நினைவுகளின் சுவட்டில் (பாகம் – II பகுதி – 23)

 

வெங்கட் சாமிநாதன்

ரஜக் தாஸ் வந்துவிட்டாலே செக்‌ஷன் கலகலப்பாகி விடும். அவன் செய்யும் ஒவ்வொரு காரியமும் தமாஷாகத் தான் இருக்கும். அவன் இதற்காக ஏதும் சிரமப் பட வேண்டியதில்லை. ஒன்றுமில்லாத எதுவும், ஒன்றுமில்லாத சப்பென்று நமக்குத் தோன்றும் எதுவும் அவனிடத்தில் உயிர் பெற்றுவிடும். தமாஷ் செய்வதற்கு, அமைதியாக இருக்குமிடத்தில் கலகலப்பூட்டுவதற்கு ஏதும் சம்பவங்கள், கிறுக்குத் தனமான சேஷ்டைகள், அல்லது சிரிப்பூட்ட வென்றே யோசித்துத் தயார் செய்யப்பட்ட ஹாஸ்யப் பேச்சுக்கள், இப்படியெல்லாம் அவனுக்கு எதுவும் தேவையில்லை.

சாதாரணமாகப் பேசிக் கொண்டிருப்போம். இடையில் ரஜக் தாஸ் ஏதாவது சொல்வான். அது மற்றவர்களுக்கு தெரியாத, அவர்கள் பங்கு  பெற்றிராத சம்பவமோ, பேச்சோ இப்படி ஏதோ ஒன்று இருக்கும். ரஜக் தாஸ் சொல்லிக் கொண்டிருப்பான். நடுவில் சற்று நிறுத்தி எல்லோரையும் பார்ப்பான். இனி நடக்கும் நாடகத்தை தமிழில் எப்படி சரிவரச் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு சாதாரண “ஹை” என்ற வார்த்தையை வைத்துக்கொண்டு அவன் செய்யும் ரகளை அனுபவித்தால் தான் தெரியுமே ஒழிய சொல்லிப் புலப்பட வைக்கமுடியாது.

”ஹை” என்ற வார்த்தையின் பொருளும் அது வெவ்வேறு கட்டங்களில் சொல்லும் தொனி மாற்றத்தில் பெறும் பொருள் மாற்றத்தையும் தமிழில் எப்படி சொல்வது? சரி, ஏதோ முடிந்தவரை சொல்லிப் பார்க்கவேண்டியது தான்.

ஏதோ ஒன்றைப் பார்த்ததைக் கேட்டதைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருப்பான். பின் சட்டென நிறுத்தி செக்‌ஷன் முழுதிலும் சுற்றி ஒரு பார்வை செலுத்துவான். பிறகு கோபத்தில்,

”என்ன இது, நான் சொல்லிக்கொண்டே போகிறேன். இப்படி எல்லோரும் பேசாமல் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?” என்பான்.

”கேட்டிண்டு இருக்கோம். நீ சொல்லு” என்று பதில்  வரும்.

இதென்ன?, “கேட்டிண்டு இருக்கோம். நீ சொல்லு”. நான் என்ன மடையனா? நான் சொல்றதுக்கு ஏதாவது நீங்கள் பதில் சொல்ல வேண்டாமா?

பதில் என்ன சொல்றது?. நீ சொல்றதை, நம்ம ரஜக் தாஸ் சொல்றான்னு கேட்கறோம்.

என்ன இது, நான் இப்படி “இருக்கு”ன்னு விஷயத்தைச் சொன்னா, ”நான் சொல்றேன்”னு கேக்கறதா சொல்றீங்களே.. அப்படினனா என்ன அர்த்தம்? நான் “இருக்கு”ன்னு சொன்னது இல்லைங்கறீங்களா? ரஜக் தாஸ் சொல்றான்னு தலையாட்டறீங்களா?

அப்படி இல்லை. நீ பார்த்தே “இருக்கு”ன்னு சொல்றே,. நாங்க சரி, “இருக்காக்கும்” ன்னு கேட்டுக்கறோம். வேறே என்ன சொல்றது?

நான் பார்த்தேன் அப்படி “இருக்கு”ங்கறேன். நீங்க என்னடான்னா, “நான் சொல்றதுக்காக சரிங்கறேன்”னு சொல்றீங்களே”

அதான் ஒப்புக்கொண்டு விட்டோமே அப்படித்தான் அது ”இருக்கு”. மேலே சொல்லு.

அதென்ன எனக்கு சலுகையா “இருக்கு”ன்னு ஒப்புக்கறீங்களா?

நான் சொல்றேன். பார்த்தேன். அப்படி “இருக்கு”ங்கறேன். ஏதோ கடனுக்குக் கேக்கறமாதிரி, “சரி மேலே சொல்லுங்கறீங்களே”

சரி, என்னதான் சொல்லணும்கறே, ரஜக் தாஸ்,. சண்டைக்கு வராதே. எப்படிச் சொல்லணும்கறே. அப்படிச் சொல்லிடறோம்.

நான் என்ன சண்டைக்காரனா, என் வாயடைக்கறதுக்காக, நான் எப்படி சொல்லச் சொல்றேனோ அப்படிச் சொல்றேன்னு சொல்றீங்களே.  அப்ப நான் சொல்றதை நம்பலே நீங்க. மேலே என்னத்துக்கு வம்புன்னு, நான் சொல்றதைச் சொல்றேன்னு சொல்றீங்க. நான் என்ன பொய்யனா, சண்டைக்காரனா?

என்னதான் செய்யச்  சொல்றே, ரஜக் தாஸ், என்ன சொன்னாலும் நீ அதை ஒத்துக்க மாட்டேங்கறே. சரி விடு. வேறே விஷயத்துக்கு போகலாம்.

”மறுபடியும் அதே பேச்சு. நான் சொல்றதை நம்பலே. நான் பொய்யன்னு சொல்றீங்க எல்லாரும். நடந்த விஷயம் ஸ்வாரஸ்யமா இருக்கேன்னு எல்லாருக்கும் சொல்லலாம்னு வந்தேன். நீங்க என்னடானனா, அரை மணி நேரமா எல்லாரும் மூஞ்சிய உம்முனு வச்சிட்டிருக்கீங்க. கேட்டா, என்னை பொய்யன், சண்டைக்காரன்னு சொல்றீங்க.

அதான் ரஜக் சொல்லிட்டோமே, ‘நீ சொன்னது இருக்கு. இல்லாட்டி நீ ஏன் சொல்லப் போறே. அதான் ஒப்புத்துக் கொண்டோமே.

இவ்வளவு நேரம்  என்னோடே சண்டை போட்டு, பொய்யன்னு சொல்லி, என்னை  சமாதானப் படுத்தறதுக்காக சரி அப்படித்தான் “இருக்கு”’ன்னு சொல்றீங்க. ஆனா உங்க மனசிலே அப்படி இல்லை.

இப்படியே போகும். அந்த விவகாரம். இங்கு நான் கோடிகாட்டி விட்டு நிறுத்தி விட்டேன். ஆனால் ரஜக் தாஸ் சுலபத்தில் முடிக்க மாட்டான். இருக்கு என்று பொருள் கொள்ளும் சாதாரண அடிக்கடி புழங்கும் ஹிந்திச் சொல் “ஹை” யை அவன் எத்தனை விதவிதமான  தொனியில், ஒவ்வொரு தடவையும் வேறே வேறே அழுத்தம் தந்து, அதற்கேற்ப முதுகை முன் குனிந்து வளைத்தும், , உதட்டை வித விதமாக பிதுக்கிக் கொண்டும். அவன் செய்யும் சேஷ்டைகள் தாங்க முடியாது

இது எல்லாவற்றையும் தூக்கி அடிப்பது, அவன் வேலைக்குச் சேர்ந்த ஒரு வாரத்தில் அவன் செய்த அட்டஹாஸம். அவன் நடத்திய நாடகம் இரண்டு பெங்காளி வார்த்தைகளை வைத்து. (சூல், பால்).  அவன் பேசிக் கொண்டு வந்த போது இதன் வித்தியாசத்தை நாங்கள் புரிந்து கொள்ளவில்லை. செக்‌ஷனில் இருந்த பாண்டே என்ற ஒரியாக்காரர் தான் திகைத்துக் கொண்டிருந்த  எங்களுக்கு விளக்கினார். அப்போ, அவன் வேலைக்குச் சேர்ந்த புதிது. அதற்குள் அவன் சுபாவம் எங்களுக்கு கொஞ்சம் பரிச்சயமாகியிருந்ததால், இதில் ஏதோ விஷமம் இருக்கிறது என்று எங்களுக்கு ஒரு சந்தேகம் இருந்ததே தவிர விஷயம் உண்மையில் என்ன என்று புரிய வைத்தது பாண்டே தான்

ஒரு நாள் காலை வந்ததும் “ஒரே பாபா, ஆமி எக்கானே  காஜ் கொர்த்த பார்போனா, எககானே லோக்டா சபாயி கூப் கராப்” (நான் இங்கே இனிமே வேலை செய்ய முடியாது. போலெ இருக்கு.  இங்கே இருக்கறவன்கள் எல்லாம்  ரொம்ப மோசம்} என்று சத்தமாகக்  கத்திக் கொண்டே வந்தான்.

யாருக்காவது ஏதாவது புரிந்தால் தானே. ஏதோ விஷயம், ரஜக் தாஸை ரொம்பவும் சங்கடப் படுத்தியிருக்கிறது என்று தெரிந்தது. க்யா ஹுவா தாதா, பஹூத் குஸ்ஸே மேம் ஹோ (என்ன ஆச்சு, ரொம்ப கோவமா இருக்கே” என்று எல்லோரும் அவனைப் பார்த்து திகைப்புடன் கேட்க,

அவன் மிருணால் பக்கம் திரும்பி, “மிருணால் தா, ஆமி புஜ்த பாஸ்சி நா, எக்கானே கி கேஓ சூல் காட்பே நா கி?” (மிருணால், இந்த ஊர்லே யாருமே தலைக்கு க்ராப் வெட்ட  மாட்டாங்களா என்ன? என்று கேட்டான்.

மிருணாலுக்கு  முதலில் திகைப்பாக இருந்தாலும், ரஜக் ஏதோ காமெடி பண்ண ஆரம்பிக்கிறான் என்று தெரிந்தது.

ஆஷ்சி தோ. தோ துகான் ஆச்சே. ஆப்னி தேக்கி நா கி? (இருக்கே ரண்டு சலூன் இருக்கு. உங்களுக்கு தெரியலையா?) பின் செக்‌ஷனில் மற்றவர்களிடம் திரும்பி,” ரஜக் பாபுக்கு,  ஹேர் கட்

பண்ணிக்கணும், அவருக்கு சலூன் எங்கே இருக்குன்னு தெரியலை. அதான் விஷயம்”. என்று ஹிந்தியில் சொன்னான்

எங்களில் ஒன்றிரண்டு பேர் அவருக்கு சலூன் எங்கே  இருக்கு என்று வழி சொன்னார்கள். ஆனால் அதெல்லாம் ரஜக் பாபுவுக்கு திருப்தி அளிப்பதாக இல்லை.

அரே பாபா, ஆமி  ஜானி, (எனக்கு அதெல்லாம் தெரியும்) மைம் தோ கயா தா. வோ தோ பால் காட்தா ஹை. தூஸ்ரா துகான் பி கயா தா. வஹ் பி பால் காட்தா ஹை. பகூத் முஷ்கில் ஹோ கயா. வாபஸ் ஆ கயா. (நான் போனேன். அடுத்த கடைக்கும் போனேன். எல்லாரும் என்னவோ பண்றானுங்க. எனக்கு தலை மயிர் வெட்டிக்கணும். “ என்றான்.

அதைத் தான் சொல்றோம். உனக்கென்ன கஷ்டம் உனக்கு வேறென்ன வேணும் என்று  கேட்டார்கள்.

மிருணால் சிரித்துக் கொண்டே இருந்தான்.

ஒரே பாபா தும் சமஜ்தா நஹி. ஆமார் சூல் காட்தே சாய். பால் கேனோ(ம்) காட்போ. துமி புஜ்த  பாஸ்சி நா. ஹம்கோ சூல் காட்னா ஹை. பால் நஹி. ( உங்களுக்கு ஏன் புரிய மாட்டேன் என்கிறது. எனக்கு சூல் வெட்டிக்கணும். பால் இல்லை. பால் என்னத்துக்கு வெட்டணும் )என்றான். ரஜக் தாஸ்.

யே க்யா போல்தா ஹை யார். சக்கரவர்த்தி. ஹமே  சம்ஜாவ் யா இஸ் பங்காளிகோ  சம்ஜாவ் ( இவன் என்ன சொல்றான்?. சக்கரவர்த்தி எங்களுக்கு புரியும் படியா சொல்லு. இல்லை, இந்த வங்காளிக்கு புரியவை) என்று சில குரல்கள் எழுந்தன.

சக்கரவர்த்தி சிரித்துக் கொண்டிருந்தான். “து க்யோ ஹஸ்தா ஹை ரே? (நீ ஏண்டா சிரிக்கறே?} என்று மறுபடியும் குரல் எழுந்தது.

பின் மிருணால் சொன்னான். வங்காளியில் தலை  மயிருக்கு சூல் என்றுதான் சொல்லவேண்டும். பால் என்றால் அது வேறே இடத்தில் இருக்கறதைச் சொல்றதுக்கு.” என்றான்.

செகஷனில் ஒரே ரகளை. சிரி[ப்பொலி அடங்க வெகு நேரம் ஆயிற்று என்பது மட்டுமல்ல. இதை ரொம்ப நாளைக்கு எல்லோரும் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதில் ரொம்ப பாதிக்கப்பட்டது ரஜக் தாஸ் தான்.

”ரஜக் பாபு, ஃபிர்  கப் ஜானா ஹை பால் காட்னே? (அடுத்து என்னிக்கு பால் வெட்டிக்கப் போகப் போறே)” என்ற விசாரிப்புகள் ரொம்ப நாளைக்கு கேட்டுக் கொண்டிருந்தது. ரஜக் தாஸும் சிரித்துக் கொள்வான். அன்று அவன் ரகளை செய்தது தெரியாமல் இல்லை. வேண்டுமென்றேதான் அவன் செய்தான். அவன் ரகளையெல்லாம் கோமாளித் தனத்துக்காகத் தான்.

தொடரும்.

 

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “சூல்…………பால்……

  1. ரகளைகள் வாழ்க. நீடுழி வாழ்க. ரஜக் தாஸ் போன்றோர்களால் தான், இந்த பாழும் உலகம் உஜ்ஜூவிக்க முடிகிறது. அவரை தமிழில் முன்னிறுத்த, நீங்கள் படும் பாடு புரிகிறது. ஆனால், உங்களை போல் நேர்த்தியாக இந்த ‘ஹை’ யை ஹாய்யாக சொல்லிருக்க யாராலும் முடிந்திருக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *