இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்…..(163)

0

சக்தி சக்திதாசன்.

அன்பினியவர்களே !
இனிய வணக்கங்கள் !

இவ்வுலகத்தில் பிறந்த அனைவருக்கும் தம் வாழ்க்கையை தாம் நினைத்த வகையில் வாழும் உரிமை இருக்கிறது. எனது வாழ்க்கையை நான் நினைத்த வகையில் வாழும் உரிமை எனக்கிருக்கிறது என்று கூறிக் கொண்டு மற்றொருவருடைய வாழ்வினைச் சிதைப்பது என்பது ஏற்றுக் கொள்ளப்படக் கூடியதொன்றா ?

இல்லையே !

ஒவ்வொருவருக்கும் தமது வாழ்வினை அமைத்துக் கொள்ளும் உரிமை இருக்கும் அதேசமயம் அவ்வாழ்க்கையை ஒரு சமூகநீதிக்குட்பட்ட வகையில் வாழ்ந்து முடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. சமூகக் கோட்பாடுகள், சமூக நியதிகள் என்பன என்ன? அவை உலகில் வாழ்க்கை என்னும் இந்தப் பயணம் செல்ல வேண்டிய பாதையின் சாலை விதிகளே ! ஒரு வண்டியை ஓட்டிச்செல்லும் போது அவற்றை சாலை விதிகளுக்கமைய ஓட்டிச் செல்ல வேண்டியதைப் போலவே வாழ்க்கைப் பயணத்தையும் விதிகளுக்கமையவே வாழ வேண்டும்.

இவ்வுலகில் வசதி படைத்தவர்கள், வசதி இல்லாதவர்கள், செல்வந்தர்கள், ஏழைகள் என்று மனிதர்களின் வாழ்க்கைத்தரத்திற்கேற்ப அவர்கள் பிரித்து வைக்கப்படுகிறார்கள். செல்வந்தர்கள் என்று எடுக்கும்போது கூட அதிலே பரம்பரையாக செல்வந்தர்களாக இருந்தவர்கள் ஒருபக்கம், தமது கடின உழைப்பினாலும் சிந்தித்து செயலாற்றும் திறனினாலும் முன்னேறி செல்வந்தர் எனும் பட்டியலில் இடம்பெற்றவர்கள் ஒருபுறம் என வகைப்படுத்தப் படுகிறார்கள்.

இங்கிலாந்து போன்றதொரு நாட்டிலே அவரவர் செய்யும் பணிகளுக்கேற்ற ஊதியத்தின் பிரகாரம் அவர்கள் செலுத்தும் வரிப்பணம் நாட்டின் சகல மக்களினது நல்வாழ்க்கையை நோக்கி செலவழிக்கப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் இருக்கும் செல்வத்தின் அடிப்படையிலும், அவர்கள் வசிக்கும் இல்லத்தின் வசதிகளின் அடிப்படையில் அவற்றிற்குரிய வரிகள் கணிக்கப்படுகின்றன.

எதற்காக இந்த அலசல் ?

network railசமீபத்தில் நடைபெற்ற புகையிரத ஊழியர்களின் வேலைநிறுத்தம் பற்றி உங்களில் பலர் அறிந்திருக்கலாம். இவ்வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு மக்கள் மத்தியில் எழுப்பிய சில வினாக்கள் பல ஊடகங்களில் பலமான சர்ச்சைகளை கிளப்பி விட்டிருந்ததது. இவ்வேலைநிறுத்தத்திற்கான அடிப்படை என்ன ? லண்டன் சுரங்க புகையிரத சேவையை வாரவிடுமுறை நாட்களில் சில பகுதிகளில் மட்டும் 24 மணி நேரச் சேவையாக செப்டெம்பர் மாதத்தில் இருந்து பரீட்சார்த்தமாக ஆரம்பிக்க எடுத்த முடிவின் எதிரொலிதான் இது.

இந்த ரெயில் சேவைகள் 24 மணி நேரமாக்கப்படுவதால், தாம் இரவு நேரங்களில் பணிபுரியும் நிர்ப்பந்தம் ஏற்பட்டிருப்பதால், தமது வாழ்க்கை பாதிக்கப்படுகிறது எனவே அதற்கான நஷ்டஈடாக தமக்கு அதற்காக அளிக்கப்படும் ஊதிய உயர்வு அமையவில்லை என்று ரயில் சாரதிகளின் யூனியனும், மற்றைய ஊழியர்களின் யூனியனும் குற்றம் சாட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார்கள். லண்டன் சுரங்க ரயிலை ஓட்டும் ஒரு சாரதியின் ஊதியம் வருடமொன்றிற்கு ஏறத்தாழ 50,000 பவுண்ஸ் ஆகும்.

network rail3லண்டனில் பணிபுரிபவர்களின் சராசரி ஊதியம் வருடமொன்றிற்கு 28,000 பவுண்ஸ் என்பதே பொதுவான கணிப்பு. அது தவிர ரெயில்வே சாரதிகள் ஒரு வாரத்திற்கு ஒரு மணிநேரம் அதிகமாகப் பணிபுரிந்து அவர்களது வருடாந்தர விடுமுறை நாட்கள் 43 என்று கணிக்கப்படுகிறது. இதுவே சர்ச்சைக்குக் காரணமாகிறது.

அதாவது சராசரியாக வருடமொன்றிற்கு 28,000 பவுண்ஸ் உழைத்துக் கொண்டு 20 நாட்கள் மட்டுமே விடுமுறையாகக் கொண்டவர்கள் மத்தியில் 50,000 பவுண்ஸ் ஊதியத்துடன் 43 நாட்கள் விடுமுறையும் பெறும் இவர்கள் எதற்கிந்த வேலைநிறுத்தம் செய்கிறார்கள் எனும் அபிப்பிராயம் கொண்டவர்கள் பலர். வேலைநிறுத்தம் என்பது மக்களின் அன்றாட வாழ்க்கையை முற்றாகப் பாதிப்படையச் செய்யும் ஒரு நிகழ்வு. ஒரு ஊழியரின் கடைசி ஆயுதமாகத்தான் இந்த வேலைநிறுத்தம் உபயோகிக்கப்பட வேண்டும் என்பதே பொதுவான கருத்தாகும்.

network rail2லண்டன் சுரங்க ரெயில் அதிகாரிகளோ ஊழியர்கள் இரவுநேரம் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட மாட்டார்கள் யார் விரும்புகிறார்களோ அவர்கள் பணிபுரிந்தால் மட்டும் போதுமானது. அத்தோடு அவர்களுக்கு அதற்காக மேலதிகமாக ஊதியம் வழங்கப்படுகிறது என்றும் யூனியனுடன் மேலும் பேச்சுவார்த்தை நடத்த தாம் தயாராக இருக்கும்போது எதற்கிந்த வேலைநிறுத்தம் என்கிறார்கள்.

இந்த வேலைநிறுத்தம் ஒருமுறை நடந்தால் பரவாயில்லை தொடர்ந்து செய்வதால் அல்லலுறும் மக்கள் மிகவும் அதிருப்தி அடைகிறார்கள். இங்கிலாந்தின் பொருளாதார நெருக்கடியின் காரணமாக அரசாங்கத்தின் செலவுகளை மட்டுப்படுத்தும் பல நடவடிக்கைகளை அரசு முடுக்கி விட்டிருக்கிறது. இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவையில் பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ஊதிய உயர்வு 1% சே வழங்கப்படுகிறது. அதே போல மற்றைய அரச ஊழியர்களுக்கும் அதே நிலைதான்.

வேலையற்றவருக்கான அரச நிதியுதவிகள் அனைத்தும் வெகுவாக மட்டுப்படுத்துள்ளன. அனைத்து மக்களும் இவற்றையெல்லாம் அனுசரித்துப் போக வேண்டி இருக்கும் நிலையில், இந்த ரெயில் ஊழியர்களின் வேலைநிறுத்தம் எவ்வாறு நியாயப்படுத்தப்படுகிறது எனும் கேள்வி பலரிடமிருந்து எழுகிறது. இது ஊழியர்களின் நன்மைக்கான வேலைநிறுத்தம் அல்ல. கன்சர்வேடிவ் அரசிற்கு நிர்ப்பந்தத்தைக் கொடுத்து அதனைப் பலவீனப்படுத்த யூனியன்களினால் எடுக்கப்படும் அரசியல் பின்னணியைக் கொண்ட வேலைநிறுத்தம் எனும் வாதமும் முன்வைக்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் என்பது ஜனநாயகநாட்டில் வாழும் ஒவ்வொரு ஊழியரது அடிப்படை உரிமை என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த அடிப்படை உரிமை அரசியல் காரணங்களுக்காக உபயோகப்படுத்தப் படுமானால் அதனுடைய உண்மையான வலிமையை இழந்துவிடும் என்பதையும் மறுக்க முடியாது. அன்றாடம் மிகவும் சிரமங்களுக்கிடையில் தமது வாழ்வாதாரத்தைத் தக்கவைத்துக் கொள்வதற்காகப் பலர் பலமைல்கள் பணிக்காகப் பிரயாணிக்க வேண்டி இருக்கும்போது அவர்களது பணிகளுக்கு இடையூறாக இவ்வேலைநிறுத்தம் அமைகிறது.

அதனைச் சரியான வகையில் நியாயப்படுத்த முடியாவிட்டால் அதனுடைய பிரயோகத்திற்கான பொதுமக்களின் ஆதரவினை இழக்கும் நிலை ஏற்படும் என்பதை இந்த யூனியன் தலைவர்கள் மறந்துவிடக்கூடாது.

அடுத்த மடலில் சந்திக்கும்வரை
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *