ஜூன் 15, 2015

இவ்வார வல்லமையாளர்
வல்லமைமிகு ‘மல்ட்டி ஃபன்’ குழு மாணவர்கள் 

20150527_499_HR_042

ஏர்பஸ் விமான நிறுவனம் யூனெஸ்கோ நிறுவனத்துடன் இணைந்து மாணவர்களுக்கான உலகளாவிய போட்டியாக “ஃப்ளை யுவர் ஐடியாஸ்” (Unesco-Airbus ‘Fly Your Ideas’ global student competition) என்ற போட்டியை நடத்தி வருகிறது. மாணவர்களிடம் வானூர்தி தயாரிப்பின் தொழில் நுட்ப ஆர்வத்தைத் தூண்டுவதும், புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க ஊக்கமூட்டுவதுமே இப்போட்டியின் அடிப்படை நோக்கமாகும். நான்காவது முறையாக இந்த ஆண்டு நடத்தப்பட்ட இப்போட்டியில் வெற்றிபெற்ற “மல்ட்டி ஃபன்”(Multifun) என்ற இந்திய மாணவர் குழுவினரை இவ்வார வல்லமையாளர்களாகப் பாராட்டி வாழ்த்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். மல்ட்டி ஃபன் மாணவர் குழுவினரை வல்லமையாளர்களாகப் பரிந்துரைத்தவர் வல்லமை இதழின் நிறுவனர் முனைவர் அண்ணா கண்ணன் அவர்கள். அவரது பரிந்துரைக்காக அவருக்கு நன்றியை வல்லமைக்குழு தெரிவித்துக் கொள்கிறது.

Team Multifun2

இந்த ஆண்டு இப்போட்டியில் பங்கு பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 3,700; 104 நாடுகளில் இருந்து பலதுறைகளையும் சேர்ந்த 518 குழுவினர் போட்டியிட்டனர். போட்டியில் கலந்து கொண்டவர்களில் ஆசியா பசிஃபிக் நாடுகளின் மாணவர்கள் 45%, ஐரோப்பியர் 35%, அமெரிக்கர் 15%. இவர்களில், 71% குழுக்கள் பலவகைப் படிப்புகளைக் கொண்ட மாணவர்களையும், பலநாடுகளில் வாழும் மாணவர்களையும், ஆண்களும் பெண்களும் எனப் பல பிரிவினரும் இணைந்த குழுக்களாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானத்தின் செயல்திறன் மேம்பாடு, பயணிகளின் வசதி அதிகரிப்பு, எரிபொருள் சேமிப்பு, எளிய செயல்படுத்தும்தன்மை, பயணப் பாதுகாப்புக்கு உதவி, மக்கள் தொடர்பு மேம்பாடு என விமானப்பயணத்தினை மேம்படுத்தும் வகையில் குறிப்பிட்ட இந்த ஆறு பிரிவுகளில் ஒன்றினைத் தேர்ந்தெடுத்து தங்கள் திட்டத்தை மாணவர்கள் ஏர்பஸ் நிறுவனத்திற்குச் சமர்ப்பிக்க வேண்டும்.  இவ்வாறு மாணவர்கள் சமர்ப்பித்த திட்டங்களைப் பரிசீலித்த பின்னர், சென்ற ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற முதல் சுற்றில் 100 குழுவினர் இரண்டாம் சுற்றுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். சென்ற மாதம் மே 27 ஆம் தேதி அன்று நடந்த இறுதிச் சுற்றில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டவர்கள் பிரேசில், சீனா, ஜப்பான், நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளைச் சேர்ந்த 5 குழுவினர்.

Finalists on the stage collage

நெதர்லாந்தின் டெல்ஃப்ட் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் (Delft University of Technology, Netherlands) பயிலும் இந்திய மாணவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமியின் தலைமையில் நான்கு நாடுகளில் படிக்கும் ஐந்து இந்திய மாணவர்கள் ‘மல்ட்டி ஃபன்’ என்ற ஒரு குழுவாக இணைந்தார்கள். தாமோதரன் வீராசாமி (சிட்டி யுனிவர்சிட்டி ஆஃப் லண்டன்), மொஹித் குப்தா (ஜியார்ஜியா டெக் யுனிவர்சிட்டி, அமெரிக்கா) , சஷாங்க் அகர்வால் மற்றும் அஜித் மோசஸ் (இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ், பெங்களூரு) என உலகின் பல பகுதிகளில் படித்துவரும் இந்திய மாணவர்கள் தொலைத்தொடர்பு வழியாகவே இணைந்து பணியாற்றினார். இவர்கள் பொறியியல் துறையிலும், விண்வெளிப் பொறியியல் துறையிலும், வானியல் துறையிலும் உயர்கல்வி, முனைவர் ஆய்வுக்காகப் பயிலும் மாணவர்கள். மொஹித் குப்தாவைத் தவிர்த்து பிறர் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை வழி நடத்தியவர் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் பேராசிரியர் தினேஷ்குமார் ஹருர்சம்பத் அவர்கள். கடந்த ஆறு மாதங்களாக இணையவழி ஒருங்கிணைந்து பணியாற்றிய பின்னர், ஜெர்மனியில் நடந்த இறுதிப் போட்டியில் நேரடியாக முதன்முதலில் சந்தித்து தங்களது அறிவியல் கருத்தை போட்டியின் நடுவர்களிடம் மல்ட்டி ஃபன் குழுவினர் விளக்கினர்.

மல்ட்டி ஃபன் குழு ஏர்பஸ் நிறுவனத்தின் போட்டியில் முன்வைத்தத் திட்டம்:

Team Multifun3
விமானப்பயணத்தின் பொழுது ஏற்படும் அதிர்வுகளைப் பயன்படுத்தி அவற்றில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின்கலங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து விமானப்பயணத்தின் பொழுது தேவைப்படும் விளக்குகள், கேளிக்கை பயன்பாட்டிற்கான மின்திரைகள் ஆகியவற்றை இயக்கப் பயன்படுத்துவது இவர்கள் முன்வைத்த திட்டமாகும். விமானப்பயணத்தில் ஏற்படும் அதிர்வுகள் யாவும் இதுநாள்வரை விரயமாகின்றன. ‘பைஸோஎலக்ட்ரிக் இழைகள்‘ (Piezoelectric fibres) சிறு அதிர்வுகளால் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. இந்த இழைகளால் ஆன உறையை விமானத்தின் இறக்கைகளின் மேல் அமைத்து அதன்மூலம் பெறும் பெறும் மின்சக்தியை மின்கலத் தகடுகளில் சேமித்து பயன்படுத்த இயலும். நீண்ட தூர விமானப்பயணத்தில் விமானம் 12 மணி நேரம் வரை பறக்கும், அப்பொழுது கிடைக்கும் மின்சக்தியே விமானத்தின் விளக்குகளை ஒளிர்விக்கப் போதுமானது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் விமானப்பயணத்தில் எரிபொருள் சேமிப்பிலும் முன்னேற்றம் காணலாம் என்று மல்ட்டி ஃபன் குழுவினர் நடுவர்களுக்கு விளக்கினர். இவர்களது திட்டம் நடைமுறைப்படுத்தவும் எளிதானது, தொலைநோக்குப் பார்வை கொண்டது, முன்னர் இதுவரை எவரும் முன்வைக்காத ஒரு புதிய கோணம் என்ற அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்டு 30,000 யூரோ வெள்ளிகள் பரிசளிக்கப்பட்டனர்.

SKETCH_Multifun 1

வெற்றிபெற்ற குழுவின் தலைவர் சதீஷ்குமார் அனுசூயா பொன்னுசாமி, தனது குழுவினர் யாவரும் இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸில் ஒன்றாகப் படித்த மாணவர்கள், இந்தியாவின் பின்புலம் கொண்ட மாணவர்கள் என்றாலும் பல்வேறு மொழிகளையும் பேசும் பின்புலம் கொண்டவர்கள் என்றும், அவர்களது பலவிதப் பின்னணியே மல்ட்டி ஃபன் என்று குழுவிற்குப் பெயரிடக் காரணமானது என்று வெற்றிபெற்ற பின்னர் பத்திரிக்கைகளுக்கு அளித்த நேர்காணலில் கூறினார். இண்டியன் இன்ஸ்டிடியுட் ஆஃப் சயின்ஸ்ஸின் கல்விச் சூழ்நிலையும், வழங்கும் பயிற்சியும் புதுமையான எண்ணங்களை ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என்றும் கூறியுள்ளார். கடந்த ஆறு மாதங்களாக வெவ்வேறு நாடுகளில் வாழ்ந்தாலும் ஒற்றுமையாக இணைந்து பணியாற்றி, புதுமையான திட்டமொன்றை முன்வைத்து, உலகளாவிய போட்டியில் வெற்றிபெற்று தாய்நாட்டின் பெருமையை உயர்த்திய இம்மாணவர்களை வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சியுடன் பாராட்டிப் பெருமை கொள்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தகவல்களும் படங்களும் வழங்கிய இணையதளம்: http://www.airbus-fyi.com/article/769/team-multifun

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *