ஷைலஜா, பெங்களூர்

கர்மம் எனில் செயல்.செயல்வீரராக வாழ்ந்துகாட்டிச்சென்றவர் அந்த உன்னத மனிதர்! அதனால்தான் கர்மவீரர் என்று போற்றப்படுகிறார்.

Kamarajar kavithai

சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்

சொல்லிய வண்ணம் செயல்

எனும் வள்ளுவரின் வாக்குபோல சொல்லியவண்ணம் வாழ்ந்து காட்டியவராம் காமராஜர்!

மக்களுக்காக வாழ்ந்த மாமனிதரைப் பற்றிச் சொல்ல நிறைய இருக்கிறது.ஆயிரத்தில் ஒருவரின் பெருமையை வெறும் ஆயிரம் சொற்களில் அடக்க முடியாதுதான்!

பெருந்தலைவர் காமராஜர் ஆண்ட காலத்தைத் தமிழ்நாட்டின் பொற்காலம் என்பார்கள்.

கர்மவீரர், கருப்புக்காந்தி, ராஜதந்திரி, படிக்காத மேதை, பாரத ரத்னா, கிங் மேக்கர், ஏழைப் பங்காளன் என்று மக்களால் போற்றப்படுபவர் கர்மவீரர் காமராஜ்!

நாடறிந்த நல்லதொரு தலைவர் காமராஜ்! தனக்கென வாழாமல் நாட்டிற்கென வாழ்ந்த தனி மனிதர்! ஆம் முதலில் அவர் மனிதர் தான்! அவரின் மனிதாபிமானம் போற்றுதற்குரியது.

அந்த காலத்தில் அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் மற்றும் பொதுக்கூட்டங்களில் மக்களோ தொண்டர்களோ காலணா அரையணா ஓரணா என்று கொடுப்பார்கள் அதைவாங்கி சட்டைப்பையில்போட்டுக்கொள்வார் காமராஜர்! ஐந்து பத்துரூபாயாக சேர்ந்ததும் அதை அப்படியே நண்பர்’இந்து’ கஸ்தூரிரங்கனிடம் கொடுத்துவிடுவார்

ஒருமுறை’ இந்து’ கஸ்தூரிரங்கன் அவர்களுக்கு உட;ல்நிலை மோசமாகிவிட்டது

காமராஜரை அழைத்து,” சாகும்போது கடன்காரராக சாக விரும்பவில்லை உம்முடைய பணத்தை உம்மிடமே ஒப்படைக்கிறேன்” என்றார்.

பெருந்தலைவரோ,”அப்படி ஏதும் நடக்காது நீங்கள் கவலைப்படவேண்டாம் இந்தப்பணத்திற்காகத்தான் என்னைவரசொல்லி இருக்கிறீர்கள் என்றால் நான் வந்தே இருந்திருக்கமாட்டேன்” என்றார்
.
“சரி..எத்தனைவருடம் என்றாவது ஞாபகத்தில் இருக்கிறதா?”கஸ்துரிரங்கன் இப்படிக்கேட்கவும்,”அதெல்லாம் எனக்குத்தெரியாது”என்றார் காமராஜர். ஆனால் கஸ்தூரிரங்கனின் வீட்டில் உள்ளவர்கள் தேதிவாரியாக குறித்துவைத்திருந்தபடியால் அவர்களிடம்,”எனக்கு ஏதாவது ஒன்று நேர்ந்துவிட்டால் பணத்தை காமராஜரிடம் ஒப்படைத்துவிடுங்கள்” என்று கஸ்தூரிரங்கன் கூறினாலும் காமராஜரின் நினைப்பைப்போலவே கஸ்தூரிரங்கன்குணமாகிவிட்டார்.

மறுபடி இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது,”உம் தொகையை பெற்றுக்கொள்ளலாமே?’ என்ற கஸ்தூரி ரங்கனிடம்.”எனக்கு எதற்கு? அது மக்கள் பணம். ஆனால் ஒரு இடம் வாங்க நினைத்திருக்கிறேன் அதை செய்யுங்கள்” என்று காமராஜ் சொல்லவும் இந்தமட்டில் இடம் வாங்க சம்மதித்தாரே என பெரிய நிலத்தை விலைபேசி வாங்கிவிட்டார்.

பத்திரப்பதிவுக்கு தன் பெயரைப்போட இருந்த கஸ்தூரிரங்கனைப்பார்த்து பெருந்தலைவர் அலறி விட்டார்,”மக்கள் கொடுத்த காசு , அது பொதுச்சொத்து. எனக்கெதற்கு காசுபணம் சொத்து எல்லாம்?” என்றார்.

கட்சியின் பெயரில்பத்திரப்பதிவு செய்யப்பட்ட அந்த இடம் தான் இன்று தேனாம்பேட்டை காங்கிரஸ் கட்சி மைதானமும், பெரிய காமராஜர் அரங்கமும்.

அதிகம் படிக்காத பெருந்தலைவர் காமராஜர் கல்விக்குச் செய்த சாதனைகள் எண்ணிலடங்காதவைகளாகும். ஏழை, எளியவர், உயர்ந்தவர், தாழ்ந்தோர், ஆக எல்லோருக்கும் கல்வி-இலவசக் கல்வி – பட்டி, தொட்டிகளில் எல்லாம் பள்ளிக்கூடங்கள் – இலவச மதிய உணவுச் சீருடைகள், இப்படிப் பலதிட்டங்களைத் தீட்டி அமுல்படுத்தினார் காமராஜர். தமிழகத்தில் கல்விச் செல்வம் பெருகியது.

கல்விக் கேள்விகளில் மட்டும் சிறந்து விளங்கினால் போதாது, நாட்டிலே பஞ்சம், பசி, வேலையில்லாத் திண்டாட்டங்கள் விலகவேண்டுமே என சிந்தித்தார் காமராஜர். அதற்கென திட்டங்கள் தீட்டினார். நாட்டிலே புதுப் புதுத் தொழிற்சாலைகளை நிறுவச்செய்தார். தொழிற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தார்.

இன்றைக்கு மதுவிலக்கு அமுலுக்கு வர பலர் போராடுவதாக சொல்கிறார்கள், ஆனால் அன்றைக்கு பெற்ற தாய் இறந்தபோது கூட கண் கலங்காத காமராஜர், மனம் நொந்து கண்ணீர் விட்டது தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட போதுதான்

ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பேசுவார்.

பெரியார் அவரின் தொண்டர்களின் குழந்தைக்கு நல்ல பெயர் வைக்கவேண்டும் எனில் காமராஜர்னுதான் வைப்பார்.
ஜீவா தனது மரணப்படுக்கையில் சொன்ன கடைசி வார்த்தை “காமராஜர்க்கு போன் போடு” என்பதுதான்.

அவரளவுக்குச் சுருக்கமாக யாராலும் பேச முடியாது. உ.பி-யில் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில். ஐம்பதுகேள்விகளுக்கு ஏழு நிமிடத்தில் பதில் சொன்னாராம். இரண்டரை மணி நேரத்தில் எட்டு ஊர்களில் கூட்டம் பேசியிருக்கிறார்.

உழைத்துவாழ்வதையும், எளிமையோடு இருக்கவேண்டியதையும், நாட்டுப்பற்றோடும் ஒற்றுமையோடும் வாழவேண்டியதை தன் பேச்சில் குறிப்பிடுவார் காமராஜர்.

ஒன்பது ஆண்டுகள் முதல் அமைச்சர், பல ஆண்டுகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக இருந்த அவர், இறக்கும்போது மிச்சம் இருந்தது பத்து கதர் வேஷ்டிகள், சட்டைகள் மற்றும் நூறு ரூபாய்க்கும் குறைவான பணம்!

இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த காமராஜருக்கு 1975 அக்டோபர் 2-ம் தேதி உடல்நிலை அதிகம் பாதிக்க ஆரம்பித்தது,

டாக்டர் அண்ணாமலைக்கு அவரே போன் செய்துவிட்டு, ‘டாக்டர் வந்தா எழுப்பு… விளக்கை அணைச்சிட்டுப் போ’ என்றார். அதுவே அவர் கடைசியாகச் சொன்ன வார்த்தை.

டாக்டர் வரும்போது காமராஜர் அணைந்துவிட்டார்!

**************************************************************************************************************

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *