சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே …

0

–கவிஞர் காவிரிமைந்தன்.

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே… இந்தப் பாடலைப் பற்றிய முன்னுரையை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தருகிறார்.

“மகாதேவி என்றொரு பெரிய படம். எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்திருக்கிறார். கண்ணதாசன் அவர்கள் பாடல் மற்றும் வசனம் எல்லாம்! அதிலே ஒரு லல்லபை… லல்லபை மட்டும் எங்க கிட்ட ஒரு ஸ்பெஷலிஸ்ட் இருக்கு… எந்த லல்லபையும்… நாங்க போட்ட எந்த லல்லபையும் வீணாகவில்லை… அது என்ன காரணம்னா… எங்க தாயாருடைய ஞாபகமும் அந்த டிரெடிஷன்… அந்தத் தாய்மையிலே இருக்கிற அன்பும்… இது வந்து எத்தனை பேர் அந்தப் பாடலைக் கேட்டு உருகாத ஆட்களே இல்லை… அந்தப்பாட்டு… மாதிரியே பின்னாளில் நிறையப் பாடல்கள் வந்தது… அதை ஒட்டியே… தழுவியே… ஏன் அப்படி வந்தது? அந்தப் பாட்டு மேலே அவ்வளவு காதல்! பாக்கி இசையமைப்பாளர்களுக்கு… அதனால சிங்காரப் புன்னகை பாட்டு மாதிரியே நிறைய மெட்டுக்கள் பல இசையமைப்பாளர்கள் போட்டாலும்கூட அந்தப் பாட்டு மேல இருக்கிற ஆவல்… அது அருமையான பாடல்… அந்தக் காலத்திலே ஹிட்டான பாடல்!”

singaarap punnagai1எம்.ஜி.ஆர் சாவித்திரி இணைசேர்ந்து நடித்தது மூன்று திரைப்படங்கள் மட்டுமே… ஒன்று மகாதேவி… மற்றொன்று பரிசு… இன்னொன்று வேட்டைக்காரன். நம் இதயத்தில் தவழ்ந்து கொண்டேயிருக்கும் இந்தப் பாடலின் சிறப்பம்சம் என்னவென்று மெல்லிசை மன்னர் கூற அறிந்தோம். தாய் அவள் பாடும் தாலாட்டு… எத்தனைச் சுகம் என்பதை அனுபவித்தவர்கள் நாம். அன்பைப் பொழியும் அன்னையின் குரலில் அமுதகீதம் வரும்! தன்னைத் தந்து உன்னை வளர்க்கும் உன்னதம் வேறு யாருக்கு வரும்? கண்ணில் நிறைத்து மார்பில் அணைத்துக் காத்திடும் தெய்வமது… கவிதை பாடி கண் வளர்க்கும் இன்ப நாதமது!

singaarap punnagaiமங்கையர்கூடி மகிழ்ந்தாடி மனம்வழியப் பண்பாடி வரும் காட்சியில், தமிழ்ப்பண்பாட்டைச் சுமந்திருக்கும் வரிகள் சுகமானவை. வீரத்தை நிலைநாட்டும் வரிகள் நம் பெருமை கூறுபவை. திரையில் தோன்றிய இரட்டையர்கள் சாவித்திரியும் எம்.என்.ராஜம் அவர்களும். இசைத்திருக்கும் இரட்டையர்கள் விஸ்வநாதனும் ராமமூர்த்தியும். குரல்களில் பொழிந்த அருவிகள், எம்.எஸ்.இராஜேஸ்வரியும் பாலசரஸ்வதி அவர்களும் ஆவர்.

இந்தப் பாடல் ஒற்றைப் பாடல்தான். ஆனாலும் இரண்டு குழந்தைச் செல்வங்களைத் தாலாட்டு இணைந்திருக்க, இரண்டு பாடல்கள் ஒன்றிணைந்திருக்கும் பேரழகைக் காணலாம். காலவெள்ளம் எத்தனை வேகமாக ஓடினாலும் அழிந்துபோகாத செவிவழிச் செல்வங்களுள் இந்தப் பாடலும் ஒன்றென்பேன்! ஒரு வரியில் சொல்வதென்றால்… இந்தப் பாடலைக் கேட்கும் எவரும் அவர்தம் தாயாரின் தாலாட்டுப் பாடலைக் கேட்ட நினைவுகளுக்குள் மூழ்குவது நிஜம்!!

சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா ஓஹோ….ஹோ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓஹோ….ஹோ
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே ஓ….ஓ….ஓ….
கண்ணாடிக் கன்னங்கள் காண்கின்ற வேளையில்
எண்ணங்கள் கீதம் பாடுமே
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
பேசாத சிற்பங்கள் ஏதுக்கம்மா
பேசாமல் பேசும் புருவங்கள் கண்டால்
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

ஆ….ஆ….ஆ….(இசை) ஆ….ஆ….ஆ…

செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
எங்கள் சோழ மண்ணிலே வந்த இன்ப வெள்ளமே
செல்வமே என் ஜீவனே செல்வமே என் ஜீவனே
ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும்

ஆடும் கொடிய நாகங்களும் அசைந்து வரும் நேரம்
உன் அழகு முகம் கண்டு கொண்டால்
அன்பு கொண்டு மாறும்
அன்பு கொண்டு மாறும் அன்பு கொண்டு மாறும்
செல்வமே எங்கள் ஜீவனே
செல்வமே எங்கள் ஜீவனே

தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே ஹே….ஹே….
தன்மான செல்வங்கள் வாழ்கின்ற பூமியில்
வில்லேந்தும் வீரன் போலவே
மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா
மகனே நீ வந்தாய் மழலை சொல் தந்தாய்
வாழ்நாளில் வேறென்ன வேண்டுமம்மா

ஓ….சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா
மங்காத கண்களில் மையிட்டுப் பார்த்தாலே
தங்கமும் வைரமும் ஏதுக்கம்மா ஓ….
சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் ஏதுக்கம்மா

காணொளி:
https://youtu.be/faocj4sZf2g

எம். எஸ். விஸ்வநாதனின் உரையில் ….
https://www.youtube.com/watch?v=hGqZfCr-uNw

https://www.youtube.com/watch?v=hGqZfCr-uNw

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *