தேமொழி.

இனபேதம், குறிப்பாக வெள்ளையர் உயர்ந்தவர் என்ற எண்ணம் பரவலாக அமெரிக்காவில் இருந்தது, இருக்கிறது….இன்றும் கூட !!!!

சரியாக 150 ஆண்டுகளுக்கு முன்னர் கறுப்பினத்தவரை அடிமையாக அடக்கி ஆள்வதை தடை செய்ததில் துவங்கிய அமெரிக்க உள்நாட்டுப் போர் நிகழ்ந்த காலத்தில், அமெரிக்காவின் தென்மாநிலங்கள் “கன்ஃபெடரேட்” (Confederate) கூட்டமைப்பாக அமெரிக்க வடமாநிலங்களுடன் போரைத் துவக்கியது. கறுப்பின உழைப்பாளிகளை அடிமைகளாக, தங்களது சொத்துகளாக வைத்திருப்பது தென்மாநில மக்களுக்கு, குறிப்பாகப் பெரிய நிலபுலன்கள் கொண்ட நிலக்கிழார்களுக்கு மிகவும் உதவிய சமூக அமைப்பு. தனிமனித உரிமை அடிப்படைக் கருத்தினைக் கொண்ட வடமாநிலத்தவர் இதனை எதிர்த்தனர், குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் அடிமைகளை விடுவித்தவர், கறுப்பின மக்களுக்கு சுதந்திரம் வழங்கியவர்  என்பது உலக வரலாற்றில் நாம் அறிந்தது. அப்பொழுது தென் மாநிலங்கள் ஒருங்கிணைந்து, ஆரிய இன மேன்மையின் அறிகுறியாக ‘கன்ஃபெடரேட் கொடியை’ தங்களுக்குரிய அடையாளமாகக் கொண்டது.

இக்கொடியை தென்மாநில அரசுகளும், நகர்களும் கூட தங்களது வரலாற்றின் சிறப்பாக வைத்திருந்தன, வைத்திருக்கின்றன. இது கறுப்பர்கள் அடிமைகளாக இருந்தவர்கள் என்பதை மறைமுகமாகக் குறிப்பிடும், ஆரிய இன உயர்வு என்ற கருத்தை நினைவூட்டும் வண்ணம் இருப்பதை இக்கால அமெரிக்கர் பலர் விரும்புவதில்லை. கொடியை நீக்கக் கோரிக்கை வைத்த வண்ணம் இருப்பர். ஆனால் நீக்கக்கூடாது என்று நிறவெறி கொண்ட “கே.கே.கே” (KKK – Ku Klux Klan) வெள்ளையர் இனத்தவர் இதனை எதிர்த்த வண்ணம் இருப்பர். வெள்ளையர்கள் இது தென்மாநில பாரம்பரியம், மரபின் அறிகுறி என்று வாதாட, இக்கொடியை விரும்பாதவர்களோ இது மறக்கப்படவேண்டிய இனபேதம், வெறுப்பின் அறிகுறி என்று வாதிப்பர்.

சமீபத்தில் அமெரிக்காவில் கறுப்பினர் பலர் காவல்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கைகளால் உயிர் இழந்த சில நிகழ்வுகள் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இனக்கலவரங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைவிடத் தொடங்கியது. இந்தச் சூழ்நிலையில் தென்கரோலினா மாநிலம் ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வை அரங்கேற்றியது. தென்கரோலினா மாநில ஆளுநர் மாண்புமிகு ‘நிக்கி ஹேலி‘ (Nikki Haley – Nimrata Nikki Randhawa Haley) அவர்கள் இனி கன்ஃபெடரேட் கொடி தென்கரோலினா அரசின் தலைமையகத்தில் பறக்கக்கூடாது என்று ஜூலை 10, 2015 அன்று சட்டவரையறை ஒன்றில் கையெழுத்திட்டார்.

Nikki Haley

(பார்க்க காணொளி: https://www.youtube.com/watch?v=GpfEzZUFWfY).

இது அமெரிக்க வரலாற்றில் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சி. இதனை நிகழ்த்திய ஆளுநர் இந்திய சீக்கிய வம்சாவளியைச் சேர்ந்த பெண்மணியான நிக்கி என்பதில் இந்தியர் அனைவரும் பெருமை கொள்ள வேண்டிய ஒரு நிகழ்வும் கூட.

kkk

இதனை எதிர்த்தனர் கே.கே.கே குழுவினர். போராட்ட நாளில் கறுப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையே நடந்த மோதலில் சிலர் கைதும் செய்யப்பட்டனர். இந்தப் போராட்டத்தில் கோடை வெயிலின் காரணமாக பலர் மயங்கி விழத் தொடங்கினர். வயதான வெள்ளையர் ஒருவர் தள்ளாடத் துவங்கியபொழுது அவரைத் தாங்கிப்பிடித்து உதவி செய்தவர் ஒரு கறுப்பின காவல்துறை அதிகாரியான ‘ஆஃபீசர் லீராய் ஸ்மித்’ (Officer Leroy Smith) என்பவர்.

aa73cc20-2e5d-11e5-99c7-15c5718d0c11_caacace70b1695207c0f6a7067003947

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்து விடல்” என்பதைப் போல தோற்றமளித்த அந்தப்படம் கண்டு நெகிழ்ந்த பலர் இணையத்தில் அதிகமாக தங்களுக்குள் பகிரத் தொடங்கினர். இதைக் குறித்து பத்திரிக்கையாளர்கள் அவரிடம் வினவியபொழுது ஆஃபீசர் லீராய் ஸ்மித் தனது கடமையை செய்ததாகக் கூறினார்.

NEWS & PICTURES Source:
Black officer helps white supremacist suffering from heat at KKK rally, Powerful image from South Carolina Confederate flag protest goes viral, By Dylan Stablefor, July 19, 2015
http://news.yahoo.com/black-cop-kkk-rally-south-carolina-heat-viral-213215780.html

Black Officer Helps White Supremacist Suffering From Heat at KKK Rally, By orb204, July 19, 2015
http://trinilulz.com/black-officer-helps-white-supremacist-suffering-from-heat-at-kkk-rally/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *