அக்டோபர் 19, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு திரு. சேசாத்திரி சிறீதரன்  அவர்கள்

Seshadri Sridharan2

வல்லமை மின்னிதழின் இவ்வார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி சிறீதரன் அவர்கள். கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகள் செம்மொழி தகுதிச்சான்றினை இந்திய அரசிடம் இருந்து பெறும் பொருட்டு சமர்ப்பித்த கல்வெட்டுகளை இவர் மறுஆய்வு செய்துள்ளார். அதன் அடிப்படையில், மாற்றுக்கோணத்தைக் காட்டும் கட்டுரைகளை வல்லமை கூகுள் குழுமத்தில் (https://groups.google.com/forum/?fromgroups#!forum/vallamai) எழுதியதற்காக இவர் வல்லமையாளராகப் பாராட்டப் படுகிறார்.

கலிஃபோர்னியா பெர்க்லி பல்கலைக்கழக தமிழ்ப் பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்கள், 2000 ஆண்டு வாக்கில், அந்நாளில் தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்படாமல் இருக்க நேர்ந்ததன் காரணத்தை விளக்க முற்பட்டபொழுது (Statement on the Status of Tamil as a Classical Language, Professor of Tamil at the University of California, Berkeley, April 11, 2000), இந்திய அரசியல் சூழ்நிலையும், தமிழுக்குச் செம்மொழி தகுதி வழங்கினால் பிற இந்திய மொழிகளும் தங்கள் மொழிக்காக வற்புறுத்தும் நிலை ஏற்படக்கூடும் என்ற அச்சமும் காரணமாக இருக்கலாம் என்று கீழ்வருமாறு தனது மடல் ஒன்றில் (http://southasia.berkeley.edu/tamil-classes) குறிப்பிட்டிருந்தார்…

“In trying to discern why Tamil has not been recognized as a classical language, I can see only a political reason: there is a fear that if Tamil is selected as a classical language, other Indian languages may claim similar status. “

இந்திய மொழிகளில் செம்மொழித்தகுதிகள் கொண்டவை தமிழும் சமஸ்கிருதமும் மட்டுமே என்பது பேராசிரியர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களின் கருத்து. அவர் குறிப்பிட்ட “அரசியல்” என்ற காரணம் பின்னாளில் பொய்க்கவில்லை. தமிழுக்குச் செம்மொழி தகுதி அறிவிக்கப்பட்டதும், தமிழில் இருந்து கிளைத்த பிற திராவிட மொழிகளும் தங்கள் மொழிக்குப் பெருமை சேர்க்கும் நோக்கில் செம்மொழி தகுதி கேட்டு இந்திய அரசிடம் வேண்டுகோள் விடுக்கத் துவங்கின.

இதைத் தொடர்ந்து, ஒரு மொழிக்கு செம்மொழிச் சான்று வழங்க இந்திய அரசு சில நெறிமுறைகளைப் பின்பற்றியது. அந்த நெறிமுறைகளின்படி, ஒரு மொழியின் பழைய இலக்கியங்கள் அல்லது பதியப்பட்ட வரலாறு 1,500 முதல் 2,000 ஆண்டுகள் பழமை மிக்கதாய் இருக்க வேண்டும் என்று வரையறுக்கப்பட்டது. இந்த வரைமுறைகளின் அடிப்படையில் இதுவரை தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா என ஆறு மொழிகள் இந்திய அரசால் செம்மொழிகளாக ஏற்று அறிவிக்கப்பட்டுள்ளன.

தங்கள் மொழியின் பழமைக்குச் சான்றாக கன்னட மொழியினர் “ஹல்மிடி” கல்வெட்டினையும், தெலுங்கு மொழியினர் “கலமல்லா” கல்வெட்டினையும் சமர்ப்பித்து தங்களது மொழிகளுக்குச் செம்மொழி தகுதியினைப் பெற்றனர்.

இதற்கான சான்றுகளையும், அதன் மேல் கல்வெட்டு ஆர்வலர் திரு. சேசாத்திரி அவர்கள் எழுப்பும் கேள்விகளையும் இனி சுருக்கமாக கீழே காணலாம் (கருத்துக்களை விளக்க இயன்றவரை அவர் எழுத்துகள் கையாளப்பட்டுள்ளன). அக்கட்டுரைகளின் முழு வடிவங்களையும் கீழ்காணும் சுட்டிகளின் வழி சென்று படிக்கலாம்.

செம்மொழி கன்னடத்தின் ஹல்மிடி கல்வெட்டு
https://groups.google.com/d/msg/vallamai/iLKZBO5bKsc/_WWdsK_qBQAJ

செம்மொழி தெலுங்கின் கலமல்லா கல்வெட்டு
https://groups.google.com/d/msg/vallamai/GLpn2097IAw/mqMoWM1MAwAJ

Seshadri Sridharan1

கன்னட மொழியின் பழமைக்குச் சான்றாக கருநாடகத்து அசன் மாவட்டத்தில் உள்ள பேளூர் வட்டத்தில் அமைந்த ஹல்மிடி என்ற ஊரின்கண் அமைந்துள்ள வீரபத்திரன் கோவில் முன் மைசூர் அரசின் தொல்லியல் துறை இயக்குநராக இருந்த திரு எம். எச். கிருஷ்ணாவால் 1936 இல் கண்டறியப்பட்ட காலம் குறிப்பிடாத கல்வெட்டு ஒன்றை ஆவணமாகக் காட்டி கன்னட மொழிக்கு செம்மொழித் தகுதி பெற்றுள்ளனர். இதன் காலம் கி.பி. 450 என அறிஞர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதன் காலம் குறித்து பல்வேறு அறிஞரிடையே முரண்பட்ட கருத்துகள் நிலவுகின்றன. இதில் பயிலும் மொழி முது பழங்கன்னடம் எனப்படுகிறது. கல்வெட்டில் காலக் குறிப்பு ஏதும் இடம்பெறவில்லை. கதம்பன் ககுஸ்தன் என்ற பெயர் இடம்பெறுவதை மட்டுமே கருத்தில் கொண்டு இக்கல்வெட்டு கி.பி.450 இல் வடிக்கப்பட்டது என்று அறிஞர் முடிவு கொண்டு விட்டனர். இது ஒரு தவறான அணுகுமுறை, என்று கூறும் சேசாத்திரி,

  • இக்கல்வெட்டில் குறிப்பிடும் அரசன் அதே பெயரிலுள்ள பிற்காலத்தவர் என்ற கருத்து வேறுபாடுகள் உள்ளன
  • கல்வெட்டில் சமஸ்கிரதம் அதிகம் கலந்துள்ளது, ஆனால் தென்னகத்தில் சமற்கிருத மொழி 6 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிமுகமானது என்பதால் கல்வெட்டின் காலம் கி.பி. 450 என்ற கருத்து அடிபட்டுப் போகிறது
  • கல்வெட்டில் கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசரால் இயற்றப்பட்ட ஸ்ரீமத் பாகவத புராணக் கருத்துகள் எடுத்தாளப்படுகிறது
  • அத்துடன் கல்வெட்டு குறிப்பிடும் பாவம், புண்ணியம், அறம் ஆகிய கருத்துகள் கி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மக்களிடம் பரவியது
  • இக்கல்வெட்டில் காணப்படும் மாபாதகன், மாபாதகம் ஆகிய சொற்கள் இந்தக் கல்வெட்டின் காலத்தை கி.பி. 9 – 10 ஆம் நூற்றாண்டுகளுக்கு நடுவே அல்லது 11 ஆம் நூற்றாண்டில் வைக்கின்றது
  • கற்கோவில்கள் தென்னகத்தில் பரவிய காலம் கி.பி. 8 ஆம் நூற்றாண்டளவில் என்பதால் அக்காலத்தியக் கல்வெட்டாகவே இக்கல்வெட்டு இருக்கும் வாய்ப்புள்ளது

எனவே, மேற்கூறிய காரணங்களால் ஹல்மிடி கல்வெட்டு கன்னடத்திற்குச் செம்மொழி ஆவணமாகக் காட்டுவதற்கு பொருத்தமற்றதாக உள்ளது என்ற முடிவிற்கு இட்டுச்செல்கிறது எனக் கூறுகிறார்.

 

அடுத்து, தெலுங்கு மொழியின் பழமைக்குச் சான்றாக, கடப்பை மாவட்டம் கமலாபுரம் வட்டம் ஏற்ரகுடிபாலேம் கலமல்லா ஸ்ரீ சென்னகேசவ பெருமாள் கோவிலில் கண்டு அறியப்பட்ட ரேனாட்டு சோழன் எரிகல் முத்துராசு தனஞ்செயன் பற்றிய கல்வெட்டு எழுத்தமைதியால் பழமையானது, கி.பி. 575 ஆம் நூற்றாண்டினது என்று முடிவு செய்யப்பட்டு அதை நடுவண் பண்பாடு அமைச்சகத்திற்குச் சான்று ஆவணமாகக் காட்டியுள்ளனர் தெலுங்கு மொழியினர். அக் கல்வெட்டுத் தொடர்பான சேசாத்திரியின் கருத்துகள்,

  • தென்னிந்திய கல்வெட்டுகள் தொகுதி 10 ல் இக்கல்வெட்டின் காலம் குறித்தோ அல்லது எழுத்தமைதி மிகப் பழமையானது என்றோ எந்தக் குறிப்பும் இல்லை
  • கல்வெட்டிலும் காலக் குறிப்பு ஏதும் இல்லை
  • ரேனாட்டு சோழன் தனஞ்சயனின் மெய்க்கீர்த்திகளோ அல்லது ரைவணனின் அரச பின்னணிக் குறிப்புகளோ இக்கல்வெட்டில் இடம்பெறவில்லை ஆதலால் இது அரசர் வெட்டிய கல்வெட்டு அல்ல
  • எரிகல் முத்துராஜு புண்ணியகுமார என்ற பெயரில் இன்னொரு அரசனும் இருந்துள்ளான். ஆதலால் பிற்கால அரசர் சிலர் எரிகல் முத்துராஜு என்ற மூதாதையின் பெயரை தம் பெயரோடு இணைத்துக் கொண்டார்கள் என்று கருதுவதே சரி
  • கல்வெட்டு குறிக்கும் தனஞ்சயன், ரேவண் ஆகிய பெயர்கள் புராணப் பெயர்கள். தனஞ்சயன் என்ற பெயர் முதன் முதலாக கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் வாதராயண வியாசர் இயற்றப்பட்ட பாகவத புராணத்தில் தான் இடம் பெறுகிறது. அதற்கு முன்னம் இப்பெயர் பரவியிருக்க வாய்ப்பில்லை
  • பாறைகளைச் செதுக்கி கற்றளிகள் கட்டுவது தென்னிந்தியாவில் முதன்முதலாக 8 ஆம் நூற்றாண்டில் தான் ராசசிம்மப் பல்லவனால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கல்வெட்டு திறந்த வெளியில் நிறுத்தப்பட்ட கல்வெட்டு அல்ல மாறாகக் கற்கோவிலின் ஒரு தூணில் இருபக்கங்களில் வெட்டப்பட்ட கல்வெட்டு எனும்போது இது 6 ஆம் நூற்றாண்டு கல்வெட்டாக இருக்க முடியாது 8 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட கல்வெட்டாகத்தான் இருக்க முடியும்
  • மேலும், கல்வெட்டில் இழிந்த குலத்தோர் என்ற குறிப்பு இக்கல்வெட்டின் காலத்தை மேலும் பின்னுக்குத் தள்ளுகிறது. புராண இந்து மதம் பரவிய பின்பு 9 – 10 ஆம் நூற்றாண்டுகளில் தான் பிறப்பு வழி ஏற்றத் தாழ்வுகள் மக்கள் கருத்தில் வேரூன்றின. ஆகவே இக்கல்வெட்டு 10 ஆம் நூற்றாண்டளவில் வெட்டப்பட்டிருக்க வேண்டும் என்று கருதவே இடம் தருகிறது

எனவே, தெலுங்கைச் செம்மொழி என காட்டற்கு இக்கல்வெட்டிற்குச் சற்றும் தகுதி இல்லை. ஏனெனில் இதனினும் பழமையான தெலுங்கு நடுகல் கல்வெட்டுகள் உள்ளன என்பது கல்வெட்டு பற்றிய சேசாத்திரியின் கருத்து

எனவே, இரு கல்வெட்டுகளும் அவை கூறப்படும் காலத்திற்கு பிற்காலத்தவை, இவை பிற்காலத்தில் கற்கோவில்கள் தோன்றிய பிறகு அவற்றின் பகுதிகள், இவை பிற்காலப் புராணக் கதைகளை கொண்டுள்ளன, பிற்காலத்திய அரசன் பெயர்கள் என்பது கருத்தில் கொள்ளப்படவில்லை, பிற்காலத்தில் மக்களிடம் புழக்கத்திற்கு வந்த கருத்தாக்கங்களை கொண்டுள்ளன என்ற காரணங்களைக் காட்டி, கல்வெட்டுகளின் கால நிர்ணயத்தின் மீது கேள்விகள் எழுப்பி அவற்றின் பழமையை நிராகரிக்கிறார் திரு. சேசாத்திரி.

இவ்வாறு புதிய கோணங்களைக் காட்டி, கல்வெட்டு ஆவணச் சான்றுகளின் காலத்தைப் பற்றிய சிறப்பான கட்டுரைகளை வழங்கியதற்காக, திரு. சேசாத்திரி அவர்களை வல்லமையாளராகப் பாராட்டி மகிழ்கிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *