நவம்பர் 2, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு பேராசிரியர் முனைவர்  டி. நாகராஜன் அவர்கள்

nagarajansir

வல்லமை இதழின் இந்தவார வல்லமையாளராகப் பாராட்டப்படுபவர், தமிழில் எழுத்துரை – பேச்சுரை மாற்றிக்கான மென்பொருளை (Tamil text to speech software) உருவாக்கிய, எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் (SSN College of Engineering) தொலைத்தொடர்பு தொழில்நுட்பத் துறையின்(Department of Information Technology) தலைவரும், பேராசிரியருமான முனைவர் டி. நாகராஜன் அவர்கள்.

முனைவர் டி. நாகராஜனும், அவருடைய தலைமையில் அவரது குழுவினரும் உருவாக்கியுள்ள “தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை” அவர் தமிழ் இணையக் கழகத்தில் இயக்கிக் காட்டினார். இந்த மென்பொருளின் செயல்பாட்டை பார்வையிட்ட, தமிழக அரசின் 2013 ஆண்டிற்கான கணித்தமிழ் விருதாளரும், மொழியியல் பேராசிரியருமான முனைவர் ந. தெய்வ சுந்தரம் அவர்கள், உண்மையில் மிக நன்றாக உள்ளது. மிகவும் மகிழ்ச்சியாகயிருந்தது. ஏறக்குறைய 100% சரியாக இயங்குகிறது … மேலும் சிறிது உழைத்தால், மொழியியல் ஆய்வாளர்களுடன் இணைந்து செயல்பட்டால், உச்சரிப்பில் இயல்புத் தன்மையை மேலும் மேம்படுத்தலாம் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

முனைவர் டி. நாகராஜன் அவர்களின் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை இயக்கி அதன் செயல்பாட்டை அறிய விரும்புபவர்கள் – http://www.ssn.edu.in/Speech_Lab/tts_demo.html – என்ற தளத்திற்குச் சென்று பயன்பெறலாம். கீழுள்ள படத்தில் காண்பித்துள்ளது போன்று 1. தங்களுக்குத் தேவையான தமிழ் மொழி தகவலைப் பதிவிட்டு, 2. மென்பொருளை இயக்கி (விருப்பமான குரலை – ஆண் குரலையோ, பெண் குரலையோ தேர்வு செய்யலாம்) 3. மென்பொருள் தமிழைப் படிப்பதைக் கேட்கலாம், 4. தேவையானால் அதனை ஒலிக்கோப்பாக தங்கள் கணினியில் சேமித்தும் பயன்பெறலாம்.

dr nagarajan text to speech demo

முனைவர் டி. நாகராஜன் அவர்கள் சென்னை ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் 2004 ஆம் ஆண்டு கணினி அறிவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வில் பேச்சொலி மொழியை அடையாளம் காணும் ஆய்வில் ஈடுபட்டிருந்தார். பிறகு தனியார் நிறுவனம் ஒன்றின் ஆய்வுத் திட்டத்தில் பங்கேற்றுப் பணியாற்றிய பிறகு, கனடாவின் தேசிய அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் முதுமுனைவராக (postdoctoral fellow at The National Institute of Scientific Research – INRS, Montreal, Canada) இரண்டு ஆண்டுகள் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அந்த ஆய்வில் தொடர் பேச்சொலியை அடையாளம் காணுவதையும், ஒலியை வகைப்படுத்தும் தொழில்நுட்பங்களைக் கண்டறியும் ஆய்வுகளிலும் ஈடுபட்டார். இரண்டாண்டு முதுமுனைவர் ஆய்விற்குப் பிறகு, சென்னை எஸ். எஸ். என். பொறியியல் கல்லூரியின் பேராசிரியராக பணியில் இணைந்து இன்றுவரை ஆய்விலும், கற்பித்தலிலும், ஆய்வு மாணவர்களை நெறிப்படுத்துவதிலும் பங்கு பெற்று வருகிறார். கருத்தரங்கங்களிலும், ஆய்விதழ்களிலும் தனது ஆய்வுகளைப்பற்றி இதுவரை சுமார் 80 ஆய்வறிக்கைகளை வெளியிட்டுள்ளார். மேலும், இவர் தற்பொழுது ஈடுபட்டிருக்கும் ஆய்வுகளையும், இவரது ஆய்வுப்பணிகளைப் பற்றி விரிவாக இத்தளத்தில் – http://www.ssn.edu.in/?page_id=1483 – அறிந்து கொள்ளலாம்.

கணினித் தமிழ் வளர்ச்சியில் முக்கியப் பங்கு பெரும் தமிழ் எழுத்துரை – பேச்சுரை மாற்றி மென்பொருளை உருவாக்கியுள்ளமைக்காக முனைவர் டி. நாகராஜன் அவர்களை வல்லமையின் இவ்வார வல்லமையாளராக அவரைப் பாராட்டி மகிழ்கிறோம். அவரது ஆய்வுகள் மேலும் வெற்றி பெற வல்லமை இதழின் வாழ்த்துகள்

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

Contact Info:
Dr. T. Nagarajan,
Professor & Head
Department of Information Technology
SSN College of Engineering
Rajiv Gandhi Salai (Old Mahabalipuram Road)
Kalavakkam- 603 110 (off. Chennai)

Phone: 044 27469700 [HOD Extn: 217]
Fax: 044 27469772
Email: nagarajant@ssn.edu.in

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *