அறிந்துகொள்வோம் – 18 (சிக்மண்ட் ஃபிராய்டு)

0

-மேகலா இராமமூர்த்தி

மானுட உளவியலுக்குப் புத்தொளி பாய்ச்சியவர்

’கனவு காணுங்கள்!’ என்று இளைஞர்களை அறிவுறுத்தினார் மேனாள் குடியரசுத் தலைவரும், சிறந்த அணுவிஞ்ஞானியுமான அமரர் அப்துல் கலாம். அவர் குறிப்பிட்டது பஞ்சணையில் படுத்தபடிக் காண்கின்ற பயனற்ற பகற்கனவுகளை அல்ல! வாழ்வில் வெற்றிபெறத் தேவையான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் தரவல்ல இலட்சியக் கனவுகளை!

உறக்கத்தின் முக்கிய அங்கமான கனவுகளும், அதில் தோன்றுகின்ற காட்சிகளும் அவற்றின் தன்மைகளைப் பொறுத்துப் பல்வேறு உணர்ச்சிகளை மனிதருக்குள் விதைக்கவல்லவை. எதிர்காலத்தைக் கண்டறியும் ஓர் முன்னோட்டமாகக் கனவுகளை, அதிலும் அதிகாலைக் கனவுகளை நம் முன்னோர் கருதினர் என்பதை இலக்கியங்கள் வாயிலாய் அறிகின்றோம். அவை தெய்வாதீனமாக நிகழ்பவை (Godsend) என்று நம்புவோரும் உண்டு.

ஆனால் கனவுகளை அறிவியல்பூர்வமாக அணுகி அவற்றின் வாயிலாக மனிதர்களின், குறிப்பாக மனநோயாளிகளின் கடந்தகாலத்தை அறிந்து அவர்களின் உளநோய்களைக் குணப்படுத்தமுடியும் எனும் உண்மையை உலகுக்கு உணர்த்தியவர் ’பகுப்பாய்வு உளவியலின் தந்தை’ (Father of Psychoanalysis) என்று போற்றப்படும் சிக்மண்ட் ஃபிராய்டு (Sigmund Freud) எனும் உளவியல் மருத்துவர் ஆவார்.

Sigmund_Freudஆஸ்திரியாவிலுள்ள ஃப்ரெய்பர்க் (Freiberg) எனும் நகரில் (தற்போது செக் குடியரசில் உள்ளது) 1856-இல் கலீசிய யூத இனத்தில் (Galician Jews) பிறந்த ஃபிராய்டு, இளமை முதலே அறிவுக்கூர்மை மிக்கவராய்த் திகழ்ந்தார். அதுகண்ட அவருடைய பெற்றோர் தாம் வறுமையில் உழன்றபோதும் அவரை நல்ல பள்ளியில் கல்விகற்க வைத்தனர். 1881-ஆம் ஆண்டு வியன்னா பல்கலைக்கழகத்தில் தன்னுடைய மருத்துவப் படிப்பை நரம்பியல் துறையில் (Neurology) முடித்த ஃபிராய்டு, பின்பு வியன்னா பொது மருத்துவமனையில் மருத்துவராகவும், பேராசிரியராகவும் பணிபுரியத் தொடங்கினார். பெருமூளை வாதம் (cerebral palsy), பேச்சிழப்பு (aphasia), மற்றும் நரம்பியல் கட்டமைப்பு (neuroanatomy) குறித்து ஆய்வுகள் மேற்கொண்டார்.

தன்னுடைய நரம்பியல் ஆய்வுகளைச் சிறப்பாகத் தொடரவிரும்பிய ஃபிராய்டு, 1885-இல் பாரீஸுக்குப் பயணம் மேற்கொண்டார். அங்கே புகழ்பெற்ற நரம்பியல் மருத்துவரான ஜீன் மார்ட்டின் சார்காட் (Jean-Martin Charcot, a renowned neurologist in Paris) தலைமையின்கீழ் தம் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அப்போது சார்காட்டின் வித்தியாசமான மருத்துவ அணுகுமுறைகளைக் காணும் நல்வாய்ப்பு ஃபிராய்டுக்குக் கிடைத்தது. உடலுறுப்புக்களில் ஒன்று இயங்காத நிலையிலிருந்த நோயாளி ஒருவரை மருந்து மாத்திரைகள் மூலம் குணப்படுத்தாது, ஹிப்னாடிஸம் எனும் உளவியல் அணுகுமுறைமூலம் சார்காட் குணப்படுத்தியது கண்ட ஃபிராய்டு வியந்துபோனார்.

’மனித மூளையை நம்புவதைக் காட்டிலும் ஆழ்மனத்தின் ஆற்றலை நம்புவது அதிகப்பலன் தரும் போலும்’ எனும் எண்ணம் அவர் உள்ளத்தில் அச்சமயம் பளிச்சென்று உதயமானது. அவ்வகையில் சார்காட்டுடனான ஃபிராய்டின் சந்திப்பு அவர்தம் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனைக்கு அடிகோலியது எனலாம்.

அதுபோன்றே, மருத்துவர் ஜோசப் பிரயருடனான (Joseph Breuer) ஃபிராய்டின் நட்பும் குறிப்பிடத்தக்கது. அவர்கள் இருவரும் இணைந்து மனஉளைச்சல் நோய் குறித்த ஆய்வு’ (Studies on Hysteria) எனும் புகழ்பெற்ற நூலொன்றை 1895-இல் வெளியிட்டனர் .

அதன்பின்னர் மனித மனத்தைத் தீவிரமாய் ஆராய்வதிலேயே தன்னுடைய மருத்துவ அறிவை முழுதாய்ப் பயன்படுத்தினார் ஃபிராய்டு என்றுதான் சொல்லவேண்டும்.

மனிதன் என்பவன் பல தருணங்களில் சூழ்நிலைகளால் தீர்மானிக்கப்படுகின்றான். ஆம்…அவனொரு சூழ்நிலைக் கைதி! சமூகமும் வாழ்வியல்சார் ஒழுக்கநெறிகளும் ’தன்னிச்சைப்படி’ அவனை நடக்கவிடாமல் முடக்கிவைக்கின்றன. இவ்வாறு மனிதனை ஆட்டிப்படைக்கும் மனத்தை, உணர்வை வெளிப்படுத்தும் புறமனம், உணர்விற்கப்பாற்பட்ட அகமனம் என இரு கூறுகளாக்கினார் ஃபிராய்டு.

அதுபோல் மனத்தின் இயல்புகளையும் மூன்றாக வகைப்படுத்தினார். அவை:

1.   உணர்வு உந்தும் இயல்பு (Id)
2. நான் என்னும் முனைப்பு (Ego)
3. அதியுயர் மனக் கூறு (Superego)

மனிதனிடம் எழுகின்ற அன்பு, ஆசை, கருணை, காமம், பசி, வெறி போன்ற பல்வகை உணர்ச்சிகளையும் தூண்டுவது இந்த உணர்வு உந்தும் இயல்பே. ஃபிராய்டின் கூற்றுப்படி மனிதனின் இவ்வியல்பானது, வெளிஉலகைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னுடைய இன்ப விழைவையே முக்கிய நோக்கமாய்க் கொண்டிருக்கும் (This quality is called as the Pleasure Principle by Freud).

இரண்டாவது மன இயல்பான ’நான்’ என்னும் தன்முனைப்பு (Ego) வெளியுலகைப் பற்றிக் கவலைப்படாத முந்தைய இயல்பு போலல்லாது, ஆசையையும் புறச்சூழ்நிலையையும் இணைத்துப்பார்த்து ஆசை பூர்த்தியாவதற்கான வழிமுறைகளை முன்வைக்கின்றது. ஆனால் அவ்வழிமுறைகள் (சம்பந்தப்பட்ட) மனிதனுக்கு நன்மை பயப்பவையா இல்லையா என்பது குறித்து இவ்வியல்பு ஆராய்வதில்லை.

இத்தருணத்தில்தான் மனத்தின் மூன்றாவது இயல்பான அதியுயர் மனக்கூறு (Superego) வேலைசெய்யத் தொடங்குகின்றது. தன்னுடைய ஆசை/தேவை தனக்கும் சமுதாயத்துக்கும் நன்மை பயக்குமா என்பதையெல்லாம் சிந்திக்கத்தொடங்கும் இவ்வியல்பு, தனக்குச் சிறுவயது முதலே பெற்றோராலும் மற்றோராலும் கற்பிக்கப்பட்ட ஒழுக்கநெறிகளை, வாழ்வியல் பண்புகளை நினைவுகூர்ந்து மனத்தில் கிளர்ந்தெழும் (வேண்டாத) உணர்வுகளை அடக்கியாண்டு வெற்றிகொள்கின்றது.

மேற்கண்ட இம்மூன்று இயல்புகளுக்கிடையே நடைபெறும் போராட்டமே மனிதனின் ஆளுமையைத் தீர்மானிக்கின்றது என்று அறிவித்தார் சிக்மண்ட் ஃபிராய்டு.

உளவியலை விளக்கவந்த ஃபிராய்டு,”உளவியல் என்பது மனம் குறித்த திட்டவட்டமான வரையறை அன்று; அது தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது” என்றார். அதனையே உயிரோட்டமுள்ள உளவியல் (Psychodynamics or Dynamic Psychology) என்ற பெயரில் முன்வைத்தார்.

அடுத்து, கனவுகள் குறித்த அவருடைய ஆராய்ச்சியும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அவ்வாராய்ச்சி (மனநல) மருத்துவ உலகையே ஓர் புதியபாதையில் பயணிக்க வைத்தது என்று கூறலாம்.

’கனவுகளின் விளக்கம்’ (The interpretation of dreams) எனும் அவருடைய நூல்
கனவுகள் குறித்த அவரின் கருத்துக்களைத் தாங்கிநிற்கும் ஓர் அரிய படைப்பாகும். உலகையே புரட்டிப்போட்ட முக்கியமான ஐந்து புத்தகங்களில் ஒன்றாக அந்நூல் திகழ்கின்றது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.

அந்நூலில் அவர் குறிப்பிடும் சில முக்கியச் செய்திகள்…

’உறக்கத்தில் மனிதர்கள் காணும் கனவுகள் வெறும் கனவுகள் அல்ல…அவை அவர்களின் நிறைவேறாத ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள முனையும் ஆழ்மனத்தின் வெளிப்பாடே ஆகும்’ (dreams are various forms of wish fulfillment) என்ற ஃபிராய்டு, பெரும்பாலும் கனவுகளைப் பாலுறவுடனேயே சம்பந்தப்படுத்தினார். ஆம்! அவரைப் பொறுத்தவரை மனிதனுடைய எல்லாச் செயற்பாடுகளுக்கும் அவன் ஆழ்மனத்தில் புதைந்துகிடக்கும் பாலுணர்வே காரணமாகும். இதுவே அவருடைய மிகப்பெரிய குறையாக அவர் காலத்திய பிற மருத்துவர்களால் விமரிசிக்கப்பட்டது என அறிகின்றோம்.

இவ்விஷயத்தில் ஃபிராய்டின் நம்பிக்கையை நாம் முற்றாக நிராகரிக்கமுடியாது என்றபோதினும், இது சற்றே மிகையான நம்பிக்கைதான் என்பதை அவரே பின்னாளில் உணரத்தொடங்கினார்; அதனை அவருடைய பிந்தைய படைப்பான ’புலனின்பத் தேற்றத்துக்கு அப்பால்’ (Beyond the Pleasure Principle) எனும் நூல் புலப்படுத்துவதாய் உள்ளது.

நண்பர்களே! நம்மில் பலர் அலட்சியமாய் மறந்துவிட்டுப்போகும் கனவுகளுக்குள், மனித வாழ்க்கையையும், மனிதனின் ஆசைகளையும் கண்டெடுத்தவர் ஃபிராய்டு. ’கனவென்பது மனிதனை அவன் ஆழ்மனத்தோடு இணைக்கும் ராஜபாட்டை’ (Dreams to be the royal road to the unconscious) என்றார் அவர்.

டார்வினின் பரிணாமக் கோட்பாட்டுக்கும், மார்க்ஸின் மூலதனக் கோட்பாட்டுக்கும் இவ்வுலகம் தந்த அதே முக்கியத்துவத்தை ஃபிராய்டின் கனவுக் கோட்பாட்டுக்கும் தந்து அவரைக் கொண்டாடியது.

இவ்வாறு உளவியல் மருத்துவத்திற்குப் புத்தொளி பாய்ச்சி, அற்புதக் கண்டுபிடிப்புக்கள் பலசெய்த மருத்துவமேதை சிக்மண்ட ஃபிராய்டு தன்னுடைய 83-ஆம் அகவையில் (1939) தாடையில் ஏற்பட்ட புற்றுநோயால் மரணமடைந்தார். எனினும், அவருடைய அரிய உளவியல் ஆய்வுகள் அவரோடு முற்றுப்பெறாவண்ணம் அவருடைய அருமை மகளார் அன்னா ஃபிராய்டு (Anna Freud) அதே துறையில் முத்திரை பதித்துத் ’தந்தையர் ஒப்பர் மக்கள்’ எனும் ஆன்றோர் வாக்கை மெய்ப்பித்துக் காட்டியிருக்கிறார் என எண்ணுகையில் உவகை பிறக்கின்றது.

***

கட்டுரைக்குத் துணைசெய்தவை:

https://en.wikipedia.org/wiki/Sigmund_Freud

http://www.iep.utm.edu/freud/

http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=20110071&format=print&edition_id=20011007

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *