திவாகர்

c2311b6b-ff9e-48f3-888a-df00e3d8c069

அன்புள்ள ராகி’,

பிரியே சகியே அன்பே ஆருயிரே என்றெல்லாம் இந்தக் கடிதத்தைத் தொடங்கலாமே என்று யோசித்துப் பார்த்தேன். ஆனால் ஒருவேளை அது உனக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம் என்ற ஒரு சந்தேகமும் கூடவே ஒட்டிக்கொண்டு வந்ததால் இப்படிப்பட்ட ஃபார்மாலிடிக்குள் நுழையாமல் நேரடியாகவே சப்ஜெக்ட்’டுக்கு வரப் பார்க்கிறேன்.

மூன்று மணி நேரமாக மண்டையைப் போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நீ கடைசியாக ராத்திரி மொபைலில் பேசும்போது உன்னிடம் ஏதோ சொல்லவேண்டும் என்று சொன்னேன் இல்லையா.. ஆனால் நீ காதில் போட்டுக் கொள்ளவே இல்லை.. நீங்க என்ன சொல்லவேணுமோ அதையெல்லாம் தூங்கறதுக்கு முன்னாடி ஒரு லெட்டெர் எழுதி நாளைக்கு மறக்காம போஸ்ட் பண்ணுங்க’ன்னு சொல்லி டபக்’கென வைத்துவிட்டாய்.

உன் ஐடியா புரிகிறது. போன தடவை நீ சிம்லா சென்ற போது இதே போல ஒரு கடிதம் எழுதி அனுப்பியதை உன் அக்கா பரம ஆனந்தமாக ரசித்தாள் என்று சொல்லியிருந்தாய்.. அதே உன் அக்காவின் ஆனந்துத்துக்காக மறுபடியும் ஒரு கடிதம்தான் என்னிடமிருந்து வரட்டுமே என்று நீ எதிர்பார்க்கிறாய் போலும்.. ஆனாலும் அந்தக் கடிதம் எழுதி ஒரு வருஷத்துக்கும் மேல் ஆகிவிட்டபடியால் எனக்கு இந்தக் கடிதங்கள் எழுதும் கலையும் மறந்து விட்டபடியால், எப்படி ஆரம்பிப்பது எனக்கூட தெரியாமல் முழிப்பது வாஸ்தவமே.. ஆனாலும் நீ மெனக்கெட்டு கடிதம் கேட்டதால் அதை எழுத வேண்டிய கட்டாயத்தால் நான் கடந்த மூன்று மணி நேரமாக எப்படியும் எழுதி முடித்துவிட்டுத்தான் தூங்குவது என்று விடாப்பிடியாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்றால் ‘உன் வார்த்தைக்கு நான் எவ்வளவு தூரம் மதிப்புக் கொடுக்கிறேன்’ என்பதைப் புரிந்து கொள்ளவும்.

நாம் போனில் பேசும்போதெல்லாம் நீயே பேசிக் கொண்டிருப்பதும் நான் ‘உம்’ கொட்டுவதும் வழக்கமாகிவிட்டதும் இந்தக் குழப்பத்துக்கு இன்னொரு காரணமாக இருக்கலாமோ என்னவோ..

சென்றமுறை உன் அக்காவின் உடல்நலம் தேறுவதற்கு நானும், முக்கியமாக என்னுடைய கடிதமும் காரணம் என்று நீயே பலமுறை வருவோர் போவோரிடமும் சொல்லிக்கொண்டிருந்தது எனக்கு நினைவு வந்து இப்போது கொஞ்சம் உற்சாகப்படுத்துகிறது. உன் அக்கா சந்தோஷப்படுவதற்காகவாவது நான் கடிதம் எழுதியே ஆக வேண்டும் என்று இந்த நடு இரவிலும் நான் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டு உட்கார்ந்து கொண்டு யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

கொஞ்சநேரம் முன்புதான் பக்கத்து ஃபிளாட்டு மோகன் வந்தார் (ன்). வாசற்கதவு இன்னும் தாழ்ப்பாள் போடவில்லையாதலாலும், நானும் என்னதான் எழுதுவது என்ற தீர்க்க யோசனையில் அப்படியே பேப்பரும் பேனாவும் வைத்துக் கொண்டிருந்ததாலும் வந்தவரை முதலில் கவனிக்கவில்லை. மோகன் “என்ன சார் மிஸ்ஸஸ் ஊர்ல இல்லைன்னதும் ஒழுங்கா செலவுக் கணக்கைக் காமிக்கணுமே’ன்னு கணக்குப் போடறீங்களா’ என்று கேட்டு அசடு வழிந்தார்.

நான் அவர் மீது கோபப்படாமல் ‘இல்லை சார், லெட்டெர் எழுதுகிறேன் சார் லெட்டெர், அதுவும் என் அருமை மனைவிக்கு’ என்று நெஞ்சை நிமிர்த்தி கொஞ்சம் பெருமையாகச் சொன்னதும் அவருக்கு உடனே சிரிப்பு வந்துவிட்டது. அடக்கமுடியாமல் ஹாஹ்ஹா என சிரித்துவிட்டு ஏதோ பெரிய ரகசியத்தை அறிந்து விட்டவர் போல அவர் மனைவி பத்துவை (சாரி, பத்மான்னுதான் பேர். நீ அடிக்கடி பத்து..பத்து’ன்னு கூப்பிடுவாய் இல்லையா.. ஒரு ஃஃப்ளோ’வில் அப்படி எழுதிவிட்டேன்.. என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை)

அந்த பத்மா உடனே ஓடிவந்துவிட்டாள். இவர் ஏதோ பெரிய ஜோக் சொல்வது போல ‘உனக்குத் தெரியுமா பத்மா.. நம்ம சார் தன்னோட சம்சாரத்துக்குக் கடிதம் எழுதறார் பார்..” என்று தன் மிகப் பெரிய கண்டுபிடிப்பாகச் சொல்லிவிட்டு அத்துடன் விடாமல் கோராமையாக ஹோஹ்ஹோ எனச் சிரித்தார். அந்த பத்மா என்னை ஆச்சரியத்துடன் பார்த்து விட்டு ‘ராகினிதான் டெய்லி நூறுதரம் போன்’ல உங்களோட பேசறாளே.. இப்ப எதுக்கு லெட்டெரெல்லாம் போடறீங்க’ன்னு கேட்டதும் கொஞ்சம் யோசித்தேன். ’பார்த்தாயா.. நீ என்னிடம் நூறு தரம் பேசுகிறாயாம்.. காலையில் ஒரு அரை மணி நேரமும், ராத்திரி ஒரு மணி நேரமும் பேசுகிறாய் என்பது வாஸ்தவம்தான்.. நடுவில் நானாகத்தான் உனக்கு ஏதாவது ஒருமுறை போன் போட்டுப் பேசினால்தான் உண்டு. அது எப்படி இந்த பத்துவுக்கு (சாரி, பத்மாதான்) நூறு தடவையாக கண்களில் படுகிறது என்று நினைத்துப் பார்த்தேன்.

இதற்குள் அவளே அவள் கணவனை என் முன்னாலேயே குற்றம் சொல்ல ஆரம்பித்து விட்டாள். ’கல்யாண ஆன புதுசுல ஒரே ஒரு கார்டு போட்டவர் இவர். அதிலே ஆரம்பமும் இல்லை முடிவும் இல்லை.. மொட்டையாக நான் இத்தனாந்தேதி புறப்பட்டு வருகிறேன்.. ஸ்டேஷனுக்கு ஆள் அனுப்பவும்’னு கட்டளை வேற.. என்ன இருந்தாலும் ராகினி கொடுத்து வைத்தவள்,. பாருங்களேன்.. ராத்திரி இத்தனை நாழியாச்சு, இன்னும் உட்கார்ந்து அழகாக பொண்டாட்டிக்கு கடுதாசி போடணும்’னு உங்களுக்குத் தோணறதே’ என்று ஆதங்கப்பட்டாள்.

உடனே அவள் கணவன் சமாதானம் செய்ய ஆரம்பித்துவிட்டான். “அதற்காகத்தான் பதிலுக்கு சண்டை போட்டு பட்டுப்புடவை ஒன்று உடனே உடனே வாங்கிக் கொடுத்தேனே.. மறந்து விட்டாயா’ என்று கேள்வி கேட்க, அவள் அந்தப் புடவை வாங்கியவுடன் அதிசீக்கிரம் கிழிந்து போன கதையை கொஞ்சம் பெரிய குரலில் விரிவாகச் சொல்லிக் கொண்டே போக, இந்த சப்தத்தைக் கேட்டு மாடி ஃஃபிளாட் சுப்பு மாமியும் அவள் மூன்றாவது தங்கையான அருணாவும் கடகடவென கீழே இறங்கி வந்தார்கள்.

“ஏதோ பெரிய சப்தமா கேட்டுதே.. நீங்க தனியா வேறே இருக்கிங்களா, என்னவோ ஏதோ’ன்னு பயந்து வந்தோம்.. நல்ல காலம் கலகலவென பேசிண்டுதான் இருக்கீங்க..” என்று ஏமாற்றப் பெருமூச்சு விட்டு அவள் தங்கையை அறிமுகம் செய்ய முன்வந்தாள். நான் உடனே முந்திக் கொண்டு “தெரியுமே உங்க மூன்றாவது தங்கை அருணாதானே, பெங்களூர்ல இருக்காங்க இல்லே.. உங்க தக்காளி தொக்கு..’ என்று ஆரம்பித்தேன்.. அவளுக்கு உடனே என்னை நன்றாக ஞாபகம் வந்துவிட்டது.. ”ஆமாமா.. உங்களுக்குக் கூட நான் தக்காளித் தொக்குக் கொடுத்திருக்கேன் இல்லே.. (இவளுக்கு இதே வேலையோ என்னவோ) இப்போ நினைவு வந்தாச்சு.. உங்களுக்கு நான் ரெசிபி கொடுத்தேனே.. அதன்படி உங்க மிஸ்ஸஸ் செய்யறாங்களா” என்று ஏதோ டாக்டர் நோயாளியை ‘சரியாக மருந்தெல்லாம் சாப்பிடுகிறாயா’ என்பது போல கேட்க ஆரம்பித்தாள். உனக்குதான் தெரியுமே.. நான் தக்காளி தொக்கைக் கடைசியாக அன்று ஒருநாள்தானே பார்த்தேன்.. இதை எப்படி இவளிடம் சொல்வது என்று முழித்துக் கொண்டிருக்கும்போதே நல்லகாலமாக மோகன் தலையிட்டான்.

”சார்.. அவங்க மிஸஸ்ஸுக்கு கடுதாசி எழுதிக்கொண்டிருந்தார், நாங்க வந்து டிஸ்டர்ப் பண்ணிகொண்டே இருக்கறச்சே.. நீங்களும்..” என்று அசடு வழிய சமாளித்தான்,

அந்த அருணா உடனே “என்னது லெட்டர் ரைடிங்கா.. ரொம்ப இண்டரெஸ்டிங் சப்ஜெக்ட்டாச்சே.. என்னைக் கேட்டா காலேஜிலே ஒரு சிலபஸ் மாதிரி இதை வெக்கணும்’னு சொல்வேன். உங்களுக்குத் தெரியுமா.. மூணாம் வருஷம் எனக்கு கல்யாணம் ஆன புதுசுலே நான் என் வீட்டுக் காரருக்கு ஒரு கடுதாசி எழுதினேன். ரொம்ப கஷ்டப்பட்டு அகராதியெல்லாம் பார்த்து ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதி அதை அவருக்கு போஸ்ட் பண்ணி அதை அவருக்கு போன்’லயும் சொல்லிட்டேன். ஆனா ரெண்டு மூணு நாளானாலும் அந்தக் கடுதாசி வரவே இல்லியாம். இவர் கடுதாசிக்காக காத்திருந்து அது வராமே கடைசியில் இவரே இங்கே வந்துட்டார்”.

”கடைசியில் அந்தக் கடிதம் என்ன ஆச்சு” என்று மிகப் பெரிய சஸ்பென்ஸோடு மோகன் ஆவலாகக் கேட்க பத்மா இவனை முறைக்க, அந்த அருணா கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல் அவள் எழுதிய கடிதம் அவளுக்குத் திரும்ப வந்ததையும் அவள் புருஷனை ஆயிரம் முறை அதைப் அவள் முன்பே படிக்க வைத்ததையும் பெருமையாகப் பீற்றிக் கொண்டாள். அடடா’ நீ இன்னும் இந்த அருணாவைப் பார்க்கவில்லை இல்லையா. என்னவோ தெரியவில்லை.. சரியாக நீ இல்லாத நாட்களில்தான் அதுவும் நான் கடிதம் எழுதும்போதெல்லாம் அவள் வருகிறாள்.. வேடிக்கையாக இருக்கிறது இல்லை..

எப்படியோ என் கடித எழுத்துக்குத் தடையாக கொஞ்ச நேரம் இருந்துவிட்டு எழுந்து போனார்கள். போகிறபோது அந்த பத்மா என்னிடம் சிபாரிசு வேறு.. அடுத்த வாரம் அவள் ஊருக்குத் தனியே போகிறாளாம்.. அன்பா, அழகா ஒரு கடிதம் பொண்டாட்டிக்கு எழுதுவது எப்படின்னு அவள் புருஷனுக்கு நான் ஒரு டிரெயினிங் கொடுக்கணுமாம். அவனும் கூசாமல் ‘ யார் யாரோ எழுதறாங்க சார்.. நானும் ஒரு லெட்டர் எப்படியாவது எழுதணும் சார்.. ஸ்கூல் படிக்கறச்சே ‘லெட்டர் ரைடிங்’ கிளாஸே இருந்துச்சு சார்.. அப்பல்லாம் இண்ட்ரெஸ்ட் இல்லாம விட்டாச்சு. எப்படியாவது உங்கள்ட்ட கத்துக்கணும் சார்’ என்று ஏதோ மிகப் பெரிய ரகசியத்தை என்னிடம் கற்றுக் கொண்டே ஆக வேண்டும்’ என்பது போல கெஞ்ச ஆரம்பித்தான்.. அந்த பத்மாவும் ‘நீங்க எப்படியாவது ட்ரெயின் பண்ணித்தான் ஆகவேண்டும்’ என்று கட்டாயப் ’படுத்தி’விட்டுத்தான் சென்றாள் என்றால் பார்த்துக் கொள்ளேன்.. நான் ஒரு பதிலும் அவர்களுக்கு சம்மதமாகத் தெரிவிக்கவில்லை என்பதையும் உனக்கு சொல்லிவிடுகிறேன்..

இதை ஏன் எழுதுகிறேன் என்றால் நான் ஏதோ கடிதம் எழுதுவதில் நிபுணன் என்று இவர்கள் நினைத்துக் கொண்டதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்ததும் அந்த ஒரு எண்ணத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு நோக்கத்தில்தான் எழுதினேன்.

பழைய காலத்தில் இந்தக் காதலன் காதலிக்கு நீண்ட கடிதங்கள்லாம் எப்படியெல்லாம் பக்கம் பக்கமாக எழுதினார்களோ.. என்ன விஷயமாக வைத்து அத்தனை பெரிய கடிதங்கள் எழுதுகிறார்கள் என்று நினைத்துப் பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை கண்ணே, மணியே கற்கண்டே உன்னைக் காதலிக்கிறேன் என்று இம்போசிஷன் எழுதுவார்களோ என்னவோ.. இருந்தாலும் கடிதம் என்று வந்துவிட்டால் அதை எழுதிவிட்டு போஸ்ட் பண்ணி விட்டால் அதில் ஒரு திருப்திதான்..

உனக்கு நினைவு இருக்குமோ என்னவோ.. நான் கூட உன்னை ஒரு தடவை கேட்டேன்.. ’நீ எனக்கு ஒரு கடிதம் எழுதவேண்டுமெனத் தோன்றினால் போல சும்மா ஒரு லெட்டர் எழுதிக் காண்பியேன்.’. என்று.. அதற்கு ’ஐயய்ய.. இப்படில்லாம் உங்களுக்கு ஆசையோ’ என்று நீ எனக்கு அழகுக் காட்டி சிரித்தது எனக்கு இன்னமும் நினைவுக்கு வருகிறது..

அடடா, உன்னிடம் ஏதோ முக்கிய விஷயம் சொல்லவேண்டுமென போனில் சொன்னேன் அல்லவா. நீ கூட இந்தக் கடிதத்தில் எழுதி அனுப்பச் சொன்னாயே.. அது இந்த நிமிடம் வரை ஞாபத்துக்கே வரமேட்டேனென்கிறது.. ஞாபகம் வந்ததும் அதை போனிலேயே சொல்லி விடுகிறேனே..

அப்புறம் உன் அக்காவை மிகவும் கேட்டதாகச் சொல்லவும் (போன தடவை இதை எழுதியதில் உன் அக்காவுக்கு பரம திருப்தி என்று நீ இங்கே வந்ததும் சொன்னது நினைவுக்கு வருகிறது. )

மற்றவை போனில்

உன் அன்புக் கணவன்.

(வாசகர்களுக்கு அன்புக் கணவன் தன் மனைவிக்கு எழுதிய முதல் கடிதத்தை வாசிக்க https://www.vallamai.com/?p=40314 என்ற லிங்க்’க்கு செல்லவும்.

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “பிரியே சகியே அன்பே ஆருயிரே

  1. ஹாஹா, நல்ல ரசனையான கடிதம்! உங்க மனைவிக்கு இதைப் படிச்சுக் காட்டிடுங்க!:)

  2. Extremely interesting! Your writing is very visual and we feel as if we are peeping into our neighbor’s house. Simple style, elegant language and “saralamana nadai” – This is possible only for Mr Dhivakar. Whenever I read your stories I am tempted to attempt translating them into English so that those who do not Know Tamil can enoy it but I am not sure whether I can get the nuances!

  3. வயிறு குலுங்கச் சிரித்தேன், சிரித்துக்கொண்டேயிருக்கிறேன், சிரித்துக்கொண்டேஇருப்பேன்.

    சிரிப்புச் சுவைக்கு ஆண்களுக்குப் பெண்கள் அதுவும் மனைவிமார்கள் எப்பொழுதும் (நாடகமாயினென், திரையாயினென், சின்னத்திரையாயினென், கதையாயினென், உரைவீச்சாயினென்) உதவுவார்கள், அவர்களின் ஏனைய உதவிகளைக் குறிப்பிடுவது பொர்த்தமல்ல.

    சொல்லாமல் சொல்லும் செய்திகளே கடிதம் முழுவதும். ஓர் எடுத்துக் காட்டு:

    “…அடக்கமுடியாமல் ஹாஹ்ஹா என சிரித்துவிட்டு ஏதோ பெரிய ரகசியத்தை அறிந்து விட்டவர் போல அவர் மனைவி பத்துவை (சாரி, பத்மான்னுதான் பேர். நீ அடிக்கடி பத்து..பத்து’ன்னு கூப்பிடுவாய் இல்லையா.. ஒரு ஃஃப்ளோ’வில் அப்படி எழுதிவிட்டேன்.. என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை)…”

    நீண்ட இந்த வரி முடிக்காமல் முடித்த நிலையையும் பார்க்க. அதிலுள்ள மறை பொருளையும் நோக்குக.
     

  4. கீதாம்மா,, மகிழ்ச்சி! கட்டாயம் சொல்கிறேன்..
    அன்புடன்
    திவாகர்

  5. Suguna Madam,
    Thanks lot for your comments. If you translate in english what else I need? 
    Btw.I would like to share the english version of SMS Emden Novel is almost over by Dr. Sridhar Rathnam of England..
    Anbudan
    Dhivakar

  6. மறவன் புலவு ஐயா!
    மிக்க மகிழ்ச்சி!.சிரிப்பும் ஒரு மருந்து என்று சொல்லியதற்கு நன்றி!
    சொல்லாமல் சொல்லியதை அழகாக ரசித்தமைக்கும் நன்றி!
    அன்புடன்
    திவாகர்

  7. //என்னைப் பொருத்தவரை அந்தம்மா பெயர் எப்போதும் பத்மாவதிதான் என்பதை நீ நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.. இதைப் பற்றி நமக்குள் வேறெந்த விவாதமும் தேவையில்லை///

    Superb sir.
    But again and again you have used Badhma, itha padichapparum nalla irukku ungalukku.
    Enjoyed reading it!

Leave a Reply to திவாகர்

Your email address will not be published. Required fields are marked *