பி. சுவாமிநாதன்

11220140_1123504214343953_8318872397092579954_n

‘ஒரு மனிதன் இருக்கும்போது பேசப்படுவதை விட, இறந்த பின்தான் அதிகம் பேசப்படுவான்’ என்பதை நன்றாகவே அறிவோம். அனுபவபூர்வமாகப் பார்த்தும் வருகிறோம்.

ஆனால், இருக்கும்போதும் இறந்த பின்னும் – இன்று அதிகம் பேசப்பட்டு – வணங்கப்பட்டு வருபவர் உலக மேதை டாக்டர் அப்துல் கலாம் அவர்கள்.

ஒரு மகனின் மறைவுக்காகத் தாயாகப்பட்டவள் அழுது அரற்றி அனுதாபம் தெரிவித்தால், அவன் ஒரு நல்ல மகனாக இருந்துள்ளான் என்று அறியலாம்.

ஒரு கணவனின் மறைவுக்கு மனைவியாகப்பட்டவள் கண்ணீர் விட்டுக் கதறி, சடலத்தின் அருகிலேயே இருந்து பழங்கதைகளை நினைவு கூர்ந்தால், அவன் நல்ல கணவனாக வாழ்ந்துள்ளான் என்று அறியலாம்.

ஒரு குடும்பத் தலைவரின் மறைவுக்கு ஒட்டுமொத்த வாரிசுகளும் அமர்ந்து ஓயாது கண்ணீர் விட்டால் அவர் ஒரு நல்ல தந்தையாக விளங்கி உள்ளார் என்று அறியலாம்.

ஒரு குடிமகனின் மறைவுக்காக ஒட்டுமொத்த தேசமே கண்ணீர் சிந்தினால், அந்தக் குடிமகனை ‘தேசத் தந்தை’ என்று சொல்லலாம்.

ஆம்! அப்துல் கலாம் ஐயா அவர்கள் நம் தேசத் தந்தை ஆகி விட்டார்!

கலாமின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக ஒவ்வொரு தெருவிலும் அவரது திருவுருவப் படம் வைக்கப்பட்டு, ஃப்ளெக்ஸ் அமைக்கப்பட்டு மலர்கள் தூவப்படுகின்றன.

மெழுகுவத்திகள் ஏற்றப்படுகின்றன.

குழந்தைகள் படங்களின் முன்னால் நின்று கண்ணீர் அஞ்சலி செலுத்துகிறார்கள்.

உலகமே இரங்கல் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு பள்ளி – கல்லூரிகளிலும் அனுதாபம் தெரிவிக்கப்படுகிறது.

ரயில் நிலையங்கள் உட்பட பொதுமக்கள் அதிகம் நடமாடுகின்ற இடங்களில் அஞ்சலி செலுத்தப்படுகிறது.

இரங்கல் தெரிவித்து அரசு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடைகள் இயங்காது என்று பிரதான வணிகர் சங்கத் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

தியேட்டர்களில் சில காட்சிகள் ரத்து என்று அறிவிப்பு.

ராமேஸ்வரத்தில் அஞ்சலிக்காக வந்து கூடும் அன்பர்களுக்கு இலவச இடம், இலவச உணவு என்கிற தனியார் அமைப்புகளின் அறிவிப்புகள்…

அஞ்சலி செலுத்துவதற்கு ராமேஸ்வரம் செல்ல வசதியாக சென்னையில் இருந்து சிறப்பு இலவசப் பேருந்துகள்…

இவை போல் இன்னும் எத்தனை எத்தனையோ…

– மேலே சொன்ன எதுவும் யாரோ வலுக்கட்டாயமாகச் சொல்லி அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை.

உணர்வுபூர்வமாக – உருக்கமாக வெளியான அறிவிப்புகள்.

உண்மையாக நடந்தால் –

ஒழுக்கத்துடன் இருந்தால் –

மனிதாபிமானம் கொண்டிருந்தால் –

தேச பக்தியும் அமைந்திருந்தால் –

திக்கெட்டும் உன்னை வாழ்த்தும்.

அப்துல் கலாம் அவர்கள் வாழ்ந்து காட்டினார்.

இப்போது நிகழ்ந்தது ஒரு மனிதனின் மறைவல்ல…

ஒரு மகானின் விடைபெறுதல்…

மக்களின் வாழ்வுக்காக மகான்கள் அருளினார்கள்.

அப்துல் கலாமும் அதையேதான் செய்தார்.

மகான் ஆனார்!

இன்று தேசமே கண்ணீர் சிந்துகிறது.

ஒரு நல்ல குழந்தையை இழந்து தவிக்கிறாள் பூமாதேவி.

என் ஆழ்ந்த அஞ்சலி.

– பி. சுவாமிநாதன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *