கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?

8

நீச்சல்காரன்.

மென்பொருட்கள் உரிமையடிப்படையில் இரண்டு வகையுண்டு. ஒன்று அதன் நிரல்கள் காப்புரிமை கொண்டு பெரும்பாலும் விற்பனையிலோ, சிலசமயம் விலையில்லாமலும் வெளிவருபவை. அடுத்தவகை நிரல்கள் எல்லாம் கட்டுப்பாடுகள் இல்லாத உரிமையில் பெரும்பாலும் இலவசமாக வெளிவருபவை. அந்த இரண்டாவது வகையே கட்டற்ற மென்பொருள் என்று பொதுவாக விலையில்லாமலும், எந்தவிதக் காப்புரிமை இன்றியும் விநியோகிக்கப்படுகிறது. இதனை யாரும் மேம்படுத்தலாம், யாரும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதனால் தொழிற்நுட்பம் எளிதில் அனைவருக்கும் வந்தடைகின்றது, அதன் பலனை ஒட்டுமொத்தச் சமூகமும் அனுபவிக்கலாம். இவற்றை யார் உருவாக்குகிறார்கள்? பெரும்பாலும் தன்னார்வலர்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து உருவாக்கியும், அதை மேம்படுத்தியும் வளர்க்கிறார்கள். இவர்கள் வருமானத்திற்கு என்ன செய்வார்கள்? பொதுவாக நேரடி லாபம் இல்லாவிட்டாலும், நன்கொடைகள், சேவைக் கட்டணம், விளம்பரம் போன்ற வழிகளில் பலனடைகிறார்கள். காப்புரிமை கொண்ட மென்பொருட்களில் பயன்படுத்தப்பட்டுள்ள யுக்திகள் வெளிப்படையாக இல்லாததாலும், பணம் கொடுத்து வாங்கியவர்கூட நிரல்களை மாற்றியமைக்க முடியாததாலும் கொள்கையடிப்படையில் கட்டற்ற மென்பொருளுக்குப் பெரிய ஆதரவு உண்டு.

விக்கிப்பீடியா உட்பட வெற்றி பெற்ற பல கட்டற்ற மென்பொருள்கள் எல்லாம் நன்கொடைகளின் மூலமே தொடர்ந்து இயங்குகின்றன. வேறு சில மென்பொருள் நிறுவனங்கள் இலவச மென்பொருளுக்கு இதர சேவைகள் மூலம் வணிகம் செய்கிறார்கள். ஒருவகையில் கட்டற்ற மென்பொருள் என்பது விளம்பரயுக்தியாக பயன்பட்டாலும் சாமானியப் பார்வையில் இது தேவையாக உள்ளது. இவ்வகை மென்பொருட்களைச் சட்டப்படி விற்பனையும் செய்யலாம் ஆனால் தனியொருவரின் காப்புரிமையில் இருப்பதில்லை, மேலும் மேம்படுத்தியவரும் அதே காப்புரிமையில் விற்பனை செய்து கொள்ளலாம். இங்குக் கவனிக்க வேண்டிய மற்றொரு தகவல் கட்டற்ற மென்பொருட்கள் பரவலாக அறியப்பட்ட துறையில் அதற்கு மேம்பட்ட அல்லது இணையான தரத்தில் காப்புரிமையுடன் தொழில்முறை மென்பொருட்கள் இருக்கும். காரணம் பெரிய வணிகம் இல்லாததால் தன்னார்வலர்களால் ஆய்வுத் துறையில் (R&D) அதிகம் செலவழிக்க முடியாது. மேலும் இத்தகைய தொழில்முறை மென்பொருள் உற்பத்தியாளரால்தான் உத்திரவாதத்துடனும், அர்ப்பணிப்புடனும் செயல்படமுடியும். செலவு குறைக்க விரும்புவோர் லிபரல்ஆபிஸ் போன்ற கட்டற்ற மென்பொருளை நோக்கியும், சேவை அதிகம் விரும்புவோர் மைக்ரோசாப்ட் ஆபிஸ் போன்ற காப்புரிமையுடைய மென்பொருளை நோக்கியும் செல்கிறார்கள்.

இப்பொருளாதார மாதிரி வளர்ந்த நாடுகளுக்கு உகந்தது. ஆனால் வளரும் நாடுகள் குறிப்பாகத் தமிழ்ச் சூழலில் உகந்ததா என்பதே கேள்வி. இங்குத் தமிழ் மென்பொருளுக்கு ஆய்வு செய்யவே ஆட்கள் குறைவு. மேலும் உருவாகும் மென்பொருளையும் வாங்கி ஆதரிக்கும் பொதுப்போக்கு இல்லை. மென்பொருளுக்கான நன்கொடைகள் குறிப்பிடுமளவு இல்லை. அதிகமாக இலவசங்களுக்குப் பழக்கப்பட்ட மக்கள் சேவைக் கட்டணத்தை விரும்புவதில்லை. சிறிய சமுதாயம் என்பதால் ஆய்வுகளுக்கான செலவு விகிதம் அதிகம். “தமிழை வைத்து காசு பார்க்கிறார்கள்” என்ற பொதுச்சிந்தனையால் தமிழ் மென்பொருளுக்கு வணிகச் சந்தை அழிந்துவருகிறது. பிறமொழிகளில் இருக்கும் கட்டற்ற மென்பொருளைத் தமிழில் மொழிபெயர்த்து இங்கு விலையில்லாமல் விநியோகிக்கும் போது தமிழுக்கான ஆய்வு செய்து வெளிவரும் மென்பொருட்கள் புறக்கணிக்கப்படுகின்றன. “இது இலவசம்” என்று கொடுக்கும் போது அப்பொருளின் சந்தை மதிப்பு பூஜ்யமாகிறது. மேலும் இலவசமாகக் கிடைக்கும் போது ஏன் காசு கொடுக்கவேண்டும் என்று பிரச்சாரம் செய்து சந்தை அழிக்கப்பட்டுவருகிறது. எனவே அதே துறையில் புதிதாக யாரும் முதலீடு போட்டு மென்பொருட்கள் உருவாக்கமாட்டார்கள். மீறி சுயமுயற்சியில் மென்பொருட்கள் உருவாக்குபவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்காமல் கட்டற்ற முறையில் வெளியிட அழுத்தம் கொடுப்பது கணித்தமிழ் வளர்ச்சிக்கு உகந்ததல்ல. அதே நேரத்தில் பெரிய ஆய்வுகளின்றித் தமிழில் கட்டற்றவளங்களும் வளர்வதில்லை. இயல் மொழிப்பகுப்பாய்வுத் துறையில் கட்டற்ற மென்பொருட்கள் தமிழில் இல்லை என்பது பெரிய குறை. தங்களாலும் ஆய்வு செய்யமுடியாமல், ஆய்வு செய்தவர்களையும் ஆதரிக்கமுடியாமல் நிற்கிறது கட்டற்ற கொள்கை.

OpenSourceகட்டற்று இருப்பதால் பலருக்கும் ஆய்வு செய்ய வசதி கிடைக்கும் என்று எண்ணினால் அது தவறு. எந்தவிதப் பொருளாதார எதிர்ப்பார்ப்பையும் கொண்டிருக்காதவர்கள் தான் இதில் ஆய்வு செய்யமுடியும் காரணம் அதன் கட்டற்ற கொள்கை. ஆய்வை வெளியிட்டு பணமீட்ட முடியாது. எனவே கணித்தமிழ் ஆய்வுகள் வேலைவாய்ப்பைத் தருவதில்லை என்று நேரடியாகவே மாணவர்களிடம் ஆசிரியர்கள் சொல்லும் அளவிற்கு நாம் சென்றுவிட்டோம். தமிழ் படித்தால் வேலை இல்லை என்ற நிலையை உருவாக்கி வருகிறோம். முன்பு கணித்தமிழுக்கு உழைத்தவர்கள் தொடர்ந்து உழைக்க முடியாமல் போன காரணத்தை அறியவேண்டும். தப்பித் தவறி வெற்றிபெற்ற மென்பொருட்கள் எல்லாம் தனிமனிதர்களின் சுயஉந்துதல் என்பதையும் உணரவேண்டும். இந்நிலை நீடித்தால் கணித்தமிழ் வளர்ச்சியில் ஒரு தேக்கம் நிலவலாம். பெரு ஊடகங்கள் தங்கள் சுய உந்துதலால் மென்பொருட்களை உருவாக்கி உதவினால் தவிர கணித்தமிழ் ஆய்வு மாணவர்கள் உருவாகமாட்டார்கள். தமிழ் எழுத்துலகம் வளர எப்படி தமிழ்ப்புத்தகத்திற்கு ஒரு சந்தை வேண்டும் என்கிறோமோ அதுபோல தமிழ்மென்பொருட்களுக்கும் ஒரு சந்தை வேண்டும். இங்கு வெற்றிகரமான வணிக மென்பொருட்கள் ஏதுமின்றிக் கட்டற்ற கொள்கையைக்காட்டி காப்புரிமை கொண்ட மென்பொருட்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கிறோம். காப்புரிமை கொண்ட மென்பொருட்களுக்குத் தகுந்த விலைகொடுக்காமல் கட்டற்ற உரிமத்திற்கு வற்புறுத்துகிறோம். கணித் தமிழ் வளர்ச்சிக்குத் தேவை திறமூலமோ(open source), மூடியமூலமோ(closed source) அல்ல கணித் தமிழாய்வுகள்தான்.

வெற்றிகரமான மாதிரி என்பது காப்புரிமையுடன் ஒரு மென்பொருள் வணிகலாபத்தை அடைந்து அதில் ஒருபகுதியைச் சமூக மேம்பாட்டிற்குக் கட்டற்ற முறையில் வழங்குவதே ஆகும். மூடியமூலம் கொண்ட மென்பொருள்தான் வணிகரீதியாகச் சிறந்தது. இத்தகைய வணிகம்தான் நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை உயர்த்தும், ஆய்வுகள் செய்ய பொருளாதாரம் கிடைக்கும். புதிய மாணவர்கள் இத்துறையில் ஆர்வம் காட்டுவார்கள். அடிப்படைக் கல்வியைப் போல மொழிக்கருவிகள் முக்கியமானது அனைவருக்கும் விலையில்லாமல் கிடைக்கவேண்டும். ஆனால் அதைக் கல்வி நிறுவனங்கள் அல்லது அதிகார அமைப்புகள் உருவாக்கத் தவறியபோது தனிமனிதர்களின் உழைப்பில் உருவானவற்றைக் கட்டற்ற முறையில் இல்லை என்று எதிர்ப்பது எதிர்கால வளர்ச்சியைச் சிதைக்கும். தமிழ்மென்பொருட்களுக்கு உருவாகும் சந்தையைக் கட்டற்ற கொள்கை கெடுக்குமானால் அக்கொள்கை கணித்தமிழ் வளர்ச்சிக்குப் பாதகமானது. எனவே தொலைநோக்குப் பார்வையுடன் அணுகி, பயனுள்ள தமிழ் மென்பொருட்கள் எவ்வகையில் இருந்தாலும் ஆதரிப்போம் வளர்த்தெடுப்போம்.

படம் உதவி: http://packetpushers.net/podcast/podcasts/show-205-open-source-network-monitoring-omdistro-org/

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “கட்டற்ற மென்பொருள் கணித்தமிழ் வளர்ச்சிக்கு இடரா?

  1.  நீச்சல்கார நண்பன் கூறியது,
     சரியான கருத்து என்மனதில் உள்ள ஆதங்கம் இது தான். சில வாரங்களுக்கு முன்பு என்னிடம் ஒரு நண்பர் மென்பொருள் ஒன்று உருவாக்க வேண்டும் என்று வந்திருந்தார். நான் உருவாக்கி அவரிடம் கொடுதேன். அவர் கேட்ட முதல் கேள்வி தமிழிலா இதெல்லாம் வரும் ஆங்கிலதில் வரதா? என்று என் மனதில் சிறு வேதனை… பிறகு தொழில் தர்மத்தை கடைப்பிடிக்க வேண்டியதாயிற்று. 

    முயற்சி தொடரும்.. எழுத்துக்கு நன்றி.

  2. பயனுள்ள தமிழ் மென்பொருள் எவ்வகையில் இருந்தாலும் அதை ஆதரிப்போம் நண்பர் நீச்சல்காரனுக்கு மிகுந்த நன்றி

  3. கட்டற்ற மென்பொருள் இல்லையென்றால் கணினித் தமிழ் வளர்ச்சிக்கும், தொழில்நுட்ப வளர்ச்சிக்கும் எதிர்காலம் இல்லையென்றே கூறலாம். நீச்சல்காரன் வாதத்தின்படியே வைத்துக் கொள்வோம், கணினித்துறையின் ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை உள்ள காப்புரிம மென்பொருட்களால் தமிழுக்கு என்ன செய்ய முடிந்துள்ளது? பெரிய பெரிய நிறுவனங்கள் ஏன் கணினித் தமிழ் பற்றிய ஆராய்ச்சியையோ, அல்லது மென்பொருட்களையோ உருவாக்கவில்லை. அவர்களுக்கு தமிழ் பற்றிய அக்கறையெல்லாம் கிடையாது, அவர்களுக்குத் தேவை லாபம்.. லாபம்.. லாபம் மட்டுமே… இறுதியாக உங்களுக்கு ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்ள விருப்பப்படுகிறேன்…. இதுவரை நீங்கள் பெற்ற அறிவு, இச்சமூகத்தினுடையது, அதை மறந்துவிடாதீர்கள். இன்று கணினித் தமிழுக்கு மார்க்கெட் இல்லை, அதுவும் கட்டற்ற மென்பொருளால்தான் மார்க்கெட் இல்லை என்று சொல்வதை தவிர்த்துவிடுங்கள். தமிழுக்கு ஆர்வம் காட்டுபவர்களே இங்கு குறைவு. பின் எப்படி கணினித் தமிழில் மட்டும் ஆர்வம் அதிகம் காட்டுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறீர்கள். இப்போதுதான் தமிழ் பற்றியும், கணினித் தமிழ் பற்றியும் பேசப்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் கட்டற்ற மென்பொருளால் தமிழ் இனி மெல்ல மெல்ல மேலெழுந்து நிற்கும். நீங்கள் உங்கள் கட்டுரையில் கூறிய ஒவ்வொரு கருத்துக்களுக்கும் பதில் எழுத வேண்டுமானால், இதற்கு மறுப்பு தெரிவித்து இன்னொரு கட்டுரையேதான் எழுத வேண்டும். உங்களுக்கு இன்னொன்றையும் ஞாபகப்படுத்த விரும்புகிறேன், இதுவரை மற்ற எழுத்துருக்களிலிருந்து யூனிகோடுக்கு மாற்றும் நல்ல கன்வர்ட்டர் கிடையாது தெரியுமா? அது ஒரு சிலரால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு, அது அடுத்தகட்ட வளர்ச்சியை அடையாமல் அவர்களுக்குள்ளே அடைந்து கிடக்கிறது தெரியுமா?

  4. See your explanation is very good but I disagree all of your points. You supporting  proprietary software right? If you supporting that kind of software then all comes under centralized architecture . if you want to change then it is not possible when the single centralized architecture get destroyed which has developed proprietary software. So the development part will not get growth and please try to understand what and why we need free software not from individual perspective.

  5. நல்ல கன்வர்டர் இல்லை என்றில்லை.வலைத்தளத்தில் தேடி எடுப்பதற்கு பல பேர் முன்வருவதில்லை.
    தமிழ் அன்றாடப்பயன்பாட்டில் இன்னமும் பல இடங்களில் அமைக்கப்பட்டுவரும்போது தமிழ்க்கணினிக்கு மதிப்பு உயரும்.பிற மொழிகளில் காணப்படுபவை யாவும் தமிழுக்கு இருத்தல் அவசியம்.இலவசமாகத் தருபவர்களும் உண்டு, பணத்திற்காக இயங்குபவர்களும் உண்டு.அவரவர் தேவைக்கென இயங்கி வாழ்வது உலக இயல்பு.அத்தன்மையைக் குறை கூற இயலாது.

  6. Suthir Raja உங்கள் கருத்துடன் முரண்படவில்லை. கட்டற்ற மென்பொருள் வேண்டும்தான் ஆனால் அதன் எல்லைகளைத்தான் இங்கே குறிப்பிடுகிறேன். எல்லைமீறிபோகும் போது அது பாதகமாகிறது. தமிழ்க்கணிமைக்கு ஒரு சந்தை உருவான பிறகு கட்டற்ற மென்பொருள்கள் உருவானால் தான் சமூகம் பயனடையும். //இதுவரை நீங்கள் பெற்ற அறிவு, இச்சமூகத்தினுடையது, அதை மறந்துவிடாதீர்கள்// அதே அறிவை எடுத்துக் கொடுத்தவருக்கு உரிய மரியாதையுடன் அறிவை பொதுவுடைமை ஆக்க ஏன்மறுக்க வேண்டும் என்பதே கேள்வி

  7. கட்டற்றசொவ்வறையினால்(open source software) தமிழ்ச்சொவ்வறைக்கான வணிகமோ அல்லது ஆராய்ச்சியோ பாதிக்கப்படமுடியாது. அதுபோன்றுதெரிந்தால் அது ஏதோவொரு குறையின்  வெளிப்பாடேயொழிய கீழேயிருக்கும்  காரணமன்று. அந்தக்குறையை கண்டறிந்து களைவதே சரியாயிருக்கமுடியும். உண்மையிலே நாம் தமிழ்ச்சொவ்வறைக்கான  எந்த சந்தையையும் உருவாக்கியிருக்கவில்லை.   இல்லாத சந்தையை  கட்டற்ற சொவ்வறைகள் உடைத்துவிட்டதென்று நாம் வாதிடுகிறோமோவென்று ஐயுறுகிறேன். 

    கட்டற்றசொவ்வறைகள்   சந்தையிலிருக்கும் அனைத்து சொவ்வறைகளின் தரத்தையும் தொடர்ந்து கூட்டவேண்டிய நிர்ப்பந்தத்தை நிலைக்கச்செய்வன. தொழில்நுட்பம் மறைபொருளாவதை தடுக்கின்றன.  ஒரு திறந்த வெளிப்படையான  நேர்மையான போட்டிக்கு வழிவகுக்கின்றன. அந்த போட்டியில் பயணித்துக்கொண்டு வணிகத்தை உருவாக்குவதோ அல்லது அதை  நிலைபெறச்செய்வதோ வணிகர்களின் முன்னிருக்கும் சவால்.  இது இவ்வுலகத்திலிருக்கும் அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதை ஏற்பது வணிகர்களின் ஓர் அணியென்று நான் கருதுகிறேன். 

    இவைதான்  எனக்குள்தோன்றும் கருத்துகள்!

  8. vel,
    அந்தக் குறையைச் சுட்டிக்காட்டியுள்ளேன், கட்டற்ற மென்பொருள் இலவசம் (சேவைக்கட்டணம் தனி) அதுவல்லாதவற்றை வாங்கவேண்டாம் என்று பிரச்சாரம் செய்வது தான் இங்குப் பிரச்சினை. நீங்களே அதுவொரு சவால் என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள். ஆனால் சவாலை ஏற்கும் அளவிற்கு தமிழ்ச்சமூகமும் உள்ளதா என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்.

Leave a Reply to நீச்சல்காரன்

Your email address will not be published. Required fields are marked *