கனம் கோர்ட்டார் அவர்களே: 23
— இன்னம்பூரான்.
சமுதாயத்தில் இயல்பாகவே கடமையாற்றலும், கடமை தவறினால், ஏற்புடைய நிவாரணமும், தவறு செய்தவர்களுக்கு தண்டனையும் இருக்கவேண்டும். நிவாரணம் உரிய நேரத்தில், சிக்கலும், பிரச்சினையும் இல்லாமல் கிடைக்கவேண்டும். இன்றைய நடைமுறையில் தவறு செய்தவர்கள் வீண்வாதம் செய்வதை, அதுவும் கோர்ட்டார் முன்னிலையில், அடிக்கடி காண்கிறோம். சான்றாக, போபால் நச்சு வாயு, கும்பகோணம் பள்ளி தீ விபத்து, டில்லி உபஹார் சினிமா தியேட்டர் இடிபாடு ஆகியவற்றைக் கூறலாம். என்ன தான் சால்ஜாப்பு சொல்லி தப்பிக்கப் பார்த்தாலும், குற்றம் குற்றமே. ஆனாலும் அளவுகடந்த தாமதங்களுக்குப் பிறகு தீர்வுகள் கிடைப்பதால், நாம் பழங்கஞ்சி குடிப்போர் கழக உறுப்பினர் ஆகிவிடுகிறோம்.
ஒரு பார்வை:
சென்னை எழும்பூர் பகுதியில் இருக்கும் தொன்மையான பெண்பாலாருக்கும், குழவிகளுக்கும் ஆன ஆஸ்பத்திரி பிரபலமானது. அதற்கு நல்ல பெயருண்டு. ஆனால், அங்கு ஒரு மாபெரும் தவறு நடந்துவிட்டது, 1996ல். அவ்வருடம் ஆகஸ்டு மாதம் கிருஷ்ணகுமார் தம்பதிக்கு பத்து மாதங்கள் பொறுத்திருக்காமல், பத்து வாரம் முன்னமே, குழந்தை பிறந்து விட்டது. அத்தகைய குழவிகளுக்குக் கண்பார்வை பாதிப்பு இருக்கக்கூடும் என்று பெற்றோர்களுக்கு எச்சரிக்கை செய்து, உடனே சிகிச்சை செய்யவேண்டும் என்பதை டாக்டர்கள் அவர்களிடம் சொல்லவில்லை.
விளைவு: அந்தப் பெண்குழந்தை ஒரு வருடத்துக்குள் கண்பார்வை இழந்தது. பெற்றோர்களும் அலையாத இடம் இல்லை. அமெரிக்கா போய் செய்யாத அறுவை சிகிச்சைகள் இல்லை. பயன் யாதும் இல்லை.
1998லியே அந்தப் பெண்ணின் தந்தை தேசீய நுகர்வோர் மையத்தில் கேட்டது நியாயமான நிவாரணம் (ரூபாய் 20 லட்சம் அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்று வந்த வகையில் + 30 லட்சம் வருங்கால மருத்துவ செலவுக்காக + 50 லட்சம், பட்ட கஷ்டம், மனவலி, உடல் வேதனை ஆகியவற்றுக்காக) மொத்தம் ஒரு கோடி. உலக பிரபலம் பெற்ற அகில இந்திய மருத்துவ மையம், எழும்பூர் ஆஸ்பத்திரி கடமை தவறி மாபெரும் அநீதி இழைக்கப்பட்டதை உறுதிப் படுத்திய பிறகும், தேசீய நுகர்வோர் மையம் மொத்தமாக ரூ. 5 லட்சம் நிவாரணம் அளித்தது எந்த விதத்திலும் உகந்ததாகப் படவில்லை. எதிர் தரப்பு தமிழக அரசு. அவர்கள் பொறுப்பை தட்டிக்கழிக்கலாமா?
தந்தை உச்சநீதிமன்றத்துக்கு விண்ணப்பம் செய்தார். அவருடைய வழக்கறிஞர் நிக்கில் நய்யார் அவர்கள் தங்கள் கேட்ட நிவாரணத்தைத் தொகையின் நியாயத்தை எடுத்துக்கூற, உச்ச நீதி மன்றம் ரூ.1.80 கோடி நிவாரணம் கொடுக்கவேண்டும் என்று தீர்வு அளித்தது, ஜூன் 24, 2015 அன்று.
அதற்குள் அந்தப் பெண்ணுக்கு வயது 18 ஆகிவிட்டது. அவள் கண்ணொளி இழந்த ஒரு யுவதி.
இனி ஒரு விதி செய்வோம்: நீதிமன்றங்களை மக்கள் மிகவும் மதிப்பதால், அவை தீர்வு அளிக்கும்போது, தாமதம் யாரால் ஏன் ஏற்பட்டது என்ற தகவலை ஒரு பட்டியலாக தரவேண்டும்.
சித்திரத்துக்கு நன்றி: http://www.thehindubusinessline.com/multimedia/dynamic/02257/BL27_snail_jpg_2257904f.jpg
இன்னம்பூரான்
http://innamburan.blogspot.co.uk
http://innamburan.blogspot.de/view/magazine
www.olitamizh.com