தமிழ்த்தேனீ

images

நீங்கள் தியானம் செய்ய வேண்டும் என்று முழுமனதோடு விரும்பினாலும் உங்கள் வேலைகள், நேரமின்மை போன்ற காரணங்களால் இது வரை தியானத்திலேயே ஈடுபட்டதில்லை என்கிற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா ? கவலைப்படாதீர்கள் நீங்கள் தினமும் தியானம் செய்துகொண்டுதான் இருக்கிறீர்கள். என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மை.

நீங்கள் அன்றாடம் செய்ய வேண்டிய அல்லது செய்யாவிட்டால் பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய வேலைகளை நேரம் தவறாமல் நேர்த்தியான முறையில் ஒழுங்காக செய்கிறீர்களா?

1. அல்லது நான்கு வேலைகளில் மூன்றை சரியாகச் செய்துவிட்டு ஏதேனும் ஒரு வேலையில் குறை வைத்துவிடுகிறீர்களா? உங்கள் கவனம் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் முதல் காரணி இது

2. அல்லது நான்கு வேலைகளில் இரண்டைச் சரியாகச் செய்துவிட்டு இரண்டு வேலைகளை அரைகுறையாக செய்கிறீர்களா? உங்கள் கவனம் பாதியாகக் குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் இரண்டாம் காரணி இது

3. அல்லது உங்கள் வேலைகளில் ஒன்றை மட்டுமே சரியாகச் செய்துவிட்டு மூன்று வேலைகளை முறையாகச் செய்யாமல் அதன் விளைவுகளால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் கவனம் முக்கால் பங்கு குறைந்திருக்கிறது என்பதை உணர்த்தும் மூன்றாம் காரணி இது

4. அல்லது உங்கள் நான்கு வேலைகளையுமே சரியாகச் செய்யாமல் குழப்பிக் கொண்டு மற்றவர்களின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகிறீர்களா? உங்கள் கவனம் முழுமையாக விலகிவிட்டது என்பதை உணர்த்தும் முழுக்காரணி இது

இந்த நிலை மிகவும் மோசமான நிலை நீங்கள் தியானம் செய்தே ஆகவேண்டும், அப்போதுதான் உங்கள் கவனத்தை நீங்கள் மீட்கமுடியும், ஆகவே நீங்கள் தியானம் செய்து உங்கள் கவனத்தை மீட்டே ஆகவேண்டும்.

இப்படியெல்லாம் மேற்கூறிய நான்கு நிலையையும் நீங்கள் எட்டாமல் உங்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப் படாமல் இருக்கிறதா? நீங்கள் தியானம் செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பது பொருள்.

ஏனய்யா நீங்கள் உங்கள் வேலைகளை முறையாகச் செய்கிறீர்கள் என்றால் தியானம் செய்கிறீர்கள் என்பது பொருள் என்று நான் சொல்வதை நம்ப முடியவில்லையா? உண்மை !

தியானம் என்பது என்ன என்பதை முதலில் பார்ப்போம்

தியானித்தல் என்றால் மனதை ஒருமுகப்படுத்துதல் , மனதை ஒருமுகப்படுத்துதல் என்றால் அலைபாயவிடாமல் ஒரு நிலையான இடத்தில் நிறுத்துதல் என்பது பொருள், இந்த மனதை ஆழ் கடலுக்கு ஒப்பிடுவார்கள் , ஏன் தெரியுமா? எல்லாக் கடலும் ஓரத்திலே அலைகளைக் கொண்டிருந்தாலும் நடுக்கடலில் அலைகளில்லாமல், சலனமில்லாமல் அமைதியாய் இருக்கும்.

நம் மனமும் பலவிதமான சிந்தனை அலைகளை ஓரத்திலே கொண்டிருந்தாலும் ஆழ் மனதில் அமைதியாய் நடுக்கடல் போல் இருக்கும்.

இந்த ஆழ் மனதில் மனதின் மையத்துக்கு நம் எண்ணங்களை சிதறவிடாமல் திரட்டி ஒரு புள்ளியில் குவித்து அந்தப் புள்ளியை நோக்கி நம் கவனத்தை கொண்டு செல்லுதலே ,அப்படிப் பட்ட பயிற்சியே தியானம், இப்படிப் பட்ட தியானத்தை நாம் அன்றாடம் செய்து கொண்டிருக்கிறோம் என்று நான் ஏற்கெனவே சொன்னேன் , மிகச் சாதாரணமாக நாம் செய்யும் அன்றாட வேலைகளில் சிலதை உதாரணமாகக் கொண்டு மிக எளிமையாக அலசுவோம்

நம் வீட்டில் நாம் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் வேலைக்கு செல்பவராக இருந்தால் , அல்லது பள்ளிக்கு செல்பவராக இருந்தால் அன்றாடம் எழுந்து பல்துலக்கிவிட்டு காலையில் ஒரு புத்துணர்ச்சி தரும் பானத்தை குடித்துவிட்டு , காலைக் கடன்களை முடித்துவிட்டு குளித்துவிட்டு காலை உணவை முடித்துவிட்டு பள்ளிக்கோ கல்லூரிக்கோ, அல்லது அலுவலகத்துக்கோ செல்வோம்.

இரவு வெகு நேரம் கழித்து படுக்கைக்குப் போய்த் தூங்கியதன் காரணமாக காலையில் வெகு நேரம் கழித்து எழுந்து நேரக் குறைவால் பதட்டமாக காரியங்களைச் செய்யும் போது தவறு ஏற்படுதல் இயல்பு, அப்படியில்லாமல் சரியான நேரத்துக்கு எழுந்தும் இயல்பாகக் காரியங்களை செய்யாமல் தடுமாறினால் அது ப்ரச்சனைகளைத் தரும், அப்படி இல்லாமல் முறையாக இயல்பாக எல்லாவற்றையும் செய்தால் உங்கள் கவனம் சிதறவில்லை என்பது பொருள்.

காலைக் கடன்களை மறக்காமல்முடித்துவிட்டு குளியலைறைக்கு செல்லும் முன் உடலைத் துடைத்துக் கொள்ள துவாலையை எடுத்துக் கொண்டு போகிறீர்கள், அங்கே சென்று மறக்காமல் உங்கள் சோப்பை உபயோகித்து குளிக்கிறீர்கள், வழுக்கி கீழே விழுந்துவிடாமல் கவனமாக நடந்து வந்து உங்கள் துவாலையால் துடைத்துக் கொண்டு வெளியே வந்து உங்கள் ஆடைகளை அணிந்துகொண்டு காலை உற்சாக பானத்தைக் குடித்துவிட்டு அல்லது காலை உணவை முடித்துவிட்டு உங்கள் வாகனத்தின் சாவியை எடுத்துக்கொண்டு ,உங்களுக்கு வேண்டிய புத்தகங்களோ, அல்லது கோப்புக்களையோ எடுத்துக்கொண்டு, சாலைப் போக்குவரத்துக்கேற்ப பயண நேரத்தையும் உங்கள் பாதுகாப்பையும் கருதி லாவகமாக வாகனத்தை இயக்கி மிகச் சரியான நேரத்தில் நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை அடைந்து அங்கே நீங்கள் செய்ய வேண்டிய பணிகளை திறமையாக முடித்துவிட்டு மீண்டும் மாலை வீட்டுக்கு அதே போல் பத்திரமாக வருகிறீர்கள் என்றால் உங்கள் மனதை நீங்கள் ஒருமுகப்படுத்தி காரியமாற்றி இருக்கிறீர்கள் என்பது புலனாகிறது. அப்படியானால் நீங்கள் தியானத்தில் இருந்தீர்கள் என்று பொருள் அல்லவா?

மேலும் மாலையில் வீட்டுக்கு வேண்டிய பொருள் ஏதேனும் வாங்க வேண்டியிருந்தாலோ அல்லது வரும் வழியில் யாரையாவது காணவேண்டும் என்று திட்டமிட்டிருந்தாலோ அவற்றையும் மிகச் சரியாக செய்து முடித்து வீட்டுக்கு வருகிறீர்கள் என்றால், மனதை ஒருமுகப் படுத்தி இருந்தீர்கள் என்றுதானே பொருள், மனதை ஒரு முகப்படுத்தவே தியானம் எனும் போது நீங்கள் ஏற்கெனவே மனதை ஒருமுகப்படுத்திக் காரியமாற்றுவதால் தியானத்தில் இருந்தீர்கள் என்றுதானே பொருள்.

மறதி ஏற்படும் போது ஞாபக சக்தியைத் தூண்டுவதற்கு,. மனம் சலனப்படும் போது, எண்ணக் குவிப்பு சிதறும் போதுதான் மனதை ஒருமுகப்டுத்துவதற்கு தியானம் என்பது தேவைப்படுகிறது. ஆகவே நாம் நம் கடமைகளை ஒழுங்காகச் செய்கிறோம் என்றாலே தியானம் செய்து கொண்டே இருக்கிறோம் என்றுதான் பொருள்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “தியானம்

  1. நன்றாக சொன்னீர்கள். தியானம் ஏன் எப்படி என்பது பற்றி ஆழமாக எளிமையான வார்த்தைகளில் என்.கணேசன் அவர்கள் ஆழ்மனதின் அற்புத சக்திகள் நூலில் விளக்கி உள்ளார். ஆர்வம் உள்ளவர்கள் படித்து பயன் பெறலாம். அந்த நூல் என் வாழ்வையே மாற்றி அமைத்த நூல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *