— பி. தமிழ்முகில் நீலமேகம்.

படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு – பாடம்
படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு !
என்ற கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பாடல் வரிகளுக்கு கனகச்சிதமாக பொருந்தக் கூடியவர் நமது பெருந்தலைவர் காமராசர் அவர்கள். இவர்தம் ஆட்சிக் காலத்தில் தமிழகம் கல்வியில் அபார வளர்ச்சி பெற்றமையால் இவர் “கல்விக்கண் திறந்த காமராசர்” என்று பெருமையுடன் அழைக்கப் படுகிறார். தனது ஆட்சிக் காலத்தில் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்த காமராசர் அவர்கள் படித்தது ஆறாம் வகுப்பு வரை மட்டுமே. இவரது கல்வி குறித்த விபரம் கீழ்வருமாறு:
◆ 1908 ம் ஆண்டு திண்ணைப் பள்ளியிலும் ஏனாதி நாயனார் வித்தியாலயத்திலும் கல்வி பயின்றார்.
◆ 1909 ம் ஆண்டு சத்திரிய வித்தியசாலாவில் கல்வி.
◆ 1914 ம் ஆண்டு ஆறாம் வகுப்பு படிக்கையில் கல்வியை நிறுத்திக் கொண்டார்.
காமராசர் அவர்கள் பல்கலைக்கழகத்தில் படிக்காத போதும், தன் நாடு, தன் மக்கள் குறித்து அறிய வேண்டியவை அனைத்தையும் நன்றாகவே அறிந்திருந்தார். இதனால் தான் காமராசர் அவர்கள் படிக்காத மேதை என்றழைக்கப் படுகிறார்.

கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு
மாடல்ல மற்றை யவை.
என்ற திருவள்ளுவரின் குறளுக்கு இணங்க, கல்விச் செல்வமே எத்தனைக் காலமானாலும் அழியாத செல்வம் என்பதை நன்குணர்ந்த காமராசர் அவர்கள், அச்செல்வத்தை ஏழைச் சிறார்களும் பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும் என்று பேராவல் கொண்டார். அதற்கான காமராசரின் திட்டம் தான் இலவச கல்வித் திட்டம்.

இவருக்கு முந்தைய ஆட்சியில் மூடப்பட்ட ஆறாயிரம் பள்ளிகளை மீண்டும் திறந்தார். அது தவிர, மேலும் பனிரெண்டாயிரம் பள்ளிகள் புதிதாக திறக்கப்பட்டன. சிறார்கள் மூன்று மைல் தூரத்திற்கு மேல் நடக்க விடாது, மூன்று மைல் தூரத்திற்கு ஒரு பள்ளி அமைக்கப்பட்டது. ஏற்கனவே இருக்கும் பள்ளிகளில், தேவையான புதிய வசதிகள் செய்யப்பட்டன. பதினோராம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இலவச கல்வி வழங்கப்பட்டது.

சுவர் இருந்தால் தானே சித்திரம் வரைய முடியும்? வயிறு காய்ந்திருந்தால் படிப்பது எப்படி? இதனால், காமராசர் அவர்கள் இலவச மதிய உணவுத் திட்டத்தை ஏற்படுத்தினார். பிள்ளைகட்கு உணவுடன் கல்வி வழங்க, பகல் உணவுக்கு வரி போடவும் தயங்கமாட்டேன் என்றவர் காமராசர். இந்த மதிய உணவுத் திட்டத்திற்காக எனது மற்ற பணிகளையும் கூட ஒதுக்கி விட்டு, ஊர் ஊராகச் சென்று பிச்சை எடுக்கவும் தயங்க மாட்டேன் என்றார். பள்ளியில் மதிய உணவுத் திட்டத்தினை உலகெங்கிலும் முதன் முறையாகத் தமிழகத்தில் 1957 ம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டுவந்தவர் நம் காமராசர் அவர்கள். இத் திட்ட த்திற்கான உதவி “Care of USA” அமைப்பினரால் வழங்கப்பட்டது.

பள்ளிகளில் சீருடை முறையை அமல் படுத்தியவரும் காமராசர் அவர்கள் தாம். இளம் மனங்களில் சாதி மத பேதங்களை களைந்திட இத்திட்டத்தை அறிவித்து செயல் படுத்தினார்.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் ஏழு சதவிகிதமாக இருந்த கல்வி கற்றோர் விகிதம், காமராசர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் 37 சதவிகிதமாக உயர்ந்தது. பள்ளிகளின் எண்ணிக்கையை மட்டுமுயர்த்தினால் போதாது. கல்வியும் தரமானதாக இருத்தல் வேண்டும். இதற்காகப் பள்ளி வேலை நாட்களும் அதிகரிக்கப் பட்டன. இவரது ஆட்சிக் காலத்தில் உருவானது தான் சென்னையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology (IIT), Madras). மருத்துவம், பொறியியல், விவசாயப் பட்டயப் படிப்பிற்கான கல்வி உதவித் தொகைகள் கிடைக்க வழிவகை செய்தார். இதனால் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரித்தது. இது தவிர உடற்கல்வி கல்லூரிகள், ஆசிரியர் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகளும் ஆரம்பிக்கப் பட்டன.

கல்வியறிவுடன் பொது அறிவையும் விழிப்புணர்வையும் மாணவர்கள் மட்டுமன்றி பொது மக்களும் வளர்த்துக் கொள்ள ஏதுவாக, கல்விக்கு அளித்த முக்கியத்துவத்தை நூலகங்களுக்கும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. தங்களது ஊர்களில் நூலகம் அமைக்க இடம், பொருட்கள், புத்தகங்கள் வழங்கி உதவ மக்கள் ஊக்கப்படுத்தப்பட்டனர். இதன் காரணமாக, 638 பொது நூலகங்களும், 12 மாவட்ட மைய நூலகங்களும் திறக்கப்பட்டன. இத்திட்டம் ஆரம்பிக்கக் காரணமாக இருந்தவரும் காமராசர் அவர்களே.

காமராசரின் குந்தா அணைக்கட்டு திட்டத்தின் சிறப்பையும், அதில் காமராசர் ஐயா அவர்களின் பங்கினையும், பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கத் திரைப்படமாக எடுக்க ஓர் அதிகாரி கருத்து கூற, அதற்கு ஆகும் மூன்று இலட்ச ரூபாய் செலவில், பத்து ஊர்களில் பள்ளிக்கூடம் கட்டி பிள்ளைகட்கு கல்வி வழங்கிடலாம். அரசின் கடமையை, தனிப்பட்ட மனிதனான தனது பெயரில், தானே செய்ததாக ஏன் சொல்ல வேண்டுமெனக் கடிந்து கொண்டவர் காமராசர் அவர்கள்.

காமராசரின் அனுபவ அறிவு எத்துனையோ பட்டப்படிப்பு படித்தவர்களை விட மேலானது. அவர் பல்கலைக்கழகங்களில் படித்ததில்லை. ஆனால், அவருக்குப் பூகோளம் தெரியும். வெறும் கோடுகளால் எல்லைகளை நிர்ணயித்து, புள்ளிகளால் இடங்களைக் குறிப்பது பூகோளமாகாது என்பது காமராசர் அவர்களின் கருத்து. மக்கள், அவர்களது வாழ்விடம், அவர்தம் வாழ்வாதாரம், அவர்தம் தொழில்முறை இவையனைத்தும்தான் தலைவர் காமராசர் அவர்களைப் பொறுத்தவரை பூகோளம்.

தமிழகத்தில் கால்நடைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பிரதமர் நேரு அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அமைச்சர் பக்தவத்சலம் மற்றும் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய காமராசர், ஆண்டுக்கு அறுபது என்ற எண்ணிக்கையில் படித்து முடிக்கும் கால்நடை மருத்துவ மாணவர்களை மட்டும் கொண்டு இத்திட்டத்தைச் செயல்படுத்த இயலாதென்பதால், பள்ளி இறுதி தேர்ச்சி பெற்ற மாணவர்கட்கு ஓராண்டு கால்நடை அபிவிருத்தி பயிற்சி வழங்கும் திட்டம் அறிவித்தார்.

இதற்கான மையங்கள் தமிழகத்தில் ஓசூர், ஒரத்தநாடு, புதுக்கோட்டை, செட்டிநாடு, அபிஷேகப்பட்டி ஆகிய இடங்களில், கால்நடைப் பண்ணைகளில் கால்நடை அறிவியலின் அடிப்படைகளைப் பயிற்சிகளோடு சொல்லிக் கொடுக்க புதிய படிப்புகள் ஆரம்பிக்கப் பட்டன. கால்நடை பராமரிப்பு, அவற்றின் உடற்கூற்றியல், உடலியல், சுகாதாரம், கால்நடைகளைக் கையாளுதல், நுண்ணுயிரியல் எனக் கால்நடைகள் குறித்த பல்வேறு பொருள்களில் பயிற்சி அளிக்கப்பட்டு, கால்நடை ஆய்வாளர்கள் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் நியமிக்கப் பட்டனர்.

கல்வி வளர்ச்சிக்குத் தனது மேலான பங்களிப்பை வழங்கியுள்ள இம் மாமனிதர் கல்விக் கண் திறந்தவர் என்பதில் ஐயமேதுமில்லை. தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு முன்னோடியாய் விளங்கிய இவர்தம் தன்னலமற்ற சேவையின் பயனை இன்றளவும் நாம் அடைந்து வருகிறோம் என்பதே நிதர்சனமான உண்மை. அவர்தம் பாதம் பணிந்து போற்றுவோம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *