கவிஜி.

சட்டென நின்றான். கண்களை கூர்மையாக்கினான்.

அந்தத் தேநீர்க் கடையின் சுவற்றில் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டரில் கண்கள் சுழன்றது. தலையே கிறுகிறுத்தது. நம்ப முடியாத கண்களை இன்னும் ஒரு முறை அழுந்தத் துடைத்தான். மூளைக்குள் அந்தக் காட்சியைப் பதிய இன்னும் கொஞ்சம் முயற்சி எடுக்க வேண்டி இன்னும் கொஞ்சம் உற்று நோக்கினான். மனமெங்கும் இடி விழுந்த சத்தம். மெல்ல மெல்ல பயந்தபடியே அருகில் சென்றான். நம்பிக்கை இழந்தே போனான். ஆழ்மனம் நம்ப மறுக்கிறது. யார் இது? நானா? நேற்று இறந்து விட்டேனா? அதுவும் அகால மரணம்!!! கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது. சுற்றும் முற்றும் பார்த்தான். யாரும் அவனைக் கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. அவனாலும் யாரையும் கண்டு கொள்ள முடியவில்லை. மனம் எங்கும் ஊசி குத்தும் வலி. பனிக் காட்டுக்குள் ஆடையின்றி உருண்டு புரளும் வலி. கலங்கிய கண்களில் அப்பா அம்மாவும், அண்ணன் தங்கையும், நட்பும் உறவும் உருண்டு திரண்டு கண்ணீராய் உருண்டு விழக் காத்திருந்தார்கள்.

அவன் பார்வையில் அத்தனை நேரம் ஓடிக் கொண்டிருந்த வாகனங்களும், அவனைக் கடந்து கொண்டிருந்த மனிதர்களும், 3டி எஃபெக்டில் முன் பின் மாறி இருப்பதாகத் தெரிய ஆரம்பித்தது. அவன் சுற்றும் முற்றும் பார்த்தான். வானம் பார்த்தான். வானம், பால்வீதி, கேலேக்சி, நட்சத்திரம் நியுற்றினோ, நிலா சூரியன், கோள்கள், எலெக்ட்ரான், ப்ரோட்டான், நியுட்ரான், ராக்கெட் , ஒளி ஆண்டு, ஓசோன் மண்டலம் என ஒவ்வொன்றாக மறக்க ஆரம்பித்ததாக ஒரு தோன்றல். அவனது உறவுகள் நட்புகள், அம்மா அப்பா உட்பட அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகளில் இருந்து நீந்தி வெளியேறிக் கொண்டிருப்பதாக ஒரு தோன்றல்.

பிறப்பதற்கு முன்னால் இருந்த வெற்றிடம் நோக்கி தான் தள்ளப்படுவதாக ஒரு எண்ணம். அவன் கால்கள் தடுமாறி தடுமாறி நடக்க ஆரம்பித்தது. இதோ இந்த பூமி அவனை உதறப் போகிறது. அதோ அங்கே போவது அவனின் நண்பன். ந…ண்…ப…ன்… அய்யோ! பெயரை மறந்து விட்டோமே. அவன் ஞாபகக் கிணற்றுக்குள் எட்டிக் குதித்தான். நீச்சல் அடிப்பது மறந்து போயிருந்தது.

எதிரே உள்ள தேநீர்க் கடையில் ஒருவர் ஊத்தி ஊத்தி ரசித்து ருசித்து தேநீர் குடித்துக் கொண்டிருந்தார். தன் வாழ்நாளில் ஒரு முறையாவது இத்தனை ரசனையாக ஒரு தேநீர் குடித்திருப்போமா? அவன் மனம் தேடியது. எதுவெல்லாம் இன்பமாய், சுகமாய் இருந்ததோ அவையெல்லாம் மிக சுலபமாகக் கிடைத்த சின்ன சின்ன சந்தோசங்கள். மனிதன் ஒரு போதும் அதில் வாழ்வதேயில்லை. பெரிய பெரிய சாதனைகளில் தன்னை இருத்திக் கொள்வதே தன் இருப்பாக இருக்க முடியும் என்ற கற்பனைக்குள் நீந்தி கொண்டே, கரை கொண்ட காலடிகளை மறந்து போகிறான். அவனும் அப்படித்தான் மறந்து போனான். இன்னும் மறந்தே போகிறான். சாலையோரம் விளையாடும் குழந்தைகளின் முகங்களை உற்று பார்த்தான். அவைகள் வண்ணங்களற்று தெரிந்தது. பூச்சு இல்லாத பூக்களாய் மலர்ந்து திரிவதை காண முடிந்தது. வெப்பச் சலனமும், கானல் நீரும் கவிதை எழுதத் தூண்டியது. ஆனால் வார்த்தைகளற்ற எண்ணமும், தீர்ந்து போன பேனாவும், ஏற்கனவே எழுதி முடித்த காகிதமும் அவனை சுற்றிச் சுழன்றடிக்க, எப்படி எழுதுவது கவிதையை.

எப்போதாவது சாலையில் ஓடியிருக்கிறோமா? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடியிருக்கிறோமா? வீசும் காற்றை முழுக்க உள் வாங்கியிருக்கிறோமா? ஒரு மழை நாளில் குடை மறந்து நனைந்திருக்கிறோமா? ஒரு ஓவியம் ரசித்திருக்கிறோமா? பாரதியைப் படித்ததில்லை. பால் மணக்கும் குழந்தையைக் கொஞ்சியது இல்லை. நாய்க்குட்டியை வளர்க்க நேரம் இல்லை. வானவில் கண்டதும் செல் போனில் தானே படம் பிடித்தோம். வெறும் கண்ணால் கண்டதில்லையே. காடு கண்டதில்லை, காட்டாறு கண்டதில்லை, நதி தேடியதில்லை, கரை கொண்ட மரம் ரசித்ததில்லை. யாருக்காவது உதவி செய்திருக்கிறோமா ?

யோசிக்க யோசிக்க அவனின் மனம் பதற ஆரம்பித்தது. காற்று குறைந்து கொண்டே போனது. அவனின் கால்கள் தனது சக்தியை இழந்து கொண்டிருந்தது. அவனின் சிறு வயது ஞாபகங்கள் ஒவ்வொன்றாக மறக்கத் துவங்கியிருந்தது. அவன் கடந்து வந்த பாலத்தைப் பார்த்தான். எத்தனை பாதங்களைக் கண்டிருக்கும்? எத்தனை சுமைகளைத் தாங்கியிருக்கும்? இதை கட்டும் போது வேலை செய்தவர்களில் பலர் இப்போது இறந்திருக்கலாம். அவர்களும் தன் நினைவுகளை, வாழ்வை மறந்திருக்கலாம், இந்த பாலத்தையும் சேர்த்து.

முதலில், இறந்தவன் மறக்கிறான் பின் இறந்தவன் மறக்கப்படுகிறான். எவன் வகுத்த நியதி. ஒரு மரணம் எல்லாரையும் விட மரணித்தவனையே அதிகம் பாதிக்கிறது. மற்றவர்களுக்காவது, மரணித்தவன் யாரென்று தெரியும். ஆனால் மரணித்த பின், தான் யாரென்று கூட தெரிவதில்லை மரணித்தவனக்கு. மரணம் மிகக் கொடுமையான ஒன்றாக இந்த இடத்தில் தான் மாறுகிறது. விடியலில் மறந்து போகும் கனவுகளை ஒத்தது இந்த மரணம். தன் உடல், எடையை இழப்பதை உணர முடிந்தது. தன் வீட்டில் தன் இழப்பு எப்படி இருக்கும்? இனி எந்த முகத்தை வைத்துக் கொண்டு வீட்டிற்க்குச் செல்ல முடியும் ?

இனி என்ன பெயர் சொல்லி என்னை அழைப்பார்கள்? நான் அயர்ன் பண்ணி வைத்த சட்டை பேண்ட்களை இனி யார் அணிவார்கள்? ஒரு அம்மாவாய், ஒரு அப்பாவாய் என் மரணத்தை எப்படித் தாங்குவார்கள்? இனி நான் என்னை சார்ந்தவர்களின் நினைவுகளில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருப்பவனாகி விட்டேன். இல்லையா?

அவனின் தலைக்குள் ராட்டினம் சுற்றத் தொடங்கியிருந்தது. அதிலிருந்து பட்டாம் பூச்சிகள் முளைக்க ஆரம்பித்தது. ஒரு பெருங் காட்டைக் கடக்க போகும் மனநிலைக்குள், தான் தள்ளி விடப் பட்டதாக தோன்றியதை யாரிடமாவது சொல்லி அழ வேண்டும் போல் தோன்றியது. அவன் சுடச் சுட சாதமும், கத்திரிக்கா பொறியலும் சாப்பிட வேண்டும் என்று நினைத்தான். ஆமாம், சாதம் வெள்ளையாகத் தானே இருக்கும். ஏனெனில் இப்போது வண்ணங்களை சுமப்பதே வேதனையாக இருந்தது அவனுக்கு.

அவனை நோக்கி யாரோ ஓடி வருவதை உணர்ந்தான். யார் அது? அதுவும் அவனின் ஆடை எதிலோ நனைந்திருக்கிறதே. நன்றாக யோசித்து, யோசித்து, மிகுந்த கஷ்டத்திற்குப் பின், மூளையை வருத்தி யோசித்த நொடியில், சில வினாடி நினைவு வந்து போனது. ஆம். அது சிவப்பு வண்ணம். சிவப்பு வண்ணமா? ஐயோ!!! அது ரத்தம். ஆம், ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் ஓடி வந்து கொண்டிருக்கிறான். யார் அவன்? எதற்காக? மனமெங்கும் பயங்கள் முகமூடி போட்டுக் கொண்டு பல்லை ஈ … ஈ… ஈ… எனக் காட்டி முன்னேறுவதாக ஒரு பிரம்மை. அவனைப் பின் தொடர்ந்து இன்னொருவன். ஆங்காங்கே தன் உடலில் வழியும் ரத்தங்களுடன் துரத்தி வந்து கொண்டிருக்கிறான்.

அவனை நோக்கி ஓடி வந்தவர்கள், அவனைக் கடந்து ஓடினார்கள். முன்னால் ஓடியவன் நன்றாக நனைந்திருந்தான் ரத்தத்தில். பின்னால் விரட்டிக் கொண்டு ஓடியவன் ஆங்காங்கே நனைந்திருந்தான். ஒரு விஷயம் கவனிக்க வேண்டியதாய் இருந்தது. முன்னால் ஓடியவன் நன்றாக பார்த்துக் கொண்டே ஓடினான். பின்னால் விரட்டியவன் தன்னை கண்டுகொள்ளவில்லை. யாருமே கண்டு கொள்ளாத இறந்தவனான தன்னை அவன் மட்டும் எப்படி உற்று பார்த்தான். கேள்விகளால் ஆனது மரணமும்… வாழ்வும்…

நடை நின்றது. மனக் கண்ணில் புயலுக்கு பின்னாலான அமைதியோடு அவன் வீடு பார்த்துக் கொண்டிருந்தது. வெறித்த பார்வையில் பூச்சிகள் பறந்தன. இனி எனக்கும் இந்த வீட்டிற்கும் என்ன தொடர்பு? வாசலெங்கும் சிதறிக் கிடந்த மலர்களில் தேங்கி நின்றது நேற்றையக் கண்ணீர்த்துளிகள். அனாதையாக்கப்பட்டவன், இயலாமையின் உச்சி மீது பயந்தபடியே நின்று கொண்டிருந்தான். இது என் வீடு, என் வாசல். அதோ… அது என் சைக்கிள். இனி இவையெல்லாம் யாருடையது. வீட்டிற்குள் செல்ல அனுமதி இல்லை என்பதை வீட்டு முற்றத்தில் அடித்து வைத்த ஆணி பறை சாற்றியது. தன் முகம் மறக்கத் துவங்கியிருந்தது அவனுக்கு. ஒரு பெருமழைக்கான அழுகை நெஞ்சுக் கூட்டில் ஊற்றெடுத்துக் கொண்டிருந்தது. தான் வளர்த்த கொய்யா மரம் தன்னை மறந்திடுமா.

இதே நேரம்…

அங்கே ஒரு வீட்டு வாசலில் ரத்தம் தோய்ந்தவனை, விரட்டிப் பிடித்தவன் மிரட்டிக் கொண்டிருந்தான்.

“முதல்ல சொல் பேச்சு கேட்டு பழகு. என்ன அவசரம். ம்… ம் … நான் தான் எல்லாம். என்னால படைக்கப் பட்டவன் தான் நீபுரிஞ்சுக்கோ. கொஞ்சம் காத்திருக்க முடியலயா.ம்ம்ம்ம்ம் …”

“எல்லாம் நீங்கதான்னு சொல்லாதீங்க. என்னால தான் நீங்க படைப்பாளி. அப்போ நான் தான் எல்லாம்.”

“இவ்ளோ வாய் பேச எங்க கத்துகிட்ட? உன்கிட்ட வாதாட எனக்கு நேரமில்ல. உள்ள போ… பினிஷிங் டச் தரணும்.”

உள்ள போ, கோபத்தைக் கிளராதே என்றபடியே அந்த படைப்பாளி, அந்த ஓவியன், அதாவது விரட்டிக் கொண்டு ஓடினானே அவன், மிரட்டிக் கொண்டிருந்தான்.

எல்லாம் விதி என்றபடியே ரத்தம் சொட்ட சொட்ட ஓடினானே அவன், அது ரத்தமல்ல சிவப்பு வண்ணம், அவன் அந்த ஓவியத்திற்குள் நுழைந்தான்.

நுழைய சொன்னவன் ஓவியன். நுழைந்தவன் ஓவியமாய் நின்றவன்.

ஓவியன் வரையத் துவங்கினான். ஜோல்னா பை, கண்ணாடி சகிதம் யாரையோ தேடிக் கொண்டு வந்த இன்னொருவன், ஓவியனிடம் ஏதோ விசாரிக்க, ஓவியன் ஒரு நிமிஷம் என்றபடியே அவன எங்கயாவது பார்த்தயாடா என்று ஓவியத்துள் அடைபட்டவனிடம் மிரட்டிக் கேட்க, அவன் முனகி கொண்டே சின்ன பாலத்துகிட்ட பார்த்தேன் என்றான். “இதே வேலைப்பா இவுங்களுக்கு”, என்றபடியே ஜோல்னா பை கடந்து சென்றது அந்த இடம் தாண்டி.

வீட்டை வெறித்துப் பார்த்தபடியே அவன் நின்று கொண்டிருந்தான். பிணம் போல மாறிவிட்டிருந்தான். அனைத்தும் மறந்திருந்தான். அனிச்சை செயலைப் போல
இதோ திரண்டு நின்ற கண்ணீர், தன்னை விடுவித்துக் கொண்டு பூமியில் ஒரு அணு குண்டை போல விழப் போகிறது. கதவு மூடியிருந்தது. இவன் வெற்றுக் கண்களில் வெறித்துக் கொண்டிருந்தான்.

சட்டென தோளில் விழுந்த கை … அவனைத் திடுக்கிட வைத்தது. திரும்பிப் பார்த்தான். ஜோல்னா பை முறைத்துக் கொண்டு நின்றது. “கொஞ்சம் பாருங்க சார், என்ன அவசரம் உங்க கேரக்டர நான் இன்னும் முழுசா எழுதி முடிக்கல, அதுக்குள்ளே இப்படி ரிகர்சல் பாக்க கிளம்பிட்ட எப்படி சார்? வாங்க, சமத்தாஉள்ள வந்துடுங்க” என்றான் ஜோல்னா பை.

இல்ல சார், இப்போ இந்த கதவு திறந்தா என்னாகும்னு தெரிய ஆர்வமா இருக்கு, அதையும் பார்த்துட்டுப் போய்டலாமா என்றது அந்த கதாபாத்திரம் கெஞ்சலாக.

“எப்போதுமே ஒரு படைப்போட முடிவ அதப் படைக்கற படைப்பாளிதான் முடிவு பண்ணனும். படைப்புகள் அவனால்தான் படைக்கப் படணும். இப்போ நீ 7 மாச கரு மாதிரி. இப்ப நீயா எந்த முடிவும் பண்ணக்கூடாது. கதவு திறக்கப் படுமா வேண்டாமான்னு நைட் தான் எழுதப் போறேன், நீ வா உள்ள” என்றான் ஜோல்னா பை. மெல்ல யோசித்துத் தயங்கியபடியே கதாபாத்திரம் ஜோல்னா பைக்குள் இருக்கும் நோட்டுக்குள் நுழைந்து கொண்டது.

படைப்பாளியின் ஆளுமை எப்போதுமே படைப்புகளை ஆண்டு கொண்டு தான் இருக்குமோ என்னவோ. படைப்புகள் படைப்பாளியை உருவாக்க கூடாதா கேள்வியும் பதிலும் எதற்குட்பட்டவைகள்?

ஒரு வீதி தாண்டி.

அவள் ஓடிக் கொண்டிருந்தாள்… பின்னால் கையில் உளியோடு அந்த சிற்பி விரட்டிக் கொண்டிருக்கிறான்…

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *