-பாஸ்கர்  சேஷாத்ரி 

சுமார் நாற்பது வருஷங்கள் இருக்கும்.

அவர் பீ. எஸ். ராமச்சந்திர அய்யர். எனக்கு பள்ளியில் ஆங்கில வாத்தியார். அச்சுப் போலக் கையெழுத்து; நடுத்தரமான உசரம். வெள்ளைக் கதர் ஜிப்பா,வேட்டி. அதனைத் துவைத்தால் காய்வதற்கே ரெண்டு நாளாகும். கொஞ்சநாள் தாச்சி அருணாசலம் தெருவில் இருந்தார். ’ரொட்டிக்காரன் தெரு’ என்றால் பழைய மயிலாப்பூர்வாசிகளுக்குத் தெரியும்.

சமயத்தில் வகுப்புக்குப் பிரம்புக்குச்சி கொண்டுவருவார். அவ்வப்போது மாறும் என்றால் அது எத்தனை கையைப் பதம் பார்த்திருக்கும்! அவரைப் பார்த்தால் கொஞ்சம் பயம் வரும். அந்த அடிக்காக அல்ல! அவர் கண்கள் கொஞ்சம் பெரிசு. அதைப் பார்த்தால் தப்பு செய்யாதவன் கூட மன்னிப்பு கேட்பான். கொஞ்சம் அவ்வப்போது கண்களில் நீர் கசியும்.

மகா கோபக்காரர்! என்னைப்போல மக்கு எல்லாம் நாலாவது வரிசை. என் நேரம் அந்த வரிசைக்குத்தான் அவர் கண்கள் போகும். சரியாகச் சிக்குவேன். நோட்டில் எழுதாமல் ஏதோ வரைந்ததைப் பார்த்து என் காதைப்பிடித்து அடிக்கடித் திருகுவது விசேஷம். எனக்கு தொன்னைக் காது. எந்த குட்டிக் கைக்கும் என் காது லாவகம்; அதுவும் அவர் திருகும்போது நானே பிள்ளையார் மாதிரி சுற்றுவேன். அந்தச்சுற்று சுற்றினால்தான் வலி கொஞ்சம் குறையும். ஆனால் அப்போது அந்தத் திருகு புரியாது. மூன்று மணி நேரம் கழித்து வலிக்கும்.

அவர் வீட்டைக் கண்டுபிடித்துவிட்டேன். எனக்குத் தெரிந்த தாடிக் கண்ணனைப் பிடித்து விலாசம் வாங்கி இதோ அவர் முன்னே…”சார்… நான் உங்க பழைய மாணவன்” – அவர் காதில் விழவில்லை.
மெல்ல அவர் பக்கம் உரக்க சொன்னேன்…”ஐ அம் யுவர் ஓல்ட் ஸ்டுடென்ட்!”

கட்டிலில் அமர்ந்திருந்தார். கொஞ்சம் தெம்பு இருந்தால் வகுப்பு எடுக்கத் தயாராகி விடுவார்!

கொஞ்சம் சிரித்தார். அவர் கைகளை ஆதரவாய்ப் பற்றினேன்.

மொத்த எலும்புகளும் நரம்புகளும் தெறித்துக்கொண்டு வெளிவரத் துடிக்கும் கனிந்த வாழ்க்கை.

”யு டுக் இங்கிலீஷ்..” என் ஆங்கிலம் சரியா? கொஞ்சம் பயமாக இருந்தது. திரும்பவும் காதைப்பிடித்துக் கிள்ளுவாரோ ?

”யு வேர் மை இங்கிலீஷ் டீச்சர் டூ…ஸாரி…அய் வாஸ் யுவர் இங்கிலீஷ் ஸ்டுடென்ட்!”

மெல்ல அவர் பாதங்களைப் பிடித்து அமுக்கிவிட்டேன். எப்படி உலகில் அன்பைச் சொல்லுவது ?

அவரால் எதுவும் பேச முடியவில்லை. அவருக்கும் என்னைப்போல நெகிழ்ச்சி இருந்திருக்குமோ எனத் தெரியவில்லை.

எத்தனை காதுத் திருகல்கள்? எவ்வளவு பிரம்படி இந்தக் கரங்களால்…?
எத்தனை சாக்பீஸ் எழுத்துக்கள் அந்தக் கருப்புத் திரையில் ?

கொஞ்சம் இறுக்கமான அந்த வீடு திடீரென மங்களமாய் ஆனது.

”நான் உங்களையெல்லாம் கொஞ்சம் ஸ்ரமப்படுத்திட்டேன்; என் மன்னிப்பு.”

”அதெல்லாம் ஒண்ணுமில்லை.”

”தாத்தாவைப் பார்க்க வந்ததில் எங்களுக்கு ரொம்பச் சந்தோஷம்….ரெண்டு மாசத்தில் அவர் திருநக்ஷத்திரம் வரது. அவசியம் சொல்றேன்; நீங்க வாங்கோ.”

”சாருக்கு இப்ப என்ன வயசு?”

”நவம்பர் தாண்டினா நூத்தி மூணு…”

நான் பள்ளியில் படிக்காது போனது, கிளாஸ் கட் செய்தது, மக்காய் இருந்த நாட்கள் எல்லாம் அவரைப் பார்த்தபின் தப்பாகப் படவில்லை!

அவர் எனக்கு மந்தவெளிப் பாபநாசம்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *