக்காம
கெழவி நானும் தலையசைச்சேன்
[…]
தங்கம் போலப் பொண்ணு மவ
டாக்டராவே ஆகிப்புட்டா
சங்கடமெல்லாம் ஓடிப் போச்சு
சந்தோசம் இனி நிரந்தரமாச்சு
மூஞ்சியில பொங்குது சிரிப்பு
இனி கவுரதையாச்சு எங்க இருப்பு.

***

தான் கட்டிய பட்டுக்கூடு தனக்கே சிறைச்சாலை ஆனதை எண்ணிச் சீறும் பட்டுப்பூச்சியின் கோபத்தைப் பாட்டாக்கியிருக்கிறார் திரு. சாயாசுந்தரம்.

இழை இழையாய்
கட்டப் பட்டக் கூட்டுக்குள்
எப்போது நான்
சிறைப்பட்டேன் என எப்படி
யோசித்தும் தெரியவில்லை எனக்கு …….

கேட்பதற்கு ஆயிரம்
கேள்விகள் இருந்தும்
கேட்கவே கூடாது என
எந்த இழையால்
கட்டப் பட்டது என் நாவு …..

முளைத்த சிறகுகள் விரித்து
பறக்க இயலாமல்
அடைத்து வைத்து என்னை
அடையாளம் இழக்கச்செய்வது தான்
அன்பென்று சொன்னால் …..
அறுத்துக் கிழிக்கவா

அத்துமீறவா—-இல்லை
அகப்பட்டுக் கொண்டது தான்
சாஸ்வதம் என
ஆசுவாசப்படுத்திக் கொண்டு
[…]
நேரம் வந்தால் செத்துப் போவதா? 

***

மரத்தை வெட்டிச் சாலைகள் அமைத்ததிலும், குளத்தைத் தூர்த்துக் குடியிருப்புக்கள் கட்டியதிலும் சமுதாயத்தின் வாழ்வாதாரத் தேவையிருக்கின்றது. ஆனால் பகட்டுக்கான பட்டிற்காகப் பட்டுப்புழுவைக் கொல்வதில் பாவத்தைத் தவிர வேறென்ன இருக்கிறது? என வினாத்தொடுக்கிறார் திரு. கொ.வை. அரங்கநாதன்.

நீண்ட நெடிதுயர்ந்த மரங்களை
நெடுஞ்சான் கிடையாய் வீழ்த்தி
நெடுஞ்சாலைகள் அமைத்தோம்
நேரத்தை மிச்சப்படுத்த
[…]
நீர் தேக்கும் மையங்களாம்
ஆறு குளம் ஏரியென
அத்தனையும் தூர்த்து
அடுக்குமாடிகள் கட்டினோம்
இனப் பெருக்கத்தை எதிர் கொள்ள
[…]
அத்தனை அழித்தல்களும்
சமூக குறிக்கோளொன்றைச்
சார்ந்திருந்தது

ஆனால்
பட்டுப் புழுக்களே
உங்களை பலியிடுவது
பணத்தின் பலம் காட்டும்
பகட்டிற்காக மட்டுமே…
ஆனால்
அந்தப் பாவத்தில்
எனக்கேதும் பங்கில்லை
ஏனென்றால்
பட்டாடை அணிய 
பணவசதி எனக்கில்லை
என் புன்முறுவலதை
உங்களுக்கு புரியவைத்திருக்கும்!

 ***

தன்னுழைப்பில் முன்னேறிய பெண்ணின் பெருமிதம் கூறுகின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.

பட்டுப் பூச்சி கூடுகட்டிப்
     பாது காத்தது பட்டுநூலை,
பட்டு நூலைச் சேர்த்தவள்தான்
     பருத்தி நூலின் ஆடையிலே,
கெட்டிட வில்லை, வாழவைத்தாள்
     கடின உழைப்பில் பிள்ளைகளை,
மட்டிலா மகிழ்வை முகங்காட்டும்
     மங்கை வாழ்வை வென்றவளே…!

 ***

பருத்திப்பஞ்சை நெய்து உடுத்தும் எளிமையான ஆடைகளே ஏற்றமிக்கவை; பட்டாடைகளுக்கு ஏது அந்த மிடுக்கு? எனக் கேட்கின்றார் திருமிகு. துஷ்யந்தி.

…பட்டுடுத்தி செல்வாக்காய்
இருந்ததில்லை நாமிங்கே
பருத்தி நூலில் செய்யுமாடை
நிகரில்லை பட்டுக்கே…!

பத்துதரம் துவைத்த போதும்
பதம் குறையா நூலிதே…
பாட்டன் பூட்டன் காலந்தொட்டு
நமக்கு கைவந்த கலையிதே…!

சிட்டுபோல சேர்த்தெடுத்து
கொண்டுவந்த பருத்திப் பஞ்சிதே
செல்வாக்காய் நம்நாட்டை
உயர்த்தும் ஒரு தொழிலிதே….!

***

’பட்டு’ எனும் சொல்லையே இறுதிச் சொல்லாக்கிப் பாவையொருத்தியின் வாழ்க்கையைப் ’பா’வாக்கியிருக்கிறார் திரு. மெய்யன் நடராஜ்.

வாலிபத்துக் காலந்தொட்டு பட்டுப்பூச்சி 
==வளர்த்தெடுக்க ஆசைப்பட்டு பழக்கப்பட்டு  
தாலிகட்டி வந்தபின்னும் தொடரப்பட்டு 
==தனிமரமாய் ஆனபின்னும் துணையாய்பட்டு 

விட்டுப்போன கணவனாலே வெறுக்கப்பட்டு 
==வீதியிலே அனாதைபோல விடவேபட்டு 
பட்டுப்போன வாழ்க்கைதனை மீட்கப்பட்டு…

***

பட்டுப்புழுவைக் கொல்வதால் ’தீட்டு’ப்பட்ட அந்தப் பட்டை உடுத்துதல் தவிர்மின் பெண்டிர்காள்! என நல்லுரை நவில்கிறார் திருமிகு. புனிதா கணேசன்.

கூட்டுப் புழுவின் பட்டு
கூட்டைப் பிரித்து உயிர்க்
கூட்டை வதைக்கும் கோரம்
பட்டுப் புழுவின் வாழ்வு ..
வெட்டிப் புதைத்துத் தேடும்
தீட்டுப் (பட்ட) பட்டை நாடும்
வீட்டுப் பெண்டிர் கேண்மீர்
கூட்டுப் புழுவை வதைத்து
பட்டுச் சீலை சூட நாட்டமேன்?
விட்டு விடும் உயிர் பிழைக்க…

***

தம் உமிழ்நீரே தனக்கு எமனானதை எண்ணி வருந்தும் பட்டுப்புழுவின் சோகத்தைப் பிழிந்து தந்திருக்கின்றார் திருமிகு. தமிழ்முகில்.

புழுவாய் ஊர்ந்த நானும் எந்தன்
உமிழிக் கூட்டுள் அடைக்கலமானேன் !
எந்தன் உலகம் சுருங்கிய போதும்
ஆசைக் கனவு சுருங்கவில்லை !
ஆனால்…..
ஏனோ இறைவா ! ஏனிந்த வேதனை !
எதிர்பாரா நொடியில்
வெந்நீரில் வெந்து மாண்டேன் !
என் உமிழ்நீரே எனக்கு
எமனாகிப் போனதே !

***

வறுமையிலும் செம்மையாய் வாழும் கண்ணியமான பெண்மையை நமக்கு அறிமுகப்படுத்தி, இல்லார்க்கு உதவுவதே நல்லறம் என்பதையும் எடுத்தியம்புகிறார் திரு. சுரேஜமீ.

…மானுடம் வாழ்வல்ல
 மனிதம் வாழ்ந்திடுங்கள்
மண்ணில் நிலைபெறவே
 மாற்றவர் வணங்கிடவே
மாதவம் செய்திட்ட
 மலர்கள் சொல்லுமிதை
மங்கை யான்பெற்ற
 மண்ணின் தவமிதுவே!

மலர்கள் மட்டுமல்ல
 மனதும் வெண்மைதான்
மதியொளி ஒத்தவொரு
 மழலையின் சுகமிதுதான்
மாண்பாய் வாழ்வதில்தான்
 மண்ணும் பயனுறுமே
மகிழ்ச்சிக் கடலினிலே
 மல்லிகை மணமுடனே!
[…]
இதயம் உணரட்டும்
 இல்லார் துயரத்தை;
இருப்பவர் கொடுக்கட்டும்
 இன்முகம் பார்க்கட்டும்
இல்லை வருமையென
 இனிமை மலரட்டும்
இயன்றவரை செய்வோம்
 இனியொரு விதிசெய்வோம்!!

***

பட்டுச்சேலை நெசவிற்காக ஆயிரமாயிரமாய்ப் பட்டுக்கூடுகள் அழிவதைக் கண்டாலும், பட்டுடுத்தும் மக்களின் ஆசை அழியாது என்கிறார் திருமிகு. வானதி வேதா. இலங்காதிலகம்.

ஒரு பட்டுச் சேலை நெசவிற்கு
ஒரு 4000 – 5000 பட்டுக் கூடு
ஒரு புறம் கொலை, அழிவு, கொடுமை!
மறுபுறம் அழகிய ஆடை புதுமை!
பலர் சீவனம், வருவாய் பிழைப்பு!
எவர் பட்டை வேண்டாம் என்பார்!
சிலர் பட்டு அணிவதே இல்லை!
சிந்தனைக்குரிய சிறு கைத்தொழிலே!

 ***

பட்டுப்புழுவிடம் தன் அவலக் கதையைச் சொல்லிப் புலம்பும் மங்கையின் சோகத்தைக் கவிதையாக்கியுள்ளார் திரு. ரோஷான் .ஜிப்ரி.

பட்டுப் புழுவே,பட்டுப் புழுவே
என் பாட்டினை நீ அறிவாய்
கொட்டும் மழையிலும்
வெட்ட வெளியிலும்
என் ஏக்கத்தை நீ உணர்வாய்
பட்டுப் போகாது தினம்
வாழ்வை துளிர்ப்பிக்க
பட்டு நூல் செய்கின்றேன்-பிறர்
கெட்டுப் போகாமல்
தேகம் மறைத்திட
ஆடை நான் நெய்கின்றேன்
கொட்டன் உடுதுணி தேடி அலைபவர்
குறைகளை களைகின்றேன்
கூழுக்கு மாரினை அடித்த படி நான்
நாளும் அலைகின்றேன்.

***

ஒருவரின் மகிழ்ச்சியில் இன்னொருவரின் வீழ்ச்சி ஒளிந்திருக்கக் காண்கிறோம். இதுதான் வாழ்வின் நியதி என்கிறார் திருமிகு. சரஸ்வதி ராசேந்திரன்.

கொடுத்து கொடுத்தே
சிவந்தன கர்ணனின் கரங்கள்
நீயும் கூட நூலிழை கொடுத்தே
சிவப்பு நிறம் கொண்டாயோ
மல்பரி இலைகளில் வளர்ந்து
மற்றவர்களுக்காக உயிர் விடுகிறாய்
இது யார் குற்றம்?
படைத்தவனின் குற்றமா இல்லை
பட்டுப்புடவைக்கு ஆசைப்பட்ட
மகளிரின் குற்றமா?இல்லை இல்லை
இறைவன் போட்ட கணக்கு பாதி வழியில்
இறப்பு,ஒருவரின் துன்பம்
மற்றவரின் லாபம்
இது இறைவன்வகுத்த நியதி
இதில் வருத்தம்  ஏன்  அமைதி

***

அருமையான கவிதைகளால் கவனம் ஈர்த்த அனைத்துக் கவிஞர்களுக்கும் என் பாராட்டுக்கள்!

அடுத்து, இவ்வாரத்தின் சிறந்த கவிஞரைக் கண்டுவருவோம்!

 மனிதர்களே! உங்களுக்கு நியாயம் வேண்டுமென்றால் மேடை போட்டு முழக்குகின்றீர்! நீதிமன்றம் செல்கின்றீர். ஆனால் பேச வாயில்லாத ஓர் சீவனைச் சித்திரவதை செய்து கொல்கின்றீரே? நீதி மனிதர்களுக்கு மட்டுந்தானா…எங்களுக்கில்லையா? என்று ஏக்கத்தோடு வினவி, ’நாங்கள் பஞ்சுப் பொதிகளல்ல! வெந்து கருகிய பிஞ்சுக்கனவுகள்’ எனும் பட்டுப்புழுவின் கோபம் கலந்த வேதனைக்குரலைப் பிரதிபலித்த கவிதையொன்று நெஞ்சைப் பதைக்க வைத்தது.

அக்கவிதை…

பட்டுப்பூச்சி நியாயங்கள்

உனக்குத் தெரியுமா?
உன் தோள் சாய்ந்திடும் பட்டு
உன் அடக்குமுறைகளின் வெளிப்பாடு

உயிரைப் பிழிந்து நூலெடுத்து
கனவுக் கோட்டையை வேய்ந்தது
கல்லெறிந்துக் கலைக்கவா?

இங்கே கொட்டி வைத்துள்ளது
பஞ்சுப் பொதிகள் அல்ல
வெந்து கருகியப் பிஞ்சுக் கனவுகள்

மாய்ந்து மாய்ந்து கட்டிய
கருவறையே
அன்பின் சமாதி ஆனால்?
வெற்றுத் தட்டில் வேதனையும்
பஞ்சுப் பெட்டகத்தில்
பட்டுப் பூச்சிகளின் வெந்த ஆன்மாக்களும்
மட்டுமே மிஞ்சும்!

இக்கவிதையின் ஆசிரியர் திரு. கனவுதிறவோனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞராய்த் தெரிவுசெய்கிறேன்.

***

’பட்டுப்புழுவும் ஓர் படைப்பாளியே! படைப்பாளிக்குச் சமூகத்தில் மதிப்பில்லை; பட்டுப்புழுவும் அதற்கு விதிவிலக்கில்லை!’ எனும் உண்மைநிலையைப் பதிவுசெய்திருக்கும் திரு. எஸ். பழனிச்சாமியின் கவிதையைப் பாராட்டுக்குரியதாய்ச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

 அக்கவிதை…

படைப்பாளி!

மனதுக்கு பிடித்த கலரில்
மயில்கழுத்து வண்ண பார்டரில்
பட்டுப்புடவை வாங்கத்தான் ஆசை
மகிழ்ச்சிக் கனவில் திளைக்கும்
அந்த மங்கைக்குத் தெரியுமா 
புடவை நெய்ய நூல் தந்தது 
மல்பெரியைத் தின்று இங்கே
தான்வாழவே நூலில் வீடுகட்டிய
புழுவும் ஒரு படைப்பாளி என்று

படைப்பாளிக்கு என்றும் மதிப்பில்லை
பட்டுப்புழுவும் அதற்கு விலக்கில்லை
மல்பெரியைத் தின்று பட்டுநூல் 
பிறப்பிக்கும் பட்டுப்புழுவைப் போன்றே
படைக்கும் மனிதர்களும் பாரினிலுண்டு
படைப்புதனை வாங்கி விற்கும் 
கெட்டிக்கார வியாபாரி மட்டும் 
பணம்தனை ஏராளமாய் குவிப்பதுண்டு

பட்டுப்புழு கடவுள் அருளால்
யோசிக்கும் சக்தி பெற்றால்
மறுகணமே அது மல்பெரியைத்
தின்னக்கூட காசு கேட்கும்
தான் படைக்கும் நூலுக்கு
விலை சொல்லியே விற்கும்
பெரும் பணம் சேர்த்த
பிஸினஸ்மேனாய் அது இருக்கும்
படைப்பாளியே நீயும் யோசி!

***

போட்டியில் கலந்துகொண்ட அனைத்துப் படைப்பாளிகளுக்கும் என் பாராட்டுக்கள்!

 

பதிவாசிரியரைப் பற்றி

7 thoughts on “படக்கவிதைப் போட்டி 14-இன் முடிவுகள்

  1. மேலிருந்து வாசித்துக் கொண்டே வருகிறேன்.
    என் கவிதைகளைக் காணோம். என்ன ஆயிற்று? என்று யோசிக்கிற வேளையில், கடைசியில் என் கவிதை சிறந்த கவிதையாக.
    அதிர்ச்சி கலந்த ஆனந்தம்.
    கவிதையை ஈன்றவனுக்கே இப்படியான உணர்வுச் சிதறல் என்றால்,
    பட்டுக் கூட்டைக் கட்டிய பூச்சிகள் எல்லாவற்றையும் இழக்கும் உணர்வு சொல்ல கவிதை மட்டும் போதாது!

    எனது கவிதையைச் சிறந்த கவிதையாகத் தெரிந்தெடுத்து அங்கீகாரம் தந்த மேகலா இராமமூர்த்தி அவர்களுக்கு நன்றி.

  2. அன்பிற்குரிய சகோதரி மேகலா அவர்களுக்கு முதலில் வாழ்த்துக்களும் நன்றிகளும் அவர்தம் பணிக்கு!

    அடுத்து நம் சிறந்த கவிஞர் கனவு திறவோன் அவர்களுக்கு வாழ்த்துக் குவியல்களை வாரி வாரி வழங்குகிறேன்.  அவர் பெயரில் மட்டும் கனவைத் திறக்கவில்லை!  அந்தப் பட்டுப்பூச்சியின் கனவையும் சேர்த்துத் திறந்திருக்கிறார்.  அது மட்டுமா, நான் தேடிய மனிதத்தை அவர் தந்திருக்கிறாரே!  இன்னும் நம்பிக்கையோடு இருக்கிறேன் இழந்த மனிதத்தை இந்த மண் மீட்டும் என்று!  அதற்குச் சான்றாக இருக்கும் கனவு திறவோனே!  வா நண்பா!  சேர்ந்து மீட்டெடுப்போம்!

    அன்புடன்
    சுரேஜமீ

  3. பரிசும், பாராட்டும் வென்றவர்களுக்கும், ‘வல்லமை’க்கும் வாழ்த்துக்கள்…!

  4. வெற்றியாளர்களுக்கு பாராட்டுக்கள்,  சிறந்த கவிதையை   தேர்ந்தெடுத்த மேகலா இராமமூர்த்திக்கும்,வல்லமைக்கும்  பாராட்டுக்கள்—–சரஸ்வதிராசேந்திரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *