–மீனாட்சி பாலகணேஷ்.

தப்பி விட்ட காதல் கணக்கு!

அவன் அற்புதமான கவிதைகள் இயற்றும் கவிஞன்; இளைஞன்; கட்டழகன். கவிதையும் கலாரசனையும் அவன் குருதியில் ஊறிப்போனவை. அவன் தந்தை கம்பர் ஒரு மாபெரும் புலவர். இவனும் தந்தைக்கேற்ற தனயன். பெயர் அம்பிகாபதி. கண்ணால் காணும் அனைத்தையும் காதல் நோக்கில் கண்டு பாடும் வாலிபப் பருவம்.

இன்று அரச மாளிகையில் கம்பருக்கு ஒரு விருந்து ஏற்பாடாகியிருக்கிறது. அவர் இயற்றி, சமீபத்தில் அரங்கேற்றிய இராமாவதாரம் எனும் ஒரு ஒப்பற்ற நூலுக்காகப் பரிசுகள் அளித்து மரியாதை செய்த மன்னன், புலவரை விருந்துக்கும் அழைத்திருந்தான். புலவருடன் புலவர் மகனும் வந்திருந்தான்! நியாயம் தானே?

தலைவாழை இலைகள் போடப்பட்டு, ஆசனங்களில் அனைவரும் அமர்ந்திருந்தனர். சம்பிரதாயப்படி, உப்பு, ஊறுகாய், பச்சடி, பொரியல் என முதலில் பணிப்பெண்கள் பரிமாறிவிட்டுப் போக, விருந்தின் முக்கியமான இனிப்பான பாயசத்தினைப் பரிமாற அதனைப் பொற்கிண்ணத்தில் ஏந்தி வந்தாள் அரசகுமாரி அமராவதி! அவளே ஒரு கவிதை! அரசன் குலோத்துங்கன் மாளிகையில் வளரும் அழகு தேவதை!

அமராவதிபதினாறு வயதுப் பருவ மங்கை- அவள் நடந்தால் பாதங்கள் நோகுமே எனப் பாதசரங்கள் புலம்ப, அன்னநடை நடந்து, பாயச வட்டிலை ஏந்தியதால், அதன் கனத்தில் கொடியிடை அசைந்தாட ஒரு மின்னல் போல வந்தாள் அவள் – அமராவதி. அழகான இளைஞன் ஒருவனை எதிர்பாராத விதத்தில் அரசவைப் புலவரருகே கண்டதால் அமராவதிக்கு நாணத்தில் நடை தடுமாறிக் கால்கள் பின்னின.

ஆச்சரியத்தில், கண்கள் தாமரை இதழ்களென விரிய, அம்பிகாபதி மலைத்தான். கணப்பொழுதில் பார்வைகள் சந்தித்து மீண்டன. இதயங்கள் இடம் மாறின!

இளங்கவிஞன் இளவரசியைக் கண்டதும் கொண்ட காதலும் கற்பனையும் – அல்ல அல்ல, கண்ணெதிரே காணும் காட்சியின் அழகும் இனிமையும்- உள்ளத்திலிருந்து கவிதையை ஊற்றாகப் பெருக்கி நின்றன.
பாடல் பிறக்கின்றது:
‘இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க
வட்டில் சுமந்து மருங்கசைய………’
ஆஹா…. திடுக்குற்று அனைவரும் உண்பதை நிறுத்தி விட்டு அம்பிகாபதியை நோக்குகின்றனரே! கம்பருக்குப் புரிந்தது. பஞ்சும் நெருப்பும் அருகருகே அன்றோ நெருங்குகின்றன? காதல்தீ பற்றிக் கொள்ளாது என் செய்யும்? ஆனால், மன்னன் மகளிடம், கவிஞன் மகன் காதல் கொள்ளலாகுமா? உலகம் இதனை ஒப்புக் கொள்ளுமா? மன்னனின் விழிகளில் சினம் பொங்குவதைக் காண்கிறார்.

சமயோசிதமாக, “அம்பிகாபதி! என்னப்பா இத்தருணத்தில் கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றிய பாடல்?” என்கிறார் கம்பர்.

“கம்பரே! நீரும் உம் மகனும் விளையாடுகின்றீர்களோ? அமராவதியைக் கண்டு காதல் கவிதை புனைய ஆரம்பித்தான் உம் மகன். நீர் அதனை இல்லை என்கிறீரோ?” என்ற குலோத்துங்கன், “கவிதையின் அடுத்த அடிகள் என்னவோ?” என்றான் ஏளனமாக.

‘-கொட்டிக்
கிழங்கோ கிழங்கென்று கூறுவாள் எந்தை
வழங்கோசை வையம் பெறும்.’
என்று பாடி முடித்து வைத்தார் கம்பர். அப்போதைக்கு ஒன்றும் கூறவில்லையாயினும் அரசன் புரிந்து கொண்டான்.

இளம் இதயங்கள் காதலில் சங்கமித்து விட்டதைக் கம்பரும் உணர்ந்து செய்வதறியாது திகைத்தார்.

◆◆◆

அம்பிகாபதி – அமராவதி காதல் கதைக்குச் சரித்திர ஆதாரங்கள் ஏதுமில்லை. கம்பரின் வாழ்வில் ஒரு சிறு சம்பவமாகப் புனையப்பட்ட கட்டுக்கதை என்றே பல தமிழ் அறிஞர்கள் கூறுகின்றனர். 50-களிலும் அதற்கு முன்பும் வெளிவந்த திரைப்படங்கள் தான் இந்தக் காதல் கதை மிகவும் பிரபலமாக வழி வகுத்தது எனலாம். அழகான பாடல்களுடன் அற்புதமான நடிப்பும் சேர்ந்து அம்பிகாபதி – அமராவதி காதலை அமரத்துவமாக்கின. சரித்திர ஆதாரமின்றிப் புகழ் பெற்று விட்ட ‘சரித்திர’க் காதல் கதை இது எனலாம். சரி, கதையையும் காதலையும் அதன் விளைவுகளையும் நோக்கலாமே!

◆◆◆

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்கின்றது அம்பிகாபதி – அமராவதி காதல். குலோத்துங்கனுக்கு இதில் விருப்பமேயில்லை. அம்பிகாபதியிடம் கூறினான்:
“மன்னன் மகளை மாலையிட வேண்டுமென்றால், அதற்குச் சில தகுதிகள் வேண்டும். நீ உன் தகப்பனைப் போன்று பெரும் புலமை படைத்தவனாயின், அகப்பொருள் கலவாமல், நூறு பாடல்களைத் தொடர்ச்சியாகப் பாட வேண்டும். அவ்வாறு செய்ய இயன்றால், அமராவதியை மாலையிடலாம். இல்லாவிடின், உன் தலை துண்டிக்கப்படும்,” எனும் கடும் நிபந்தனையைச் சோழன் விதித்தான்.

கவிச்சக்கரவர்த்தி கம்பரின் மகனாயிற்றே! தன் கல்வி மீது செருக்கு இல்லாது இருக்குமா? “நூறென்ன! ஆயிரமாயிரம் கவிகளும் பாடுவேன் மன்னா,” என்றான் அம்பிகாபதி.

நிபந்தனை ஒப்புக் கொள்ளப் படுகின்றது. அமராவதியும் காதலனிடம் கூறுகிறாள்: “அன்பரே! நான் நூறு மலர்களுடன் திரைக்குப் பின் காத்திருப்பேன். நூறாவது பாடல் முடிந்ததும் தங்கள் முன்பு வந்து நிற்பேன்.” காதலில் எழுந்த கற்பனைகள்…… கவிதையினைக் கணக்கிடும் உறுதி!

இரு காதலரும் கணிக்கத் தவறியது ஒரு சிறு கணக்கு.

கடவுள் வாழ்த்துடன் துவங்கிய போது, அதனை முதல் பாடலாகக் கணக்கிட்டுக் கொள்கிறாள் அமராவதி. ஆர்வத்தில் விளைந்த அவசரக் கோளாறு அது. அம்பிகாபதி, காதலி கணக்கு வைத்துக் கொள்கிறாள் எனத் தான் எண்ணிக்கை வைத்துக் கொள்ளவில்லை. அம்பிகாபதியின் வாயிலிருந்து பாடல்கள், அகப்பொருளே கலவாது*, மடை திறந்த வெள்ளம் போன்று பெருகி ஓடுகின்றன.

அமராவதி மலர்களை எண்ணி எண்ணிச் சேர்க்கிறாள். காதலனின் கவிதா விலாசத்தின் மேதைமையில் உள்ளம் பூரிக்கிறாள். இவ்வாறு தொண்ணூற்றொன்பது பாடல்கள் முடிவடைகின்றன- அல்ல அல்ல… அமராவதியின் கணக்குப்படி நூறு பாடல்கள் அவை.

மேகத் திரளின் பின்னிருந்து அதனைக் கிழித்துக் கொண்டு வெளிவரும் முழுமதி போலத் தனது முகத்தைக் காட்டியபடி காதலன் அம்பிகாபதி முன்பு வெளிப்படுகிறாள் அமராவதி எனும் அப்பெண்ணரசி.

அம்பிகாபதி அவளைக் கண்ணுற்றதும் நூறு பாடல்கள் ஆகி விட்டன எனக்கருதி, அவளழகை வருணித்து அகப்பொருள் அமைந்த அடுத்த பாடலை இசைக்கிறான்.

‘சற்றே சரிந்த குழலே துவளத் தரளவடம்
துற்றே அசையக் குழை ஊசலாடத் துவர்கொள் செவ்வாய்
நற்றேன் ஒழுக நடன சிங்கார நடையழகின்
பொற்றேர் இருக்கத் தலையலங்காரம் புறப்பட்டதே.’

அந்தகோ! அரசவையில் ஒரே பரிதாப ஆரவாரம்.
“இன்னும் நூறு பாடல்கள் ஆகவில்லையே!”
“ஐயோ இளவரசி! உங்கள் கணக்கு தப்புக் கணக்கு!”
“கடவுள் வாழ்த்து கணக்கில் சேராதெனத் தமிழ் பயின்ற உனக்குமா தெரியாது போய் விட்டது?” என அரசவைப் புலவர் ஒட்டக்கூத்தர் சுட்டிக் காட்ட, அடியற்ற மரம் போல வீழ்ந்து மூர்ச்சையானாள் அமராவதி.

கம்பரின் கெஞ்சலும், மற்றோரின் அனுதாப வேண்டுகோள்களும் மன்னன் குலோத்துங்கன் மனதைத் தொடவே இல்லை.
நிபந்தனைப்படி, அம்பிகாபதியின் தலை துண்டிக்கப்பட்டு அவன் உயிர் துறக்கிறான். மனமுடைந்து அமராவதியும் உயிர் துறக்கிறாள். மணவாழ்வில் இணைய இயலாத காதலர் மறு உலகில் இணைகின்றனர்.
சோகம் ததும்பும் காதல் கதை இது!

◆◆◆

சிறிது விலகி நின்று நோக்கினோமாயின் காதலர்க்குரிய ஓரிரு இன்றியமையாத நியதிகளை இவர்கள் கவனமாகக் கையாளவில்லை எனக் காணலாம்.
எவருக்கும் தன் திறமை மீது நம்பிக்கை இருக்கும்; இருக்க வேண்டும். ஆனால் அது செருக்காக மாறும் காலத்து, அழிவுப்பாதையில் தான் அழைத்துச் செல்லும். அதுவும் இக்கட்டான இந்தச் சூழ்நிலையில் அம்பிகாபதி சிறிது தாழ்மையுடன் இருந்திருக்கலாம் எனத்தான் எண்ணத் தோன்றுகின்றது.

ஆர்வத்தில் அமராவதியின் எண்ணிக்கைக் கணக்குத் தப்பிப் போயிற்றே! அவள் ஒன்றிற்கு இரண்டாக, இன்னும் ஒரு தோழியையோ, வேறு யாராவது ஒருவரையோ பாடல்களின் எண்ணிக்கையைக் குறித்துக் கொள்ளக் கூறியிருக்கலாம். அவளையே நம்பி அம்பிகாபதி தான் எண்ணிக்கை வைத்துக் கொள்ளத் தவறி விட்டான்; ‘சந்தேகத்திற்கு இருக்கட்டுமே’ என இன்னும் ஓரிரு பாடல்கள் பாடியிருக்கக் கூடாதா? காதலியைக் கண்டதும் எல்லாமே மறந்து தன்னிலையும் மறக்குமானால் அவனால் என்ன தான் சாதிக்க இயலும்? ‘காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதற்பெண்கள் கடைக்கண் பணியிலே,’ என்றான் இன்னொரு கவிஞன். காதலுக்கு அத்தகைய சக்தி உண்டு அல்லவோ?

இங்கு தான் விதி விளையாடி விட்டது எனத் தெரிகிறது………………
காதலின் பொன்வீதி இவர்களை மேலுலகிற்குத் தான் அழைத்துச் சென்று விட்டது..

◆◆◆
*அம்பிகாபதிக் கோவை எனச் சிற்றிலக்கிய வடிவில் ஒரு நூல் உள்ளது. இது அகப்பொருள் இல்லாமல் பாடப்பட்டுள்ள கோவை நூல். இதன் ஆசிரியர் பெயர் அம்பிகாபதி எனவும் இதில் 200-க்கும் மேற்பட்ட பாடல்கள் உள்ளன எனவும் அறிகிறோம். (ஆதாரம்: தமிழ் விக்கிப்பீடியா- கட்டற்ற கலைக் களஞ்சியம்)

படம் உதவி:
www.dollsofindia.com [http://www.dollsofindia.com/images/products/contemporary-paintings/rajput-princess-QD45_l.jpg]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *