வட்டங்களில் வட்டம் …

0

–கவிஜி.

 

 


வட்டம், நிலா வட்டம், பலா வட்டம், தோசை வட்டம், இட்லி வட்டம், பானையின் வாய் வட்டம், சக்கரம் வட்டம், மின் விசிறி வட்டம், மைதானம் வட்டம், மாநகரம் அடக்குவது வட்டம், மா வட்டம், கழிவறை குழி வட்டம், கணக்கின் பூஜ்யம் வட்டம், தட்டு வட்டம், தட்டை முறுக்கு வட்டம், கருவிழி வட்டம், கால் கொலுசு வட்டம், பொட்டு வட்டம், தோட்டா வட்டம், மாங்கல்ய கயிறு வட்டம், மத்தளம் வட்டம், ரோஜா பூ வட்டம், தேன் அடை வட்டம், சூழ்ச்சிப்படை வட்டம், புள்ளி வட்டம், மல்லி வட்டம், குறுந்தகடு வட்டம், மூடி வட்டம், சுழற்காற்று வட்டம், நியூட்ரினோ வட்டம், பூமி வட்டம், பால்வீதி வட்டம், கோள்கள் வட்டம், பந்து வட்டம், இப்படி வட்டங்களில் சுழல்கிறது வாழ்க்கை. வாதிட வாதிட வாதங்கள் முடிவது வட்டங்களில். வெற்றிகள் தோல்விகள் சுழலுவது, சந்திப்பது வட்டங்களில். நீ நான் என்பது ஆரம்பிப்பது வட்டங்களில். நீ நான் என்பது முடிவது வட்டங்களில். மனக் கிணறு வட்டம், எழும் குமிழிகளில் வட்டம்.

சிந்தனையின் சங்கமம் வட்டம். உற்று பயணிக்கையில் தூக்கம் மூழ்கி போவது வட்டங்களில். உண்மை, பொய், தத்துவம், இருப்பது, இல்லாமல் போவது யாவும் வட்டங்களில் என்பதான தோற்றம் வர வைக்கும் வட்டம். வட்டம் ஒரு மாயை என்று ஒரு ஆரம்பம் தளைக்கட்டும். வட்டம் பற்றிய சிந்தனை விழுந்த நொடி நின்று போன ஒரு வட்டமாக இருக்கலாம்,விழுகின்ற மழைத்துளி வட்டம், என்று வளர ஆரம்பித்த வட்டங்களில் சுற்றி விளையாடும் மனநிலைக்குள் ஊறிக் கொண்டிருக்கும் புதையல் பானைகள் வட்டமாக இருக்கின்றன.

புத்தன் ஏசுவின் கால் தடங்களில் வாழ்க்கை சூட்சுமம் வட்டமாக படிந்து கிடப்பதாகவே எண்ணுகிறது. இந்த வட்ட மேசை மாநாடு, மாநாடு நடத்தும் மனிதனின் மௌனங்கள் வட்டங்களில் இருந்தே திட்டம் தீட்டுவதாக நம்புகிறது. ஒரு வட்ட புகை மண்டலம் ஆதி மனிதனையும், நாளைய மனிதனையும் இணைக்கும் சங்கிலி வட்டமாகத்தான் இருக்க முடியும். பெரிய பெரிய ஞானிகளின் சிந்தனை வடிவம் வட்டத்தின் விரல் பிடித்தே நடக்கிறது. பெரிய பெரிய அழிவுகளின் கோரம் வட்டங்களின் வழியாகவே தாண்டவமாடுவதாக ஒரு வட்ட முடிவு ஏற்படுகிறது.

ஆக்சிஜனின் அறிவியல் பெயர் வட்டத்தில்தான் இருக்கிறது. மரணம் என்ற சொல்லில் மறைந்திருக்கிறது வட்டங்கள். வட்டங்களாய் தெறித்து விழும் குமிழ்களின் ஈரத்தில் அகன்று சுருங்கும் விழிகளுக்குள் உருள்கிறது வட்டங்கள். உருவமில்லாத வட்டங்களே காதலிலும் உருள்கிறது. விரலிலும், விதியிலும் வட்டம் இருப்பதை வரைந்து சொல்கிறது. படைப்புகளும் படைப்பாளிகளும் பயணப்படும் கூற்றுகளில் வட்டம் இருப்பதை வட்டமடித்து சொல்லும் கழுகு.

வட்டமாய் சுருண்டு கிடக்கும் காகிதத்துக்குள் வாதங்களின் தொகுப்பாய் இந்த வட்டக் கட்டுரை. வட்டம் இல்லை என்பவர்கள் ஒரு முறை கண்களை சுழற்றிக் கொள்ளுங்கள் …

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *