அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – (6)

5

கீதா சாம்பசிவம்

 

இத்துனை சிரமங்களைப் பிறருக்கும் கொடுத்து கட்டப்படும் கட்டிடங்களில் குடியிருக்க வருவோரின் நிலை பற்றியும் சற்று பார்ப்போம்;

பொதுவாக நடுத்தரக் குடிமக்களே தங்களுக்கென ஒரு சொந்த வீடு வேண்டும் என்று வாங்க நினைக்கின்றனர்.  இவர்களில் வெகு சிலர் வருமான வரியில் இருந்து தப்பிக்கக் கடன் பெற்றிருப்பதைக் காட்ட வேண்டியும் வாங்குகின்றனர்.  இதில் முதலில் உள்ளவர்கள் அவர்களே குடியும் வந்து விடுவார்கள் பின்னர் சொன்னவர்கள் வாடகைக்கு விட்டு விடுவார்கள்.  வீட்டைச் சுற்றி இருக்கும் இடமே இரண்டே இரண்டு அடிதான்.  இப்போது தான் தரைத் தளத்தில் கட்டாயமாகக் கார் பார்க்கிங்கிற்கு இடம் விட்டாக வேண்டும் என்று நீதி மன்ற உத்தரவு உள்ளது.  பத்து வருடங்கள் முன் வரையிலும் அது கட்டாயம் இல்லை.  ஆகவே கீழ தளம் , மேல் தளம் என்று இரு தளங்களிலும் முழுவதும் கட்டிடம் கட்டுவார்கள். கீழே கார் பார்க்கிங் செய்வதற்கு இடம் விடுவதால் இப்போதெல்லாம் இரண்டு தளங்களுக்கு மட்டும் அனுமதி போலுள்ளது.  அந்த இடுக்கிலேயும் கீழே இரண்டு குடியிருப்புகளாவது கட்டுகிறார்கள். அவைகள் புறாக் கூண்டுகள் போல்  தான் இருக்கும் . அருகிலுள்ள வீடுகளின் சுவர் மறைக்கும் என்பதோடு, அந்தக் குடியிருப்புக் கட்டப்படும் இடம்  இரு பக்கத்து வீடுகளின் கொல்லைப் புறமாக வேறு வரும். ஒரு வேளை அங்கே கட்டிடம் இல்லாமல் தோட்டம் இருந்தால் பிரச்சனை இல்லை. ஆனால் அவ்வாறன்றி கட்டிடம் இருந்தால் வெளிச்சமே சுத்தமாக வராது. இருண்டு போய்த்தான் இருக்கும். பின் பக்கம் வீடு இருந்தால் அந்த வீட்டின் கழிவறையின் பக்கம் சமையலறை இருக்குமாறு வரலாம்.  அதோடு அந்த வீட்டின் செப்டிக் டாங்க்கும் இருக்கலாம். பக்கத்து வீடுகளின் குளியலறை, கழிவறையும் வரலாம்.  இந்த இடத்திலே தான் அவர்களின் தலைவாசல் அமையும்.  அதை உள் பக்கமாக அமைத்தால் இந்தப் பிரச்சனை இருக்காது. ஆனால்  வெளிப் பக்கமாகத் தான் வைக்கிறார்கள்.அனைத்து அறைகளும் பத்துக்குப் பத்து, பத்துக்குப் பனிரண்டு என்ற அளவில் இருந்தாலே அதிகம்.  அடுப்பிலிருந்து துடுப்பு வரையிலும், பீரோவில் இருந்து கட்டில் வரையிலும் அனைத்தும் இருந்தால் பிரச்சனை தான்.

பெரும்பாலான குடியிருப்புகளில் சமையலறையில் ஒருவர் மட்டுமே நின்று சமைக்கலாம். பத்துக்கு ஐந்து அல்லது பத்துக்கு ஏழுக்குள் தான் சமையலறை இருக்கிறது.  அதிலேயே அனைத்து சாமான்களையும் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை சாமான்கள் குறைவாக இருந்தால் பிரச்னை இல்லை.  ஆனால் நம் மக்கள் சாமான்களைச் சேர்க்கும் வழக்கம் உள்ளவர்கள ஆயிற்றே!  ஹால் என்று சொல்லப் படும் வரவேற்பு அறையில் தான் ஒரு பக்கம் தடுத்தோ, தடுக்காமலோ உண்ணும் அறையாக பயன் படுத்த வேண்டும்.அதோடு வரவேற்பறையாகவும் பயன் படுத்தியாக வேண்டும்.  இன்றைய நாட்களில் பெரிய வீடு என்றால் பராமரிப்பதில் சிரமம் என்றொரு எண்ணமும்  பலருக்கும் உள்ளது.  அதனாலேயே குடியிருப்புகளை விரும்புகின்றனர்.  அவரவர் தாங்கள் இருக்கும் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொண்டாலே போதும்.  ஆனால் இதிலும் எல்லைத் தகராறு வந்து விடுகிறது.  அவர்களுக்குள்ளேயே ஒற்றுமை இருப்பதில்லை.  மாடிப்படிகள் அனைவருக்குமே பொது என்றாலும் கீழே இருப்பவர்கள் முதல் தளத்தில் இருப்பவர்களும், இரண்டாம் தளத்தில் இருப்பவர்களும் தான் அதிகம் பயன் படுத்துகிறார்கள், நாம் எப்போதாவது துணி உலர்த்த மட்டும் தானே போகிறோம் என நினைக்கிறார்கள். ஆகவே அந்த இடத்தைச் சுத்தம் செய்வதில் யார் செய்வது என்ற போட்டி வருகிறது.


இந்தத் தொல்லை எல்லாம் வேண்டாம்; பெருக்கிச் சுத்தப் படுத்த ஆளை நியமித்து விடலாம் என எண்ணி ஆளைப் போட்டால், அதற்கும் பணம் செலவு செய்ய வேண்டும்.எவரும் சரியான நேரத்தில் பணம் கொடுப்பதும் இல்லை.   அந்த தலைவர் பாடு தான் திண்டாட்டம்.  அவர் தன்  கைக்காசைக் கொடுத்து விட்டு பின்னர் வசூல் பண்ண வேண்டியதாகவே இருக்கும்.  ஒரு சிலர் கொடுக்காமலேயே இழுத்தடிப்பார்கள்.  இன்னும் சிலர் தலைவராய் இருந்தால் கொடுத்தவர்களைக் கொடுக்கலைன்னும் சொல்லி விடுவதுண்டு. இது போல் சம்பவம் எங்கள் அருகண்மை குடியிருப்பில் நடந்துள்ளது.  ஆகவே இது ஒரு பெரும் தொல்லை.  இதோடு முடிகிற தொல்லையும் அல்ல இது.

பாதாளச் சாக்கடைத் திட்டமே செயல்படுத்தப் படாததால் இங்கே எல்லா வீடுகளிலும் செப்டிக் டாங்க் தான்.  ஒரு வீடும், அதிலே குறைந்த பட்சமாய் ஆறிலிருந்து பத்து நபர்களுக்குள் இருந்த இடத்தில் இப்போது எட்டு வீடுகளும், ஒரு வீட்டுக்குக் குறைந்தது நான்கு நபர்களுமாக முப்பத்திரண்டு நபர்களும் கழிவறை பயன் படுத்துவார்களே!  அதற்கு ஏற்றாற்போல் அல்லவா கட்ட வேண்டும்.  அப்படிக் கட்டுவதில்லை.  செப்டிக் டாங்க்கில் கழிவறைத் தண்ணீர் அதிகமாக வழிந்து வெளியே ஓடி வந்து தெருவிற்குள் போகிறது.  முந்தைய ஜெயலலிதா ஆட்சியிலே கட்டிய மழை நீர் வடிகால் கால்வாயில் அதை விட்டிருக்கிறார்கள்.  எங்கள் வீடு தாண்டி இரண்டு வீட்டிற்கு அப்பால் அந்தக் கால்வாய் முற்றுப் பெறாததால் கழிவு நீர் அப்படியே நிற்கிறது.  ஆகவே நாங்கள் எங்கள் வீட்டின் பக்கம் முனிசிபல் கமிஷனரிடம் சொல்லி விட்டு கால்வாயை மூடி விட்டோம்.  பக்கத்திலோ கழிவு நீர் வெளியே போக வழியில்லாமல் அந்தக் கால்வாயில் விட்டு அதுவும் நிரம்பிக் கழிவு நீர் சாலையிலேயும் வரும்.  மழை பெய்தால் கேட்கவே வேண்டாம்.  இத்தனைக்கும்  மாதம் ஒரு முறை வந்த கழிவு நீர் ஊர்தி  இப்போது மாதம் இரு முறை வந்து சுத்தம் செய்தாலும் மீண்டும் மீண்டும் நிரம்பி வழிகிறது.

ஒரு முறை சுத்தம் செய்வதற்கான செலவு இரண்டாயிரம் ரூபாய்க்கும் மேல்   ஆகிறது.  அனைத்துக் குடியிருப்புச் சொந்தக்காரர்களும் இதற்கான செலவைப் பிரித்துக் கொள்ள வேண்டும்.  ஆனால் குடித்தனம் வருகின்றவர்களோ வீட்டுச் சொந்தக்காரர்கள்  இது குறித்தெல்லாம் சொல்லவே இல்லை; நாங்கள் தர முடியாது என்று கூறி விடுகிறார்கள்.  அப்போது அங்கு  இருக்கும் வீட்டு உரிமையாளர்கள்  கையிலிருந்து போட்டு அந்தப் பணத்தைக் கட்டிவிட்டுக் கழிவு நீரை இறைக்க வேண்டும்.  சொந்தக்காரங்கள் வாடகை வசூலிற்கு  வரும் போது  அதற்கான பணத்தைக் கேட்டு வாங்க வேண்டும்.   சொந்தக்காரர்கள் சொல்வதோ நாங்கள் உபயோகிக்காத கழிவறைச் செலவுக்கு நாங்கள் ஏன் கொடுக்க வேண்டும் என்பதே! ஆக மொத்தம் இருவரும் நழுவிக் கொள்ள அந்தச் செலவை அங்கு குடி இருக்கும் சொந்தக்காரர்களால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப் பட வேண்டியதாகி விடுகிறது.

குடியிருப்போர் தொல்லை தொடரும்.

 

 

படத்திற்கு நன்றி.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “அடுக்கு மாடிக் குடியிருப்புகளும் அடக்க முடியாத் தொல்லைகளும் – (6)

  1. நழுவாதே என்றாயிரம் முறை சொன்னேன்.
    கழுவாமல் கழட்டிக்கொள்ளும் கடங்காரனிடன்!

  2. இது மாதிரியான பிரச்சினைகளை சமாளிக்கத்தான் நிறைய ஊர்கள்ல ஒவ்வொரு அப்பார்ட்மெண்டிலும் சொஸைட்டின்னு ஒண்ணை உருவாக்கி அதுல தலைவர், செயலாளர், பொருளாளர், மற்றும் உறுப்பினர்கள்ன்னு ஒரு குழுவே இயங்கும். இந்தக்குழு, அந்த அபார்ட்மெண்டில் இருக்கறவங்கதான் சேர்ந்து ஏற்படுத்துவாங்க. மாசாமாசம் ஒவ்வொரு வீட்லயும் பராமாரிப்புச்செலவுக்காக ஒரு குறிப்பிட்ட தொகையும் வசூல் செய்வாங்க. அதவெச்சுத்தான் பில்டிங்கோட ஒருமாசச்செலவை நடத்தணும்.

    அதாவது செக்யூரிட்டி, தோட்டக்காரர், சுத்தம் செய்பவர்ன்னு எல்லாத்துக்கும் சம்பளம்,… வளாகத்துலயும் தளங்கள்லயும் இருக்கற விளக்குகளுக்கான மின்சாரச்செலவு, தண்ணீருக்கான பில் எல்லாத்தையும் சமாளிக்கணும். தண்ணீர் தட்டுப்பாடு காலங்கள்ல லாரித்தண்ணீருக்கு ஏற்பாடு செஞ்சு தரைத்தளத்துல இருக்கற டேங்கிலும் நிரப்பிவெச்சு வீடுகள்ல தட்டுப்பாடு வராம பார்த்துக்கணும்… இவ்ளோ வேலைகளையும் சொஸைட்டியோட ஒத்துழைப்போட சிறப்பா செய்யற பில்டிங்குகள் நிறையவே இருக்கு கீதாம்மா..

  3. இன்னம்பூரார் ஐயாவுக்கு நன்றி.

    அமைதிச் சாரல்,

    நீங்க சொல்கிற மாதிரியான கட்டிடங்கள் வேண்டும் என்பது தான் என் கருத்தும், இங்கே கட்டுபவை அப்படியானவை அல்ல. படங்களை இணைக்கிறேன். பாருங்கள். அவங்களுக்கும் பிரச்னை. தனி வீட்டுக்காரர்களுக்கு பிரச்னை தான். 🙁

  4. நாங்க இருக்கற அபார்ட்மென்ட்டில் ஐந்து ப்ளாக் இருக்கு. ஒவ்வொரு ப்ளாக்கிற்க்கும் தனிதனி ஆட்கள் வேலைக்கு வுண்டு. அவர்களின் வேலை தினமும் குடிநீர் மோட்டார் / உப்பு தண்ணி மோட்டார் சரியாக போடவேண்டும். டேன்க் கிளீன் செய்தல் மற்ற வேலைகள். பிறகு மாடிப்படிகளை பெருக்க ,கழுவி விட்ட தனி வேலைக்கார அம்மாள் வாரவாரம் வருகின்றனர். இதற்காக அசொசிசெய்ஷனுக்கு மாதம் நானூறு கொடுக்க வேண்டும்

  5. கீதா, உங்கள் ஆதங்கம் புரிகிறது – முழுக்க முழுக்க உங்களோடு உடன்பட வேண்டியிருக்கிறது. பொதுவாகவே சுத்தம் சுகாதாரம் ஆரோக்யம் அழகியல் போன்ற விஷயங்களில் சென்னை வாழ் மக்களின் ஈடுபாடு அதிகமில்லையோ என்று தோன்றுகிறது. ஒவ்வொரு குடியிருப்போர் பகுதியும் ஒரு குழுவால் நிர்வகிக்கப்பட வேண்டும். அங்கே வாடகைக்கோ சொந்தமாக வீடு வாங்கியோ வருபவர்கள் நிச்சயமாக ஒரு அக்ரீமெண்ட்டில் கையோப்பமிட வேண்டும். இன்று கட்டப்படும் நவீன குடியிருப்புகளில் இவ்வாறான பை-லாஸுக்கு கட்டுப்படுவோம் என்பது சொத்தின் பத்திரப்பதிவிலேயே இடம் பெறுகிறது – அதன் அடிப்படையில் ஒரு  நலவாழ்வு சங்கம் உருவாகும் போது அதன் அடிப்படை விதிகளுக்கு ஒவ்வொருவரும் கட்டுப்படுகிறார்கள் – இது நான் கண்முன் பார்க்கும் ஒரு நல்ல பழக்கம். சென்னையிலும் இந்த மாதிரியான ஒரு வழக்கம் வர வேண்டும். உங்கள் பகுதியில் இப்படி ஒரு ஏற்பாட்டைச் செய்ய முடியுமா என்று பாருங்கள்… 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *