தலை தீபாவளிக்கு வரும் நாச்சாமியே! வருக! வருக!….

0

கிரேசி மோகன்

———————————————————————-
(விகடனில் வெளியான சிறுகதை)….
———————————————-

நமது கதாநாயகன் நாராயணசாமி என்கிற நாச்சாமி, ஒரு பிறவி சங்கோஜி. ஆம்பளையாகப் பிறந்து தொலைத்த தோஷ்த்துக்காக, நாச்சாமிக்குக் கதாநாயகன் அந்தஸ்து கொடுக்க வேண்டியதாகிறது. மற்றபடி குணாதிசயங்களை ஒப்பிட்டுப் பார்த்தால் நாச்சாமிக்கும், படிதாண்டாப் பத்தினிக்கும் குறைந்தபட்ச ஒற்றுமை கோடி தேறும். அதீதமான கூச்சத்தால் நாச்சாமிக்கு அர்த்தமில்லாத பயங்கள். பல்லி, கரப்பில் ஆரம்பித்து, சிறுவயதில் சாதம் ஊட்ட அம்மா ‘பூச்சாண்டி’ என்று காண்பித்த பால்கார கோனார்வரை யாரைப் பார்த்தாலும் பயம். பயத்தின் பக்கவிளைவாக அல்பமான சந்தேகங்கள். வீட்டுக்கு அடிக்கடி வந்து போகும் தந்தையின் நண்பா இன்ஸ்பெக்டர் பாஷ்யம், ஜஸ்டிஸ் சதாசிவம், தாயோடு வம்பளக்க வரும் காசி பாட்டி – இவர்களில் யாரோ ஒருவர் முகமூடிக் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்தவர் என்பது நாச்சாமியின் சந்தேகமான நம்பிக்கை.

குறிப்பாக, காசி பாட்டியின் பேரில் அவனுக்கு எப்போதும் ஒரு கண். காரணம், ‘பாட்டிக்குக் க்காசி என்னும் ஆம்பளைப் பெயர் எப்படி வந்தது? ஒருவேளை புனைபெயரில் கொள்ளையடித்த்துப் பாட்டி தப்பிவிடப் பார்க்கிறாளோ…?’- இப்படிப் பல கேள்விகளில் மூழ்கிக் கிடந்த நாச்சாமி, பாட்டி மண்டையைப் போடும்வரை அவளைப் பூலான்தேவியாகப் பாவித்து வந்தான்.

கூச்சம், பயம், சந்தேகம் போதாதென்று, பத்தாத குறைக்குப் பவளக்கொடியாக நாச்சாமிக்கு அந்தக் கால லேடீஸ் ஸ்பெஷல் அயிட்டங்களான அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற நால்வகைக் குணங்களும் அவ்வப்போது நபும்சகத்தனமாக வந்து வந்து போகும்.

ஆனால், நாச்சாமியை நேருக்கு நேர் சந்திப்பது என்பது லஞ்சம் வாங்காத ஆபீஸ், சுலபமான எல்.கே.ஜி. அட்மிஷன், பத்தே நிமிடத்தில் புடவை செலக்ட் செய்யும் பெண்மணி, விலைவாசி குறைப்பு போன்ற சாத்தியப்படாத, நம்பமுடியாத சமாசாரங்களுக்குச் சமமான ஒன்றாகும். சுபாவத்திலேயே சங்கோஜியாக இருப்பதால் நாலு பேரைச் சந்திக்க திராணியில்லாத கூச்ச நாச்சாமி எப்போதும் பாண்டவர்களைப் போல் அஞ்ஞாதவாசத்தில் இருப்பது வழக்கம். பத்து மணி ஆபீஸுக்கு விடியற்காலை ஐந்து மணிக்கே எழுந்து முதல் பஸ் பிடித்துச் சென்று மாலை ஐந்து மணிக்கு ஆபீஸ் விட்டதும் பொறுமையாகக் காத்திருந்து ஆள் நடமாட்டம் குறைந்து ஊர் அடங்கியதும் இரவு பத்து மணி கடைசி பஸ் பிடித்து வருவான்.

நாச்சாமியின் முன்பு நாம் போய் நின்று, “உங்க பேர் என்ன?” என்று கேட்டால் போதும், அவ்வளவுதான்… நாச்சாமிக்கு வாய் உலர்ந்து, வெளிநாக்கு ஒட்டிக்கொண்டு, உள்நாக்கு உதிர்ந்து போய்விடும். ‘கேட்ட கேள்விக்குப் பதிலை நாராயணாசாமி என்று சொல்வதா? நாச்சாமி என்று சொல்வதா? என்ற குழப்பத்தில் தடுமாறி முடிவாக “நாயசாயிநாயாமி” என்று சைனீஷ் ஓட்டல் பாதார்த்தத்தின் பெயர் போல் எதாவது உளறிக் கொட்டுவான்.

பல ஜாதகங்கள் பொருந்தி வந்தும் பெண்பார்க்கவெட்கப்பட்டதால், நாச்சாமியின் கல்யாணம் குததிராமலேயே இருந்தது. முடிவில் நாச்சாமியின் விருப்பதுக்கிணங்க பெண்பார்க்கும் படலம் பிள்ளைபார்க்கும் படலமாக சிலபஸ் மாற… குடவாசல் பெரிய பண்ணையார் சங்கரனின் மகள் ஜானகி வந்து நாச்சாமியைப் பார்த்து “பிள்ளை பிடித்திருக்கிறது” என்று தைரியமாகக் கூற, நாச்சாமி தனது ஆயுசிலேயே முதல் முறையாகத் தைரியத்தோடு வீரமாக வெட்கப்பட்டான்!

கும்பலைக் கூட்ட விரும்பாத நாச்சாமியின் கொள்கைக்கு ஏற்ப அவனுடைய கல்யாணம் சிம்பிளாக ஒரு கோயிலில் கெட்டி மேளச்சத்தம்கூட இல்லாமல் அடக்கி வாசிக்கப்பட்டது. பந்தல் போட்டுக் குடவாசலில் ஐந்து நாள் கல்யாணம் நடத்த நினைத்த பெரியபண்ணை சங்கரனுக்கு இதில் மிகவும் வருத்தம்.

திருமணமான ஒரு மாதத்தில் நாச்சாமிக்கு தலைத்தீபாவளி வந்தது. இந்த ஒரு மாதத்தில் புதிதாகக் கல்யாணமான பெண்னுக்கே உரிய வெட்கததில் இருந்த ஜானகி, கணவன் நாச்சாமியின் கூச்ச வெட்க சுபாவத்தைக் கவனிக்கத் தவறி விட்டாள். கல்யாணத்தில் விட்ட குறையைத் தலைத்தீபாவளியில் தீர்த்துக் கொள்ளும்படி தந்தைக்கு ஜானகி ரகசியமாகக் கடிதம் எழுதியது நாச்சாமிக்குத் தெரியாது.

மனைவியை முதலிலேயே குடவாசல் அனுப்பி, மூன்று நாள் லீவு போட்டு விட்டு, வருகிற ஆபத்து தெரியாமல் தலைதீபாவளிக்குப் புறப்பட்டான் நாச்சாமி.

ரயிலை விட்டுக் கும்பகோணம் ஸ்டேஷனில் இறங்கிய நாச்சாமியை வருவேற்க, மாமனார் பெரிய பண்ணை சங்கரன் வந்திருந்தார்.

மாப்பிள்ளையைக் கண்ட சந்தோஷத்தில் சங்கரன், நாச்சாமியின் முதுகில் செல்லமாக ஒரு கோட்டை அறை அறைந்து “என்ன மாப்பிள்ளை, சௌக்கியமா…? என்று குசலம் விசாரித்தார். வெட்கத்தால் சிவக்கும் நாச்சாமியின் முகம் முதன்முறையாக ஆத்திரத்தால் ரத்தவிளாறியாகச் சிவந்தது. ஏதோ சொல்ல ஆரம்பித்தவனைப் பேச விடாமல் மறுபடி மாப்பிள்ளை முதுகில் ஒரு கோட்டை அறை (இம்முறை அறையில் கோட்டையோடு கொத்தளமும் இருந்தது…) அறைந்து, “ஒண்ணும் பேசாதீங்க… கல்யாணத்தைத்தான் சிம்பிளா நடத்தச் சொல்லி ஏமாத்திட்டீங்க… இப்போ தலைதீபவளிக்கு வசமா மாட்டிகிட்டீங்க… உங்களை விடப் போறதில்லை…” என்று கரகரத்த குரலில் பிளிறினார்.

ஆரம்பமே சரியில்லை என்று பயப்பட ஆரம்பித்த நாச்சாமி, மாமனாரைப் பார்த்து “கொஞ்சம் இருங்க… அந்த ஸ்டேஷன்ல உள்ள கும்பல் கலையட்டும்” என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… சங்கரன் பிரளய கால இடியோசை போல் சிரிக்க ஆரம்பித்தார். அந்தச் சிரிப்பு சத்தத்தில் செங்கோட்டை பாஸஞ்சர் சென்றதே தெரியவில்லை.

“மாப்பிள்ளை… அந்தக் கும்பல் போகாது… உங்களை வரவேற்க நான் வரவழைச்ச கும்பல், நம்ம ஊர் ஜனங்க… நீங்க இங்கேயிருந்து குடவாசல் போய்ச் சேரும்வரை உங்க கூடவே வருவாங்க… என்று கூறிவிட்டு, கும்பலை பார்த்து விநோதமாக சமிக்ஞை காட்ட, “எங்க ஊர் மாப்பிள்ளை நாராயணசாமி என்னும் நாச்சாமி… வாழ்க, வாழக…” என்று கும்பல் மும்முறை கோரஸாகக் கூவியது.

“என்ன இதுக்கே இப்படி அசந்து போயிட்டீங்களே… ஸ்டேஷனை விட்டு வெளில வந்தா ஆடிப் போயிடப் போறீங்க..” என்று சங்கரன் கூற, அப்போது கும்பலிலிருந்து ஒருவன் ஆளுயர ஈரமான ரோஜா மாலையயை நாச்சாமிக்கும் போட்டு அவனைச் சொட்டச் சொட்ட நனைய வைத்தான்.

செட்டப் கும்பலைத் தாண்டி வெளியே செல்லும் சமயம் பலர் நாச்சாமியிடம் ஆட்டோகிராப் கேட்டு, குறிப்பாக ‘நாச்சாமி’ என்று கையெழுத்திடக் கெஞ்சிக் கூத்தாடி அவன் மேல் விழுந்து அவனைப் பணிவாகத் துவம்சம் செய்தார்கள்.

கும்பலில் ரோஜாக்கள் போக, கழுத்தில் நாரோடு நாச்சாமி .வெளியே வந்தான். மறுபடி பிரளய கால இடியோசை, மாமனாரின் கைதட்டல், இம்முறை ஒரு யானை வந்து நாச்சாமிக்கு யானை உயர மாலை போட்டு அவன் சிரசில் தும்பிக் கையால் தொட்டு ஆசீர்வதித்தது.

பல்லி, கரப்புக்கே பயப்படும் நாச்சாமி, யானையப் பார்த்த அதிர்ச்சியில் இருந்து மீளும் முன் மாமனார் சங்கரன், யானைப் பாகனை பார்த்துச் சத்தமாக ஒரு சிக்னல் கொடுக்க… யானை நச்சாமியை அலக்காகத் தூக்கி அங்கு நிறுத்தப்பட்ட டாப் கழற்றிய ஓபன் ஜீப்பில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் நிறுத்தியது. ‘மாப்பிள்ளை எவ்வழி மாமனார் அவ்வழி’ என்பது போல், சங்கரன் யனைக்கருகே போய் நிற்க, யானை சற்று மூச்சைப் பிடித்து அவரைத் தூக்கி நாச்சாமி அருகில் நிற்க வைத்தது.

‘கல்யாணத்தில் பார்த்த மாமனார் தானா, இல்லை காடுவாசிகளின் தலைவனா?’ என்று சந்தேகம் நாச்சாமியின் மனத்தில் தோன்றியது. ‘அடுத்த அயிட்டம் என்ன கண்றாவியோ?’ என்ற பயம் நாச்சாமியின் அடிவயிற்றைப் புரட்டியது.

ஜீப்பில் பொருத்தப்பட்ட மைக்கில் மாமனார் ஒன், டூ, த்ரீ என்று கிட்டத்தட்ட நூறுவரை எண்ணி, மைக் டெஸ்ட் செய்து விட்டு, கூடியிருந்த ஜனங்களுக்கு நாச்சாமியியை தான் மாப்பிள்ளையாக அடைந்த விவரத்தை (ஜாதகம் பார்த்ததில் ஆரம்பித்து தாலி கட்டும் வரை) ஒன்றுவிடாமல் கூறி… தனது மாப்பிள்ளைக்கு செய்த சீர்செனத்தி பாத்திரம் பண்டங்களை வரிசையாக கூற… ஒவ்வொன்றுக்கும் கூடியிருந்த குடவாசல் ஜனத்தொகை கைதட்டி, விசிலடித்து, ஊளையிட்டுத் தங்கள் சந்தோஷத்தை தெரிவித்துக் கொண்டது.

பிறகு சங்கரன், நாச்சாமியியை ‘மாதம் மும்மாரி பொழிகிறதா?’ என்ற பாவனையில் ஒரு ராஜபார்வை பார்த்துவிட்டு, “உம்… ஊர்வலம் தொடங்கட்டும்” என்று மைக்கை முழுங்காத குறையாக, அதைக் கடித்துக் குதறிக் கர்ஜித்தார்.

ஆமை வேகத்தில் ஜீப் நகர ஆரம்பித்தது. ஜீப்புக்கு முன்பு கரகாட்டம், பொய்க்கால் குதிரை, குடவாசல் சார்பட்டா பரம்பரையின் சிலம்பு வீச்சு போன்றவை தோன்றி, நத்தை வேகத்தில் நகர ஆரம்பித்தன.

நாச்சாமி நரக வேதனையாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சமயம்… ஜீப்பில் ஒருவன் தாவி ஏறி, நாச்சாமி தலையில் நாலணா வைத்தான். அடுத்த கணம் ஒரு புலி வேஷக்காரன் சும்ம்ர்சால்ட் அடித்து ஜீப்பைத் தாண்டிச் தலையில் தனக்குக்தானே குட்டிக் கொண்டான். வீளம்பரங்களில் தலைவலி தைலம் தடவிய மறுகணமே ‘போயே போச்…போயிந்தே…!’ என்று புளகாங்கிதம் அடைபவரின் பிரகாசம் நாச்சாமியின் முகத்தில் திடீரென்று அழகாக ஒளி வீசியது.

மறுநாள் காலை… சாதாரணமாக ரயிலில் செல்லும்போது எல்லோரும் கம்பார்ட்மெண்டை விட்டு இறங்கி விட்டார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு கிட்டத்தட்ட கம்பார்ட்மெண்டைக் கமுவும் சமயம் இறங்கும் நாச்சாமி அன்று எக்மோரை நெருங்கும் முன்பே விடிகாலையில் மேல் பர்த்திலிருந்து ஒரு சம்மர் சால்ட் அடித்துக் கிழே குதித்து … ஒடும் ரயிலிலிருந்து பிளாட்பாரத்துக்கு போர்ட்டர்களே மூக்கில் விரல் வைக்கும் அளவுக்குத் தாவி இறங்கி ஒடிச் சென்று வண்டிக்கு முன்பே ஸ்டேஷனில் நுழைந்து அதே வண்டியில் தன்னோடு வந்த ஜானகியை வரவேற்கக் காத்திருந்தான்.

ஜானகி எவ்வளவு வற்புறுத்தியும் கேட்காமல் பெட்டி படுக்கை போன்ற லக்கேஜி களை போர்ட்டருக்குச் சமமாக நாச்சாமி தன் தலையில் அடுக்கிக் கொண்டு பாலன்ஸ் செய்து போனதை ஸ்டேஷனே ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தபடி பார்த்தது.

டாக்ஸியைக் கூப்பிட நாச்சாமி அடித்த காட்டுத்தனமான விசில் சத்தத்தில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.

விட்டுக்கு வந்தவுடன் டாக்ஸியிலிருந்து இறங்கி” நான் வந்தாச்சு!” என்று உற்சாகத்துடன் அவன் போட்ட காட்டுத் கத்தல், தெரு ஜனங்கள் காதுகளைக் கிழிக்க டி.வி.மகாபாரதத்தையும் மறந்து எல்லோரும் வெளியே வந்து வேடிக்கை பார்த்தார்கள்.

முன்பெல்லாம் பல் தேய்க்கக்கூட பாத்ரூம் கதவைக் தாழிட்டுக் கொள்ளும் நாச்சாமி இப்போது குளிப்பதே வீட்டு வாசல் திண்ணையில் தான். அதுவும் சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் என்றால் கேட்கவே வேண்டாம் உடம்பிலும் தலையிலும் தடவிய எண்ணெய் ஊறும் வரை மார்க்கெட், மளிகைக்கடை போன்ற பொது இடங்களுக்கு இடுப்பில் கட்டிய ஒற்றை டவலோடு போய் விடுவான்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *