பேரவஸ்தை

-பத்மநாபபுரம் அரவிந்தன் 

உன் நினைவிலிருந்து
மனதைப் பிரித்தெடுக்கப்
பூத்துக் குலுங்கும் கொன்றையை,
குலை தள்ளிய வாழையை
வயலை, மலையை
பார்த்து நின்றும்…

இவையனைத்தையும் புறந்தள்ளிக்
கருநீலப் பாவாடையும்
வெளிர்மஞ்சள்  தாவணியுமாய்
ஈரமுலராக் கூந்தல் விரிந்த
உன் முகம் மனதைப் பிசையும்…

இன்றாவது உன்னைப்
பார்ப்பதைத் தவிர்த்து
என் மன அவஸ்தைகளை
அடக்க நினைத்தபடி
எதிர்வரும் உன்னைத்
தலை நிமிராமல் கடந்ததும்
மனம் முன்னேறும்
என் கைவிட்டு உனை நோக்கி…

பிறகு தினம்போல்
இன்றும் தந்து செல்கிறாய்
இனம்புரியா உணர்வுடன்
ஒரு பேரவஸ்தையை…!

 

About பத்மநாபபுரம் அரவிந்தன்

கன்னியாகுமரி மாவட்டம், பத்மநாபபுரத்தைச் சேர்ந்தவர். கடல் வானொலி அதிகாரியாக (Marine Radio Officer) பணி புரிந்துகொண்டிருக்கிறார்.. கணையாழி, படித்துறை, திண்ணை, ஆனந்த விகடன், போன்ற இதழ்களில் இவருடைய குறு நாவல், சிறுகதைகள், கவிதைகள் வெளிவந்துள்ளது. கணையாழி இதழில் ஆழித் துரும்புகள் என்ற தலைப்பில் தன் கடல் அனுபவங்களைத் தொடராக வழங்கியுள்ளார். இவருடைய கவிதைத் தொகுப்பை,'விரிசலுக்குப் பிறகு', என்ற தலைப்பில் வம்சி புக்ஸ் வெளியிட்டுள்ளது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க