சுரேஜமீ

வறுமை

peak1111

வறுமை சொல்லித் தரும் பாடத்தை இந்த வாழ்க்கையில் வேறெதுவும் சொல்லித்தர இயலாது. இன்றைக்கு வேண்டுமானால், ஒரளவுக்கு ஒவ்வொரு நடுத்தர குடும்பமும் வறுமையின் நிழலை விரட்டி இருந்தாலும், இன்னமும் குறைந்தபட்சம் ஒருவராவது, அக்குடும்பங்களில் வறுமையின் பிடியில் சிக்கித்தான் இருப்பர் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வறுமையைப் போக்குவதில் கல்வி ஒரு முக்கியக் காரணியாக இருந்தாலும், கல்வியைத் தாண்டி, நம் எண்ணங்களும், வாழ்வியல் சூழலும் நிச்சயம் வறுமையை விரட்டக்கூடிய ஒப்பற்ற காரணிகள் என்பதை வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. அதற்கு நிறைய உதாரணங்களை இந்த நவீன காலத்திலும் கூட உங்கள் முன் வைக்க இயலும்.

உலகப் பெரும்பணக்காரர்களான பில் கேட்ஸ், ஸ்டீவ் ஜாப்ஸ், மார்க் சுக்கெர்பெர்க் மற்றும் நம் நாட்டிலுள்ள சச்சின் டென்டுல்கர், திருபாய் அம்பானி போன்றவர்களெல்லாம், கல்வியை வைத்து வாழ்க்கையை மாற்றியவர்கள் அல்லர்; மாறாக, தான் தாங்கியிருந்த எண்ணங்களை முதலாக்கி வரலாறு படைத்தவர்கள் என்றால், ஏன் நம்மால் முடியாது?

இன்னமும், எத்தனையோ குழந்தைகள் பள்ளிக் கல்வியில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மேல்நிலைக் கல்வியைத் தொடர இயலாத நிலையில் இருக்கிறார்கள் என்ற செய்திகளை பார்க்க நேரிடும் போதல்லாம், மனம் கிலேசமடைகிறது. இந்த இந்தியத் திருநாட்டில், எவ்வளவோ வளர்ச்சி கண்டுவிட்டோம்; ஆனால், இன்னமும் வறுமையை அறவே ஒழிக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வு, நம்மில் வலியவர்களுக்கு வர வேண்டும். அவ்வாறு வரும்போது, நம்மில் எளியவர்கள் நிச்சயம் சரித்திரம் படைப்பார்கள்.

வறுமை பற்றி நம் இலக்கியங்கள் என்ன சொல்லியிருக்கின்றன என்பதற்கு முன்னால், சென்ற நூற்றாண்டு கண்ட மகாகவி பாரதி என்ன சொல்லியிருக்கிறான் என்பதும் நம் பள்ளிப் பாடத்தில் படித்ததே. அதை நினைவு கூறும் வகையில்,

தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்

இந்த ஜகத்தினை அழித்திடுவோம் – மகாகவி சுப்ரமணிய பாரதி

ஆக வறுமையின் பிடி பசியில் தொடங்குகிறது. பசியின் கொடுமை பாதகத்திற்கும் துணியும் என்ற காரணத்தினால்தான், உலகத்தையே அழிக்கத் துணிகிறான் தன் எழுத்துக்களால் இந்தக் கவிஞன்.

இதற்கெலாம் மேலாக நாம் ஒரு பழமொழியை உபயோகிக்கிறோம். அது தரும் சேதி என்ன? முதலில் பழமொழியைப் படியுங்கள்

‘பசி வந்தால் பத்தும் பறந்து போகும்!’ என்பதே. இப்பழமொழியின் தொடக்கம் ஒரு சங்க காலப் பாடல்தான்.

அப்பாடலில் வருகிறது பசி வந்தால் என்னவெலாம் போகுமென்பது……….

மானங் குலங்கல்வி வண்மை அறிவுடைமை

தானந் தவம்உயர்ச்சி தாளாண்மை-தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசிவந் திடப்பறந்து போம்!

மானம், குலம், கல்வி, வண்மை, அறிவுடைமை, தானம், தவம், உயர்ச்சி, தாளாண்மை மற்றும் காமம் ஆகிய பத்தும் பறந்து விடும் ஒரு பசியின் முன் என்றால் இதைவிட பசியின் வலிமையை, வறுமையின் கொடுமையை விள்க்கிச் சொல்ல வேறு நூல் தேவையில்லை.

அத்தகைய வறுமையை நம்மால் விரட்ட முடியும் என்ற நம்பிக்கையும், அது தொடர்பாக நாம் செய்ய வேண்டிய முயற்சிகளும் மிகவும் இன்றியமையாதது;

என்ன செய்யலாம்?

1. வறுமையிலிருக்கும் ஒரு குடும்பத்திற்கு உதவுவதை வாழ்க்கையின் இலட்சியமாகக் கொள்ளுங்கள்!

2. அவரவர் கிராமத்திலோ, அவரவர் உறவுகளிலோ, வீட்டிற்கு அருகாமையிலோ இருக்கும் மாணவர்களில் எவரேனும் நன்கு படித்தும் உயர் கல்வி, வறுமையால் தடைபட நேர்ந்தால், அப்படி இருக்கும் ஒரு மாணவருக்கு உங்களால் ஆன பொருளுதவியைச் செய்வதற்குத் தயங்காதீர்கள்!

3. படித்தும் வேலையிலாமலிருக்கும் ஒரு இளைஞனுக்கு, தகுந்த ஆலோசனை கூறி அவன் வேலயில் சேரத் தகுதியை ஏற்படுத்துங்கள். முடிந்தால், உங்களால், உங்கள் நிறுவனத்திலோ அல்லது தெரிந்த நிறுவனத்திலோ ஒரு வேலைக்கு சிபாரிசு செய்யுங்கள்.

4. வறுமையை எந்த வடிவில் பார்த்தாலும், அதை விரட்டியே தீருவேன் என்ற உறுதியை உங்கள் இல்லத்திலிருந்து தொடங்குங்கள்.

5. உதவி நிறுவனங்களின் தொடர்புகளையும், அவர்கள் என்ன விதமான உதவி செய்கிறார்கள் என்ற விவரத்தையும் முடிந்த அளவு அனைவருக்கும் தெரியப் படுத்துங்கள்.

6. உழைப்பையும் உங்கள் திறமையயும் முழுமையாக நம்புங்கள். உழைப்பிற்குத் தேவையான முதலீடு எவ்வளவு என்பதைத் தீர்மானியுங்கள். முதல் இல்லையே என நிலை குலையாமல், முதலீடுக்குத் தயாராக இருக்கும் உங்கள் சொந்தங்களையோ, அல்லது வணிக நிறுவனங்களையோ அணுகுங்கள். எதில் உங்கள் திறமை என்று நினைக்கிறீர்களோ, எவ்வித ஐயப்பாடும் இன்றி உடனடியாக அச்செயலைச் செய்யத் தொடங்குங்கள்!

7. உங்களைச் சுற்றி நடக்கும் ஒவ்வொன்றையும் உன்னிப்பாகக் கவனியுங்கள். ஏதேனும் ஒரு புதிய சிந்தனை, ஒரு வணிக உத்தி, என ஏதாவது உங்களுக்கு ஏற்படலாம். அது பற்றித் திரும்ப திரும்ப சிந்தியுங்கள். எண்ணக் கருவாக்கி, ஏற்ற உருவாக்கி, உங்களைச் செதுக்க ஒரு ஒப்பற்ற வாய்ப்பாக அமைந்தால், வறுமை வற்றிவிடும்!

இப்படி சிந்தனையை அடுக்கிக் கொண்டே செல்லலாம். எங்கெல்லாம் ஓர் உறுதி தென்படுகிறதோ, வறுமையை ஒழிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஒளிர்கிறதோ, அங்கெல்லாம் உங்கள் ஆற்றல் வெளிப்படட்டும்!

இது மட்டும் நடந்து விட்டால், இந்தியாவில் வறுமையின் பிடியால் இருக்கும் இயலாமையும் அது கொடுக்கும் மரணமும் நிச்சயம் ஒழிந்துவிடும். எல்லாவற்றிற்கும் அரசையும், ஆள்பவர்களையும் எதிர் நோக்கக் கூடாது. ஆண்டவனாகவே இருந்தாலும், அவரவர் மனத்தினில் உதிக்கின்ற எண்ணங்கள் தான், அவர்களின் வாழ்வுக்குப் பொறுப்பாகிறது என்ற உண்மை புலனானால்,

சிகரம் நம்மை நெருங்கித்தான் வரவேண்டும்!

தொடர்வோம் பயணத்தை…………..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *