தஞ்சை வெ.கோபாலன்

kamarajr13

ஒவ்வோராண்டும் பெருந்தலைவர் காமராஜ் அவர்களின் பிறந்த நாளை மறவாமல் இருக்கும்படி, இறைவன் என்னையும் அதே நாள், அதே மாதத்தில் பிறக்க வைத்துவிட்டான். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் பலர் இருந்தும், ஒரு தனித்துவம் மிக்கத் தலைவராக மிளிர்ந்தவர் காமராஜர்.

நான் 1952இல் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலத்திலிருந்து கர்மவீரர் காமராஜரைப் பற்றி தெரிந்து வைத்திருந்தேன். 1952ஆம் ஆண்டு நடந்த சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத்தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சிக்குச் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்காமல் போய்விட்டது. அப்போதெல்லாம் காங்கிரசில் ராஜாஜி கோஷ்டியென்றும் காமராஜ் கோஷ்டியென்றும் இரு பிரிவாகச் சொல்வார்கள். ஆனால் வெளிப்பார்வைக்கு அப்படி எதுவும் வெளிவராமல் ஒன்றுபட்ட கட்சியாகத்தான் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. ஆந்திரப்பிரதேசம், கர்நாடகத்தில் சில பகுதிகள், கேரளத்தின் மலபார் ஆகியவை உள்ளடங்கியதுதான் சென்னை மாகாணம். அப்போது ஆந்திரப் பகுதியிலிருந்து அதிகமான கம்யூனிஸ்டுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டமன்றத்துக்கு வந்திருந்தார்கள்; காமராஜர் டெல்லி நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்.

அப்போது காங்கிரசைவிட எதிர்கட்சியினர் மெஜாரிடி பலம் பெற்றிருந்த காரணத்தால் காங்கிரஸ் அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. தமிழ்நாடு காங்கிரசில் சிலர், குறிப்பாக சி.சுப்பிரமனியம், பொள்ளாச்சி மகாலிங்கம் போன்றோர் ராஜாஜியை முதலமைச்சராகக் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர். முன்பே சொன்னது போல காங்கிரசில் ராஜாஜி கோஷ்டி, காமராஜ் கோஷ்டி என்று இரு பிரிவுகள் இருந்ததால் ராஜாஜி முதல்வராக வருவதை காமராஜ் அவர்கள் விரும்புவாரா என்ற பேச்சும் இருந்தது. அந்த நிலையில் திரு சி.சுப்பிரமணியமும், பொள்ளாச்சி நா.மகாலிங்கமும் பிரதமர் நேருவைச் சந்தித்து இதுகுறித்து அவருடைய கருத்தை அறிய முற்பட்டனர். ராஜாஜி முதல்வராக வருவதற்கு காமராஜரின் கருத்தைக் கேட்டீர்களா என்று நேரு கேட்டார். அவருடைய சம்மதத்துடன் தான் தாங்கள் வந்திருப்பதாகத் தெரிவித்தனர், பிறகு ராஜாஜி சென்னை மாகாண சட்டமன்ற காங்கிரஸ் கூட்டத்தில் முதல்வராக முன்மொழியப்பட்டார். முன்மொழிந்தவர் திரு காமராஜர் அவர்கள். இதுதான் அரசியல் நாகரிகம். இன்றைய அரசியலில் கோஷ்டிகள் குறித்துப் பேசுவோர் இதுபோன்ற தலைவர்களின் கண்ணியத்தை வழிகாட்டியாகக் கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர் காமராஜர் குறித்து அனைவருமே ஒருமித்த குரலில் சொல்வது அவர் “கல்விக் கண்ணைத் திறந்தவர்” என்பதுதான். அது முழுவதும் சரி; ஆனால் அது மட்டுமே அவர் பெருமைக்குக் காரணமல்ல, பல்வேறு பிற செயல்களும் அவரது தலைமைப் பண்புக்கும், மனிதாபிமானத்துக்கும், உயர்ந்த குணாதிசயங்களுக்கும் காரணமாக இருந்திருக்கின்றன. அவைகளை ஒருசில தலைப்புகளில் அடக்க வேண்டுமானால் இப்படிச் சொல்லலாம். அவை, அவருடைய ராஜ தந்திரம், சட்டத்தை மதித்தல், எதிர்க்கருத்துடையவர்களாக இருந்தபோதும் மரியாதை அளிக்கும் பண்பாடு, காலத்தைப் பொன்போலக் கருதுதல், முகத்துக்கு நேராக புகழ்ச்சி சொல்வோரை உடனடியாக கண்டித்து உட்காரவைக்கும் குணம், பேச்சில் நாகரிகம், ஜனநாயகப் பண்புகள், இப்படி பல விஷயங்களிலும் அவர் தனது தலைமைப் பண்புக்ளைக் வெளிக் காட்டியிருக்கிறார். அவற்றை, அதே வரிசையில் இந்த கட்டுரையில் காட்டவேண்டுமென்பது எனது அவா!

1942 ஆகஸ்ட் 8ஆம் தேதி பம்பாயில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஆங்கிலேயர்களை இந்தியாவை விட்டு வெளியேறு என ஒரு தீர்மானம் நிறைவேறியது. அடுத்த சில மணிகளில் மகாத்மா உட்பட பலரும் கைது செய்யப்பட்டு எங்கு கொண்டு செல்கிறார்கள் என்பதுக்கூட தெரிவிக்காமல் கொண்டுசென்று சிறையில் அடைத்தனர். பல தலைவர்கள் ஊர் திரும்பும் வழியில் கைது செய்யப்பட்டனர். தீரர் சத்தியமூர்த்தியும் கைதானார். பெருந்தலைவர் காமராஜர் பம்பாயிலிருந்து ரயில் மூலம் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார். அவர் ரேணிகுண்டா வந்தபோது அவரைக் கைது செய்ய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் காவல் துறையினர் காத்திருக்கின்றனர் எனும் செய்தி கேள்விப்பட்டார். ஆனால் அவர் சிறைப்படுமுன் செய்ய வேண்டிய சில காரியங்கள் இருந்தன; அவைகளை முடித்துவிட்டுக் கைதாகலாம் என்று எண்ணி அவர் சென்னை வரும் வழியில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இறங்கினார். தலையில் ஒரு முண்டாசு கட்டிக்கொண்டு, தன்னுடைய உடைமைகளை ஒரு மூட்டையாகக் கட்டி தலைமீது வைத்துக் கொண்டு, ஒரு கிராமத்து விவசாயியைப் போல ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்தார். வெளியே வந்தவுடன் அவ்வூர் கடைத்தெரு, அங்கு தேவராஜ ஐயங்கார் எனும் தியாகி ஒரு உணவு விடுதி நடத்தி வந்தார். காமராஜ் நேரே அவரிடம் சென்றார். மாறுவேடத்திலிருக்கும் காமராஜை ஐயங்கார் அடையாளம் கண்டு கொண்டார். அங்கிருந்து இருவரும் பஸ் ஏறி ராணிப்பேட்டை சென்றனர். அங்கு தீனபந்து ஆசிரமம் என்று ஒன்றை நடத்தி வந்த கே.ஆர்.கலியாணராம அய்யரைச் சந்தித்துவிட்டு, அவர் வீட்டில் போலீஸ் கண்காணிப்பு இருந்தமையால் அருகில் இருந்த ஒரு காங்கிரஸ்காரரின் தோட்டவீட்டில் இரவு தங்கிவிட்டு, மறுநாள், வேலூர், கடலூர், தஞ்சை, திருச்சி, மதுரை ஆகிய இடங்களுக்குச் சென்று காங்கிரஸ் தொண்டர்களைச் சந்தித்து சில நோட்டீஸ்களை விநியோகித்துவிட்டு விருதுநகர் சென்றார். வீடு திரும்பிய காமராஜ் குளித்து உடை மாற்றிக் கொண்டபோது அவ்வூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவர் காமராஜ் இல்லம் வந்தார். உடனே தலைவர் தன்னை கைது செய்துகொள்ளலாம் என்று அவரிடம் சொல்ல, அவர் சொன்னார், “தாங்கள் வேலூரில் இருப்பதாக ஒரு தகவல் கிடைத்து, இங்கிருந்து சில போலீசார் அங்கு சென்றிருக்கிறனர்; அவர்கள் திரும்பி வர ஓரிரு நாட்கள் ஆகலாம், அதுவரை தலைவர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு கைதாகலாம்” என்றார். தலைவர் அதற்கு சம்மதிக்காமல் உடனடியாக காவல் நிலையம் சென்று கைதானார். இதுதான் தலைவருடைய கடமையுணர்வு அவரது நாணயம்.

காங்கிரசில் ராஜாஜியும் காமராஜரும் இருவேறு கோஷ்டியை வைத்திருந்தனர் என்பர். ஆனால் ஒரு நிகழ்ச்சி இவ்விரு தலைவர்களும் எப்படி நடந்து கொண்டனர் என்பதற்கு எடுத்துக் காட்டாக அமைந்திருக்கிறது. ராஜாஜி பதவி விலகி அப்போது காமராஜ் முதலமைச்சராக ஆனார். ஒரு நாள் திருமலைப் பிள்ளை சாலையில் காமராஜ் இல்லத்தில் மாடியில் தலைவரும் திருப்பூர் வின்செண்ட் என்ற காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது தலைவரின் உதவியாளர் ஓடிவந்து ராஜாஜி தலைவர் இல்லத்துக்கு வருவதாக ஒரு செய்தியைச் சொன்னார். உடனே காமராஜ், அடடா! அவர் எதற்காக இத்தனை சிரமப்பட்டுக்கொண்டு இங்கு வரவேண்டும், சொல்லியிருந்தால் நானே அவரைப் பார்க்கப் போயிருப்பேனே என்று சொல்லிவிட்டு அவசரமாக இரண்டிரண்டு படிகளாக மாடிப்படிகளைக் கடந்து கீழே வந்து போர்ட்டிகோவுக்கு வரவும் ராஜாஜியின் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது. அவரை காமராஜ் மிகவும் மரியாதையுடன் அழைத்துச் சென்று, தாங்கள் இத்தனை சிரமப்பட வேண்டுமா, சொல்லியிருந்தால் நான் தங்கள் இல்லம் வந்திருக்க மாட்டேனா என்று சொல்லிக்கொண்டே உள்ளே அழைத்துச் சென்றார். அங்கு அவ்விருவரும் அரை மணி நேரம் தனியாக ஏதோ பேசிவிட்டு ராஜாஜி வீடு திரும்ப வாசலுக்கு வந்தபோது தலைவரும் உடன் வந்து ராஜாஜியைக் காரில் ஏற்றிவிட்டு, கார் புறப்பட்டுப் போகும்வரை பார்த்துக் கொண்டிருந்துவிட்டு திருப்பூர் வின்செண்டிடம் சொன்னார், “பாவம், பெரியவர், மிகவும் தளர்ந்து போய் காணப்படுகிறார்” என்று சொல்லிவிட்டு மெளனமாக அவர் சென்ற திசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாராம். இதுதான் அவரது பண்பாடு.

திருமுருக கிருபானந்த வாரியார் சொல்வார், யானையைக் குழி தோண்டி பிடிக்க வேண்டும், பறவைகளை வலைவிரித்துப் பிடிக்க வேண்டும், மீனைத் தூண்டில் போட்டுப் பிடிக்க வேண்டும், மனிதனை முகஸ்துதி செய்து பிடிக்க வேண்டும் என்பார். அப்படி முகஸ்துதிக்கு மயங்காதார் யார்? ஒரு மேடையில் ஒருவரை வைத்துக் கொண்டே அவரை இந்திரன் சந்திரன், உப்பில்லாமல் ஒரு கலம் கஞ்சி குடிப்பார், வானத்தை வில்லாக வளைப்பார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அந்த நபர் உச்சி குளிர்ந்து கேட்டுக் கொண்டிருப்பார் அல்லவா? ஆனால் பெருந்தலைவர் காமராஜர் எப்படிப்பட்டவர், இங்கு ஒரு நிகழ்ச்சி. சென்னை திருவான்மியூரில் மகாத்மா காந்தியடிகள் சிலை திறப்பு விழா. திறந்து வைத்துப் பேசப்போகிறவர் தலைவர் காமராஜ். அப்போது பெரு மழை வரும்போல வானம் இருண்டு கருத்துக் காணப்பட்டது. எப்போது வேண்டுமானாலும் வானம் பொத்துக்கொண்டு மழை ஊற்றலாம். அப்போது ஒருவர் மேடையில் பெருந்தலைவரைப் பற்றி வானளாவ புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். பார்த்தார் தலைவர், அவர் சட்டையைப் பின்புறமிருந்து இழுத்து போதும் நிறுத்து, உட்காருன்னேன் என்றார். அவர் உட்காரவில்லை. உடனே தலைவர் எழுந்து அந்த நபரை உட்கார வைத்துவிட்டு தானே மைக்கைப் பிடித்துப் பேசத் தொடங்கினார். அவர் சொன்னார், “என்னைப் பற்றி பேசவா இந்தக் கூட்டம். காந்தியடிகள் சிலை திறக்க இந்த கூட்டம், காந்தியடிகளைப் பற்றி பேசுன்னேன். என்னைப் பற்றி பேசினது போதும், இனி காந்தி பற்றி பேசலாம்” என்று சொல்லி சிலையைத் திறந்து வைத்து காந்தியடிகள் பற்றி பேசினார். அதுதான் பெருந்தன்மை. தற்புகழ்ச்சியை விரும்பாத மேதமை.

1967 பொதுத் தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டது, தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது. அதைவிட பெருந்தலைவர் காமராஜ் அவர்கள் விருதுநகர் தொகுதியில் மாணவர் தலைவர் ஒருவரிடம் தோற்றுப் போனார். ஆட்சியை இழந்ததும் தலைவர் எதிர்க்கட்சியினர் ஆளட்டும், அடுத்த ஓராண்டுக்கு அவர்களைப் பற்றி நான் எந்த விமர்சனமும் செய்யப்போவதில்லை. ஓராண்டுக்குப் பிறகு நான் பேசுவேன் என்றார். அப்படி ஒரு ஆண்டு முடிந்த பிறகு அவர் தஞ்சாவூர் திலகர் திடலில்தான் முதன்முதலாகப் பேசினார். அழுத்தம் திருத்தமான பேச்சு, காங்கிரஸ் ஆட்சியின் சாதனைகள், அவர்கள் கட்டி வைத்த அணைக்கட்டுகள், மின்சார உற்பத்திக்கு அவர்கள் செய்த பணிகள், நீர்ப்பாசன வசதிகளின் பெருக்கம், தொழிற்சாலைகளின் வளர்ச்சி, விவசாயிகளின் வாழ்க்கைத் தரம் உயர்வு போன்றவற்றையெல்லாம் பட்டியலிட்டுவிட்டு நிறைவாகச் சொன்னார். “நானும் கடந்த ஒரு வருஷ காலமாக இவர்கள் ஆட்சியைக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இவர்கள் இது வரை என்னதான் செய்தார்கள்? நாம் அணைகளைக் கட்டினோம், மின்சாரம் உற்பத்தி செய்தோம், விவசாயத்துக்கு உதவி செய்தோம், இவர்கள் என்ன செய்தார்கள்? “வந்து கம்பியை நீட்டினார்கள்” என்றார். கூட்டம் ஆர்ப்பரித்து கைதட்டி ஆரவாரம் செய்து ரசித்தது. அவர் சொன்னது, மின்சாரத்தை உற்பத்தி செய்தது நாம், இவர்கள் கம்பி இழுத்து அதனை விநியோகம் செய்தார்கள் என்ற பொருளில். அதை அவர் சொன்ன விதம் அவருடைய ஓராண்டு மெளனத்துக்குப் பின் அவர் எடுத்த விஸ்வரூபத்தைக் காட்டியது.

நிறைவாக இந்த கட்டுரையாளனுக்கு ஏற்பட்ட ஒரு தனி அனுபவம். தஞ்சையில் நான் பணியாற்றிக் கொண்டிருந்த அலுவலகத்தில் விருதுநகரைச் சேர்ந்த ஐ.எஸ்.ராஜ்குமார் என்பவரின் மகன் ரவிக்குமார் என்பவர் என்னுடன் பணியாற்றி வந்தார். ஒரு நாள் அவர், நான் உட்பட சில நண்பர்களிடம், “அப்பச்சி தஞ்சாவூர் வந்திருக்கிறார். சர்க்யூட் ஹவுசில் தங்கியிருக்கிறார். என் தந்தைக்கு அவர் மிக நெருங்கிய பழக்கமுடையவர். வாருங்கள், உணவு இடைவேளையில் அவரைப் போய் பார்த்துவிட்டு வரலாம்” என்றார். எங்களுக்கும் மகிழ்ச்சி உடனே கிளம்பினோம். தலைவர் தங்கியிருந்த இடம் எங்கள் அலுவலகத்துக்கு மிக அருகில் என்பதால் உணவு இடைவேளையில் அங்கு சென்றோம். வாசலில் சில காங்கிரசார் நின்று பேசிக் கொண்டிருந்தனர். சிலர் உள்ளே போய்க்கொண்டும், சிலர் வெளியே வந்து கொண்டும் இருந்தனர். நாங்கள் ஐந்து பேர் உள்ளே சென்றோம். தூரத்தில் மரத்தடியில் சில போலீஸ்காரர்கள் நின்று கொண்டிருந்தனர். எங்களை எவரும் தடுக்கவில்லை. முன் அறையையும், அங்கிருந்த பலரையும் கடந்து தலைவர் உட்கார்ந்திருந்த அறைவாசலுக்குச் சென்றோம். அங்கும் எங்களை யாரும் தடுக்கவில்லை. அங்கு பலரும் நின்றுகொண்டும், உட்கார்ந்து கொண்டும் தலைவருடன் பேசிக் கொண்டிருந்தனர். அவர்களை விலக்கிக்கொண்டு, இளைஞர்களாகிய நாங்கள் கதர் வேட்டி சட்டைகளுக்கு மத்தியில் பேண்ட் சட்டை அணிந்து கொண்டு போய் நின்றதும் தலைவர் திரும்பிப் பார்த்தார். யாரு? என்றார். நண்பர் ரவிக்குமார் நான் ஐ.எஸ்.ராஜ்குமாரின் மகன் ரவிகுமார், “அப்பச்சி வந்திருக்காங்கன்னு கேள்விப்பட்டு பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்” என்றார். “அப்படியா, ராஜ்குமார் எப்படி இருக்கார், உடல் நலமாக இருக்காரா” என்று விசாரித்துவிட்டு, சும்மா பார்க்கத்தானே வந்தீங்க, பார்த்துட்டீங்கல்ல, சரி நீங்க போகலாம் என்று முகத்தில் அடித்தது போல சொல்லிவிட்டு, சுற்றி இருந்தவர்களிடம் பேசத் தொடங்கினார். வீண் பேச்சு பேசவோ, தேவையற்ற கூட்டத்தைச் சுற்றிலும் வைத்துக் கொண்டு பந்தா செய்வதையோ தலைவர் விரும்பியதில்லை. காரியம் இருந்தால் பேசு, இல்லையேல் நடையைக் கட்டு என்பது அவரது கொள்கை. அது நமக்குச் சற்று வருத்தமாக இருந்தாலும், என்ன கடமை உணர்வு என்றல்லவோ அவரைப் பாராட்டத் தோன்றுகிறது.

தலைவரைப் பற்றி எத்தனையோ செய்திகள். அவை ஒவ்வொன்றும் அவருடைய குணாதிசயங்களையும், அவரது பன்முகப் பரிமாணங்களையும் நமக்குக் காட்டிக் கொண்டிருக்கின்றன. காலத்தால் அழிக்கமுடியாத அற்புதமான குணங்கள், தலைமைப் பண்புகள், பெருந்தன்மை, இரக்க குணம், மக்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்கிற ஆற்றமாட்டாத தாகம் இவைகள்தான் மக்கள் தலைவர் காமராஜ்! அவர் புகழ் வாழ்க!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *