-மெய்யன் நடராஜ் 

நவீனத்துவத்தின் பொற்காலம்
தொடங்கிவிட்டது
வரைந்தவன் கைகளுக்கு
மோதிரம் அணிவிக்கணும் என்று
ஓவியன் வியந்திருக்கிறான்!

சாஸ்திரிய சங்கீதத்தையும்
மேற்கத்தைய சங்கீதத்தையும்
கலவை செய்த இசைக்குறிப்பு
இந்த நூற்றாண்டின்
மாபெரும் புதுமை
ஒஸ்கார் விருதுக்குப்
பரிந்துரை செய்யவேண்டும்
அபாரம் அபாரம்
பாராட்டித் தள்ளியிருக்கிறார்
பாகவதர்!

குணப்படுத்த முடியாத
நோய் ஒன்றுக்கான
வைத்தியரின் மருந்து சீட்டு
விலை அதிகமென்று
மயக்கம்போட வைத்திருக்கிறான்
மருந்துக்கடைக்காரன்!

மேல்நாட்டுப் பாணியிலான
நவீனக் கட்டடமொன்றிற்கான
வரைபடக் கூறு என்று
வரையறுத்துக் கூறிவிட்டான்
பொறியியலாளன் ஒருவன்!

பயங்கரக் கொலை கொள்ளையோடு
சம்பந்தப்பட்ட குற்றவாளியின்
கைரேகை அடையாளமென்று
திட்டவட்டமாகக் கூறி இருக்கிறான்
உளவுத்துறை நண்பனொருவன்!

சட்டைப் பையில் இருந்த
காகிதக் குறிப்பைப் பாராமல்
சலவை செய்துவிட்டு
இஸ்திரி கைபோடும்போது
அவதானித்துப் பதறிப்போனவள்
தெரிந்தவர்களிடம் கேட்டுக் குழம்பியதை
மாலையில் வீட்டுக்குவந்த
என்னிடம் காட்டினாள்

பார்த்துவிட்டுக் கேட்டேன்
“உனக்கு ஏதும் விளங்குகிறதா?”
“இல்லை” என்றவளிடம்
எனக்கும் விளங்கவில்லை
ஊரிலுள்ள எவருக்கும் விளங்கவில்லை
என்றால் நிச்சயம் இது
கையெழுத்து அழகில்லாதவன்
யாராவது எழுதிய ’புதுக்கவிதை’தான்
அடித்துச் சொன்னேன் நான்!

வாங்கிப் பார்த்துவிட்டு
“ஐயோ அப்பா” இது நேத்து
பேனா வாங்கும்போது
எழுதுதான்னு
கிறுக்கிப் பார்த்த காகிதம்
என்று  மகன் எடுத்து வீசும்மட்டும்
புரியவேயில்லை…
விளங்காத என்
கிறுக்கிப் பார்த்த காகிதம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *