– எம் . ஜெயராம சர்மா – மெல்பேண், அவுஸ்திரேலியா

மங்கையவள் இல்லை எனில்
மாநிலமே இல்லை என்பார்
சங்கெடுத்து முழங்கி நிற்பார்
சகலதுமே மங்கை என்பார்

எங்களது வாழ்க்கை  எலாம்
மங்கலமே மங்கை என்பார்
பொங்கி வரும் புத்துணர்வே
மங்கை அவள் தானென்பார்

கங்கை முதல் காவிரியை
மங்கை என விளித்திடுவார்
எங்கள் குலம் விளங்குதற்கு
வந்தவளே மங்கை என்பார்

பூமிதனை மங்கை என்பார்
பொறுமையையும் மங்கை என்பார்
சாமிகூட மங்கை என்று
சபையேறி முழங்கி நிற்பார்

என்றெல்லாம் சொல்லும் மங்கை
எங்கு சென்று நின்றாலும்
அங்கெல்லாம் அவள் நிலையை
ஆருக்குச் சொல்லி நிற்போம்

தேசப்பிதா காந்தி மகான்
சிலை எங்கும் இருக்கிறது
சீலநிறை மங்கை அவள்
தெருவில் வர அஞ்சுகின்றாள்

சீதை கதை படிக்கின்றார்
கீதை தனைக் கேட்கின்றார்
பாதை மட்டும் மாறாமல்
படு குழியை வெட்டுகின்றார்

பாதகங்கள் செய்து நிற்பார்
பல்கி எங்கும் பரவுகிறார்
கோவில் என்றும் பாராமல்
கோரத் தனம் செய்கின்றார்

வீதி தனில் போவோரும்
விலத்தியே  நிற்கும் நிலை
சாதகமே எனக் கருதி
சமூக நீதி குலைக்கின்றார்

சமயங்கள் பல இருந்தும்
சாத்திரங்கள் பல இருந்தும்
சன்மார்க்கம் ஏன் தானோ
தலை குனியப் பார்க்கிறது

மங்கை அவள் எங்களது
மாநிலத்தில் தெய்வம் என
மனம் எல்லாம் எண்ணுதற்கு
வழி சமைப்போம் வாருங்கள்

மங்கை அவள் தனைக்காக்க
மா எழுச்சி வரவேண்டும்
மங்கை நலம் கெடுப்பாரை
மண்ணை விட்டே ஒழித்திடுவோம்!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *