— கவிஞர் காவிரிமைந்தன்.

திருப்பாற்கடலில் பள்ளிபக்தி மனம் கமழும் பாடல்களுக்குப் பஞ்சமில்லாத தமிழ்நாட்டில், உலகினை இயக்கி வைக்கும் சக்தியைப் பல்வேறு வடிவங்களில் வழிபடுகின்ற பழக்கம் தலைமுறை தலைமுறையாய் தொடர; அண்மையில் 50 வருடங்களுக்கு முன்பாகத் தொடங்கிய பழக்கமாம் ஹரிஹர சுதன் ஐயப்பன் என்னும் தெய்வம் மலையாள நாட்டில் உள்ள சபரிமலையில் இருமுடி சுமந்து பாதங்கள் வலிக்க, கடுங்குளிரையும் தாங்கி, தேவாதி தேவன், நாமாவளி கோடி, கரகோஷங்களுடன், பக்தி பிரவாகமாய் சங்கமங்கள், வீதிதோறும் வீடுதோறும் விழாக்கோலம் பூண்டு தெய்வீகமாய், பரிபூரணமாய் இறைவனிடம் ஒப்படைத்து, பக்தியால் உன்னதப் பரவசம் எய்தும் மக்கள் கூட்டம் அலையலையாய் சபரிமலை மேலே சாஸ்தா சந்நிதானம் நோக்கி …

திருப்புகழ் மணக்கும் இந்தப் பக்தி பரவசத்தைத் தழுவித் திரைத்துறையில் பல படங்கள் சபரிநாதன் சரித்திரமாய், அன்பர்கள் பெற்ற அனுபவங்களின் அருள் தொகுப்பை நயமிகு திரைப்படங்களாய் பல படங்கள் வெளிவந்துள்ளன. அதிலும் இயக்குநர் தசரதன் அவர்கள் இயக்கத்தில் தக்ஷிணாமூர்த்தி என்னும் மஹாப் பெரியவர் அமைத்த இசையமைப்பில் கானக்குரல் மூலம் எல்லோரையும் சபரிக்கு ஈர்த்த கே. ஜே. யேசுதாஸ் அவர்களின் தெய்வீகக் குரலில் பாட, கவியரசர் கண்ணதாசன் எழுதிய பாடலிது …

புராணங்களின் கதைச் சுருக்கத்தை ஒவ்வொரு வரியிலும் வைத்து திருமாலின் அவதாரப் பெருமைகளை சரமாரி தொகுத்து சந்தங்களுடன் விளையாடியிருக்கும் அழகை சராசரி மனிதன் கூடப் புரிந்துகொள்ளச் செய்த கண்ணதாசனே, எப்படிப் பார்த்தாலும் உன் படைப்புகள் அற்புதம் அற்புதமே. அவற்றைப் படிப்பதும், இசையோடு கேட்பதும், ஆனந்தம் ஆனந்தமே …

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா – அங்கு
திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

உலகினைப் பாய் போல் கொண்டவன் நீயே ஸ்ரீமன் நாராயணா – அன்று
உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமன் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா – அன்று
இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமன் நாராயணா
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே – அவள்
கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ ஸ்ரீமன் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகள் அன்றோ மறந்தாயோ நீயே – உன்
தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

தோளில் அந்தச் சாரங்கம் எடுத்து வர வேண்டும் நீயே
கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளி எழுந்து வாராய் திருமாலே – உன்
அன்பரை எல்லாம் துன்பத்தில் இருந்து காப்பாய் பெருமாளே
(திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே)

ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள்
நாராயணன் என்னும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் – இனி
வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமன் நாராயணா ஸ்ரீபதி ஜெகன்னாதா வருவாய்
திருமாலே – துணை தருவாய் பெருமாளே.

_________________________________________________________________

படம்: சுவாமி ஐயப்பன்
பாடல்: கண்ணதாசன்
இசை: தக்ஷிணாமூர்த்தி
குரல்: கே. ஜே. யேசுதாஸ்

காணொளி:
https://youtu.be/zHtDbLPjMOg
https://youtu.be/3bzuylmI_ek

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *