ஜூலை 13, 2015

இவ்வார வல்லமையாளர்கள்
வல்லமைமிகு “தாஷி, நான்சி மாலிக் சகோதரிகள்” 

Tashi and Nancy Malik

 

 

முற்றிலும் மாறுபட்ட சாதனை ஒன்றினைப் புரிந்த இந்தியாவின் இரட்டையர்களை, தாஷி, நான்சி மாலிக் சகோதரிகளை இவ்வார வல்லமையாளர்களாக அறிமுகப்படுத்துவதில் வல்லமைக் குழுவினர் மகிழ்ச்சி அடைகிறோம். உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயதாகும் இரட்டையர்கள் பொதுவாக இந்தியர்கள் அதிகம் நுழையாத துறை ஒன்றில் சாதனையைச் செய்திருப்பது வியக்க வைப்பது.

“தீரச்செயல் புரிவோரின் பெருவெற்றி” என அழைக்கப்படும் (எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் – Explorers Grand Slam) என்ற சாகசத்தை நிகழ்த்தியுள்ளனர் இந்த இரட்டையர். வட தென் துருவங்களை அடைவது, உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள உயரமான மலைச்சிகரங்களை அடைவது என ஒன்பது இடங்களுக்கும் சென்றுவருவது எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனை என்று அழைக்கப்படுகிறது. இதில் மிகவும் கடினமான முறை ஒன்றும், மற்றொன்று சற்று சுலபமான ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ (Last Degree Grand Slam) என ஒன்றும் இருக்கிறது. முதல் வகையான எக்ஸ்ப்ளோரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் என்ற முறையில் குறிப்பிட்ட கடற்கரையில் இருந்து வட தென் துருவங்களுக்கு பனிச்சறுக்கில் (Skiing) சென்றடைய வேண்டும். ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்’ முறையில் இந்தத் தூரம் குறைக்கப்பட்டுள்ளது

இங்கிலாந்தைச் சேர்ந்த ‘டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ்’ (David Hempleman-Adams) என்பவரே முதன் முதலில் 1998 ஆம் ஆண்டில் இந்த ‘கிராண்ட் ஸ்லாம்’ சாதனையைச் செய்தவர். டேவிட் ஹெம்ப்ளிமேன் ஆடம்ஸ் உட்பட, இதுவரை பதினொரு பேர் இச்சாதனையைச் செய்துள்ளனர்.

அடுத்து, ‘லாஸ்ட் டிகிரி கிராண்ட் ஸ்லாம்‘ என்ற தொலைவு குறைந்த சுற்றை இதுநாள் வரை 33 பேர் வெற்றிகரமாக முடித்துள்ளார்கள். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்த தாஷி, நான்சி மாலிக் சகோதரிகளும் அடங்குவர். பிப்ரவரி 2012 ஆம் ஆண்டு 19,340 அடிகள் உயரம் உடைய ஆப்பிரிக்க “கிளிமாஞ்சரோ” சிகரத்தை முதலில் தொட்டத்தில் அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சுற்றை இவர்கள் தொடங்கினார்கள். அடுத்து 2013 ஆம் ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்தார்கள். தொடர்ந்து மற்ற பிற ஐந்து கண்டங்களில் உள்ள மலைகளின் உயர்ந்த சிகரங்களையும், இந்த ஆண்டு வட தென் துருவங்களையும் அடையும் சுற்றினையும் முடித்து விட்டார்கள்.

Tashi and Nancy Malik1முதன்முதலில்…
குறைந்த கால அளவில் கிராண்ட் ஸ்லாம் சாதனையைச் செய்த முதல் இந்தியர்கள்,
முதல் இந்திய, முதல் தெற்காசிய கிராண்ட் ஸ்லாம் சாதனையாளர்கள்,
கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இரட்டையர்கள்,
கிராண்ட் ஸ்லாம் சாதனை செய்த முதல் இளைய பெண்மணிகள்,
எவரெஸ்ட்டைத் தொட்ட முதல் இரட்டையர்கள்,
ஏழு கண்டங்களின் மலைச் சிகரங்களையும் அடைந்த முதல் உடன்பிறப்புகள்,
வட மற்றும் தென் துருவங்களை பனிச்சறுக்கு மூலம் அடைந்த முதல் இரட்டையர்கள், இந்தியர்கள், இளவயதுப் பெண்மணிகள் என்று பல “முதன்முதல்” என்ற சாதனைப் பட்டியலை அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையில் வெற்றி பெற்றதன் மூலம் இவர்கள் நிகழ்த்தியுள்ளார்கள்.

இவர்களது ஃபேஸ்புக் தளம் இவர்களது சாதனைகள் பட்டியலையும், ஏழுகண்டங்களிலும் உயர்ந்த மலைச்சிகரங்களைத் தொட்ட நாட்களையும், வட தென் துருவங்களை அடைந்த தேதிகளையும் பட்டியலிடும் படத்தையும் கீழே காணலாம்.

Tashi and Nancy Malik profile
இந்தச் சாதனையின் சற்று வருத்தம் தரும் பகுதி என்னெவெனில், இந்த சகோதரிகளின் சாதனைகளுக்கு இந்திய அரசிடம் இருந்து உதவிகளோ, தனியார் ஆதரவு என்றோ எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. மிகவும் செலவு செய்ய வேண்டிய இந்தச் சாதனைக்கும், மலையேற்றப் பயணங்களுக்கும் இவரது பெற்றோர்கள்தான் இதுவரை உதவி வருகிறார்கள். எனவே நிதி நிலையில் அவர்கள் குடும்பத்திற்கு பெரும் கடன்கள் ஏற்பட்டுள்ளது இவர்கள் சாதனையில் விரும்பத் தகாத பக்க விளைவு. இந்திய அரசும், இந்திய மாநிலங்களும் மலையேற்றம் என்பதை விளையாட்டு வகையில் குறிப்பதா இல்லையா என்ற சிக்கலில் ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதாமாக இதை வரையறுக்கும் நிலை இவர்களுக்கு உதவிகரமாக இல்லை என்பதை இச்சகோதரிகள் பத்திரிக்கைகளுக்கு அளித்த செய்தி குறிக்கிறது.

“இந்தச் சாதனை மிகவும் கடினமானது, சோர்வு தருவது. ஆனால் முயற்சிக்குக் கிடைத்த பலன் மகிழ்ச்சி அளிப்பது. எந்நேரம் முயற்சியைக் கைவிட்டு விடலாம் என்ற நிலையில் எங்களைத் தள்ள எத்தனையோ காரணங்கள் இருந்தன. இதனை நாங்கள் விடாமுயற்சியுடன் வெற்றிகரமாக முடித்தற்கு எங்களது ஆர்வம் மட்டுமே காரணம்.” என்று இரட்டையர்களில் இளையவரான நான்சி கூறியுள்ளார்.

தற்பொழுது நியூசிலாந்து அரசு இவர்களுக்கு உதவித்தொகை வழங்கி அவர்கள் நாட்டின் பல்கலைக்கழகத்தில் ஓராண்டு விளையாட்டும், உடற்பயிற்சி-உளவியல் கல்வியும் (Sports and Exercise Psychology) பயில உதவி செய்துள்ளது. இது இளம் சாதனையாளர்களுக்கு என்று நியூசிலாந்து அரசு வழங்கும் சலுகை, இதைப் பெற்றதில் சகோதரிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நியூசிலாந்தின் உயர்ந்த மலைச் சிகரமான குக் மலைச்சிகரத்தைத் தொடுவது இரட்டையர்களின் அடுத்த இலக்கு. இவர்கள் பெற்ற பயண அனுபவங்களை நூலாகவும் எழுத எண்ணியுள்ளார்கள்.

இச்சகோதரிகளின் சாதனை இவர்களுக்காகச் செய்தது மட்டுமன்று; அது பாலினபேதத்தின் விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருவதற்கும், பாலின அடிப்படையில் பெண்களின் செயல்கள் எனப் பொதுமைப்படுத்தும் மனப்பான்மையைக் குறைப்பதற்கும் தங்கள் சாதனை உதவவேண்டும் என்று இச்சகோதரிகள் எதிர்பார்க்கிறார்கள். வாய்ப்பிருந்தால் பெண்களுக்கு சாதனைகள் செய்வதில் தடை இல்லை என்ற உணர்வையும், பெண்களின் வாழ்வும், உலகமும் வீட்டின் நான்கு சுவர்களுக்குள் முடங்கிக் கிடப்பதல்ல என்பதைச் சமூகம் புரிந்துகொள்ள வேண்டும் என்ற செய்தியை அளிப்பதும் இவர்கள் விருப்பம். இந்தியச் சிறுமிகள் இனி பெண்கள் என்பதற்காக தாங்கள் பெருமிதம் கொள்ளும் வகையில் இவர்கள் முயற்சி அமைவதில் மகிழ்ச்சியையும் அடைகிறார்கள் இச்சகோதரிகள். பெண்கள் தங்கள் திறமையில் நம்பிக்கை கொண்டு உயரும்பொழுது சமூகத்தில் பெண்கள் கண்ணியத்துடனும், மதிப்புடனும் நடத்தப்படுவார்கள் என்பது இவர்களது எதிர்பார்ப்பு.

இந்த அட்வெஞ்ச்சரர்ஸ் கிராண்ட் ஸ்லாம் சாதனையை இவர்கள் நிகழ்த்த விரும்பியதன் முக்கிய நோக்கம் …”பெண்களாலும் சாதனைகள் புரிய முடியும்” என்பதை சமூகத்திற்கு உணர்த்தவும், சிறுமிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதற்காகவும், இவர்களது சாதனை கண்டு பெண்குழந்தைகள் பெருமிதம் கொள்ள வேண்டும் என்பதே இந்த இரட்டையர்களின் குறிக்கோள். பெண்களுக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்க விரும்பும் இவர்களது நோக்கமும், செயலும் பாராட்டத் தக்கன.

சாதனையாளர்களுக்கு வல்லமை இதழின் பாராட்டுகளும் வாழ்த்துகளும் உரித்தாகின்றன.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

தொடர்புக்கு:
ஃபேஸ்புக் வலைத்தளம்: https://www.facebook.com/tashinungshi.malik.7
இணைய வலைத்தளம்: http://www.nungshitashi.com/

படங்களும் தகவல்களும் பேஸ்புக், இளையதளம், செய்திகளிலிருந்து திரட்டப்பட்டன.

துணைபுரிந்த செய்திகள்:
‘Everest twins’ clinch Explorers Grand Slam
http://www.dnaindia.com/india/report-everest-twins-clinch-explorers-grand-slam-2103179

The feat was a tough one, but it was fully worth the effort: Tashi and Nancy Malik
http://www.sportskeeda.com/mountaineering/feat-was-tough-one-but-it-fully-worth-effort-tashi-nancy-malik

Indian Sisters, First Twins to Climb Mount Everest, Achieve Explorers Grand Slam
http://www.ndtv.com/india-news/indian-sisters-first-twins-to-climb-mount-everest-achieve-explorers-grand-slam-779414

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *