நடராஜன் கல்பட்டு 

பூசையும் பூனையும்

பக்தியும் சிரத்தையும் கொண்ட ஒருவர் தன் வீட்டில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் கிரமமாகப் பூசைகள் செய்வார். அவருக்கு மூன்று மகன்கள். மூத்தவனுக்கு வயது பத்திருக்கும் போது அவரும் அவர் மனைவியும் ஒரு சாலை விபத்தில் சிக்கி இறந்து விட்டனர். அவரது உறவினர்கள் ஆளுக்கு ஒரு பிள்ளையாக எடுத்துச் சென்று வளர்த்து வந்தனர்.

மூத்தவன் படித்து முடித்து வேலைக்குப் போக ஆரம்பித்ததும் தனது இரு தம்பிகளையும் தன்னுடனே அழைத்துக் கொண்டான். மூவருமாக மீண்டும் செர்ந்து சந்தோஷமாக இருந்தனர்.

அப்போது ஒரு நாள் மூத்தவன் சொன்னான், ‘நமது அப்பா ஒவ்வொரு பண்டிகையின் போதும் அழகாகப் பூஜைகள் செய்வார். நாமும் இனி பூஜைகள் செய்ய வேண்டும் நம் வீட்டில்’ என்று. ‘ஆமாம்’ ‘ஆமாம்’ என்று மற்ற இருவரும் தங்கள் தலைகளை ஆட்டினர்.

விநாயக சதுர்த்தி வந்தது. பெரியவன் கடைக்குப் போய் பூ, பழங்கள், கரும்பு, வாழை இலை இவற்றை வாங்கி வந்தான். இரண்டாமவன், கணிமண் பிள்ளையார், பிள்ளையார் குடை, மஞ்சள் பொடி, சந்தனம், கற்பூரம், ஊதுவத்தி, சாம்பிராணி இவற்றை வாங்கி வந்தான்.

வீட்டின் ஒரு அறையில் சுவரோரமாக பெருக்கி, தணீர் தெளித்துத் துடைத்து, கோலம் போட்டு, ஒரு கோலம் போட்ட பலகை மீது பிள்ளையாரை வைத்து அவருக்கு மலர் மாலை அலங்காரங்கள் செய்தார்கள் மூவருமாக.

‘பூஜையை ஆரம்பிக்கலாமா?’ என்று பெரியவன் கேட்க, கடைசீ பையன் சொன்னான், ‘ஒரு நிமிஷம். அப்பா பூசைகள் செய்யும் போது எப்போதும் ஒரு கருப்புப் பூனையை அந்தத் தூணில் கட்டி விட்டுத் தான் பூசையை ஆரம்பிப்பார். இதோ வந்து விடுகிறேன்’ என்று சொல்லி வெளியே ஓடி சென்று ஒரு கருப்புப் பூனைக் குட்டியுடன் திரும்பினான்.

அப்பா செய்தது வீட்டில் இருக்கும் பூனை பூசைகள் செய்து கொண்டிருக்கும் போது குறுக்கும் நெடுக்குமாக ஓடி எதையேனும் கொட்டிக் கவிழ்த்து விடாமல் இருக்க வேண்டுமே என்பதற்காத் தான். ஆனால் பிள்ளைகள் நினைத்தார்கள் பூசைக்குப் பூனைக் குட்டி அவசியம் என்று.

இது ஒரு கதை தான். அனால் இது நிஜமாகும் நாள் வெகு தூரத்தில் இல்லை. காரணம் நாம் செய்யும் பூசைகள் பற்றியோ, செய்யும் செயல்களின் காரணங்கள் பற்றியோ அடுத்த தலை முறைக்கு நாம் விளக்குவது இல்லை.

பூசைகள் எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் தான் அவை செய்யப் படுவதின் பின்னணியைக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டியதும்.

(தொடரும்……)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *