நிர்மலா ராகவன்

ஆண்களுடன் போட்டியா?

உனையறிந்தால்1-11111

கேள்வி: `நீ ஒன் தம்பியோட போட்டி போடக்கூடாது. என்ன இருந்தாலும், அவன் ஆம்பளை!’ என் தாய் அடிக்கடி இப்படிக் கூறுகிறார். இது நியாயமாகப் படுகிறதா?

பதில்: நிச்சயம் நியாயம் இல்லை. பருவப்பெண் இருட்டில் தனியாக வெளியே போனால், ஏதாவது அபாயம் விளையலாம் என்று அஞ்சினால், பெண்ணுக்குப் புரியும் வகையில் தாய் அதை விளக்க வேண்டும்.

நெடுங்காலமாகவே பெண்கள் ஆண்களுக்கு அடங்கினவர்களாகவே வாழ்ந்துவிட்டார்கள். இப்போது தங்களுடைய உயரிய நிலையில் மாற்றம் வந்துவிடுமோ என்று ஆண்களுக்குக் கலக்கம் உண்டாவது இயற்கைதான்.

ஒரு காலத்தில், `அது எப்படி பிள்ளை பெற பெண்ணால் மட்டுமே முடிகிறது!’ என்று அதிசயித்த ஆண்கள், அவளுக்கு ஏதோ மாந்திரிக சக்தி இருக்கிறது என்று நம்பினார்களாம்! பல ஆண்கள் அவளுக்குக் குற்றேவல் புரிந்து, பிறக்கும் குழந்தைகள் யாருடையது என்று ஆராயாது, பேதமின்றி வளர்த்தார்களாம்.

உண்மை நிலவரம் புரிந்ததும், ஒரே எரிச்சல் — தாம் எவ்வளவு முட்டாள்களாக, அடங்கிக் கிடந்திருக்கிறோம் என்று.
பெண்ணை அடக்குவதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. குகையில் பலர் சேர்ந்து வாழ்கையில், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வந்தால், அந்த ரத்த வாடையைப் பிடித்துக்கொண்டு காட்டு விலங்குகள் வந்து, எல்லாரையும் வேட்டையாடும் அபாயம் உண்டே!

ஆகவே, அவள் அத்தருணங்களில் தனித்து இருக்க நேர்ந்தது. அதுவே பின்னர், வீட்டு விலக்கு, தீட்டு, சுத்தமில்லை என்ற `பழி’களை அவள் சுமக்கும்படி ஆகிவிட்டது. இயற்கையாக நிகழும் ஒன்று என்னமோ அவள் குற்றம் என்பதுபோல் சிலர் நடத்தத் தலைப்பட்டார்கள். இப்படி, சிறுகச் சிறுக பெண்ணின் நிலை தாழ்த்தப்பட்டுவிட்டது.

ஒரு பெண் ஆண்குழந்தையை ஈன்றெடுத்தால், மிகுந்த பெருமிதம் அடைவாள். அவனுக்கு நிறைய சலுகைகள் உண்டு. `பெண்’ என்றால் சற்றே தாழ்ந்தவள் என்ற மனநிலைக்குத் தன்னைத் தயாராக்கிக் கொண்டிருக்கும் தாய், தான் பெற்ற பெண் குழந்தைக்கும் அதே மனநிலையைப் போதிக்கிறாள்.

`ஆண் எது செய்தாலும் அதைப் பொறுத்துப்போவது பெண்ணின் கடமை!’ என்று வளர்க்கப்படும்போது, எந்தவிதமான வதையையும் ஏற்கிறாள் பெண்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஒரு வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்தவள். சிறு வயதிலிருந்தே பல ஆண்களினால் பாலியல் வதைக்கு ஆளானாள். அது வதை என்றே அவள் உணரவில்லை என்பதுதான் சோகம். `எல்லாரும் என்னைக் கொஞ்சுகிறார்கள்!’ என்று பெருமைப்பட்டுக் கொள்வாள், என்னிடம்.

கல்வியால் சுயமாகச் சிந்திக்கும் திறனைப் பெற்ற ஒரு பெண், `எனக்கு மட்டும் ஏன் தாழ்ந்த நிலை?’ என்று எதிர்க்கும்போது, ஆண்கள் அதிருப்தியுடன் முணுமுணுக்கலாம். ஆனால் எதிர்க்க மாட்டார்கள். அதைச் செய்வதற்குத்தான் பெண்கள் இருக்கிறர்களே!

எல்லாப் பெண்களுமாகச் சேர்ந்து, தங்களிடமிருந்த மாறுபட்டிருக்கும் பெண்ணை `வழிக்கு’க் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். `பிறருடன் ஒத்துப்போக வேண்டும்!’ என்று மிரட்டுகிறார்கள், இல்லை, கெஞ்சுகிறார்கள்.

புறம் பேசுவது, பழி சுமத்துவது, எதிரியைப்போல் பாவிப்பது என்று பல வழிகளைக் கையாண்டு, அவளை மாற்ற முயற்சிக்கிறார்கள்.

`எல்லாம் படிப்பால் வருவது! பெண்களைப் படிக்க வைத்தால் இப்படித்தான்!’ என்று அவள் பெற்ற கல்வியறிவையே தூற்றுகிறார்கள்.

படிப்பறிவு இருந்தாலும், நிறைய பெண்களுக்கு இம்மாதிரியானவர்களை எதிர்த்து நீண்ட காலம் போராடும் மனோபலம் கிடையாது. தாமும் அவர்களுடன் சேர்ந்து, பிற பெண்களைக் கட்டுப்படுத்த ஆரம்பிக்கிறார்கள்.

ஆண்களோ, தமக்குப் போட்டியாகப் பெண்கள் வந்துவிட்டால், தாங்கள் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டியிருக்குமே என்று, `நீங்க திறமையோட இவ்வளவு செய்யறீங்களா! இனிமே நாங்கதான் புடவை கட்டிட்டு, சமைக்கப் போகணும்!’ என்று பெண்களைப் புகழ்வதுபோல, தம் அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

மலேசியாவில், கணவன் மனைவியை அடிப்பதே பல இந்தியப் பெண்கள் விவாகரத்து கோருவதற்குக் காரணமாக இருக்கிறது என்று புள்ளி விவரங்களுடன் நான் எழுதியபோது, `ஒரு வேளை, நீங்க ஒங்க கணவரை அடிக்கிறீங்களோ?’ என்று என்னிடம் கேலியாகக் கேட்டவர்கள் உண்டு.

நான் சிரித்தேன், கேட்டவரின் மடமையை எண்ணிப் பரிதாபப்பட்டு. தம்பதிகளில் யாராவது ஒருவர் இன்னொருவரை அடித்தால்தான் குடும்பம் நடக்குமா, என்ன? கொஞ்சம் நட்பு, கொஞ்சம் வாய்ச்சண்டை என்றுதானே எல்லாக் குடும்பமும் இருக்கும்!

(`எங்களுக்குள்ளே சண்டையே வராது!’ என்று பெருமையுடன் சொல்பவர்கள் — ஒன்று, பொய் சொல்கிறார்கள், இல்லை, யாராவது ஒருவர் அமைதியை நாடி, விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறார், உள்ளுக்குள் புழுங்கியபடி).

ஒரு தாய், தனது மகன், மகள் இருவரையும் பாரபட்சமின்றி நடத்தி, வீட்டு வேலையைச் சமமாகப் பிரித்துக் கொடுத்து, தவறு செய்பவர் யாராக இருந்தாலும் கண்டித்து நடத்தினால், `தான் அபூர்வமான பிறவி!’ என்ற தலைக்கனம் அந்த மகனுக்கு வராது.

`விளையாட்டு’ என்றெண்ணி தங்கையை ஓயாது மட்டம் தட்டும் சிறுவனிடம், `நீ இப்படி நடத்தினால், எல்லா ஆண்களும் இப்படித்தான் என்று அவள் ஏற்பாள். நாளை கல்யாணமானதும், கணவனும் அவளை இப்படி நடத்தும்போது, உணர்ச்சி பூர்வமான வதையை அவள் ஏன் ஏற்கிறாள் என்று நீ வருத்தப்பட நேரிடும்!’ என்று விளக்குங்கள். அதிர்ச்சி ஏற்பட, தன்னை மாற்றிக்கொள்வான். பிற பெண்களையும் மதிக்கக் கற்பான்.

மட்டம் தட்டியோ, பயமுறுத்தப்பட்டோ ஒரு பெண் வளர்க்கப்பட்டால், தன்னம்பிக்கை அற்றுப்போய்விடுமே! அவளுடைய முழுத் திறமைகள் எப்படி வெளிவரும்?

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *