ஸ்ரீதரன்

 

காலை நேரத்தில் ரயில் வண்டி செங்கல்பட்டு ரயில் நிலையத்திற்குள் நுழைந்தது. ராமேஸ்வரத்திலிருந்து வந்து கொண்டிருக்கும் வண்டி அது. ஒரு இளைஞன் ரயிலில் ஏறி எஸ் 7 கம்பார்ட்மெண்டில் அமர்ந்தான். அவன் முகம் குழப்பமாக இருந்தது. அவனுக்கு எதிரே ஒரு வயதான தம்பதியர் அமர்ந்திருந்தனர்.

அப்போது அலைபேசி ஒலித்த்து. அவன் எதிரே இருந்த பெண்மணி அதை எடுத்துப் பேசத் தொடங்கினாள்.

“ ஹலோ, வித்யாவா ? நான் அம்மா பேசறேன். திருச்சியில் சந்துரு மாமா பேத்தி கல்யாணத்திக்குப் போய்விட்டு ரயில் நானும் அப்பாவும் வந்து கொண்டிருக்கோம். கல்யாணத்தில் எல்லோரும் உன்னை விசாரித்தார்கள். ஆமாம் உன் புருஷன் விச்சு ஊருக்குப் போய்விட்டானா? குழந்தை ராது சமுத்தா இருக்காளா? “

“……………………….”

” என்ன? விச்சு  பெங்களுரு போய் வேலையிலேச் சேர்ந்து விட்டானா ? நீ எப்போ பெங்களுரு போகப் போறாய்? “

“………………………..”

“ நீ இப்போ காஞ்சிபுரத்தில் உன் மாமியார் வீட்லே இருக்கியா? அங்கிருந்தே பெங்களுரு  போகப்  போறயா? உன் சாமான்களையெல்லாம் எப்படி அனுப்புவே?

“……………………….”

“ சாமான்களையெல்லாம் உன் வீட்லே கட்டி வச்சிருக்கியா ? பெங்களூரு அட்ரெஸ் அட்டை பெட்டி மேலே எழுதியிருக்கியா ? நான் அப்பாகிட்டே சொல்லி லாரியில் அங்கு  அனுப்பி வைக்கிறேன். உன் நகையை லாக்கரில் வைச்சுட்டயா?”

“…………………”

“ உன் நகையெல்லாம் பத்திரமாய் எவர்சில்வர் சம்படத்தில் வைச்சிருக்கியா? நான் எடுத்து லாக்கரில் வைச்சுடறேன்.

“……………….”

” உன் வீட்டு அட்ரெஸ்தானே? முதல் மாடி, 22, நடுதெரு , நங்க நல்லூர் என்க்கு நல்லா தெரியுமே. ஆமாம் சாவி  யார் கிட்டே இருக்கு ? “

“………………….”

எதிர் பிளாட்டிலே இருக்கிற பட்டாபி சார் வீட்டிலே இருக்கா. வித்யா சாவியை வாங்கிக்கச் சொன்னான்னு சொன்னா சாவியைக் கொடுப்பாரா . ரொம்ப சரி.”

“……………………”

“ நீ எதுக்கும் கவலைப்படாதே. வீட்டுக்குப் போனதும் அப்பா குளிச்சி , சாப்பிட்டு விட்டு ஒரு லாரியை ஏற்பாடு செய்துண்டு உன் வீட்டுக்குப் போவார். இன்னிக்கு சாயந்தரத்துக்குள்ளே சாமானை எல்லாம் பெங்களுரு அனுப்பி விடுவார்.”

“………………………”

“ தாம்பரம் வந்தாச்சு. பேசினது போதும். அலைபேசியைக் கொடு” என்றார் அந்தப் பெண்மணியின் கணவர்.

” நான் சமத்தா எல்லா விவரமும் கேட்டுத் தெரிஞ்சுண்டேன் பார்த்தேளா” என்றாள் அவள் சிரித்துக்கொண்டே.

எதிரே அந்தப்  பெண்மணி பேசியதை எல்லாம் தன் மனத்தில் பதிவு செய்து கொண்ட அந்த இளைஞன் அப்போதுதான் செங்கல்பட்டு சிறைச்சாலையிலிருந்து விடுதலை ஆகி வந்தவன். பிழைப்புக்கு என்ன வழி ? என்று யோசித்துக் கொண்டிருந்தான். ” நேராக போய்  லாரியை வாடகைக்கு எடுக்க வேண்டும் ” என முடிவு செய்து கொண்டு  தாம்பரம் ரயில் நிலையத்தில் மகிழ்ச்சியோடு இறங்கினான்.

                  ********  நிறைவு  ******************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *