சு. கோதண்டராமன்

18 தில்லை விடங்கன்

vallavan-kanavu1

பொன்னொத்த மேனிமேல் வெண்ணீ றணிந்து புரிசடைகண்
மின்னொத் திலங்கப் பலிதேர்ந் துழலும் விடங்கர்வேடச்
சின்னத்தி னான்மலி தில்லையுட் சிற்றம் பலத்துநட்டம்
என்னத்த னாடல்கண் டின்புற்ற தாலிவ் விருநிலமே.

-அப்பர்

மகேசனும் ஆதனும் வேறு நான்கு இளைஞர்களும் சிலை வடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மற்றவர்கள் இவர்களுக்குப் பாதுகாப்பாகச் சூழ்ந்து நின்றனர். மகேசன் ஆடலரசன் சிலை ஒன்றை மெழுகில் செய்தான். ஒரு காலை ஊன்றி ஒரு காலைத் தூக்கிக் கைகளைப் பக்கவாட்டில் விரித்த நிலையில் அமைந்த அந்தக் கோலம் கண்ணைக் கவர்ந்தது. அதற்கு அகலமான பீடம் ஒன்று அமைத்து அதன் மேல் கால் நிற்குமாறு பொருத்தினான். சிலை உறுதியாக நின்றது. ஆனால் சற்று நேரத்தில் முழுச் சிலையின் எடையைத் தாங்க முடியாமல் நின்ற கால் கொஞ்சம் கொஞ்சமாகக் கீழே வளையத் தொடங்கியது.

மனித உடலின் முழுப் பாரத்தையும் ஒரு காலில் தாங்கி நடனம் ஆடலாம். மெழுகுச்சிலையின் காலுக்கு அந்த வலு இல்லை. இந்தப் பிரச்சினையை எப்படித் தீர்ப்பது என்று இருவரும் இரவு பகலாக யோசனை செய்தனர். காவலுக்கு வந்தவர்களும் யோசித்தனர்.

அம்மையாரின் பாடல்களைப் பலமுறை படித்துப் படித்து மகேசன் மனதில் அந்த உருவமே சுழன்று கொண்டிருந்தது. ஆதனுக்கும் அப்படியே.

ஒரு நாள் மகேசன் திடீரென்று, “முழுப் பாரமும் காலில் தாக்காமல் பக்கவாட்டில் அதற்குத் துணையாக வேறு ஏதேனும் கொடுக்கலாமா?” என்று கேட்டான். ஆதனுக்குத் தீப்பொறி போல ஒரு கருத்து பளிச்சிட்டது. ஆடற்பெருமான் ஆடும் போது கைகள் வீசப்படும், ஆடை பறக்கும், சடை விரியும். இப்படி மையத்தை விட்டு வெளியில் செல்லும் பகுதிகளையெல்லாம் இணைத்து ஒரு வட்டம் அமைத்து அதைப் பின்புலமாக அமைத்தால் பாரம் சீராகப் பரவி நிற்கும். நிற்கும் காலில் அதிகப் பாரம் தாக்காது என்று தோன்றியது.

அதை உடனே செயல்படுத்தினான். ஆடற் பெருமானின் நீட்டிய கைகள், பறக்கும் ஆடைகள், விரித்த சடைகள், தோளிலிருந்து எட்டிப் பார்க்கும் பாம்பு இவற்றின் முனைகளைத் தொட்டுக் கொண்டு இருக்குமாறு ஒரு வட்டப் பட்டை (திருவாசி) அமைத்தான். வீசிய கைகளையும் காலையும் உள்ளடக்கும் அளவுக்கு வட்டம் பெரிதாக அமைக்க வேண்டியிருந்தது. அதனால் சிலையை உயர்த்துவதற்காகப் பீடத்தின் உயரத்தை அதிகரிக்க வேண்டியாயிற்று. பீடத்தை வெறுமனே உயர்த்தாமல் அதைக் கலைநுட்பத்தோடு செய்ய விரும்பினான் ஆதன்.

மகேசனுக்கு ‘தானவனைப் பாதத் தனிவிரலாற் செற்றான்’ என்று அம்மையார் கூறியது நெஞ்சில் சுழன்றுகொண்டிருந்தது. ஆடலரசன் பாதத்தின் கீழ் ஒரு அரக்கன் உருவத்தை வைக்கலாமே என்று யோசனை கூறினான். ஆதன் அவ்வாறே ஒரு அரக்கன் உருவத்தைச் செய்து பீடத்துக்கும் பாதத்துக்கும் இடையில் வைத்தான். உயரப் பிரச்சினையும் தீர்ந்தது.

இப்பொழுது அவன் செய்த சிலை உறுதியாக நின்றது. பார்ப்பதற்கு முன்னைவிடக் கவர்ச்சியாகவும் இருந்தது. வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லிக் கொண்டே அதற்கு வண்டல் மண், உமிச்சாம்பல், பசுஞ்சாணம் இவற்றால் கவசம் இட்டுக் காய வைத்தார்கள். காய்ந்தபின் அதன் மேல் இன்னொரு பூச்சு களிமண்ணால் இட்டார்கள். அதுவும் காய்ந்த பின் இன்னொரு பூச்சு களிமண்ணும் மணலும் சேர்த்து இட்டார்கள். அதை இரும்புக் கம்பிகளால் கட்டிக் காயவைத்தார்கள். நன்றாகக் காய்ந்தபின் அதைத் தீயிலிட்டு மெழுகை உருக்கி எடுத்து விட்டு இறைவனை வேண்டிக்கொண்டு உலோகக் கலவையைக் காய்ச்சி ஊற்றினான் ஆதன். இரண்டு நாட்கள் ஆறவிட்டு, ஆறிக் குளிர்ந்தபின் மண்காப்பைத் தட்டிவிட்டுப் பார்த்தால் கண்ணையும் கருத்தையும் கவரும் ஆடற்பெருமான் வடிவம் கண்முன் நின்றது. இவ்வளவு நாள் கற்பனையிலேயே இருந்த வடிவம் கண்முன்னே தோன்றியதும் அனைவரும் அதைப் பார்த்துக் கொண்டே உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் வடித்தார்கள்.

நீண்ட நேரத்துக்குப் பின்தான் அவர்களுக்கு நினைவு வந்தது. காவலுக்கு வந்திருந்த நண்பர்களைக் கூப்பிட்டார்கள். எல்லோரும் வந்து பார்த்தார்கள். வியந்தார்கள், வியந்து கொண்டே இருந்தார்கள். ஒருவருக்காவது வேறு நினைவு இல்லை. எவ்வளவு முயற்சிக்குப் பின் இது சாத்தியமாகி இருக்கிறது! சோழநாட்டில், ஏன், உலகத்திலேயே ஆடும் நிலையிலான முதல் சிலை இது என்று எண்ணும்போது இது நம்முடையது, நமது தில்லைக்குச் சொந்தமானது என்ற பெருமிதம் ஏற்பட்டது.

ஊர் மக்கள் வந்து வைத்த கண் வாங்காமல் பார்த்தார்கள். எத்தனை நேரம் பார்த்தாலும் எவருக்கும் திகட்டவில்லை. அரசருக்குச் சொல்லி அனுப்பினார்கள். மறுநாளே அரசர் செங்கணான் வந்துவிட்டார். பார்த்த உடனேயே பரவசமடைந்தார். அவரது கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர் பெருகியது. ‘இதோ, எல்லோரும் அம்மையார் வர்ணித்த கோலத்தைப் பார்த்து மகிழ முடிந்துள்ளது. இது சைவ சமய வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக அமையும்’ என்று நினைத்து நெடுஞ்சாண்கிடையாக அந்தச் சிலை முன் விழுந்து வணங்கினார். ஒவ்வொரு பகுதியாகப் பார்த்து ரசித்தார். பொன்னுரு, பொன்னடிகள், தூக்கிய திருவடி, தலையில் நிலா, மார்பில் பாம்பு, பொன்னைச் சுருளாகச் செய்தனைய சடை- அம்மையார் வடித்த சொற்சிலையை, இதுவரை மனக்கண் உள்ளவர்கள் மட்டுமே காண முடிந்ததை, இந்த இளைஞன் பொற்சிலையாக வடித்து எல்லா வகை மக்களும் புறக் கண்ணால்  காண வைத்திருக்கிறான்.

தூக்கிய திருவடியில்தான் என்ன வேகத்தைக் காட்டியிருக்கிறான் இந்தச்  சிற்பி! ‘இறைவன் அடி பெயர்ந்தால் பாதாளம் பெயரும், அவரது முடி நகர்ந்தால் அண்டத்தின் உச்சி உடையும், கைகள் அசைந்தால் வான் திசைகள் உடையும்’ என்று அம்மையார் வருணித்த சண்ட மாருத வேகத்தைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறான்.

“ஆதனாரே, இங்கு வாரும். உலகம் முழுவதும் பாராட்டக் கூடிய ஒரு சாதனையைச் செய்திருக்கிறீர். அறிவித்தபடி உமக்கு ஆயிரம் பொன் பரிசு தருவோம். இனி உமது ஊர் உமது பெயரால் ஆதனூர்* என்று அழைக்கப்படும்” என்று அறிவித்தார்.

“காழிப்பதி புண்ணிய பூமி என்று என் கொள்ளுத் தாத்தா கூறியது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. இங்குதான் ஆடற்பெருமான் உலோக வடிவில் அவதாரம் செய்ய வேண்டுமென்று திருவுள்ளம் கொண்டிருந்தார் போலும். இந்த ஆதனோடு பயின்ற சிற்பிகள் ஏழு பேர் தங்கள் தங்கள் ஊர்களில் சிலை செய்ய முயன்று வெற்றி பெறவில்லை. ஆதனைக் கொண்டு அவர்களைப் பயிற்றுவித்து இது போல் பல விக்கிரகங்களை ஏற்படுத்தி எல்லா ஊர்க் கோயில்களிலும்  வைக்க ஏற்பாடு செய்வோம். இந்த விக்கிரகம் இந்த ஊர்க் கோவிலில் இருக்கட்டும்” என்றார் அரசர்.

உடனே தில்லை அந்தணர்கள், “மன்னிக்க வேண்டும், அரசே. இது தில்லை வாழ் அந்தணர்களின் முயற்சியால் உருவானது. செய்தது ஆதன்தான் எனினும் அவருக்கு வேண்டிய வசதிகளும் பாதுகாப்பும் கொடுத்து உதவியது தில்லை அந்தணர்களே. எனவே இந்த விக்கிரகம் தில்லை அந்தணர்களுக்கே உரியதாக்கப்பட உத்திரவிடவேண்டும். மேலும் இதுவரை சமணக் கோட்டையாக இருந்த தில்லை இப்பொழுதுதான் அவர்களிடமிருந்து விடுதலை பெற்றிருக்கிறது. அந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இந்த விக்கிரகம் தில்லையில் அமைவதுதான் சிறப்பாக இருக்கும்” என்றனர்.

அரசர் மறுப்புக் கூறவில்லை. “முதல் சிவலிங்கம் ஏற்படுத்தப்பட்ட பெருமை காழிக்கு இருக்கட்டும். முதல் ஆடற்பெருமான் சிலையைக் கொண்ட பெருமை தில்லைக்கு இருக்கட்டும் என்றார். ஆனால் ஒன்று, தில்லைக்கு உரிய ஆடலரசனின் முதல் விடங்கப் பெருமான் உதயமானதை முன்னிட்டு இந்த இடம் இனி தில்லை விடங்கன்* என்று அழைக்கப்படும்” என்றார்.

ஆனால் அந்த விக்கிரகத்தைத் தில்லைக்குக் கொண்டு செல்வது அவ்வளவு எளிதாக இல்லை. வைணவர்களிடமிருந்து பலத்த எதிர்ப்பு வரும் என்பது நிச்சயமாகத் தெரிந்தது. எனவே ஆடற்பெருமான் தில்லை விடங்கனிலேயே வைக்கப்பட்டிருந்தார். அங்கேயே அவருக்குப் பூசைகள் செய்யப்பட்டு வந்தன. தில்லையிலிருந்து தீக்ஷிதர்களும், பல வகைச் சாதியினரும் கூட்டம் கூட்டமாக அங்கு சென்று அவரைத் தரிசித்து வந்தனர். இவ்வளவு உயர்ந்த விக்கிரகம் நமது ஊரில் வைத்துப் பூசிக்கப்பட வேண்டுமென்ற எண்ணம் அவர்களிடையே வலுவாக வளர்ந்து வந்தது.

— ————————————————————————- —————————————————

* ஆதனூர் தில்லைக்குத் தென்மேற்கில் உள்ளது.

* தில்லைவிடங்கன் சீர்காழிக்குக் கிழக்கே உள்ளது.

தொடரும்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *