பவள சங்கரி

அன்பிற்கினிய நண்பர்களே!

வணக்கம். கண்ணையும், கருத்தையும் கவரும் படமொன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் திறமை கொண்டவரா நீங்கள்?

12170653_905971192790414_629550325_n

134429018@N04_rராம்குமார் ராதாகிருஷ்ணன் எடுத்த இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள். இதனை நம் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பு ஆசிரியர் திருமதி சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து அளித்துள்ளார்.

இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை நல்ல தலைப்புடன் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் சனிக்கிழமை (24.09.2015) வரை உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர், தமிழ் இலக்கிய ஆராய்ச்சியாளர் திருமதி மேகலா தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பல முறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப்படும் கவிஞர்களுக்கும் உண்டு. 12 மாதமும் தேர்வுபெறும் ஒளிப்படக் கலைஞர் / கவிஞர்களிலிருந்து ஆண்டின் சிறந்த கலைஞரும், கவிஞரும் தேர்வு பெறுவார்கள். ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். இது, கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்கு பெற அழைக்கிறோம்.

புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்த திருமதி மேகலா இராமமூர்த்தி கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009 ம் ஆண்டுகளில் (ஆர்லாண்டோ & அட்லாண்டா) கவியரங்கம், இலக்கிய வினாடி வினா நிகழ்ச்சிகளில் பங்கேற்று பாராட்டுகளும், பரிசுகளும் பெற்றுள்ளவர். புறநானூறு, குறுந்தொகைப் பாடல்களில் அதிக நாட்டமும், இலக்கியக் கூட்டங்களில் சுவைபட பேசுவதிலும் வல்லமை பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடைபவளம்

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “படக்கவிதைப் போட்டி (35)

  1. கொலு பொம்மை
    என்று நினைத்து 
    பார்த்து ரசித்து 
    சத்தமில்லாமல் 
    சிரித்த 
    குபேரன் பொம்மையை 
    சற்று தள்ளி வைத்தாள்
    கொலு பார்க்க வந்த 
    பக்கத்து வீட்டு 
    அழகி…

    கவிஜி

  2. நவரசத்தின் ஒரு ரசமாய் சிரித்திருக்கும்
    நவ சீன குபேர, குண்டு பொம்மைக் கூட்டம்!
    பொருள் பெருகும் பெரு நனைவு கொண்டு
    மருள் அடைந்த மாந்தர் கொலு வைத்தார்!
    அருள் பெருகும் மகா லக்ஷ்மி கடைக்கண்
    திருப் பார்வை பெற சிறப்பான நவராத்திரி
    இருக்கிறதே! மகத்தான செல்வம் ஈந்திடவே!
    இம்மைக்கும் மறுமைக்கும் என்றென்றும்
    செம்மையுடன் மனமொடுக்கி வழிபடினே
    ஏழேழு பிறப்பிற்கும் கிடைத்திடுமே மங்காது
    வாழ்வே துலங்கி நிற்கும் வையகம் வியக்க
    செழுமையுடன் செழிக்குமே செல்வம் சீராய்!
    புனிதா கணேசன்
    22/10/2015

  3. உன்னைப் போல் எங்களுக்கு
    சிரிக்க தெரியவில்லை சந்தோஷமாக!
    உன்னை வீட்டில் வைத்தால் செல்வம் பெருகும்
    என்று நம்புகிறார்கள்!
    ஆனால் , நாள் முழுவதும் உழைத்தால் தான்
    செல்வம் பெருகும் என்று தெரியவில்லை நம்மவர்க்கு!!!!

  4. இருந்த பணத்தை செலவுசெய்து 
    உன்னை வாங்கி ஊதாரியாகிவிட்டதாக 
    சிரிக்கிறாயோ?

    உழைத்தாலும் வாராத செல்வம் 
    உன்னை வாங்கினால் பெருகுமென்று 
    உன்னை உருவாக்கியவனின் 
    விற்பனை தந்திரத்தை எண்ணி 
    தொந்திக் குலுங்கச் சிரிக்கிறாயோ?

    சிரி சிரி ..
    பொம்மைகளில் உயிரை வைத்திருக்கும் 
    விஷயத்தில் நானும் குபேரன் என்னும் 
    உண்மை புரியுவரை மட்டுமல்ல 
    அதை விளையாடி உடைக்கும் 
    குழந்தை செல்வத்தை பெருக்கிவிட்ட 
    உண்மையையும் புரிந்து சிறி.

  5. ஆசையின் பாதையில்…

    அதிக ஆசை வேண்டாமெனும்
         அந்த புத்தரை மறந்துவிட்டே
    புதிதாய்ச் சிரிக்கும் புத்தரென்ற
         பேரை வைத்துச் சிலைசெய்தே
    அதிகமாய் விற்கும் மனிதர்தான்,
          அளவிலாச் செல்வம் பெருகிடவே
    துதிக்கக் குபேரன் எனச்சொல்லி
         தொடர்ந்தார் ஆசையின் பாதையிலே…!

    -செண்பக ஜெகதீசன்…

  6. பட வரிகள் 35
    பணமுடக்கத் தேடல்

    கலகல சிரிப்பாய் பணமும்
    கலகலக்கட்டுமென சீன பொம்மையும்
    கல்வி கலைகளோடு கைநிறைய
    கவனமாய் கொலுவில் அலங்:காரம்.

    வேடிக்கை மனிதரை எண்ணி
    கூடி வயிறு குலுங்க
    நீடித்துச் சிரியுங்கள்! பணமுடக்கம்
    ஓட தேடுவார் மனிதர் உங்களை.

    வேதா. இலங்காதிலகம்.
    டென்மார்க்.
    24-10-2015

  7. வருவான் குபேரன்

    உலகம் முழுதும்
    உயிர்ப்பொருள் தெய்வம்
    பணம் பணமே !
    குபேரன் பொம்மைகண்டால்
    குஷிகளில் உள்ளம்
    குழந்தையாய் துள்ளும்
    கீரிப்பிள்ளை
    வீட்டிற்குள் வந்தால் கூட
    குபேரன் வருவதாக
    குறி சொல்லும்
    அறியா மக்கள்
    குறுக்கு வழியில்
    குபேரன் ஆகத்தான்
    குவலயமே விரும்புகிறது
    குபேரன் பொம்மையை விற்றே
    குபேரனானார்கள் பலர்
    உண்மைப் புதையல்கள்
    உழைப்பால்தான் வரும்
    நம்புங்கள் குபேரனை
    நம்பி உழையுங்கள்
    உவகையுடன் வந்திடுவான்
    குபேரனும்
    சரஸ்வதி ராசேந்திரன்

  8. உழைக்கும் கைகளை நம்பாமல்
    அடிவயிற்றைத் தடவி எடுத்தால்
    அமோக செல்வம் பெற எண்ணும்
    அதிமூட மனிதர்காள்……..

    உள்ளங்கைகளை நம்பாமல்
    மேலே விரிந்த கைகளில்
    பணம் வைத்தெடுத்துப்
    பணம் பண்ண நினைக்கும்
    பகுத்தறியாச் செல்வங்காள்….

    ஒவ்வொரு கணமும வாழ்வை
    உணர்ந்து ரசித்துச் 
    சிரிக்கக் கற்றுக் கொள்கவென
    பாடங் கற்பிக்கும்
    பகுத்தறிவை உணர்வீர்!

    பணத்தைத் தேடி
    வாழ்வை இழக்கும்
    பயனிலாப் பொழுதாய்
    தொலைத்தல் வேண்டாம்…..

    சிரிப்பாய்ச்சிரிக்கும்
    சீரற்ற வாழ்வில்
    தொலைந்த கணங்கள்
    திரும்ப மீளா……

    அன்றைய பொழுதை
    அன்றன்றே ரசிக்க
    ஒவ்வொரு கணமும்
    ரசித்து ரசித்து வாழும்
    அர்த்தமுள்ள வாழ்வை
    வாழ்ந்திடச் சொல்லும்
    ஜென் மகிழ்வை போதிக்கும்
    சிரிக்கும் புத்தர்கள்……
    வெறும் பொம்மைகளல்ல…..
    அன்றாட வாழ்வை வாழக்
    கற்றுக் கொடுக்கும்
    அற்புத குரு….ஆசிரியர்கள்!

    வணங்குவீர்…..
    வாழ்வைக் கண்டடைவீர்!

                “இளவல்” ஹரிஹரன், மதுரை.1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *