— எஸ். வி. நாராயணன்.

உஜ்ஜியினி ராஜா விக்கிரமாதித்தனை அறியாதவரும் உண்டோ? குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, விக்கிரமாதித்தனும் வேதாளமும் சேர்ந்து ஆற்றிய வீர, தீரச் செயல்கள் பற்றிய கதைகளை இன்றும், என்றும், விரும்பிக் கேட்கிறார்கள்.

அந்த விக்கிரமாதித்தனின் மூத்த சகோதரர்தான் ராஜா பர்த்ருஹரி. முதலில் அவர்தான் அரசராக இருந்தார். நன்கு பரிபாலனம் செய்து வந்தார். ஒரு சமயம், கடும் தவத்தின் பயனாகத் தான் பெற்ற ‘அமரக்கனி’ ஒன்றை அந்தணர் ஒருவர் ராஜா பர்த்ருஹரியிடம் கொடுத்தார். ராஜாவோ, அந்த அமரக் கனியை தமது பிரிய மனைவி ராணி பிங்களாவிடம் தந்தார். ராணியோ, அந்தக்கனியைத் தனது ஆசை நாயகனிடம் கொடுத்தாள். ஆசை நாயகனோ, அந்தப் பழத்தை அவனுக்குப் பிரிய நாயகியாக இருந்த ஒரு வேசியிடம் கொடுத்தான். அந்த வேசியோ, ராஜா பர்த்ருஹரியிடம் விசுவாசம் மிக்கவள். அவள் அந்த அபூர்வ பழத்தை அரசர்தாம் உண்ண வேண்டும் என நினைத்து, அதனை அரசனிடம் கொடுத்தாள். ராஜா பர்த்ருஹரி அதிர்ச்சியடைந்தான். ராணியிடம் தான் கொடுத்த பழம் மீண்டும் எப்படி தம்மிடமே வந்து சேர்ந்தது என்பது பற்றிய முழுவிவரத்தையும் அறிந்தான். ‘சே! இவ்வளவுதானா இந்த உலகம்!’ என நினைத்து வாழ்க்கையில் விரக்தியடைந்தான். ராஜ்யத்தை, தம்பி விக்கிரமாதித்தனிடம் ஒப்படைத்து விட்டு, வைராக்ய சீலனாக ஆகி, துறவறம் பூண்டான். முற்றும் துறந்த நிலையில், யோகியாக மாறிய பர்த்ருஹரி, பல கிரந்தங்களை வடமொழியில் இயற்றினார். அவற்றில் அவர் படைத்த ‘நீதிசதகம்’ மற்றும் ‘வைராக்ய சதகம்’ முக்கியமானவை. எளிமையான, மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு இவை சிறந்த வழி காட்டிகளாக இருக்கின்றன.

வைராக்ய சதகத்திலிருந்து ஒரு சில கவிதைத் துளிகளை இங்கு காண்போம்.

நான்கு வரியில் நாடகம் ஒன்றை ஒரு கவிதையில் காண்கிறோம்.

பட்டாடை தரித்த ராஜா ஒருபுறம். மரவுரி அணிந்த துறவி ஒருபுறம். துறவி கூறுகிறார்: ‘ராஜாவே பட்டாடையில் நீ சுகம் காண்கிறாய். மரவுரியில் நான் சுகம் காண்கிறேன். ஆக, இருவருக்கும் கிடைக்கும் இன்பம் ஒன்றுதான். மனது நிறைவு பெற்றால் இவ்வுலகில், யார் ஏழை? யார் பணக்காரன்?’ இந்தக் கருத்து கொண்ட வடமொழிக் கவிதையை தமிழில் வடிப்போமா?

“பட்டுடை அணியும் நீயும், மரவுரிதரித்த நானும்
அரசனே, அடையும் இன்பம் ஒன்றுதான் என்று காணாய்
அளவிலா ஆசைகொண்டோன் அவனே ஏழையாவான்
மனநிறைவு எய்திவிட்டால், ஏழை யார்? செல்வன் யார்?

எவ்வளவு உண்மையான வார்த்தைகள்! பேராசைதான் மனிதனின் அனைத்துக் கஷ்டங்களுக்கும் காரணமாக இருக்கிறது. ஆசை நம்மை எப்படியெல்லாம் ஆட்டுவிக்கிறது என்பதை பர்த்ருஹரி இன்னொரு கவிதையில் சுட்டிக்காட்டுகிறார்.

மமதை கொண்ட பணக்கார்களின் தயையைப் பெற அவர்களுடைய சுடு சொல்லையும், அவமதிப்பையும் பொறுத்துக் கொள்கிறோம். பொங்கிவரும் கண்ணீரை அடக்கி, அவர்கள் முன் பல்லிளித்து நிற்கிறோம். பணத்திமிர் கொண்ட மடையர்கள் காலிலே விழுகிறோம்; தொழுகிறோம். ஆசையின் பிடியில் சிக்கி எல்லா அவமானங்களையும் தாங்கிக் கொள்கிறோம் என்கிறார் பர்த்ருஹரி.

“செருக்குற்றார் தயை நாடி அவர்தம்
சுடுசொல் பொறுத்தேன்;
பொங்கிவந்த கண்ணீர் அடக்கி முறுவல் பூத்தேன் –
மனம்மிக நொந்து நானும் வெறும் கைதொழும்
கருவியானேன் –
அடங்கா ஆசையே! இன்னும் எங்ஙனம்
என்னை ஆட்டுவிப்பாயோ?”

பர்த்ருஹரியின் இந்தக் கருத்தைப் படிக்கும் போது, பழைய தமிழ்ப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது.

கல்லாத ஒருவனை நான் கற்றாய் என்றேன்
காடெறியும் அவனை நாடாள்வாய் என்றேன்
பொல்லாத ஒருவனை நான் நல்லாய் என்றேன்
போர் முகத்தை அறியானைப் புலியே என்றேன்
மல்லாரும் புயன் என்றேன் சூம்பல் தோளை
வழங்காத கையனை வள்ளல் என்றேன்
இல்லாது சொன்னேனுக்கு இல்லையென்றான்
யானும் என்றன் குற்றத்தால் ஏகின்றேனே.

ஆசையற்ற மனிதன் எப்படி இருப்பான் என்பதையும் படம் பிடித்துக் காட்டுகிறார் பர்த்ருஹரி. திடீர் செல்வந்தர்களின் தகாத செயலையும் பேச்சையும் அவன் சகித்துக் கொள்ள மாட்டான். ஏனெனில், அவனுக்கு எளிமையான வாழ்க்கையின் மேன்மை நன்கு புரிந்திருக்கிறது.

“உண்ணக் கனியுண்டு, பருக நீருண்டு
உறங்கத் தரையுண்டு, மரவுரியும் உண்டு உடுக்கவே.
பணம் கண்ட புதுமையிலே மமதையுடன் கொக்கரிக்கும்
மதியீனர்களின் அவச்சொல்லைப் பொறுப்பேனோ!”

ஆசை அடங்கிவிட்டால் வீண்பயம் ஒழிந்துவிடும் அல்லவா! ஆனால், ஆசையால் பீடிக்கப்பட்ட மனிதர்கள் தவறான பாதையிலேயே செல்கின்றனர் என்பதை வருத்தத்துடன் சுட்டிக்காட்டுகிறார் பர்த்ருஹரி.

‘புலிபோல் பயமுறுத்தும் மூப்பு பதுங்கிக் காத்திருப்பினும்
பகைவர்போல் பாயும் ரோகம் உடலைச்சுற்றி இருப்பினும்
ஒழுகும் பானைநீர்போல் ஆயுள் கசிந்து கொண்டிருப்பினும்
தீமையே இழைப்பர் மாந்தர்,
இதுவன்றோ விந்தையிலும் விந்தை!’

மனித வாழ்வின் அநித்யத்தை அறிந்து கொள்ளுங்கள் என்கிறார் பர்த்ருஹரி.

மனிதனின் ஆயுள் ஆண்டுகள் நூறே
ஆயுளில் பாதி கழிகிறது இரவில்
அதனில் பாதி பால்யமும் முதுமையும்
எஞ்சுவதில் மிஞ்சுவது பிணியும், துன்பமும்
நீர்அலைபோல் நிலையற்ற மானிட வாழ்வில்
சுகம் தான் என்னே? அறியோமே.

இதே கருத்தில் உள்ள தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரம் ஒன்றைப் பார்ப்போமா?
“வேத நூற் பிராயம் நூறு மனிசர்தாம் புகுவரேலும்
பாதியும் உறங்கிப் போகும்; நின்றதில் பதினையாண்டு
பேதை பாலகனதாகும்; பிணி, பசி, மூப்புத் துன்பம்
ஆதலால் பிறவி வேண்டேன் அரங்கமா நகருளானே!”

சான்றோர்களின் கருத்துக்கள் ஒத்திருப்பதில் அதிசயமில்லையே! எந்த மொழியில் இருந்தாலும், விவேகிகளின் வார்த்தைகள் வாழ்க்கையைப் பண்படுத்தும் என்பதில் ஐயமில்லை. வடமொழியோ, தமிழோ, ஹிந்தியோ, ஆங்கிலமோ, மொழிபேதம் பாராமல், நல்ல கருத்துக்களைப் படித்துப் பயன்பெறுவோம்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “ஏழை யார்? செல்வன் யார்?

  1. மிகவும் அருமை ! சிந்தனையைத் தூண்டும் ஒரு வார்த்தைச் சித்திரம் !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *