நவம்பர் 9, 2015

இவ்வார வல்லமையாளர்

வல்லமைமிகு பேராசிரியர்  முனைவர் நா. கண்ணன் அவர்கள்

kannan

இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற தலைப்பிலான உலகளாவிய ஆய்வுக் கருத்தரங்கை சென்னையில் சென்றவாரம் (நவம்பர் 6, 2015 அன்று) நடத்தின. இக்கருத்தரங்கு நடைபெறத் துவக்கம் முதல் ஒரு வினையூக்கியாக இருந்தவர் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்கள். அக்கருத்தரங்கில் “In search of an ancient relationship between Tamilnadu, India and Kaya Kingdom, Korea: Discovery, research, hopes and questions” என்ற தலைப்பில், “தமிழ் கொரியா ஆகிய இருமொழிகளுக்குமான உறவிற்கு, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கொரியாவின் அரசியாக இருந்தவர், இந்தியாவில் இருந்து சென்று கொரிய அரசரை மணந்து கொண்ட, பாண்டியநாட்டு இளவரசியான ஒரு தமிழ்மகளாக இருக்க வாய்ப்புகள் உள்ளது” என்ற கருதுகோளில் ஆய்வுரை வழங்கியுள்ளார். இருமொழிகளுக்கும் உள்ள உறவை ஆராயும் அவரது இத்தகைய ஆய்வு முயற்சியைப் பாராட்டும் விதமாக மலேசிய புத்ரா பலகலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் நா. கண்ணன் அவர்களை வல்லமை இதழின் இவ்வார வல்லமையாளராக அறிவித்துப் பாராட்டி மகிழ்கிறோம்.

kannan3

தமிழ் மரபு அறக்கட்டளை அமைப்பின் தலைவரும், நிறுவனர்களில் ஒருவருமான முனைவர் நா. கண்ணன் (நாராயணன் கண்ணன்) அவர்கள், அந்த அறக்கட்டளையின் சார்பில் இந்த ஆய்வை முன்னெடுத்துள்ளார். முனைவர் நா. கண்ணன் ஒரு அறிவியல் ஆய்வாளர். மதுரைப் பல்கலைக் கழகத்திலும் (Madurai Kamaraj University, India), ஜப்பானிலுள்ள எஹிமே பல்கலைக் கழகத்திலும் ( Ehime University, Japan) வேதியியல் ஆய்வில் ஈடுபட்டு இருமுறை முனைவர் பட்டங்கள் பெற்றவர். உயிர் வேதிமவியல், சூழலியல் ஆகியவற்றில் கொண்ட ஆர்வம் காரணமாக சுற்றுப்புறச்சூழலை மாசுபடுத்துவதால் உயிரினங்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் பற்றிய ஆய்வுகளை நடத்தி வருகிறார். ஜெர்மனியின் ‘கீல்’ பல்கலைக்கழகத்தில் (கடலாய்வு மையம்) இணைப்பேராசிரியராகவும், கொரியக் கடலாய்வு மையத்தில் ஆசிய-பசிபிக் நாடுகளுக்கான உயர் பயிற்சி மையத்தின் இயக்குநராகவும் பணியாற்றிய முனைவர் நா. கண்ணன், தற்பொழுது மலேசியாவின் புத்ரா பல்கலைக்கழகத்தில் கடந்த இரண்டாண்டுகளாகப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

தமிழ் ஆர்வலரான முனைவர் நா. கண்ணன், தான் நிறுவிய தமிழ் மரபு அறக்கட்டளை (Tamil Heritage Foundation) அமைப்பின் மூலம் தமிழ் மரபு சார் இலக்கிய, வரலாற்று, கலை வடிவங்களை எண்ணிம வடிவில் பாதுகாக்கும் முயற்சிகள் மேற்கொண்ட முன்னோடிகளில் ஒருவர். மதுரைத்திட்டத்தில் ஐரோப்பிய ஒருங்கமைப்பாளராகவும், உத்தமம் அமைப்பின் (உலகத் தமிழ் தகவல் தொழில்நுட்ப மன்றம் – உத்தமம்/ International Forum for Information Technology in Tamil – INFITT) தொன்மை உறுப்பினராக, அதன் ஐரோப்பிய கிளையின் தலைவராகவும் செயல்பட்டு இருக்கிறார்.

கவிதை, கட்டுரை, சிறுகதை, குறுநாவல் என படைப்புகள் பல உருவாக்கி தமிழிலக்கியப் பங்காற்றிய முனைவர் நா. கண்ணன் அவர்களது படைப்புகள் கணையாழி, சுபமங்களா, இந்தியா டுடே, குங்குமம் மற்றும் புகலிடப் பத்திரிக்கைகளில் வெளிவந்திருக்கின்றன. திசைகள் மின்னிதழ், இ-சங்கமம், சிஃபி டாட் காம் ஆகிய இதழ்களில் சில காலம் ஆசிரியர் குழுவில் பங்கேற்று தனது பங்களிப்பை அளித்துள்ளார். ‘உதிர் இலை காலம்’, ‘நிழல்வெளி மாந்தர்’ ஆகிய சிறுகதை நூல்களையும், ‘விலை போகும் நினைவுகள்’ என்ற குறும்புதினத்தையும், ‘பாசுர மடல்கள்’ என்ற படைப்புக்களை குறுந்தகடு வெளியீடாகவும் வெளியிட்டுள்ளார்.

கொரியாவில் பணிபுரிந்த காலத்தில் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கண்டுணர்ந்து மேலும் ஆராயத் தலைப்பட்டார். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், பொது ஆண்டு 48 ஆண்டில், கொரியா நாட்டின் பண்டைக்கால ‘கயா’ அரசின் அரசர் ‘சுரோ’ (King Suro of Geumgwan Gaya) என்பவர், ‘ஹூவாங் ஹூ’ (Heo Hwang-ok) என்ற இளவரசியை மணந்தார். இந்த இளவரசி அரசரை மணம் புரிவதற்காக கப்பலில் வந்தவர். இவரது பெற்றோரின் கனவில் இளவரசியை அரசர் சுரோவுக்கு மணமுடிக்குமாறு அறிவித்த கடவுளின் கட்டளையை ஏற்று, அரசகுடும்பம் தனது இளவரசியைக் கப்பலில் ஏற்றி அனுப்பியது. இது போன்றே தனது மனைவி கப்பலில் வருவாள் என்ற தெய்வவாக்கு கிடைத்த அரசர் சுரோவும் கப்பலில் வந்த இளவரசி கூறியதை ஏற்று அவளை மணமுடித்தார் என்பதை பதின்மூன்றாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ‘சம்குக்யுசா’ (Samguk Yusa) என்ற கொரிய நூல் கூறுகிறது. மேலும், அரசர் சுரோவை மணந்த இளவரசியே கயா அரசின் முதல் அரசி, இவர் தொலைதூரத்தில் இருந்து வந்தவர் என்றும், தனது கப்பலில் யாழ், தேயிலைச் செடி, புயலில் கப்பலை நிலைப் படுத்தும் கல்லடுக்குகள் ஆகியவற்றுடன், இரட்டை மீன் சின்னத்தைக் கொண்டுவந்தார் என்பதும், ஆயுக்த நாட்டின் அரசர் இளவரசியின் தந்தை என்று இளவரசி கூறினார் என்பதும் அந்த நூல் தரும் தகவல். இவரது பெயரின் பொருளான ‘மஞ்சள் நிற ரத்தினம்’ (yellow jade) என்பதைத் தனது கொரிய மொழியில் ஹூவாங் ஹூ என மொழிபெயர்த்து அரசர் அழைத்தார் என்பதும் அந்த நூல் தரும் தகவல்.

நூல் குறிப்பிடும் இளவரசியின் தாயகத்தைத் தேட முற்பட்ட கொரிய மக்கள், ‘ஆயுக்தா’ என்பதனை இந்தியாவின் அயோத்தியுடனும் தொடர்புப்படுத்தி, அங்குக் காணப்படும் இரட்டை மீன் இதை உறுதிப்படுத்துவதாகவும் எண்ணி இந்தியா கொரியா என இருநாடுகளின் நல்லுறவைப் பேண நடவடிக்கைகள் எடுத்தனர். ஆனால், நூற்றுக்கணக்கான தமிழ் சொற்கள் அதே பொருளில் கொரிய மொழியில் உள்ளதாலும்; உழவு, நெசவு, மற்ற பிற அன்றாட நிகழ்வுகளில் காணும் ஒருசில கலாச்சார ஒற்றுமைகள் தமிழ்ப் பண்பாட்டை ஒத்திருப்பதாலும்; இரட்டை மீன் சின்னம் கடல் வணிகத்தில் சிறந்து விளங்கிய பாண்டிய மன்னர்களின் முத்திரையைக் காட்டுவதாலும் இந்த இளவரசி பாண்டிய இளவரசியாகவும், அவரது பெயர் ‘செம்பவளம்’ என்பதாக இருக்கக்கூடும் என்பது முனைவர் நா. கண்ணன் அவர்களது கருதுகோள். தமிழ்மரபு அறக்கட்டளையின் மின்தமிழ் குழுமத்தில் இவரது கருதுகோள் விவாதங்களுக்கு உட்பட்டு, அதன் அடுத்த கட்ட வளர்ச்சியாக உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம் உதவியுடன், இந்தியாவின் கொரிய துணைத் தூதரகமும் இணைந்து “இந்திய – கொரிய கலாச்சார பரிமாற்றம்” என்ற கருத்தரங்கை ஏற்பாடு செய்யும் நிலையை எட்டியது.

kannan5

சென்னைக்கான கொரிய துணைத் தூதர் திரு. கிம் கியாங்சூ அவர்கள் கொரிய மொழிக்கும் தமிழுக்கும் தொன்று தொட்டு உள்ள உறவை ஆய்வு செய்யவும், மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் இந்தக் கருத்தரங்கம் உதவும், இரு நாடுகளுக்கும் இடையேயான கலாச்சார உறவு இது போன்ற ஆய்வுக்கருத்தரங்குகள் மூலம் மேலும் வலுவுறும் என்ற கருத்தினை கருத்தரங்கில் தெரிவித்துள்ளார். இத்தகைய ஆய்வு முயற்சியை முன்னெடுத்த முனைவர் நா. கண்ணன் அவர்களை இவ்வார வல்லமையாளராகப் பாராட்டி, அவரது கருதுகோள் ஆய்வாளர்களால் உறுதி செய்யப்பட்டு இருநாடுகளின்  நல்லுறவை வளர்க்க உதவ வேண்டும் என்று வல்லமை இதழின் குழுவினர் வாழ்த்துகிறோம்.

**************************************************************************************
வல்லமையாளருக்குப் பாராட்டுகள்!!!
தங்களுடைய ஆக்கப்பூர்வமான பங்களிப்பினைத் தொடர்ந்திட
வல்லமை மின்னிதழ் அன்பர்களின் மனம் நிறைந்த வாழ்த்துகள்!!!

**************************************************************************************

[இந்த வாரத்தில் தனது ஆற்றலை சிறப்புற வெளிபடுத்தி உங்கள் கவனத்தைக் கவருபவரை வல்லமை ஆசிரியர் குழுவினரின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்பினால், வழக்கம் போலவே வல்லமை ஆசிரியரிடம் (vallamaieditor@gmail.com) உங்களது பரிந்துரைகளை அனுப்பி உதவிடுமாறு வேண்டுகிறோம், மேலும் வல்லமையாளர் விருது பற்றிய விவரங்களை இப்பக்கத்தில் காணலாம் –https://www.vallamai.com/?p=19391, இதுவரை வல்லமையாளர்களாகத் தேர்வு பெற்றோர் பட்டியலை இங்கே காணலாம் https://www.vallamai.com/?p=43179 ]

செய்தி உதவி:
http://www.dinamani.com/tamilnadu/2015/11/06/திருக்குறள்-கொரிய-மொழியில்-/article3116563.ece

தொடர்புக்கு:
Prof. Dr. Narayanan Kannan
Putra University, Malaysia, Putrajaya
http://profile.upm.edu.my/drnkannan
Tel: +49 431 65709280
E-Mail: nkannan@gmail.com

சமூக வலைத்தளங்களில்:
https://plus.google.com/102872541469969435096/
https://www.facebook.com/narayanan.kannan.37

https://scholar.google.com/citations?user=TlpVWukAAAAJ&hl=en
http://www.researchgate.net/profile/Narayanan_Kannan3
http://www.tamilheritage.org/old/ec/ec.html#_kannan

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “இந்த வார வல்லமையாளர்!

Leave a Reply to ஆதிரா முல்லை

Your email address will not be published. Required fields are marked *