வையவன்

வெற்றிவேல் வரவில்லை. அவன் திருப்பத்தூர் வரை வந்து இருவரையும் ரயில் ஏற்றினான்.
அம்மாவை சாமான்கள் எல்லாம் மூட்டை கட்டி ஒரேயடியாக எடுத்துப் போகலாம் என்று வற்புறுத்தினான் சிவா.

“இப்ப வேணாம்! இப்ப வேற ஒரு விஷயத்துக்குப் போறோம். அது நல்லபடியா நடத்துட்டா நாம்பளே வேற வீடு பார்க்க வேண்டியதா இருக்கும். நீயும் நானுமா ஒரு வீட்டைத் தேடுவோம். கெடைச்சப்புறம் சாமான்களை எடுத்துட்டுப் போவோம்.”
பளிச்சென்று பிசிறு அறுந்த மாதிரி இருந்தது சிவாவுக்கு.

ரயில்வே ஸ்டேஷனை விட்டு இறங்கியதுமே சென்னை அம்மாவுக்கு பிடிக்கப் போவதில்லை என்று பயந்து கொண்டே வந்தான் சிவா, அவளுக்கு எல்லாம் சகஜமாயிருந்தது.

“பெரிய ஊருண்ணா கூட்டம் ரொம்ப. நெரிசல் ரொம்ப. இப்படித்தான் இருக்கும்… சுறுசுறுப்பா ஜனங்க ஓடறதும் நடக்கறதும் நல்லாத்தான் இருக்கு.”
அம்மா அதையும் ரசித்தாள்.

ராயப்பேட்டையில் பஸ் இறங்கி நடந்தனர். பிரீதா க்வார்ட்டர்ஸில் இருந்தாள்.

ஒரு சூட்கேஸுடன் மட்டும் வந்து நிற்கும் சிவாவைப் பார்த்துவிட்டு “எவிடயாணு அம்ம?” என்று வெளியே வந்தாள்.
ஒரு நூல் சேலையில் நெற்றியில் குங்குமம் பளிச்சிட, சிவாவின் அம்மா நான் தான் என்று அச்சடித்து வைத்த மாதிரி ஒரு முகக் களையோடு புன்னகையோடு வந்து நிற்பவளைப் பார்த்ததுமே சட்டென்று ஒட்டிக் கொள்ள வேண்டும் போல் தோன்றியது.

அவள் அருகில் போய் சிரித்துக் கொண்டே நின்றாள். அம்மாவைத் தொட வேண்டும் போலிருந்தது.
அவள் கையைப் பிடித்து “அம்மா” என்றாள்.

பிடித்த கையை அம்மாவும் பற்றிக் கொண்டாள்.

“நீ தான் பிரீதாவா?”
அம்மாவுக்கு ஏனோ மனசு சுரந்தது.

இதென்ன இது! இவ்வளவு பெரிய ஆஸ்பத்திரியில் பெரிய நர்ஸ்.

யாரோ முன் பின் தெரியாதவள். பேச்சு வேறே. நாடு வேறே. ஜாதி வேறே!
ஏதோ தெருவில் நடந்து போகிற எவளோ ஒருத்தியைப் பார்த்து முகம் மலரச் சிரித்துக் கொண்டு ஓடி வந்து காலைக் கட்டிக கொள்கிற குழந்தை மாதிரி வந்து கையைப் பிடித்துச் சிரிக்கிறாள்.

அம்மா சட்டென்று அவள் முகத்தை இரண்டு கைகளாலும் நீவி வழித்து திருஷ்டி முறித்தாள்.
“இது எந்தினாணு?”
“கண் திருஷ்டி படக்கூடாது” சிவா விளக்கினான்.

பிரீதாவுக்குப் புரிந்தது. சிரிப்பு வந்தது. குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். அது அம்மாவைப் புண்படுத்தவில்லை. அவள் அப்படிச் செய்வதற்கு அப்படி என்ன நான் அவ்வளவு அழகா என்ற கேள்வி வந்து இப்படி யாரோ ஒருவர் திருஷ்டி முறிக்கிற சொந்தத்திற்கு வந்து சேர்ந்த பூரிப்பு வந்தது.

ஏதோ வெகு நாட்களுக்கு முன் விட்டுப் போன- ஜென்மங்களுக்கு முன்னால் பிரிந்து போன உறவெல்லாம் இணைந்த குதூகலம் வந்து அவள் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள்.

அந்தச் சிரிப்பில் என்ன விடுதலை!
சிவா ரிஷிகேஷில் பிரீதா பாபா ஓம்கார்நாத்தின் முன்பு அழுததை நினைத்தான். அங்கே பிரீதா அழுது விடுதலையானாள். இன்று அம்மாவிடம் சிரித்து விடுதலையாகிறாள்.

இரண்டு நாட்களாக பிரீதாவிற்குச் செய்வதற்கு வேலை இல்லாமல் போய் விட்டது.
எதற்கெடுத்தாலும் அம்மா ஓடி ஓடி முன் வந்தாள். கிராமீயமான எளிமையில் அவள் செய்யும் சிறு பிழைகள் கூட மகிழ்ச்சியாக இருந்தன.

வந்த முதல் நாளே சிவா அம்மா வந்திருக்கும் காரணத்தைச் சொன்னான். வெற்றிவேலின் உத்தேசத்தைச் சொன்னான்.
பிரீதா முகம் வாடாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டாள். பதில் சொல்லவில்லை.

அன்று மாலை அம்மாவை அழைத்துக் கொண்டு பீச்சுக்குப் போவதாக பிளான். நாலு மணிக்கு உத்தரவு வாங்கிக் கொண்டு வருவதாகச் சொன்ன பிரீதா மூன்று மணிக்கெல்லாம் வந்தாள்.
“என்ன பிரீதா?” என்று சட்டைக்கு அயர்ன் போட்டுக் கொண்டிருந்த சிவா கேட்டான்.

“ரேடியாலஜி டிபார்மெண்ட்டுக்கு புதிய கருவிகள் வந்திருக்கு. சி.எம்.சிக்கு நான் டிரெய்னிங் போனேன் இல்லே! அது சம்பந்தமான அபாரடஸ், இப்ப நம்ப ஹாஸ்பிடல்லே ‘இன்ஸ்டல்’ பண்ணப் போறாங்க. ராத்திரி பத்து பதினொண்ணு ஆயிடும். ஐ ஆம் சாரி சிவா. அம்மாவை நீ பீச்சுக்கு அழைச்சுட்டுப் போய்ட்டு வந்துடு.”
“ஆல்ரைட்” சிவா ஒத்துக் கொண்டான்.

சொன்னபடியே பிரீதா வீடு திரும்ப பதினொன்று ஆகிவிட்டது. அவளுக்காக டிபன் செய்து பத்திரமாக மூடி வைத்து விட்டுத் தானும் சாப்பிடாமல் காத்திருந்தாள் அம்மா.

“அம்மா கழிக்கணும். எனிக்கு சமயம் கிட்டான் அல்பம் போகும்”
“கழிக்கணுமா?”
“ஓ… சாப்பிடணும். முன்னாடி சாப்பிடணும். வெயிட் பண்ண வேண்டாம்”
“எனக்கு பசிக்கல்லே கொழந்தே!”
அம்மா பரிமாறிவிட்டு கூடச் சாப்பிட உட்கார்ந்தாள்.

அன்றிரவு அம்மா பக்கத்திலேயே கட்டிலை விட்டுக் கீழே தரையில் மெத்தை விரிப்பைப் போட்டுப் படுத்துக் கொண்டாள் பிரீதா.
இரவு அவள் ஒரு கனவு கண்டாள்.

அந்தக் கனவில் தாமு அவர்கள் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகியிருந்தான். ரேடியாலஜி டிபார்ட்மெண்டில் டாக்டருக்கு உதவியாக அவள் நின்றிருந்தாள்.

தாமுவை ரேடியாலஜி டிபார்ட்மெண்டுக்குள் கொண்டு வந்தார்கள்! படுக்க வைத்து டாக்டர் பரிசோதிக்கும் போது வெளியே இருந்து ‘பிரீதா பிரீதா’ என்று ஒரு குரல் அழைத்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

ஒரு குரல் பல குரல்கள் ஆயிற்று. நூறு நூறு குரல்கள் கூப்பிட்டான். அவள் எதையும் பொருட்படுத்தாமல் நின்று கொண்டிருக்கும் போது கூச்சல்கள் அதிகரித்தன.

அவள் வெளியே ஓடிப் போய் கத்துவது யார் என்று கேட்பதற்காகப் போக நினைக்கிறாள். கால்கள் நகரவில்லை. நகர முடியவில்லையே… ஏன். ஏன்?
பளிச்சென்று கனவு கலைந்து பிரீதா எழுந்து உட்கார்ந்தாள்.

“என்னம்மா கனவு கண்டியா?” என்று சிவாவின் தாய் கேட்டபோது, அந்தப் பரிவிலும் பிரியத்திலும் அவளுக்கு வெட்கம் வந்து விட்டது.

“ஆமாம்மா… ஏதோ கெட்ட கனவு”
அம்மா திருநீற்றுச் சம்புடம் கொண்டு வந்திருந்தாள் அதிலிருந்து கொஞ்சம் எடுத்து நெற்றியில் இட்டாள்.

அடுத்த நாள் அம்மாவும் அவளும் கபாலீஸ்வரர் கோயிலுக்குப் போய் வந்தனர். வெகு நேரம் வரை கோயிலுக்குள் நிறைந்து வழிந்த கூட்டத்தை அம்மா ரசித்தாள். அவள் ரசிப்பதை பிரீதா ரசித்தாள்.

பின்பு இருவரும் மயிலாப்பூர் குளக்கரைக்கு வந்தனர். வரிசை வரிசையாக இறங்கும் அந்த படிக்கட்டைப் பார்த்து, “இங்கே கொஞ்சம் உட்கார்ந்து போகலாமே பிரீதா என்றாள் அம்மா.

பிரீதாவுக்கு அந்தப் பகுதியில் தான் பல பேருக்கும் முகம் தெரிந்த நர்ஸ் என்று முதலில் ஒரு தயக்கம் வந்தது.
அவர்கள் என்ன நினைத்துக் கொள்வார்கள் என்பதை விட அம்மா என்ன நினைப்பாள் என்பது முக்கியமாகப் படவே அவளும் இசைந்தாள்.

சிவாவின் அம்மா என்பதற்கு மேலாக அவளிடம் ஏதோ ஒரு பாந்தப் பிடிப்புத் தன்னை அணைத்து ஆசுவாசப்படுவதை இந்த இரண்டு நாட்களில் அவள் நன்கு அனுபவித்திருந்தாள்.

மலையாளமும் தமிழும் கலந்த பிரீதாவின் கொச்சை மொழி அம்மாவுக்கு பிடித்துப் போயிற்று.
உட்கார்ந்து கொஞ்ச நேரம் கழித்து அம்மா ஆரம்பித்தாள்.
“சிவா சொன்னானாம்மா?”
“சொல்லுச்சு”
“நீ எங்கிட்டே சொல்லவே இல்லியே”
பிரீதா தன் நகப் பூச்சையே மௌனமாகத் திருப்பித் திருப்பிப் பார்த்தாள்.

“ஒன் மனசை தொறந்து சொல்லும்மா?”
“………”
“சிவா மாதிரியே வெற்றிவேலும் நல்லபிள்ளை எதைச் சொன்னாலும் மனசு வருத்தப்படாமே ஏத்துக்குவான்!…”
பிரீதா கண்ணை உயர்த்த உண்மைப் பாசமும் அக்கறையும் நெகிழ்ந்து பரவிய அம்மாவின் முகத்தைப் பார்த்தாள்.
“உனக்கு இஷ்டமில்லேண்ணா வேண்டாம்”
என்ன பதில் சொல்வது என்று பிரீதா யோசித்தாள்.

“வீட்டிலே பெரியவங்களைக் கேக்கணுமா?”
நர்ஸ் டிரெயினிங்கில் அவளைச் சேர்த்து விட்டு டேராடூனுக்கு மனைவியை அழைத்துச் சென்ற அண்ணன் ஒருவன் தான் கேட்க உரிமையுள்ள பெரியவன்.

மற்றவர்கள், மாண்டது போக மீதியிருந்தவர்கள். அபிப்பிராயம் சொல்லி விட்டு வேலையைக் கவனிக்கும் பெரியவர்கள்தான். டேராடூனுக்குப் போனவன் என்னமோ பெரிய ஆபீசராகி பிரான்ஸிலிருந்து வருஷத்துக்கு ஒரு கடிதமும் ஓணத்தன்று ஒரு பரிசும் அனுப்புவதோடு சரி.

“இப்பவே சொல்லணும்ணு ஒண்ணும் அவசரமில்லே. நாலு நாள்… பத்து நாள். ஒரு மாசம்கூட யோசி… அப்புறமா சொல்லு! ரிஷிகேசத்திலே பாபா ஓம்கார்நாத் ஒன் பொறுப்பை இவனுங்க ரெண்டு பேரு கிட்டேயும் ஒப்படைச்சாராம்.”
சட்டென்று பிரீதா அம்மாவின் முகத்தை வியப்போடு பார்த்தாள்.

“என்ன சொன்னாராம்?”
“ஒங்க ரெண்டு பேர்லே யாராவது அவளை ஏத்துக்கறவன் ஆசிர்வதிக்கப்படுவாண்ணு சொன்னாராம்.”
பிரீதாவுக்கு மார்பு திரண்டு உடைந்து விடும்போல் விம்மி தொண்டையில் ஒரு துக்கம் மோதியது.

ஒரு பார்வையில் அவள் மனசு முழுவதையும் புரிந்து கொண்ட பாபாவா இதைச் சொன்னார். அவர் எதை உத்தேசித்து அப்படிச் சொன்னார்?
அம்மா எதிரில் அழவேண்டாம் என்று அவள் தன் மனசைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

“சிவா கிட்டே எல்லாம் தெரிஞ்சுக் கிட்டீங்களா அம்மா?”
“எதைப் பத்தி?”
“என்னைப் பத்தி!”
“ஏன் அப்படிக் கேக்கறே?”
“சிவா எல்லாம் சொல்லிச்சா”
“சொன்னான்.”

“தாமுவுக்கும் எனக்கும் இருந்த ஸ்நேஹம்… அதுக்கு முன்னாடி சின்ன வயசிலே பிரபாகர வர்மாவோட இருந்த ஸ்நேஹம்…”
“எல்லாம் சொன்னான். எனக்கு மட்டுமில்லே. வெற்றிவேலுக்கும் சொன்னான்.”
“அதுக்கு அப்புறமும் வெற்றிவேலுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கத் தோணுதாம்மா?”

“அவனுக்கு மட்டுமில்லேம்மா, எனக்கும் கூடத்தான் ஒன்னைப் பாத்தப்புறம் ரொம்ப பிடிச்சிருக்கு. ஒரு பொம்பளைக்கு இன்னொரு பொண்ணு என்னண்ணு சட்டுனு தெரிஞ்சிடும். எது உத்தமம் எது நீசம்ணு பளிச்சுணு புரிஞ்சிடும்… நா என்ன பண்ணுவேன்? வெற்றிவேல் தான் மொதல்லே ஆசைப்பட்டு சொன்னான்?”
அவள் புகழ்வதைக் கேட்டு பிரீதாவுக்கு நாணமாயிருந்தது. அந்த புகழ்ச்சி வஞ்சனையில்லாத வெள்ளை மனசிலிருந்து வருவதால் பால் மாதிரி பிரீதாவின் நெஞ்சை நனைத்தது.

“அம்மா… சிவா எனக்கு சகோதரன். நீ என்டெ அம்மா”
பிரீதாவுக்கு அம்மா மடியில் படுத்துக் கொள்ள வேண்டும் போலிருந்தது.
ஓர் அன்னையின் மடி எப்படியிருக்கும்?
அது குழந்தைப் பருவத்திலேயே தாயை இழந்த பிரீதாவுக்குத் தெரியாது. மடி மீது படுத்துக் கொண்டாள்.

“எனக்கு வெற்றிவேலைப் பிடிக்காம இல்லேம்மா… அவர் ஒரு ஜென்டில்மேன்”
“அப்புறம் என்ன…”
“எனிக்குச் சொல்லத் தெரியலேம்மா…”
“எப்பவும் தொணை ஒண்ணு தேவை பிரீதா… அது இப்ப தெரியாது… வயது ஆக ஆகத் தெரியும்.”
“நீ என்னிக்குத் துணையில்லையாம்மா”
பிரீதாவின் தலைமீது அம்மா கை வைத்தாள். அதை மெதுவாகப் பிடித்து விடுவது போல் நீவிக் கொடுத்தாள்.

“நான் இருக்கற வரைக்கும் ஒனக்குத் துணை உண்டு. போனப்பறம்?”
“நீ போகாதேம்மா… சிவா கல்யாணமாய்ப் போகட்டும். நீ வேண்டாம். நீ என்னோட இரும்மா”
“இருக்கேம்மா… நான் ஒன்னோடவே இருக்கேன்” அம்மா நெடுமூச்செறிந்தாள்.
பெண் மனசு அவளுக்குப் புரிந்தது.

அது சீக்கிரம் மாறாது. அங்கே காயங்கள் லேசில் ஆறாது.
மரம் சாய்ந்து வேரற்றுப் போன பள்ளத்தில் விதை விழுந்து மீண்டும் மழை பொழிந்து ஈரம் இறங்கி செடி எழுப்பும். ‘ஒரு வேளை எழும்பாமலும் போகும்.’
காத்திருக்க வேண்டியது தான்.
காத்திருப்பது யார்?
வெற்றிவேலா?
அம்மாவின் முகத்தில் படர்ந்த வினாக் குறையைக் கண்டு பிரீதா தொடர்ந்தாள்.

“நான் என்னம்மா சொல்லட்டும்?”
“ஒண்ணும் சொல்லாதே. எனக்குப் புரியுது… வெற்றிவேலுக்குப் புரியறாப்பிலே நான் சொல்லிக்கறேன்.”
அவர்கள் இருவரும் எழுந்தனர்.

வேடிக்கை பார்த்தவாறே நடந்தே க்வார்ட்டர்ஸுக்கு போய்விடலாம் என்று அம்மா வற்புறுத்தினாள்.
“அம்மாவுக்கு திஷ்யா தெரியுமா?”
“திஷ்யாவா… அது யாரு”
“சிவா ஸ்நேஹிக்கிறவள்.”
திஷ்யாவைப் பற்றி மெதுவாக சொல்லிக் கொண்டே வந்தாள் பிரீதா. சினிமாவில் நடிக்க மறுத்தவள் என்று சொன்னதுமே அம்மாவுக்கு அவளைப் பளிச்சென்று பிடித்து விட்டது.

தன் சிவா தப்பு செய்ய மாட்டான் என்ற நம்பிக்கை அவளுக்கு எப்போதும் உண்டு.
இதெல்லாம் ஏன் இன்னும் என்னிடம் சொல்லவில்லை?
நேரம் வரும் என்று காத்திருக்கிறானோ? ஒருவேளை நான் சம்மதிக்க மாட்டேன் என்று தயங்குகிறானோ?
அவள் மனசில் முழுச் சம்மதம் உதயமாகி விட்டது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *