– மீனாட்சி பாலகணேஷ்.

 

நின்னைப்போல் பாவை தெரியுதடீ!

 

வீணையின் சுநாதம் எழுந்து அந்தப் பெரிய அறையை நிறைக்கின்றது. ‘விறு விறு’வென்ற ஒரு ராகத்தின் ஸ்வரக் கோர்வையைப் பின் தொடரும் ஒரு வாசிப்பு அருமையான கமகங்கள் நிறைந்து மனத்தை மயக்கும் வகையில் அநாயாசமாக வீணை வித்தகனான ஆசானின் வீணையிலிருந்து எழுகின்றது. அதனைத் திரைக்குப் பின் அமர்ந்துள்ள அவரது மாணவி அப்படியே திரும்ப வாசித்துக் காட்ட வேண்டும்… அவளும் முயற்சிக்கிறாள். குருவுக்கேற்ற மாணவி தான்… ஆயினும் சோதனையாக, ஒன்று, இரண்டு, மூன்று, இன்னும் நான்காவது முறையாகவும் ஸ்வரம் தப்புகின்றது. ஆசானுக்குச் சினம் பொங்கியெழுகின்றது. ஊனம் அவளது உடலில் தானே! அவளுடைய இசை ஊனம் கொண்டதாக இதுநாள் வரை அவர் கேட்டதில்லை! இது என்ன அநியாயம்? ஏன் இவ்வாறு தவறு செய்கிறாள் இந்த உடல் ஊனமுற்ற பெண்?

“ஏய் கூனிப் பெண்ணே! உனக்கும் சங்கீதத்திற்கும் ஏணி வைத்தாலும் எட்டாது போல இருக்கிறதே! என்ன அபஸ்வரம்! முட்டாள்!” என ஆத்திரத்தில் இரைகிறார் அந்த ஆசான்!

“அட மூட ஆசானே! குஷ்ட ரோகியான உமக்கு என்னைக் கூனியென்று கூப்பிட எவ்வளவு நெஞ்சழுத்தம் வேண்டும்? யார் நீர்?,” என இரைந்த அந்தப் பெண், தோழிகளிடம், “அடி பெண்களே! அந்தத் திரையை விலக்குங்கள். இத்தனை நாள் எனக்கு வீணை வாசிக்கக் கற்றுக் கொடுத்த அந்தப் போலி குரு யார் எனப் பார்க்கலாம்,” எனக் கூறுகிறாள்.

திரை விலக்கப்படுகிறது. கூனியென்று கூறப்பட்ட இளவரசி அழகும் நளினமும் ஓருருக் கொண்டு அமைந்த எழிலரசியாக நின்றாள். வயது முதிர்ந்த குஷ்டரோகியென அறிவிக்கப் பட்டிருந்த ஆசானோ ஆண்மையும் கம்பீரமும் பொங்கும் திருமகனாகக் காட்சியளித்தான். ஒருவரையொருவர் சினம் பொங்க நோக்கிய கண்கள், கணப்பொழுதில் குணம் மாறி, முதலில், வியப்பு, திகைப்பு இவைகளை வெளிப்படுத்திப் பின் மகிழ்ச்சி, மெல்லக் கனிந்த நாணம், உடன் தொடர்ந்த காதல் என மாறி நோக்கியதால், ஆர்வமும் ஆசையும் பொங்க ஒருவரையொருவர் மானசீகமாகத் தழுவி நின்றனர்: தாபத்தில் துடித்தனர்! யாரிவர்கள்?

Vasavadathaவாசவதத்தை என்ற பேரழகி, உஜ்ஜயினி நகர மன்னன் பிரச்சோதனனின் அருமை மகள். ஆணழகனான வத்ஸ தேசத்து இளம் அரசன் உதயணன் வீணையை அற்புதமாக இசைத்து யானைகளை மயக்கி அடக்கியாள வல்லவன் எனக் கேள்விப்பட்டு, பிரச்சோதனன் அவனைத் தந்திரமாக ஒரு சூழ்ச்சி செய்து சிறைப் படுத்துகிறான். பின் தனக்கு அந்த இசையைக் கற்றுத் தருமாறு கேட்கிறான். ஆனால் உதயணன் ஒரு குருவிற்குரிய மரியாதையைப் பிரச்சோதனன் தனக்களிக்க வேண்டுமென நிபந்தனை விதிப்பதை அவனால் ஒப்புக் கொள்ள இயலவில்லை.

ஆகவே தனது மகளான வாசவதத்தையை வீணை பயில உதயணனிடம் அனுப்புகிறான். இருவருக்கும் இடையே ஒரு திரை தொங்குகின்றது. ஏனெனில் உதயணனிடம் அவனுடைய மாணவி ஒரு அவலட்சணமான கூனி என்றும், வாசவதத்தையிடம் அவளது குரு ஒரு தொழுநோயாளி, பார்க்கக் கூடாதவன் என்றும் கூறப்படுகின்றது.

இன்னார்க்கு இன்னார் என்று தேவன் எழுதி வைத்தால் அது நிறைவேறித் தானே தீரும்? இன்று அது நிகழ வேண்டியதாயிருந்தது. நிகழ்ந்தது! வாசவதத்தையும் உதயணனும் காதல் வயப்பட்டனர். உதயணனின் மதியூக மந்திரி யூகியின் தந்திரத்தாலும், வாசவதத்தையின் தோழியரின் உதவியாலும் இருவரும் யானை மீதேறித் தப்பி உதயணனின் நாட்டை அடைந்து மணம் புரிந்து கொண்டு மகிழ்ந்து வாழ்கின்றனர். எல்லாக் காதல் கதைகளும் போலத்தானே இது என எண்ணினால் நாம் தான் அறியாதவர்களாவோம்!

வாசவதத்தையிடம் கொண்ட தீராக்காதலால், உதயணன் பொழுதினை அவளுடனேயே இன்பமாகக் கழித்து நாட்டின் நலனைப் புறக்கணிக்க லானான். எதிரிகள் காத்திருப்பது இத்தகைய சந்தர்ப்பங்களுக்காகத்தானே?

*****

காதல் பெண்ணையும் ஆணையும் வெவ்வேறு விதங்களில் செயல்பட வைக்கிறது. காதல் வயப்பட்ட ஆண்மகன் அந்தப் பொழுதில் அதனைத் தவிர வேறு சிந்தனை அற்றவனாகிறான். ஆனால் பெண்ணோ நான்கினையும் சிந்திக்கிறாள். (இதற்கு விதிவிலக்குகளும் உண்டு!)

உதயணன் – வாசவதத்தை காதலும் இத்தகைய சோதனைகளுக்கு உள்ளாகின்றது. இதில் வாசவதத்தை எதிர்கொண்ட சோதனை தான் மிகப்பெரிது. காதற்கணவனோடு உறவாடி மகிழ்ந்தபோது அப்பேதை தன்னை எதிர் நோக்கி இருந்த சோதனைகளை அறியாள்.

பகைவர்கள் நாட்டைக் கைப்பற்றிக் கொண்டனர். உதயணனும் வாசவதத்தையும் பாதுகாப்பான ஓரிடத்தில் சேர்ந்தனர். அப்போதும் மன்னன் நாட்டைப் பற்றிக் கவலை கொள்ளாது, வாசவதத்தையுடன் காதலின்பத்தில் மகிழ்ந்திருந்தான்……

ஒருநாள்,…….
உதயணன் வேட்டைக்குச் சென்றிருந்த சமயம் மந்திரி யூகி அவளிடம் வந்து கூறுவான்: “என் தாய் அன்னவளே! தாங்கள் எனக்கு ஒரு வரம் தர வேண்டும். தாங்கள் சில நாட்கள் நமது மன்னனைப் பிரிந்திருக்க வேண்டும். நாமிழந்த நிலமடந்தை நம்மைத் திரும்ப அடைய நீ இந்த செயலைச் செய்ய வேண்டும்,” எனக் கேட்டு, அவள் இசைந்ததும் அவளுடன் மறைந்தேகினான்.

என்னுடைய நற்றாயேநீ எனக்கொரு வரம்கொடு
நின்னரசன் நின்னைவிட்டு நீங்கும்சில நாளன்றி
நன்னில மடந்தைநமக்கு ஆகுவதும் இல்லையே
என்ன உடன்பட்டனள் இயல்புடன் கரந்தனன்
(உதயணகுமார காவியம்)

இங்கு நாம் ஒன்றை உணர வேண்டும். காதல் என்பது இருவர் சம்பந்தப்பட்டதாயினும், அவ்விருவரும் கடமையால் பல கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றனர். அதுவும் அரசனாயின், நாட்டின் நலனே முதன்மையானதாகும். காதலும் இரண்டாம் பட்சமாகி விடவேண்டும் என்பது நியதி! காதலுக்காக முடி துறந்த அரசர்களும் உண்டு! அது வேறு கதை! இங்கு மன்னன் காதலால் மதியிழந்தான்; மந்திரி சுட்டிட மன்னனின் காதல் மனையாள் நாட்டினைத் திரும்பப் பெற அவனைச் சில நாள் பிரிய ஒப்புக் கொண்டாள். அதன் விளைவுகளைப் பற்றிச் சிறிதும் சிந்தித்தாளில்லை! விதி இங்கும் காதலர் வாழ்வில் விளையாடுகின்றது. தன் காதல் கணவன், நாட்டையிழந்து இகழ்ச்சியடைவதனை அவள் விரும்பவில்லை. அதற்காக ஒரு சிறு பிரிவை அவளால் பொறுத்துக் கொள்ள இயலும் அல்லவா?

அவளை வேறிடம் அனுப்பிய யூகி, அவளிருந்த இடத்திற்கு, யாருமறியாமல் தீயிட்டு, வாசவதத்தை, தீயில் சிக்கி இறந்ததாகக் கதை புனைகின்றான். வேட்டையிலிருந்து திரும்பிய உதயணன், அழுது, புலம்பி அரற்றுகிறான். வாசவதத்தையிடம் அவன் கொண்டிருந்த எல்லையற்ற காதல் இதனால் நமக்கு விளங்குகிறது.

பகைவர் மார்பில் புண்செய்து விளங்கும் வேற்படையை உடைய அழகிய ஆண்மகன் மன்னன் உதயணன். (இங்கு காதலின்பத்தில் ஈடுபட்டு நாட்டை இழந்ததனால் உதயணன் வீரத்தில் குறைவு பட்டு விடவில்லை என எடுத்துக் காட்டுகின்றார் புலவர்! அவன் காதலின் உயர்வே விளங்குகிறது) அவன் வாசவதத்தையை, “பிரச்சோதனன் செய்த தவத்தால் பிறந்தவளே! உலகிற்குப் பெருவிளக்கே! பெண்குலத்தின் பெருவிளக்கே!” எனவெல்லாம் கூறி, தனது கண்களைத் தன் பேரெழிலால் விளக்கும் அந்தப் பெண்ணரசியை எண்ணி எண்ணிப் புலம்பினான் உதயணன்.

மண்விளக்கம் ஆகிநீ வரத்தின் எய்தி வந்தனை
பெண்விளக்கம் ஆகிநீ பெறற்குஅரியை என்றுதன்
கண்விளக்கு காரிகையைக் காதலித்து இரங்குவான்
புண்விளக்கில் அங்குவேல் பொற்புடைய மன்னவன்
(உதயணகுமார காவியம்)

இதனால் வாசவதத்தையின் அழகு வடிவு தொடர்பானது மட்டுமல்ல எனத் தெளிவாகின்றது! கணவனின் கடமைக்கு உதவுவதால் அவள் உலகிற்கும் பெண்குலத்திற்கும் பெருவிளக்கு! வடிவினால் மட்டுமின்றி உள்ளத்துப் பெருந்தன்மையாலும், கனிவினாலும், பேரெழில் நிரம்பப் பெற்றுக் கணவன் கண்களை (உள்ளத்தையும்) தன் பேரெழிலால் நிரப்புபவள் என்கிறார்! அத்தகையவளிடம் உதயணன் கொண்ட காதல் எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என உணர முடிகின்றதல்லவா?

மதிமந்திரி யூகியின் தந்திரம் என்னவென்றால், மகத நாட்டு மன்னனின் தங்கை பத்மாவதியை உதயணனுக்கு மணமுடிப்பது என்பது. அதனால், மகத நாட்டுப் பெரும் படையின் துணையுடன் உதயணன் தனது வத்ஸ நாட்டைப் பெறலாம் எனக் கணக்குப் போட்டான். அவந்திகா எனும் பெயருடன் ஒரு சாதாரணப் பெண்ணைப் போல் ஆடையணி பூண்ட அரசி வாசவதத்தை பத்மாவதியின் பொறுப்பில் விடப்படுகிறாள். அவளுக்குப் பணிப்பெண்/ தோழி போலச் செயல்படுகிறாள்.

காதலில் தன் வயமிழந்த ஆண்மகன் கூற்றாக, ‘பார்த்த இடத்திலெல்லாம் உன்னைப் போலவே பாவை தெரியுதடி,’ எனப் பாடி வைத்தார் பாரதியார். காமன் கோவிலுக்கு வரும் பத்மாவதியைக் கண்ட உதயணன், ‘வாசவதத்தை திரும்ப வந்தனள்,’ என எண்ணி மயங்குகிறான். அவளை மணக்கவும் இசைகிறான்.

திருமணமும் நடக்கின்றது. மகத மன்னன் உதவியுடன் தான் இழந்த நாட்டைப் போரிட்டு வெல்கிறான் உதயணன்.

ஸ்வப்ன வாசவதத்தம் என்ற பாஸனின் சமஸ்கிருத நூல் இது தொடர்பான நிகழ்ச்சிகளை அழகுற ஒரு நாடகமாகப் புனைந்து வாசவதத்தையின் குணநலன்களை மிக உயர்வாகச் சித்தரிக்கின்றது. 3-ம் நூற்றாண்டில் புனையப்பட்ட நாடக நூல் இது ஆகும். உதயண குமார காவியமும் பெருங்கதையும் இதனைத் தழுவி, சிறிது வித்தியாசமாகப் புனையப்பட்டனவாகும்.

பத்மாவதியின் தோழிப்பெண்ணான அவந்திகா எனும் வாசவதத்தை, தன் துயரங்களை எண்ணித் தனிமையில் வாடுகிறாள். பத்மாவதி மணக்க விழைவது வத்ஸ நாட்டு மன்னனான தன் காதல் கணவன் உதயணனைத் தான் என அறிந்த போதில் பேதை உள்ளம் என்ன பாடு பட்டிருக்கும்?

வாசவதத்தை- உதயணன் காதல் மணத்தைப் பற்றி அறிந்திருந்த பத்மாவதி, “என்னை விட யாரும் உதயணன் மேல் அதிகக் காதல் கொண்டிருக்க இயலாது,” எனும்போது, தன்னையும் அறியாமல், “இல்லை, இல்லை, வாசவதத்தையின் காதல் இன்னும் உயர்வானது,” எனக் கூறத் துடிக்கிறாள். (ஆம் என நாம் உய்த்துணருகிறோம்; கணவனின் நாட்டின் நலனுக்காக அவள் செய்யும் தியாகம் தான் எத்துணை உயர்வானது? காதலுக்காகவன்றோ அந்தத் தியாகம் செய்யப்படுகின்றது?)

மேலும் வாசவதத்தை எந்தச் சூழலிலும் மந்திரி யூகிக்குக் கொடுத்த வாக்கின்படி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பொறுமை காக்கிறாள். ஒரு கட்டத்தில் பத்மாவதிக்குத் தலைவலி வரும்போது, “எனது தலைவனுக்கு பத்மாவதியாவது ஆறுதல் தரும் ஒரு துணையாக இருப்பாள் என எண்ணினேன்; அவளுமா தலைவலியில் துடிக்கிறாள்,” என எண்ணிக் கலங்குகிறாள் வாசவதத்தை. அவள் தலைவலிக்குத் தைலம் பூசி சரிப்படுத்த அவளுடைய அறையை நோக்கி விரைகிறாள். முன்பே பத்மாவதியைக் காண அங்கு வந்திருக்கும் உதயணன், அவள் அங்கு இல்லாமையால், நன்றாகப் போர்த்துக் கொண்டு அந்த அழகான குளிர்ச்சியான அறையில் நல்ல உறக்கத்தில் ஆழ்ந்திருக்கிறான். அதனை வாசவதத்தை அறிந்தாளில்லை.

பத்மாவதி என எண்ணிக் கொண்டு அவளருகே அமர முயலும்போது உறக்கத்தில் கனவு கண்ட உதயணன், “வாசவதத்தா, என் உயிரே!” எனக் கூறக் கேட்டுத் திடுக்கிடுகிறாள். இன்னும் அவனுக்குத் தன்பால் உள்ள அன்பு இம்மியும் மாறாது இருப்பது உணர்ந்து மகிழ்ந்தாலும், தன் தலைமறைவு வெளியானால் காரியம் கெட்டு விடுமே என் விரைவாக அங்கிருந்து அகல முயற்சிக்கிறாள். ஆயினும், உறக்கத்திலிருந்து எழுந்து விட்ட உதயணன் அவள் உயிரோடு இருப்பதைக் கண்டு அறிந்து கொள்கிறான். இதுவே அவன் புத்துணர்வு கொள்ளவும் வழிவகுக்கின்றது.

இதே சமயம் அவனது படைகளும் வந்து சேருகின்றன; அவை மகத நாட்டு மன்னன் படைகளுடன் சேர்ந்து எதிரியுடன் போரிட உதயணன் இழந்த நாட்டைத் திரும்பப் பெறுகிறான். தலைமறைவாயிருந்த யூகி திரும்ப வர, அவந்திகா தான் வாசவதத்தை என்பது வெளியாகின்றது. பின் என்ன? ஆனந்தம், ஆனந்தம், ஆனந்தம் தான்……

*****

இதில் நாம் புரிந்து கொண்டு மகிழ வேண்டிய அம்சம் வாசவதத்தையின் உயரிய பண்புகள் தாம்- உதயணன் பால் கொண்ட காதல் ஒன்றே அவள் வாழ்வில் எதிர்ப்பட்ட இடையூறுகளை எதிர்கொண்டு சமாளிக்கத் துணை போந்தது. பத்மாவதியை உதயணன் மணந்து அரசியாக்கிக் கொண்ட போதும், பத்மாவதி தான் அவன் மீது கொண்ட காதலைப் பற்றி வாய் ஓயாது பேசும்போதும், ‘இனி என்ன?’, ‘அடுத்து என் நிலை என்ன?’ என்ற கொடிய வினாக்கள் வாசவதத்தையை நோக்கி எழுப்பப் படுகின்றன. விடை காண இயலாது தடுமாறுகிறாள். இருப்பினும் கணவனின் நலனும், அமைதியான இதயமும், வெற்றி நிறைந்த வாழ்வும் தான் அவளுக்கு முக்கியமானவைகளாக இருக்கின்றன.

கணவனிடம் உண்மையான காதல் கொண்ட ஒரு அன்பு மனைவியின் கடமைகள் என இதனை எடை போட்டு விடக் கூடாது. உதயணனின் உள்ளத்தை விட்டு அவள் நீங்காமல் இருப்பதும், அவள் (பொய்யான) இறப்பினால் அவன் புலம்புவதும், பின் பத்மாவதியின் உருவிலே அவளைக் கண்டு மணம் புரிந்து கொண்டதுமே இந்தக் காதல் எவ்விதமான நியதிகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றாகும் எனக் கருத வழி வகுக்கின்றது. காதலின் பொன்வீதியில் நடைபயிலும் இளம் உள்ளங்கள் இவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியவை நிரம்பவே உள்ளன!

*****

Picture Courtesy:

Thanks to …
Artist: Rajasekharan Parameswaran
Title: Vasavadatha
Copyright: Rajasekharan
http://www.artslant.com/ny/works/show/107303
http://artistrajasekharan.blogspot.in/
https://www.facebook.com/rajasekharanp

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *